சலங்கை வலி!


சலங்கை வலி!
 
 ஆண்டு விழாவில் தேன்சிட்டு என்ற கையெழுத்து பத்திரிக்கையை நான் வெளியிட அப்போதைய ஊராட்சித்தலைவர் திரு ராமலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்ட காட்சி.
சரவணன் மீனாட்சி பதிவில் டிஸ்கியில்  அடுத்த பதிவு சலங்கை வலி என்று சொல்லிவிட்டேன்! ஆனால் இதைப் பற்றிய எனது நினைவுகளை முந்தைய பசுமை நிறைந்த நினைவுகளில் லேசாக பகிர்ந்ததாக நினைவு. எனவே எழுத வேண்டுமா? என்று என்னுள் விவாதம்! இறுதியில் சரி எழுதி விடுவோம் என்று துணிந்து பகிர்கிறேன்.
   அது 97-98ம் வருடம்  நான் டிகிரி எல்லாம் முடித்து அரியர்ஸ் ஓரிரண்டு பேப்பர் வைத்துக் கொண்டு உருப்படியான வேலை ஒன்றும் இல்லாமல் வெட்டி ஆபிசராக இருந்த காலம். டீனேஜ் முடியும் பருவம் வேறு. எங்கள் ஊரில் நாங்கள் ஒரு சங்கம் வைத்து வளர்த்து கொண்டிருந்தோம்! எதை என்றெல்லாம் குறுக்கு கேள்வி எல்லாம் கேட்கப்படாது. எதையோ வளர்த்தோம் எங்கள் பொழுதும் கழிந்து கொண்டிருந்தது.
   இந்த குருப்பில் நான் தான் மூத்தவன். மற்ற அனைவரும் என் தம்பிகள் மாதிரி! இளையவர்கள். பத்தாம் வகுப்பு முடித்திருந்தார்கள் அவர்கள். சிலர் பிளஸ்டூ, சிலர் காலேஜ் முதல் வருடம் என ஒரு இருபது பேர் கொண்ட குழு எங்களுடையது. சங்கம் சார்பாக சிறு வாடகை நூல் நிலையம். கையெழுத்து பிரதி என்று பொழுது கழிந்து கொண்டிருந்தது.
   கொஞ்ச பொழுதை கிரிக்கெட்டும் டீவியும் முழுங்கிக் கொண்டிருந்தது.  1987ல் ஆசான பூதூரை விட்டு வந்ததும் சிறுவர் சங்கமாக இருந்த சங்கம் 97ல் நண்பர்கள் சங்கமாக மாறியிருந்தது. பத்து வருடங்கள் நிறைவு பெற்றதை கொண்டாட முடிவு செய்தோம். இதற்கென நன்கொடை அது இது என வசூலித்து கலைநிகழ்ச்சிகள் நடத்தி கலை வளர்த்து பரிசுகள் கொடுக்க முடிவு செய்தோம்.
     என் தங்கைகள் கலை ஆர்வம் மிக்கவர்கள்! இவர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தி தர முன் வந்தார்கள் இவர்கள் எங்கள் குழுவில் உறுப்பினர்களும் கூட. இங்குதான் ஆரம்பித்தது வினை. அதற்கு முன் ஒரு ப்ளாஷ் பேக்.
     அப்போது தூர்தர்ஷனில் கேப்டன் வியும் என்று ஒரு இந்தி தொடர் ஞாயிரன்று ஒளிபரப்பாகும். இதில் வ்யும் மற்றும் மாயா என்று இரு கேரக்டர்கள் மட்டுமே எனக்கு ஞாபகம் இருக்கிறது. இன்னும் சில வில்லன்கள் உண்டு. நமது நாயகனை வியும் என்றும் நாயகியை மாயா என்றும் இனி அழைக்கப் போகிறோம்.
      இந்த கலைநிகழ்ச்சிகள் நடப்பதற்கு முன்பே நடந்த ஒரு ஆண்டி கிளைமேக்ஸ் நாடகம் ஒன்றை முதலில் பார்த்து விடுவோம். நமது ஹீரோ வ்யும் அப்போதுதான் பத்தாவது எழுதி இருந்தார். ஹீரோயினி மாயா எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். ஹீரோவின் நண்பன் ஒருவர் இந்த கதையில் நுழைகிறார். அவரை நண்பர் என்றே அழைப்போம்.
   இந்த நண்பருக்கு எட்டாம் வகுப்பு பெண்ணான ஹீரோயின் மீது ஒரு கண்! அதாங்க விடலைக் காதல்! ஆனால் இதை அந்த பெண்ணிடம் சொல்ல பயம்! இத்தனைக்கும் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வரக்கூடியவர் இவர். தன் காதலை வ்யுமிடம் சொல்லி அந்த பெண்ணிடம் சொல்ல சொன்னார்.
  வ்யும் எல்லா பெண்களிடமும் சகஜமாக பேசக்கூடியவர்! பெண்களும் அவரை சுற்றுவார்கள்! ஜாலிப்பேர்வழியான அவர் ஹீரோயின் வீட்டுக்கு சென்றார். ஹீரோயின் அண்ணன்களை கலாய்த்துக் கொண்டே ஹீரோயினிடம் நண்பன் காதலிக்கும் விசயத்தை அப்படியே ஜாடையாக சொல்லி இருக்கிறார்.
     ஹீரோயின் இதை கேட்டு கொதிக்க வில்லை! மாறாக அவன நான் லவ் பண்ணலை! உன்னைத்தான் லவ் பண்றேன்! நீ என்னை லவ் பண்ணு! என்று சொல்லியிருக்கிறது. மனுசன் அதிர்ந்து போகவில்லை! சிரித்துக் கொண்டே வந்து நண்பரிடம் சொல்ல நண்பருக்கு கண்ணீர்! நீயாவது நல்லாரு மச்சான்! என்று காதலை விட்டுக் கொடுத்து விட்டார்.
  இப்படி ஜாலி பேர்வழியின் காதல் எங்கள் குருப்பில் அனைவருக்கும் தெரிய வர வ்யும் என்ற கேரக்டரை வைத்து கேலி செய்து கொண்டிருப்போம். அந்த தொடரிலும் இது மாதிரி நடந்து கொண்டிருந்தது.
     வ்யுமின் காதல் தொடர எங்கள் கலை நிகழ்ச்சிகளும் ஒரு விதத்தில் உதவுவதாய்க அமைந்து விட்டது. ஆம் எங்கள் கலைநிகழ்ச்சிகளின் கதாநாயகி வ்யுமின் காதலி!
      சொல்ல வேண்டுமா? எங்கள் குருப்பில் ரிகர்சல் நடக்கும் போதெல்லாம் வந்து விடுவார். இவர் எங்கள் குருப் மெம்பரும் ஆனதால் வெளியேற்ற முடியாது. ஓய்வு நேரத்தில் இருவரும் கடலை சாகுபடி நடத்தி வந்தனர். குருப் மெம்பர்களும் இளவயதினர் நண்பர்கள் என்பதால் இதை கண்டு கொள்வது கிடையாது.
  நானும் இளவயதில் இருந்தமையால் இதை கண்டு கொள்ளவில்லை! விழா நல்ல படியாக நடக்க வேண்டும் என்ற கவனத்தில் இருந்தேன். ஏனெனில் சங்கத்தலைவர் நான் தான்.
  மொத்தம் இருபது பாடல்கள்! சினிமா பாடல்கள்தான்! ஒரு சிறு நாடகம்! என கலை நிகழ்ச்சிகளும் ஓட்டப்பந்தயம் கிரிக்கெட் போட்டி என்று பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்த இருபது சினிமா பாடல்களில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் ஆட வ்யுமின் ஹீரோயின் தான் தேர்வு செய்யப்பட்டு ரிகர்சல் போய்க் கொண்டிருந்தது.
   விழா நடக்க ஒரு வாரம் இருக்க திடீரென வந்து முளைத்தான் வில்லன்!
விழா நடந்ததா? அடுத்த பகுதியில் பார்ப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வில்லன் இல்லையென்றால் எப்படி...?

    ஆவலுடன்...

    ReplyDelete
  2. மலரும் நினைவுகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.. தொடருங்க..

    ReplyDelete
  3. suvaraasyam...!

    thodarungal...!

    ReplyDelete
  4. ஆஹா...சஸ்பென்ஸ் வெச்சுட்டீங்களே?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2