பி.பி.சி யில் பேசிக் படித்த கதை!
பி.பி.சி யில் பேசிக் படித்த
கதை!
சக பதிவரான ஆரூர் மூனா
செந்தில் வேலை கிடைப்பதற்கு முன் கம்ப்யூட்டர் படித்த கதை பற்றி சுவாரஸ்யமாக எழுதி
இருந்தார். அதை படித்தவுடன் இந்த பதிவு எழுதும் யோசனை வந்தது. அது 1994ம் வருடம் நான்
டிகிரி முதல் ஆண்டு கரஸ்ஸில் எழுதி முடித்து விட்டு வீட்டில் வெட்டியாக சுத்திக் கொண்டு
இருந்தேன். கையெழுத்து பத்திரிக்கை, நண்பர்கள் சங்கம், கிரிக்கெட் என்று வெட்டியாக
கழிந்து கொண்டிருந்தது பொழுது.
அப்போது பழவேற்காட்டில் எங்கள் சமூக மீட்டிங்கிற்கு
சென்ற போதுதான் என் அக்காவை சந்தித்தேன். இவர் என் தந்தையின் முதல் தாரத்து பெண். முதல்
மனைவி அதாவது என் பெரியம்மா இறந்ததும் என் அம்மாவை மணந்து கொண்டார். நாங்கள் இப்போது
நால்வர். மூன்று தங்கைகள் எனக்கு. ஆனால் எனக்கு பெரியவர் இல்லாததால் அக்கா மீது எனக்கு
பாசம் உண்டு. ஆனால் நான் ப்ளஸ் டூ படிக்கும் வரை என் அக்காவை பார்த்தது கிடையாது. குடும்ப
சண்டையில் அவரது தாய் வழி பாட்டியிடம் வளர்ந்தார்
அவர். இதையே ஒரு தொடர் பதிவாக கூட எழுதலாம். ஆனால் இப்போது வேண்டாம்.
அந்த மீட்டிங்கில் அக்காவை சந்தித்து பேசிய போது
நீ என்ன செய்கிறாய்? என்று கேட்டபோது என் வெட்டி வேலைகளை பட்டியல் இட்டேன். சரி என்றவர்
ஒரு பத்து நாள் கழித்து ஒரு பொது நபர் மூலம் பொன்னேரியில் ஒரு கம்ப்யூட்டர் செண்டரில்
உனக்கு ஒரு சீட் வாங்கியுள்ளேன். வந்து சேர் என்று தகவல் கொடுத்தார்.
அந்த பொது நபர் ஒரு பாய். பொன்னேரியில் பங்க்
கடை வைத்து நாளிதழ்கள் வார இதழ்கள் விற்றுக்கொண்டிருந்தவர். அவரிடம் முகவரி வாங்கி
கொண்டு அக்கா சொன்ன இடத்திற்கு நான் சென்றேன். அப்போது என்னிடம் நல்ல பேண்ட் கூட இல்லை.
ஒரு டைட்டான பேண்ட் அணிந்து அவஸ்தை பட்டு அந்த இடத்திற்கு சென்றால் அங்கு அக்கா இல்லை.
அவரது தோழியின் வீடு அது. அவர் வரவேற்று விவரங்கள் கூறினார். டி.பி.சி.எஸ் என்று ஒரு
கோர்ஸ் மொத்தம் பத்தாயிரம் ரூபாய் கட்டணம். அதில் 3500 ரூபாய் அரசு டிரைசம் வழங்குகிறது.
மீதியை நாம் செலுத்த வேண்டும். மொத்தமாக வேண்டாம். மூன்று தவணைகளில் செலுத்தினால் போதுமானது
என்றார் அவர்.
சரி சரி! என்று தலை அசைத்து வீட்டிற்கு வந்தேன்.
அன்றைய சூழலில் அந்த பத்தாயிரம் ரூபாய் எங்களுக்கு பெரிய தொகை. சாப்பாட்டிற்கு அரிசி
கூட அப்போது தட்டுப்பாட்டில் இருக்கும். ஆசானபூதூர் சென்று எங்கள் தாத்தாவிடம் அவ்வப்போது
ஒரு மரக்கால் அரிசி கொண்டு வந்து கொண்டிருந்தோம். என் அம்மா சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிமையால்
ஓரளவு குடும்பம் தள்ளிக்கொண்டு இருந்தது.
சிரமமான சூழல்! மூன்று தவணைகளில் ஆறாயிரம் என்றால்
கூட என்ன செய்வது? யோசித்தோம். ஆனால் பிரிந்து சென்ற அக்காவை குடும்பத்தில் இணைக்க
இந்த கோர்ஸ் படிப்பது ஒன்றே வழி எனக்குத்தோன்றியது. இந்த கோர்ஸில் அக்காவின் தோழியும்
சேர்ந்திருந்தார். அவரை பார்க்க எப்படியும் அக்கா வருவார். அவருடன் பேச முடியும் என்ற
ஆசையும் நம்பிக்கையும் என்னை அந்த கோர்ஸில் சேரத்தூண்டியது. அதை விடுத்து எனக்கு அப்போது
கம்ப்யூட்டரில் பெரிதாய் ஆர்வம் ஒன்றும் இல்லை.
அந்த சமயத்தில் எனது தாத்தா என் பெயரில் பிக்சட்
டிபாசிட் ஒன்று போட்டிருந்தார். அதன் முதிர்வு தொகை பத்தாயிரம். அது சரியாக முதிர்வடைந்தது.
அதை எடுத்து என் பெயரில் சேவிங்க்ஸில் போட்டு இரண்டாயிரம் ரூபாய் வித் ட்ரா பண்ணி கோர்ஸில்
சேர்ந்து விட்டேன். என் பெற்றோர்களும் இதற்கு உடன் பட்டார்கள்.
கோர்ஸின் முதல் நாள் காலை ஒன்பது மணிக்கே சென்று
அந்த செண்டரில் காத்திருந்தோம். ஒரு வறவேற்பரை அடுத்து லேப். அதற்கு அடுத்து கிளாஸ்
ரூம். அந்த ரூமில் ஒரு பத்து பெஞ்ச்கள் டெஸ்குடன் இருந்தன. நானும் என் அக்காவின் தோழியும்
தான் முதலில் சென்றோம். அங்கு அமர்ந்திருந்த போது
சேலை அணிந்து சற்று பூசலான உருவத்துடன் சிவப்பாய் ஒரு அக்கா வரவும் இவர்தான்
பாடம் சொல்லிக் கொடுக்க போகிறார் என்று நினைத்தேன். அவர் கடைசியில் எங்களுடன் வந்து
அமர்ந்தார்.
ஆண்டார்குப்பத்தில் இருந்து மூன்று நண்பர்கள்,
சோத்து பெரும்பேடுஎன்ற கிராமத்தில் இருந்து ஒருவர் பொன்னேரியில் சிலர் என அந்த பேட்சில்
மொத்தம் பத்து பேர். பத்து பேரில் நான் தான் இளையவன். மற்றவர்கள் எல்லோரும் மூத்தவர்கள்.
முதல் நாள் அறிமுகத்துடன் வகுப்பு முடிந்தது. அதை
நடத்தியவர் ரமேஷ். அந்த நிறுவனத்தின் முதலாளி. அவரது தங்கை அருணா அடுத்த நாள் வகுப்பு
எடுத்தார்கள். ஒல்லியான ஒடிசலான தேகம். கண்ணாடி அணிந்திருப்பார்கள். சட்டென உணர்ச்சி
வசப்படுவார்கள். அவர்களின் வீடு அந்த செண்டரின் அருகில் இருந்தது.. இப்போது போல அல்லாமல்
அது முழு நேர கோர்ஸாக இருந்தது. காலை பத்து மணிக்கு தொடங்கும் வகுப்பு மாலை நாலு மணிக்குத்தான்
முடியும். இடையில் ஒரு மணி நேரம் மட்டும் இடைவேளை. முதல் இரண்டு நாட்கள் மிகவும் கஷ்டமாக
இருந்தது. ஏன் தான் இந்த கோர்ஸில் சேர்ந்தோமோ? இரண்டாயிரம் போனால் போகிறது இத்துடன்
நின்று விடலாம் என்று கூட நினைத்தேன். அந்த அளவிற்கு அந்த கோர்ஸ் எனக்கு ஏழாம் பொருத்தமாக
இருந்தது.
ஒரு வாரம் சென்றது. அன்று நிறுவனர் ரமேஷ் தன்னுடன்
ஒரு பெண்ணை அழைத்து வந்தார். இவங்கதான் மிஸ் பவானி. இனி இவங்கதான் உங்களுக்கு கிளாஸ்
எடுக்க போறாங்க என்று சொன்னார். அவரும் வணக்கம் சொல்ல நாங்களும் வணக்கம் சொல்லி அறிமுகப்
படுத்திக் கொண்டோம். அவர் பி இ முடித்து இருந்தார். ஆங்கில மீடியம். தமிழ் அவ்வளவாக
வராது தெலுங்கு தாய்மொழியாக கொண்டவர்.
முதல் நாள் அவர் வகுப்பு எடுக்க எங்களுக்கு ஒன்றும்
புரியவில்லை! அதுவும் கடைசி பெஞ்சில் அமர்ந்து இருந்த எனக்கும் கணேசனுக்கும் சுத்தமாய்
புரியவில்லை! மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தோம். வெங்கட் குமார் அவர் போர்டில்
நடத்தும் போது பின்புறம் முகத்தை சுழித்து நொங்கு எடுத்துக் கொண்டிருந்தான்.
அவர் நடத்தியது புரியவில்லை! ஆனால் அவர் மீது ஏதோ
ஒரு ஈர்ப்பு வந்து விட்டது. அக்கா பாசத்திற்கு ஏங்கிய நாட்கள் அல்லவா அது. அவரை அக்காவாக
நினைத்துக் கொண்டதால் இருக்கலாம் என்று நினைக்கிறேன். நடத்தி முடித்து புரிஞ்சுதா என்று
அவர் கேட்டதும் தலையை தலையை ஆட்டினோம். ஆனால் ஒன்றுமே புரியவில்லை. அந்த வார முடிவில்
இந்த கோர்ஸை விட்டு நின்று விட வேண்டும் என்றே முடிவு கட்டினேன். ஏனெனில் கோர்ஸ் ஒன்றும்
புரியவில்லை! அக்காவையும் சந்திக்க முடியவில்லை! தினமும் சென்று வரும் செலவு வேறு.
சைக்கிளில் சென்றாலும் தினப்படி செலவுகள் வேறு இருக்கிறதே! வீட்டில் சொன்னால் திட்டினார்கள்.
சேர்ந்தது சேர்ந்தாகிவிட்டது அரைகுறையாக நின்றால் எப்படி? கஷ்டப்பட்டு படி என்றார்கள்.
கஷ்டப்பட்டாலும் அது எனக்கு சுத்தமாய் ஒத்து வராது என்று சொல்ல முடியவில்லை!
இந்த நிலையில் அந்த வாரம் டெஸ்ட் வைத்தார்கள்.
யாரும் சரியாக எழுதவில்லை! மறுநாள் பேப்பரை திருத்தி கொடுத்து எங்களை தண்டிக்க வேண்டிய
பவானி மேடம் கிளாஸிற்கு வரவில்லை! ரமேஷ் பேப்பருடன் வந்தார். யாரும் 25 மதிப்பெண்களுக்கு
வைக்கப்பட்டதில் 5 ஐக் கூட தாண்ட வில்லை! என்ன பாய்ஸ் இப்படி இர் ரெஸ்பான்ஸிபளா பண்ணியிருக்கீங்க!
உங்க மேடம் அழுது கிட்டு இருக்காங்க! இனிமே கிளாஸ் எடுக்கலைன்னு சொல்றாங்க! என்றார்.
அடுத்து என்ன நடந்தது! அடுத்த பதிவில் சொல்கிறேன்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
புரியும்படி நடத்த முடியவில்லை என்றா...?
ReplyDeleteஆவலுடன் தொடர்கிறேன்..
mmm.....
ReplyDeletesollunga...!
ஆமா அவுங்க எதுக்கு அழுதாங்க??
ReplyDelete