சொக்கா சொக்கா சோறு உண்டா? பாப்பா மலர்!


சொக்கா சொக்கா சோறு உண்டா? பாப்பா மலர்!


ஓர் அழகிய கிராமத்தில் உழவன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். மூத்தவளை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்தான். இளையவளை பக்கத்து ஊரில் இருந்த சோழியனுக்கு திருமணம் செய்து கொடுத்தான்.
   இருவருக்கும் திருமணம் முடித்த சில வருடங்களில் உழவன் இறந்துவிட்டான். சில மாதங்கள் கழித்து மூத்தாளின் கணவனும் பாம்பு கடித்து இறந்து விட்டான். இளையவள் வெளியூரில் கணவனோடு வசித்து வந்தாள்.
  தந்தையும் கணவனும் இறந்து போனதால் மூத்த பெண் மிகுந்த துன்பம் அடைந்தாள். வறுமையில் வாடிய அவள் கூலிக்கு நெல் குத்தும் தொழிலை செய்து வந்தாள். நாள்தோறும் அவளுக்கு இரண்டு படி அரிசி கூலியாக கிடைக்கும். வேலை முடிந்து இருட்டும் நேரத்தில் வீட்டிற்கு வருவாள் அவள். எண்ணெய் வாங்கினால் வீண்செலவு என்று நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றமாட்டாள்.
   இருட்டிலேயே அடுப்பு பற்றவைத்து சோறு சமைப்பாள். வெந்த சோற்றை அப்படியே சாப்பிடுவாள். இரண்டு கவளம் சாப்பிடுவதற்குள் சோறு தீர்ந்துவிடும். அவள் வயிறு நிரம்பாது. பட்டினியாகவே கிடப்பாள். இப்படியே பலநாட்கள் கடந்தன.
   வெளியூரில் இருந்த தங்கை தன் அக்காவை பார்க்க அவள் வீட்டிற்கு வந்தாள். இருட்டும் நேரத்தில் இரண்டு படி அரிசியுடன் வந்து சேர்ந்தாள் அக்கா..
  ‘அக்கா! வீடு இருட்டாக இருக்கிறதே! விளக்கு ஏற்று!” என்றாள் தங்கை.
 “நாள் முழுக்க உழைத்து இரண்டு படி அரிசியுடன் வந்துள்ளேன். அரைபடி அரிசியை விற்றால்தான் எண்ணெய் வாங்க முடியும். வராதவள் வந்திருக்கிறாய். சரி போய் எண்ணெய் வாங்கி வருகிறேன்” என்று வெளியே சென்றாள் அக்கா.
   அரைபடி அரிசியை விற்றுவிட்டு எண்ணெயுடன் வந்தாள் அவள் விளக்கை ஏற்றினாள். பல நாள்களுக்கு பிறகு அந்த வீட்டில் விளக்கு எரிந்தது. விளக்கு வெளிச்சத்தில் உணவு சமைக்கத் தொடங்கினாள் அக்கா. இரண்டு படி அரிசி நமக்கே போதாது! ஒன்றரை படி அரிசியில் தங்கையுடன் சாப்பிட வேண்டும். இன்று அரை வயிறு கூட கிடையாது கால்வயிறுதான் என்று நினைத்துக் கொண்டே அரிசியை உலையில் போட்டாள்.
   “ அக்கா என்ன செய்கிறாய்? நம் இருவருக்கும் அரைபடி அரிசியே போதாதா? எதற்காக இவ்வளவு அரிசியை போடுகிறாய்? என்றாள் தங்கை.
  நான் நாள் தோறும் இரண்டு படி சாப்பிடுவேன்! அதுவே எனக்கு போதாது! என்று சொன்ன அக்காவை வித்தியாசமாக பார்த்தாள் தங்கை. உணவு சமைத்து முடித்ததும் இருவரும் விளக்கு வெளிச்சத்தில் சாப்பிட்டனர். சிறிதளவு உணவு சாப்பிட்டதுமே இருவருக்கும் வயிறு நிரம்பி விட்டது. நிறைய உணவு மீதம் இருந்தது.
   அக்காவிற்கு ஆச்சர்யம் தாளவில்லை! என்னடி இது அதிசயம்! ரெண்டு படி அரிசி எனக்கே போதாது. இன்று ஒன்றரை படியில் இவ்வளவு உணவு மீந்து விட்டதே என்றாள் தங்கையை பார்த்து.
  “ அக்கா நான் சொன்னால் நீ கேட்கவில்லை! அரைபடியே நம் இருவருக்கும் அதிகம்! இத்தனை நாள் நீ எப்படி இரண்டு படி சாப்பிட்டாய்! சாப்பிட்டும் பசி அடங்கவில்லை என்கிறாயே! ஆச்சர்யம்தான்!”என்றாள் தங்கை.
    “ என்ன மாயமோ தெரியவில்லை! நீ வந்ததும் சிறிதளவு சாப்பிட்டதுமே வயிறு     நிறைந்துவிட்டது!”என்றாள் அக்கா.
  இருவரும் படுத்து உறங்கினர். நள்ளிரவில், பேச்சுக்குரல் கேட்கவே இருவரும் விழித்தனர்.
  “சொக்கா! சொக்கா! சோறு உண்டோ? என்று ஒரு குரல் கேட்டது.
  “சோழியன் மனைவி வந்து கெடுத்தாள்” என்றது மற்ற குரல்.
  தங்கைதான் தைரியமாக கேட்டாள். யார் பேசுவது? என்று
 “ நான் ஒரு பிசாசு. நானும் சொக்கன் என்ற பிசாசும் விளக்கு இல்லாமல் சாப்பிடுகிறவர்களிடம் செல்வோம். அவர்கள் சாப்பிடும் சோற்றை தின்போம். பலநாட்களாக இங்கு மகிழ்ச்சியாக இருந்தோம். இன்று நீ வந்து விளக்கு ஏற்றச் செய்து சோறு சமைத்து சாப்பிட்டீர்கள். அதனால் எங்களுக்கு உணவு கிடைக்கவில்லை! அதனால்தான் இப்படி பேசினோம்” என்றது அந்த குரல்.
    அப்படியா சேதி! இனி இந்த வீட்டில் உங்களுக்கு சோறு கிடைக்காது வேறு இடம் பாருங்கள்! என்று சொல்லிய தங்கை அக்காவை பார்த்தாள்.
    அட இத்தனைக்கும் காரணம் இந்த பிசாசுகள்தானா? நான் விளக்கு வைக்காமல் சாப்பிட்டதால் என்னிடம் திருடி சாப்பிட்டு என்னை பட்டினி போட்டனவே! இதனால்தான் நான் இவ்வளவு துன்பப்பட்டேன். இனி விளக்கு வைத்து வெளிச்சத்தில் தான் சாப்பிடுவேன் என்றாள் அக்கா.
  அதன் பின் அவள் நாள் தோறும் வீட்டில் விளக்கேற்றி வெளிச்சத்தில் சாப்பிடத்தொடங்கினாள்.
 பிசாசுகளும் இனி இந்த வீட்டில் உணவு கிடைக்காது என்று ஓடிவிட்டன. அவள் மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.

செவிவழிக் கதை;

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2