சித்திரை முழுநிலா நாள்!
சித்திரை முழுநிலவு நாள் அன்று, நிலா சோறு சாப்பிடும் வழக்கம், இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.தமிழர் பண்பாட்டில், பவுர்ணமிக்கு தனி இடம் உண்டு. சங்க இலக்கியங்களில், பவுர்ணமி அன்று கொண்டாடப்பட்ட விழாக்கள் பற்றிய தனிப் பட்டியலே இருக்கிறது.முழு நிலவை கொண்டாடுவது என்பது உலகம் முழுவதும் இருந்தாலும், தமிழகத்தில் அதற்கு ஒரு நீண்ட வரலாறே உண்டு. குறிப்பாக சித்திரா பவுர்ணமி தினத்தன்று, வீடுகளிலும் கோவில்களிலும் பல்வேறு சிறப்பான சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.
அன்றைய இரவு பொழுதை, ஆற்றங்கரைகளில், குடும்பத்துடன் கழித்து மகிழும் பழக்கம் தமிழர்களிடையே இருந்து வருகிறது. உலகமயமாதல் போன்றவற்றால் சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், இதுபோன்ற பாரம்பரிய பழக்கங்கள் இன்றும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
ஆற்றங்கரை தோப்புக்கள்...:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, வேகவதி, செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் உள்ளன. இந்த ஆற்றங்கரைகளில், அடர்ந்த, அருமையான தோப்புக்களும் உள்ளன.சித்திரை முழு நிலவு அன்று, சொந்தங்கள் எல்லாம் ஒன்று கூடி, விதம் விதமான உணவுகளை சமைத்து, இந்த ஆற்றங்கரை தோப்புக்களில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கத்தில் உள்ளது. உறவுகள் எல்லாம் ஒன்று கூடி, குடும்ப விஷயங்களை குதூகலமாக பேசும் அந்த சந்தோஷ நிமிஷங்களை, இன்றும் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் அனுபவிக்க தயங்குவதில்லை. காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஐயங்கார் குளம் கிராமத்தில் பிரபல உற்சவமான நடவாவி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவிற்கு வருவோர் தங்களுக்கு பிடித்தமான உணவினை சமைத்து வந்து, வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து விட்டு, தாங்கள் எடுத்து வந்த புளியோதரை, சாம்பார் சாதம் உள்ளிட்ட வகை வகையான உணவுகளை நிலவொளியில் உண்டு மகிழ்கின்றனர்.
உறவுகளின் சங்கமம்: ஓரிக்கை, காவாந்தண்டலம், வாலாஜாபாத் உள்ளிட்ட ஆற்றுப்படுகை பகுதிகளிலும் மக்கள் வீடுகளில் சமைத்து வந்து தரை விரிப்பான்கள் விரித்து நிலா சோற்றை உண்டு, கதை பேசி அதிகாலை புறப்பட்டு செல்வதும் நடைமுறையில் உள்ளது.பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடமாக உள்ள திருமுக்கூடல், பழைய சீவரம், பழவேலி ஆற்றங்கரை சித்திரா பவுர்ணமி நாளில் களை கட்டி இருக்கும்.
மெலிதாக வீசும் தென்றலோடு, நிலவொளியில், ருசியான உணவுகளை உண்டு மகிழ்வதற்காக ஒரு பெரும் கூட்டமே அங்கு வரும். இந்த நாளில், இங்கு, நதிகள் மட்டுமல்லாமல், உறவுகளும் சங்கமமாகி, சந்தோஷப்படுகின்றன. நன்றி: தினத்தந்தி, தினமலர்
சிறப்பு பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteபகிர்விற்கு நன்றி. நிலா சோற்றை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.
ReplyDeleteசித்ரா பவுர்ணமி விழா பற்றி விரிவான பகிர்வு நன்றி
ReplyDeleteசித்திரை நிலவின் மாண்பினை பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDelete