தளிர் கல்விநிலையமும் தளிர் அண்ணா ஆன கதையும்!

தளிர் கல்விநிலையமும் தளிர் அண்ணா ஆன கதையும்!
    சென்ற புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் என்னுடைய அமானுஷ்ய அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். இன்று நான் பகிரப் போவது தளிர் அண்ணா ஆன கதையை! இந்த தளிர் அண்ணா விஷயம் ஏற்கனவே விவாதத்திற்கு வந்த ஒன்று.  என்னுடைய  நினைவுகளை பகிர்கையில் ஒருசமயம் நான் டியுசன் எடுத்த கதையை கூறுகிறேன் என்றும் சொல்லியிருந்தேன். இன்று என்ன பதிவு? என்று காலையில் யோசிக்கும் போது இதை பதிவிடலாமே என்று தோன்றியது. ஏனெனில் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் டியுசன் எடுக்கப் போகிறேன். இந்த சமயத்தில் பழைய நினைவுகளை கொஞ்சம் அசை போடலாம் என்று நினைக்கிறேன். பதிவு நீளமானால் இரண்டு மூன்று பகுதிகளாக பிரிந்து வரும். பொறுத்துக் கொள்ளுங்கள்.
        நான் ஏற்கனவே சொல்லியிருந்தபடி நேரு நண்பர்கள் நலச்சங்கம் என்று ஒரு சங்கம் எங்கள் ஊரில் நடத்தி வந்தோம். அதனுடைய பத்தாவது ஆண்டுவிழாவில் கலை நிகழ்ச்சி செய்ய சிறுவர் சிறுமியரை தேடிய போது ஊரில் டியுசன் எடுத்துக் கொண்டிருந்த ஒரு கைம்பெண் உதவினார். அவருடைய டியுசனில் இருந்து சிலரை தேர்வு செய்து கொண்டோம். அவர் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே டியுசன் எடுத்துவந்தார். வயது கூட தேவைப்பட்ட சிலரை அணுகிய போது அவர்கள் இளைஞர் மன்ற டியுசனில் படிப்பதாக கூறினார்கள். ஆனால் அனுமதி ஏதும் கேட்க வேண்டாம். நாங்களே கேட்டுக் கொண்டு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக கூறிவிட்டார்கள். கலைநிகழ்ச்சிக்கான பணிகளில் மூழ்கி விட்டதால் இதை பெரியதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. பாதி நாள் ரிகர்சல் முடிந்த பின் சிலர் ரிகர்சலுக்கு வரவில்லை. விசயம் என்னவென்றால் அவர்கள் இளைஞர் மன்ற டியுசனில் படித்துக் கொண்டிருந்தார்கள் அங்கு பாடம் எடுத்த ஒருவர் தனிப்பட்ட வெறுப்பினால் மாணவர்களை அனுப்பவில்லை. அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. கூத்தாடிகள் என்றும் எங்கள் சங்கத்தையும் கேவலமாக பேசியுள்ளார். அப்போது இள ரத்தமான எனக்கு இது கோபம் தந்தது. அவர்கள் தடையையும் மீறி கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை அவர்கள் படிப்பு கெடாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்களும் டியுசன் எடுக்கிறேன் என்று அந்த ஆண்டுவிழாவில் தெரிவித்துவிட்டேன்.
        ஆனால் அப்போது யாரும் எங்கள் டியுசனுக்கு வரவில்லை! ஒரு நாலைந்து நபர்கள் வந்தார்கள். அவர்களும் இடையில் நின்றுவிட்டார்கள். நானும் இளைஞர் மன்றத்தினருடன் சமாதானமாகி அவர்கள் டியுசனில் ஒரு ஆசிரியராக சில வகுப்புக்களுக்கு பாடம் நடத்திக் கொண்டு இருந்தேன். இதற்கிடையில் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்திக் கொண்டு இருந்த அந்த விதவைப் பெண்மணி உடல் நலக் குறைவால் டியுசன் எடுப்பதை நிறுத்திவிட்டார். அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்களுடைய பெற்றோர்கள் என் தங்கையிடம் நீ படித்துவிட்டு சும்மாத்தானே இருக்கே! இந்த பசங்களுக்கு டியுசன் எடேன் என்று கேட்க என் தங்கையும் ஒத்துக் கொண்டார். இப்படி ஒரு பத்து பேர் என் தங்கையிடம் சேர்ந்தார்கள். