உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 17
உங்களின் தமிழ் அறிவு எப்படி?
பகுதி 17
வணக்கம் அன்பர்களே! வெளியூர்
சென்றிருந்தமையால் இரண்டு வாரங்களாக இந்த பகுதியை பதிவிட இயலவில்லை! தமிழ்மொழியாயினும்
வேறு எந்த மொழியாயினும் அதை எழுதும் போது தேவைப்படுவது நிறுத்தற்குறிகள்! ஒரு வாக்கியம்
முற்றுபெற முற்றுப்புள்ளி அவசியம் அன்றோ? அதே போல் வாக்கியத்தை அர்த்தமுள்ளதாக ஆக்க
பயன்படுபவையே நிறுத்தல் குறிகள்.
ஒரு பிரபல ஆங்கில எழுத்தாளர் (பெயர் நினைவில் இல்லை)
ஒரு பெரிய நாவலை எழுதி பதிப்பகத்திற்கு அனுப்பி வைத்தாராம். பதிப்பகத்தார் படித்துவிட்டு
நாவல் அருமையாக உள்ளது. ஆனால் இதில் காற்புள்ளி அரைப்புள்ளி, போன்ற நிறுத்தல் குறிகள்
இல்லை! அதை இட்டு அனுப்பிவையுங்கள் பிரசுரிக்கலாம் என்று குறிப்புடன் நாவலாசிரியருக்கு
நாவலை திருப்பி அனுப்பினார்களாம். நாவலாசிரியருக்கு கோபம் ஒரு தனித்தாளில் நிறுத்தல்
குறிகளை நிரப்பி இதோ நிறுத்தல் குறிகளை அனுப்பி உள்ளேன் உங்களுக்கு தேவைப்படும் இடத்தில்
நிரப்பிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டாராம். பதிப்பகத்தார் அசந்து விட்டார்களாம்.
ஆனால் நாம் அப்படியா? தெள்ளுத் தமிழ் சிறக்க நிறுத்தல்
குறிகள் அவசியம் அதில் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போமா?
காற்புள்ளி (,)
பொருள்களை எண்ணும் நிலை, விளி, வினையெச்சம், மேற்கோள்
குறிக்குமுன், ஆதலால்,ஆகவே முதலிய சொற்களின் பின் முகவரியில் இறுதி வரி தவிர்த்த பிற
இடங்களில் காற்புள்ளி இடுதல் வேண்டும்.
எ.கா நிலம்,நீர், காற்று,தீ, வான் என்பன ஐம்பூதங்கள்.
வளவா, சொல்வதைக் கேள்.
அரைப்புள்ளி(;)
ஒரே எழுவாயில் பல தொடர்கள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும்
ஒரே எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற
இடங்களிலும் அரைப்புள்ளி இடுதல் வேண்டும்.
(எ.கா) சிலப்பதிகாரம்,செந்தமிழ்க்
காப்பியம்;முத்தமிழ்க் காப்பியம்; மூவேந்தரையும் பாடும் காப்பியம்.
இளமுருகு என்பானிடம் நிறைய அறிவுண்டு; பொறுமை
இல்லை.
முக்காற்புள்ளி(:)
ஒருவர் கூற்றை விளக்குதல், சிறு தலைப்பு,
நூற்பகுதி எண் முதலிய விவரங்களை பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாகத் தரும்போது
முக்காற்புள்ளி இடுதல் வேண்டும்.
எ.கா முப்பால் என்பன பின்வருமாறு: அறம்,பொருள், இன்பம்.
பெயர்: அரங்கநாதன்
முற்றுப்புள்ளி(.)
சொற்றொடர் இறுதி, முகவரி இறுதி, நாள் இறுதி,
சொற்குறுக்கம், பெயர் தலைப்பெழுத்து முதலிய இடங்களில் முற்றுப்புள்ளி இட வேண்டும்.
(எ.கா) உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.
