குதிரை கற்றுக் கொடுத்த பாடம்! பாப்பா மலர்!


குதிரை கற்றுக் கொடுத்த பாடம்! பாப்பா மலர்!


வீராபுரம் என்ற சிற்றூரில் கேசவன் என்ற வணிகர் ஒருவர் வசித்துவந்தார். அந்த ஊரை அடுத்துள்ள நகரத்தில் பெரிய வியாபாரியாக அவர் திகழ்ந்தார். கேசவன் ஒரு கடைந்தெடுத்த கருமி! வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அவர் பிறருக்கு ஒரு கவளம் சோறு கூட போட மாட்டார். வேலை செய்யும் பணியாளர்களுக்கும் குறைந்த அளவே சம்பளம் தருவார். அவரிடம் குதிரை ஒன்று இருந்தது. அவர் எங்கு செல்வதானாலும் குதிரையில்தான் செல்வார். அந்த குதிரை இல்லாமல் அவருக்கு பொழுது போகாது. பணி நிமித்தமாக எங்கு செல்வதாக இருந்தாலும் குதிரை சவாரிதான் அவருக்கு பிரியம்.
     அவரின் வாகனமான அந்த குதிரை அவரிடம் வரும் வரை நன்றாக கொழுத்து  வலிமையாக இருந்தது. கருமியான கேசவன் அதற்கு ஒழுங்காக உணவு அளிப்பதில்லை! நாளொன்றுக்கு சிறிதளவு புல்கட்டும் கொள்ளும் மட்டும் வைப்பார். பாவம் அது குதிரையின் கால் வயிறுக்கு கூட பத்தாது. அதனால் அது நாளுக்கு நாள் மெலிந்து போய் கொண்டு இருந்தது. ஆனாலும் கேசவன் குதிரையை கண்டுகொள்ளவில்லை. வடி கட்டிய கஞ்சனான அவர் குதிரைக்கு தீனி போட முன் வரவில்லை.
   அவருடைய குதிரை இரண்டு நாட்களாக பட்டினியாக கிடந்தது, அன்று அவர் வெளியில் கிளம்ப வேண்டும் என்பதற்காக ஒரு கட்டு புல்லை எடுத்து வந்து குதிரை முன் போட்டார். பசியில் குதிரை வேகமாக மேய ஆரம்பித்தது. பாதி தின்னும் போதே குதிரையில் ஏறி விரட்ட ஆரம்பித்தார் கேசவன். பாவம் குதிரை அதற்கு கால் வயிறு கூட நிரம்பவில்லை! இன்று கேசவனுக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும் என குதிரை முடிவு செய்தது.
   கேசவன் செலுத்திய பாதையில் இருந்து விலகி ஓட ஆரம்பித்தது குதிரை. கேசவன் எவ்வளவோ முயன்றும் அவரால் குதிரையை கட்டுப்படுத்த முடியவில்லை! மிக வேகமாக ஓட்டம் பிடித்த குதிரை காடு மேடு பள்ளங்களை தாண்டி ஒரு அடர்ந்த புல்வெளியை அடைந்தது. அதற்குள் உச்சி வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்திருந்தது. அந்த புல் வெளியில் கேசவனை கீழே தள்ளிய குதிரை புற்களை நிதானமாக மேய ஆரம்பித்தது.
     நல்ல வெயில் குதிரையின் மிரட்டல் காரணமாக சோர்ந்து போயிருந்தார் கேசவன். பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. ஆனால் அந்த இடத்தில் உண்பதற்கு எதுவுமே இல்லை. சுற்றிசுற்றி பார்த்தார் ஒன்றும் கிடைக்கவில்லை! ஊர் திரும்பலாம் என்றாலோ வழி தெரியவில்லை! குதிரையின் அருகில் சென்றாலோ குதிரை முட்டவந்தது.

   மாலை மங்கிவர வயிறார உண்டு முடித்தது குதிரை அருகில் இருந்த குளத்தில் நீரை அருந்தியது. பின்னர் சற்று நேரம் ஓய்வு எடுத்தது. ஆனால் கேசவனை அருகில் நெருங்கவிடவில்லை! பசியின் மயக்கத்தில் மிகவும் களைத்து போயிருந்தார் கேசவன். குதிரை அவரை சட்டை செய்யவில்லை. மீண்டும் புற்களை மேய ஆரம்பித்தது. இருட்டும் வேளையில் குதிரை என்ன நினைத்ததோ தெரியவில்லை. கேசவனின் அருகில் வந்து நின்றது.
   குதிரை மீது ஏறக்கூட சத்து இல்லாமல் கிடந்தார் கேசவன். அப்புறம் தட்டுத் தடுமாறி ஏறி குதிரை மேல் அமர்ந்தார்.குதிரை அவரை சுமந்து சென்று அவருடைய வீட்டில் விட்டது. அப்போதுதான் அவருக்கு பசியின் கொடுமை புரிந்தது. இத்தனை நாள் மற்றவரையும் குதிரையையும் பட்டினி போட்டோமே! இன்று ஒருநாள் பட்டினியையே நம்மால் தாங்க முடியவில்லையே! நமக்கு சரியான தண்டனை கிடைத்தது. குதிரை நல்ல பாடம் கற்றுக் கொடுத்தது என்று எண்ணினார்.
  வீடு சேர்ந்ததும் கை கூட கழுவாமல் உணவை அள்ளி உண்டார். அவருக்கு புத்திவந்தது. இனி கஞ்சத்தனம் செய்ய கூடாது. அனைவருக்கும் வயிறார உணவு போட வேண்டும் என்று முடிவு செய்தார். அப்போது வெளியில் ஐயா! பழைய சோறு ஏதாவது இருந்தா போடுங்க என்ற குரல் கேட்டது. உடனே கேசவன் வீட்டில் இருந்த உணவுகளை எடுத்து வந்து அந்த பிச்சைக்க்காரனுக்குப் போட்டார்.
    கருமியான கேசவன் வீட்டில் பிச்சை போடுவதை மற்றவர்கள் வியப்புடன் பார்த்தார்கள். குதிரை கற்றுக் கொடுத்த பாடம் நல்ல வேலை செய்தது.
தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. கஞ்சனுக்கு புத்தி வந்த கதை நன்றாக இருக்கிறது..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2