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே அப்போது எடுத்தோம். தங்கைக்கு உதவியாக நான் சில சமயம் பாடம் எடுப்பேன். இந்த சமயத்தில் இளைஞர் மன்றத்தினரின் டியுசனும் நின்று போனது.
      அங்கு பாடம் நடத்தியவர்கள் வேலை கிடைத்து போய்விட அங்கு படித்தவர்களும் என் தங்கையின்
 இது திருவாலீஸ்வரர் கோயில் பிரகாரம் இங்குதான் டியுசன் வகுப்புக்கள் நடந்தன.
டியுசனுக்கு வந்தார்கள். இப்போது எட்டாம் வகுப்புவரை என டியுசன் உயர்வு பெற்றது. எல்லோருக்கும் கட்டணம் பத்து ரூபாய் மட்டுமே. இப்படி ஒரு இரண்டு மாதம் சென்றதும் சில பத்தாம் வகுப்பு மாணவர்களும் சேர்ந்து கொண்டார்கள் அவர்களுக்கு கட்டணம் இருபது ரூபாய் வசூலித்தோம்.  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நானும் எனது நண்பனும் பாடம் எடுப்போம். மொத்தம் மாதம் ஒரு 300 ரூபாய் வசூல் ஆகும் அதில் ஒரு பகுதியை என் நண்பனுக்கு தந்துவிட்டு மீதியை நாங்கள் எடுத்துக் கொள்வோம். அந்த வருட இறுதியில் நண்பனும் நின்று விட்டான். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தன. எங்களிடம் ஆறு பத்தாம் வகுப்பு மாணவர்கள் படித்தார்கள் அதில் இருவர் இடையில் நின்றுவிட மீதி நான்கு பேரில்  மூவர் பாஸ். ஒருவர் மட்டும் ஒரு சப்ஜெக்டில் பெயில்.
      பரவாயில்லை எதோ ஜெயித்துவிட்டோம்! என்று எண்ணி  வீதிக்கு சென்றால் அங்கே பெயிலான ஒரு பெண்ணின் அம்மா எதிரில் வந்தார். மாசம் இருபது ரூபா கொடுத்து டியுசன் அனுப்பினேன்! அப்படியும் என் பொண்ணு பெயில் ஆயிருச்சு! என்று சொன்னார் அவர். எனக்கு ஏதோ செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது. பள்ளியில் ஏறக்குறைய ஆறு மணி நேரம் படித்து வருகிறார்கள் டியுசனிலோ ஒரு மணி அல்லது ஒன்றரை மணிநேரம் மட்டுமே படிப்பு! பள்ளியை குறை சொல்லாமல் நம்மை குறை சொல்கிறார்களே என்று ஓர் ஆதங்கம். ஆனாலும் காசு வாங்கி கற்றுத்தருகிறோம். பெயிலானால் குறை சொல்லத்தான் செய்வார்கள் என்று மனதை தேற்றிக் கொண்டேன்.
    அடுத்த ஆண்டும் இந்த மூவர் பாஸ் செய்தமையால் கூடுதலான பிள்ளைகள் சேர்ந்தார்கள். அப்போதுதான் டியுசனுக்கு பெயர் சூட்டினேன். டியுசன் நிர்வாகம் என் தங்கையின் கையில் இருந்து என்னிடம் வந்தது. அப்போது இளந்தளிர் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தேன். அத்துடன் இளந்தளிர் என்ற வாடகை நூல் நிலையமும் வைத்திருந்தேன். அதனால் இளந்தளிர் கல்வி நிலையம் என்று பெயர் வைத்தேன். அப்போது கணக்குப் பாடம் நான் சொல்லித்தர மாட்டேன். என்னுடைய நண்பர்கள் சிலர் சொல்லித்தருவார்கள். மற்ற பாடங்களை நானும் எனது தங்கைகளும் கவனித்துக் கொண்டோம். டியுசன் மாணவர்கள் என்னை சார்! என்று அழைக்காமல் அண்ணா என்று விளித்தனர். இதனால் கையெழுத்துப்பத்திரிக்கையில் நான் எழுதும் போது தளிர் அண்ணா என்று புனைப் பெயர் சூட்டிக் கொண்டேன். ஆனால் இந்த வருடமும் எனக்கு தோல்விதான் கிட்டியதும் மொத்த எட்டுபேர் படித்ததில் ஏழு பேர் தோற்றுப் போனார்கள் ஒருவர்தான் ஜெயித்தார். இது எனக்கு முதலிலேயே தெரியும். இவர்கள் பாஸ் செய்ய மாட்டார்கள் என்று அவர்களின் படிப்பு லட்சணத்தை வைத்தே உறுதி செய்தேன். ஆனால் அவர்களை படிக்கும் படி தயார்செய்ய முடியவில்லை. போச்சு! அவ்வளவுதான் இனி யாரும் நம்மிடம் பத்தாம் வகுப்பு சேர மாட்டார்கள் என்று நினைத்தேன்.
     ஆனால் மீண்டும் பத்து பேர் என்னிடம் பத்தாம் வகுப்புக்கு சேர்ந்தார்கள். என்மீது அவர்கள் நம்பிக்கை வைத்தமையால் எனக்கும் ஒரு நம்பிக்கை வந்தது. இந்த சமயத்தில் தான் நான் ஒரு எஸ்.டீ.டி பூத் மற்றும் பெட்டிக்கடையை பஞ்செட்டியில் துவக்கி இருந்தேன். எனக்கு அந்த தொழிலில் அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆனால் வீட்டினரின் நிர்பந்தத்தினால் அதை துவக்கி இருந்தேன். அதனால் டியுசனை கவனிக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது. என் தங்கைகள் எனக்கு கை கொடுத்தனர். அவர்கள் திறம்பட கவனித்துக் கொள்ள எங்கே குறை என்று கவனித்து அதை களைய ஆரம்பித்தேன். ஒவ்வொரு மாணவனிடமும் தனிப்பட்ட கவனம் செலுத்தி அவன் எந்த சப்ஜெக்டில் வீக் என்று கண்டறிந்து அதில் தனிப்பட்ட பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். எஸ்.டீ.டீ பூத் கவனித்துக் கொள்ள முதலில் என் தந்தையை அனுப்பினேன். பின்னர் அது சரிவராமையால் ஆள் வைத்துவிட்டு முழு நேரமும் டியுசனில் இறங்கினேன்.
       இந்த சமயத்தில் என் முதல் தங்கையின் திருமணம் வேறு. அதிலும் கவனம் செலுத்தவேண்டிய சூழல். கணக்கு பாடம் கசந்த எனக்கு டியுசன் அதை இனிமையாக்கியது. கைடு வாங்கி கணக்குப் போட்டுப் பார்த்து அதை எளிமையாக்கி மாணவர்களுக்கு கற்றுத்தர ஆரம்பித்தேன். இந்த விசயத்தில் நண்பர் மகேஷ் எனக்கு உறுதுணையாக இருந்தார். என்னைவிட வயதில் இளையவர். ஆனாலும் அப்போதுதான் படிப்பு முடித்திருந்தமையால் கணக்கு குறித்த சந்தேகங்களை அறிந்துகொள்ள அவரை நாடுவேன். அவரும் சளைக்காமல் சொல்லித்தருவார். இப்போது ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யும் திரு சங்கரும் எங்கள் டியுசனில் கணக்கு ஆசிரியராக சிறப்பாக மாணவர்களுக்கு போதித்தார்.
     எது எப்படியோ கடுமையாக உழைத்தோம்! ஆனால் மாணவர்கள் உழைத்தால்தானே! அவர்கள் விளையாட்டாய் இருக்க தேர்வு வந்தது. பத்து மாணவர்களில் இருவர் இடையில் நிற்க  எட்டு பேர் எழுதினார்கள் ஐந்து பேர் பாஸ். இப்போது போல அப்போது இண்டர் நெட் கிடையாது. பேப்பரில் தேர்வு முடிவுகள் வெளியாகும். பொன்னேரி சென்று பேப்பரை வாங்கி தேர்வு முடிவை பார்க்கும் வரை மாணவர்களுக்கு அடித்துக் கொள்கிறதோ இல்லையோ எனக்கு நெஞ்சு திக்திக் என அடித்துக் கொள்ளும். ஐந்து பேர் பாஸ் அப்பாடா! என்று இருந்தது. இன்னும் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் பிறந்தது!

   அதற்காக என்ன செய்தேன்! என் வீட்டாரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி எஸ்டீடி பூத்தை மூடிவிட்டேன்! முழுவீச்சில் டியுசனில் குதித்தேன்!  வெற்றி பெற்ற கதையை அடுத்த பகுதிகளில் தொடர்கிறேன்! நன்றி!

Comments

 1. இளந்தளிர் கல்வி நிலையம் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  நண்பர் மகேஷ் அவர்களுக்கும் நன்றி... பாராட்டுக்கள்...

  வெற்றி பெற்றதை ஆவலுடன்...

  ReplyDelete
 2. நண்பரே தாங்கள் என்ன படித்திருக்கீறீர்கள் என்பதை அறிவித்தால் நன்றாக இருக்கும் ஏனென்றால் நான் எம்.ஏ பி.எட் படித்துவிட்டு 1983-ல் வேலை கிடைக்காமல் ஒரு டியூஷன் செனட்டர் சென்னையில் திறந்து உடல் நிலை சரியில்லாமல் ஒரு வாரத்தில் மூடிவிட்டு ஊருக்கு போய்விட்டேன்...மீண்டும் சென்னை வந்து படிபை மறந்து சாதாரண சேல்ஸ்மேன் வேலையில் சேர்ந்து...இன்று மேலாளராக இப்படியே வாழ்க்கை ஓடுகிறது... எனக்கு பிடிக்காதது வாத்தியார் வேலை ஆனால் எங்கு போனாலும் அதுதான் தொடர்கிறது..இன்று எனக்கு கீழ் நூறு பேருக்கு மேல் வேலைசெய்கிறார்கள்..அதே வேலையைத்தான் செய்வது போல் உணர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ஆவலான விசாரிப்புக்கு நன்றி நண்பரே! படித்தது அஞ்சல் வழியில் பி.காம். பி.எட் படிக்க நினைத்தும் முடியாமல் போனது. சின்னவயது ஆசை ஆசிரியர் ஆவது மற்றும் எழுத்தாளர் ஆவது. அது இரண்டும் ஓரளவு நிறைவேறிவிட்டது. குருக்கள் என்பதால் சில கோயில்களில் பூஜை செய்து இன்று குடும்பம் ஓடுகிறது. மனதிருப்திக்கு இப்படி வலைப்பூக்களில் எழுதி வருகிறேன்! நன்றி நண்பரே!

   Delete
 3. அயராத உங்கள் முயற்சியையும் மாணவருக்கு கற்றுத்தரும் ஊக்கத்தையும் கண்டு பெருமிதமாக இருக்கின்றது சகோ!

  தொடரட்டும் உங்கள் பணி! இளந்தளிர் கல்வி நிலையம் மேலும் வளர்ச்சிகண்டு உங்கள் முயற்சி முழுவெற்றிகாண வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.

  ReplyDelete
 5. அருமை சுரேஷ், உங்கள் வெற்றிப் பயணம் நன்றாக செல்கிறது, கையெழுத்துப் பத்திரிகை எல்லாம் நடத்தி இருக்கீங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. வரும் தொடர்களில் நானும் வருவேன்...........

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2