பி.பி.சியில் பேசிக் படித்த கதை பகுதி 2


அன்புக்கு பணிந்த கதையும்!  ஆணவத்தினை பணியவைத்த கதையும்!


சென்ற பகுதியில் பிபிசியில் பேசிக் படித்த கதை என்று கணிணி கற்றுக் கொண்ட நாள்களை நினைவு கூர்ந்தேன்! ஆமாம் அது என்ன பிபிசி என்று யாராவது கேட்பீர்கள் என்று பார்த்தேன். நீங்களும் கேட்கவில்லை! நானும் கதை நிகழ்ந்த வேகத்தில் சொல்லவில்லை! பாரத் பிரில்லியண்ட் கம்ப்யூட்டர் செண்டர் என்பதன் சுருக்கமே பிபிசி.
     சென்ற பகுதியில் பவானி மேடம் டெஸ்ட் வைத்தார்கள் நாங்கள் யாரும் ஐந்து மதிப்பெண்களை கூட தாண்ட வில்லை! என்று சொல்லியிருந்தேன். மேடம் கிளாஸிற்கு வராமல் ரிசப்ஷனில் அழுது கொண்டு இருந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா?. ரமேஷ் சார்! இனிமே மேடம் கிளாஸ் எடுக்க மாட்டேன்னு சொல்றாங்க! வேலையை விட்டும் நின்னுக்க போறாங்களாம்! நீங்க என்ன இந்த மாதிரி விளையாட்டுத்தனமா இருக்கீங்க என்றார்.
  அன்று ஆகஸ்ட் பதினைந்து சுதந்திர தினம். நான் அப்போது நடத்திக் கொண்டிருந்த சங்கத்தில் கொடியேற்றி விட்டு இன்ஸ்ட்யூட்டில்  அனைவருக்கும் கொடியும் சாக்லேட்டும் கொண்டு சென்று  கொடுத்திருந்தேன். என்னப்பா சுரேஷ்! கொடியெல்லாம் ஏத்தி சுதந்திர தினம் கொண்டாடறே! ஆனா படிக்க மாட்டியா? என்று ரமேஷ் கேட்டார். தலை குனிந்து கொண்டேன். நான் ஒண்ணும் சொல்றதுக்கு இல்லே! உங்க மேமை நீங்களே கன்வின்ஸ் பண்ணுங்க! என்று அவர் வீட்டுக்கு கிளம்பி விட்டார்.
    கிளாஸில் யாருக்குமே மேடமை பார்க்கும் துணிவு இல்லை! முதலில் பெண்களை அனுப்ப முடிவு செய்தோம். என் அக்காவின் ப்ரெண்டான ரமாதேவியும் அவரின் தோழிகளும் ரிசப்ஷணுக்கு சென்று மேடமை அழைத்தார்கள். நாங்களும் பின் தொடர்ந்து சென்றோம்.கலங்கிய கண்களை துடைத்துக் கொண்ட மேம் நான் இன்னாப்பா பண்ணேன்! ஏன் இப்படி மார்க்ஸ் எடுத்து இருக்கீங்க! ஒருத்தரும் சரியா ப்ரஸெண்ட் பண்ணலை! வெறுத்துப் போச்சு! நான் நடத்தறது புரியலைன்னா நீங்க சொல்லியிருக்கலாம் இல்லையா? என்றார்.
        வெங்கட் குமார்! எங்களில் சீனியர். அவன் தான் முதலில் வாயைத்திறந்தான். மேம்! இப்ப தமிழ்ல பேசறீங்க இல்லை! கிளாஸ் எடுக்கும்போது மட்டும் நீங்க பீட்டர் விட்டா எங்களுக்கு எப்படி புரியும்? என்றான்.
   மேடம் சிரித்து விட்டார்! அப்ப நான் இங்கிலீஷ்ல சொன்ன எதுவுமே உங்களுக்கு புரியலையா? அதான் விஷயமா?
   அதுதான் விஷயமே! இங்கிலீஷ்லயே பேசிட்டு போனா எங்க யாருக்கும் புரியாது. நாங்க எல்லோரும் தமிழ் மீடியம் படிச்சவங்க! சுமாராத்தான் இங்கிலீஷ் தெரியும்! என்றான் குமார்.
   ஆனா கம்ப்யூட்டர் கோர்ஸை இங்கிலீஷ்ல தானே நடத்த முடியும்!
 மேம்! எல்லாத்தையும் தமிழ் படுத்த வேண்டாம்! எங்களுக்கு புரியறாமாதிரி சொல்லித்தந்தா போதும்! என்றோம். இந்த வாரம் திரும்பவும் கிளாஸ் எடுங்க! அடுத்த டெஸ்ட்ல நாங்க மார்க் எடுக்கலன்னா அப்ப நீங்க கேளுங்க என்றோம்.
   மேடமும் ஒத்துக் கொண்டார். அந்த வாரம் முழுவதும் மீண்டும் அதே பாடத்தை நடத்தி கடைசியில் டெஸ்ட் வைத்தார். இந்த முறை அனைவரும் 20ஐ தொட்டு நல்ல  மதிப்பெண்கள் எடுக்க மேடமிற்கு மகிழ்ச்சி. எங்களில் ஒருவராகி போனார். அவர். ஆகஸ்ட் மாதம் வந்த அவர் டிசம்பர் இறுதியில் இன்ஸ்ட்டியுட்டை விட்டு  விலகப் போவதாக சொன்ன போது அனைவருக்கும் அதிர்ச்சி. எங்களுடன் படித்த ஜகன் அழுதே விட்டான். ஆனால் அவர் படித்த படிப்புக்கு இன்ஸ்டிடியூட் வேலை சரியல்ல! நல்ல வேலை கிடைக்கும் போதே பிடித்துக் கொள்வதுதான் சிறப்பு என்று சொன்னார். அவருக்கு பிரிவு உபசார விழா வைத்து பரிசு கொடுத்து வழி அனுப்பி வைத்தோம். இது நாங்கள் அன்புக்கு அடிபணிந்த கதை.
  அதே சமயம் ஆணவத்திற்கு எதிராக எழுந்த கதை ஒன்றும் இந்த கணிணி வகுப்பில் உண்டு. ரமேஷ் சார் ஓனர் என்றால் அவரது தங்கை ஒருவரும் வகுப்புக்கள் எடுப்பார். அவர் பெயர் அருணா. பவானி மேம் வருவதற்கு முன் அவர்தான் சிலவகுப்புக்கள் எடுத்தார்.  அந்த சமயம் அசைன்மெண்ட் சமர்ப்பிக்கும் படி ஏதோ சில ப்ரொகிராம்கள் கொடுத்தார்.

   இடையில் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை இருந்ததால் திங்கள் கிழமை வகுப்புக்கு சென்றொம். வகுப்பில் சென்று  அமர்ந்திருந்த போது அருணா மேம் வந்தார். அசைண்மெண்ட் எங்கே முடிச்சிட்டீங்களா? என்று கேட்டார்.  முடிச்சிட்டோம் மேம் என்றோம்.
   கொண்டாங்க என்றார். அனைவரும் பேப்பர்களை கொடுத்தோம். முழு வெள்ளைப் பேப்பரில் எழுதி இருந்தோம். ஓரம் மடித்து எழுதி இருந்தோம்.
   பேப்பர்களை வாங்கி பார்த்த மேமிற்கு ஆத்திரம் வந்தது.
  இதுக்கு பேர்தான் அசைன்மெண்டா? இப்படித்தான் சப்மிட் பண்ணுவீங்களா? ஒரு மார்ஜின் போடலை முக்கியமான வேர்ட்ஸை ஸ்கெட்ச் பண்ணலை! ஃப்லோ சார்ட்ஸ் எல்லாம் கோணல் மாணலா இருக்கு இப்படியா ஒரு அசைண்மெண்ட் சப்மிட் பண்ணுவீங்க! யூஸ்லெஸ் ஃபெலோஸ்! என்று கொதித்து எழுந்தார். பேப்பர்களை முகத்தில் விசிறி அடித்தார். கிளாஸை விட்டு வெளியேறி விட்டார். அப்புறம் அவர் வரவே இல்லை.
   உண்மையில் எங்கள் யாருக்கும் அசைண்மெண்ட் எப்படி சப்மிட் செய்வது என்று தெரியாது. அரசு மேனிலைப் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் நாங்கள்! ஆங்கில எழுத்தே ஒழுங்காக அழகாக எழுதத் தெரியாது. முதலிலேயே இப்படி இப்படி பண்ண வேண்டும் என்று யாராவது சொல்லி யிருந்தால் அதே மாதிரி செய்து இருப்போம். எழுதி முடித்தபின் இப்படி எழுதக் கூடாது! இப்படி எழுதவேண்டும் என்று சொல்லியிருக்கலாம் அதை விட்டு ஓவராக ஆணவத்தில் மேடம் ஆடுவதாக எங்கள் அனைவருக்கும் தோன்றியது.
  நாம் என்ன பள்ளி பிள்ளைகளா? இப்படி மிரட்டுவதற்கும் முகத்தில் அடிப்பதற்கும்! நாம் பணம் கட்டுவதால்தானே இந்த இன்ஸ்ட்யூட் நடக்கிறது. இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தோம். எங்கள் பேட்ச்சில் உள்ள பத்து பேரும் கூடினோம். நாளை கிளாஸை  அனைவரும் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பது என்று முடிவெடுத்தோம். இதற்கு மாணவிகள் கூட ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஆனால் லீலா மானுஷா என்ற சக மாணவன் மறுத்து விட்டான்.
   அவன் மேடம் வீட்டிற்கு பக்கத்திலேயே இருப்பவன். அதுவும் இன்றி தான் தான் புத்திசாலி என்ற மமதையும் அவனுக்கு உண்டு. மேமிற்கு ஜிங் சாங் என்று நாங்கள் எப்போதும் அவனை கூறுவோம். அவன் இந்த விசயத்தில் எங்களோடு ஒத்து போகவில்லை! சரி நாம் ஏன் நின்றோம் என்று தெரியவைக்க ஒருவன் வேண்டும். அது அவனாக இருக்கட்டும் என்று முடிவு செய்தோம். அடுத்த நாள் அனைவரும் புறக்கணிக்க லீலா மானுஷா மட்டும் வகுப்புக்கு சென்றுள்ளான்.
  மத்தவங்க ஏன் வரலை என்று அருணா மேடம் கேட்க அவன் விசயத்தை போட்டு உடைத்துள்ளான்.
  மறுநாள் நாங்கள் கிளாஸிற்கு சென்றோம். ஏம்பா இப்படி பண்ணீங்க! நான் உங்க நல்லதுக்கு இல்லே அப்படி பண்ணினேன் என்றார்கள் அருணா மேம்.
  நிங்க எங்களை ஸ்கூல் பசங்களை விட கேவலமா நடத்தறீங்க! இத மாதிரி செய்யாதீங்க!  பேப்பரை முகத்தில் விசிறி எறியறீங்க! நாங்க என்ன குழந்தைங்களா? நீங்க என்ன செய்தாலும் பொறுத்து போக என்றான் குமார்.
   சாரி! இனிமே அப்படி நடக்காது என்றார் அருணா மேம். அதன் பின் அவர் எங்களுடன் ஜாலியாக பேச ஆரம்பித்து விட்டார். நாங்களும் அந்த பிரச்சணையை மறந்து விட்டோம். பவானி மேம் வேலை செய்கையில் எங்களுக்கு கோபால் என்று ஒரு லாங்க்வேஜ் கற்றுக் கொடுக்க ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் பெயரில் ஹீரோ! ஆனால் எங்களுக்கு எல்லாம் வில்லனாக தெரிந்தார். இவரை எப்படி துரத்துவது என்று நானும் ஜகனும் கூடி யோசித்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அவர் பெயர் ரஜினி!
இனிய நினைவுகள் தொடரும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ஜகன் அவர்கள் அழுதார் என்றால் நட்பின் ஆழம் புரிகிறது...

    ரஜினியை துரத்த என்ன செய்தீர்கள்...? ஆவலுடன் தொடர்கிறேன்....

    ReplyDelete
  2. தொடருங்கள் தொடர்கிறோம்...

    ReplyDelete
  3. சூப்பர் ஸ்டார் என்ட்ரியா.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..

    ReplyDelete
  4. கணினி படித்த அனுபவம் சுவாரஸ்யம்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2