வைத்தியநாதன்,த/பெ சுந்தரேசன்,பூரிவாக்கம்கிராமம்,
ஊத்துக்கோட்டைவட்டம்,திருவள்ளூர்மாவட்டம்.
3.8.2012
வி. இளவரசன்.
வினாக்குறி(?)
ஒருவினாத்தொடர் முற்றுத்தொடராகவும் நேர்கூற்றுத்தொடராகவும்
இருப்பின் இறுதியில் வினாக்குறி இடுதல் வேண்டும்.
அங்கே வருவது யார்?
நீ வருவாயா?
உணர்ச்சிக் குறி(!)
வியப்பு, அவலம், வாழ்த்து, வரவேற்றல், வைதல் ஆகிய
உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தொடர்களின் பின் (!)உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.
என்னே அருமை!
தீ!தீ!
வருக! வருக!
வாழ்கவாழ்க!
உணர்ச்சிக்குறி ஒன்றுக்கு
மேற்பட்டு இடுதல் கூடாது
ஒற்றை மேற்கோள்குறி (‘)
இக்குறி ஒர் எழுத்தேனும் சொல்லேனும் தன்னையே குறித்தாலும்
பிறர் கூற்றாக வரும் இடத்தும் கட்டுரைப் பெயரும், நூற்பெயரும் வருமிடத்தும் ஒற்றை மேற்கோள்
குறி வரும்.
‘ஏ’ என்று சொன்னான்.
‘செய்யும்’ என்பது பெயரெச்ச வாய்ப்பாடுகளுல் ஒன்று.
வள்ளுவர், ‘திருக்குறள்’ என்னும் நீதிநூல் படைத்தார்.
இரட்டை மேற்கோள் குறி
(“)
நேர்க் கூற்றுத் தொடர்களிலும் மேற்கோள் தொடர்களிலும்
இரட்டை மேற்கோள் குறி இடப்படும்.
இராமன், “நாளை வருகிறேன்” என்றான்.
“ஒழுக்கமுடைமை குடிமை” என்றார் திருவள்ளுவர்.
என்ன வாசகர்களே!இதுவரை
எப்படியோ எழுதி இருப்போம்! இனி, நிறுத்தற் குறிகளுடன் எழுதி பழகுவோம். இனி இலக்கிய
சுவை! காளமேகப் புலவர் பாடிய ஒரு இரட்டுற மொழிதல் பாடலை பார்ப்போமா?
கத்துக்கடல் நாகைக்
காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்போதில்
அரிசி வரும் - குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்;
ஓரகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்.
பாடலைக் கேட்டதன் பின்னர்தான் உரிமையாளருக்கு வந்திருப்பது காளமேகம் என்பது தெரிந்திருக்கிறது. இந்தப் பாடலினால் எங்கே தனது சத்திரத்திற்கு அவப் பெயர் வந்து விடுமோ என்று பயந்த காத்தான்; காளமேகத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். காளமேகம் நிலமையைச் சரி செய்ய பாடலுக்கான விளக்கத்தை இவ்வாறு சொல்லிக் கொண்டார்.
'காத்தானது சத்திரத்தில், அத்தமிக்கும் நேரத்தில் அதாவது நாட்டில் உணவின்றி பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். அங்கு பரிமாறும் உணவை உண்டு அந்த ஊரே பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம் வெள்ளி நட்சத்திரம் போல பிரகாசமாக இருக்கும்'.
என்று பதில் சொன்னார். ஆனால் உண்மையான கருத்து வேறு விதமானது என்பது கவிதையைப் பார்த்ததும் புரிந்திருக்கும்.
பதிவு குறித்த உங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
காளமேகம் பாடலுக்கான விளக்கத்தோடு நிறுத்தல் குறிகளின் அவசியம் அருமை... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteகவி காளமேகம் பாடல் அருமை
ReplyDeleteஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDelete