உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 57

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 57


வணக்கம் அன்பர்களே! சென்ற வாரம் படித்த ஒரு ஓர் குழப்பம் பகுதியை நிறைய பேர் பாராட்டினீர்கள் மிக்க மகிழ்ச்சி! அந்த பகுதியை நினைவுகூற இங்கு: ஒரு ஓர் குழப்பம்

   இந்த வாரம் நாம் படிக்க இருப்பது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று. அது உரிச்சொல்.

   அது என்ன உரிச்சொல்? கடிநகர்,  தவசீலர், என்ற சொற்களுக்கு இலக்கணக் குறிப்பு உரிச்சொல்தொடர் என்று படிக்கையில் எழுதியிருப்பீர்கள். உங்கள் தமிழாசிரியரும் சால, உறு, தவ, நனி, கூர், கடி, கழி என்று  சொற்களின் முன் வந்தால் உரிச்சொல்தொடர் என்று எழுதுங்கள் என்று சொல்லிக்கொடுத்திருப்பார். நீங்களும் எழுதி இருப்பீர்கள். நம்முடைய கல்வி முறை அவ்வளவுதான். மதிப்பெண்களுக்காக படிக்கிறோம்! அதை மீறி எதையும் கற்றுக்கொள்வது இல்லை. கற்றுக்கொள்ள நாமும் ஆசைப்படுவதில்லை. சரி காலம் கடந்தாயினும் இப்போது கற்றுக் கொள்வோமே!

   உரிச்சொல் ஆங்கிலத்தில் (Attribute) என்று வழங்கப்படுகிறது. பல்வேறு வகைப்பட்ட பண்புகளை கொண்டதாய், ஒருசொல் பல பொருளும், பல சொல் ஒரு பொருளும் உணர்த்துவதாய் பெயர்ச்சொல், வினைச்சொல், ஆகிய சொற்களை விட்டு நீங்காத செய்யுளுக்கு உரிமை பூண்ட சொல் உரிச்சொல் எனப்படும். பொருளின் தன்மையை மிகுதி படுத்தும்.

   என்ன குழப்பமாக இருக்கிறதா? கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். வேண்டுமானால் வேறு வலைப்பூவை படித்துவிட்டு வாருங்கள். ஒரு எடுத்துக்காட்டை பார்த்தால் ஓரளவுக்கு விளங்கும்.
  சால என்ற சொல்லுக்கு மிகுதி என்று பொருள். இது பல்வேறு தொடர்களில் பல்வேறு பண்புகளை காட்டும். அதே சமயம் மிகுதி என்ற ஒரே பொருளை உணர்த்தும். பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ சார்ந்து வரும்.

  எடுத்துக்காட்டு, சாலச்சிறந்தது.  மிகுதியும் சிறந்தது என்று பொருள் கொள்ள வேண்டும். சிறப்பு என்ற பண்பினை காட்டுகிறது.

   சால, தவ, உறு, நனி, கூர், கழி, இந்த ஆறும் மிகுதி என்ற ஒரே பொருளினைத் தரக்கூடிய உரிச்சொற்கள்.

  சாலவும் நன்று, தவ சீலர், உறுபசி, நனிதேன், கூர்முனை, கழிசடை இந்த உரிச்சொற்கள் பல்வேறுபட்ட பண்புகளை குறித்து ஆனால் மிகுதி என்ற ஒரே பொருளைத் தருகின்றன பார்த்தீர்களா?

கடிநகர் என்ற உரிச்சொல்லை படித்திருப்பீர்கள். இதில் கடி என்னும் உரிச்சொல் பதிமூன்று பொருள்களை தரக்கூடியது.

கடிநகர் – காவல்நகர், கடிநுனைப்பகழி- கூர்மையான அம்பு
கடிமாலை- நறுமணமுள்ள மாலை, கடிமார்பன்-விளக்கம்பொருந்திய மார்பினை உடையவன், கடிஅரமகளிர்- அச்சம்தரும் பெண்டிர், கடிவிடுதும்- விரைவில் விடுதும்
கடி உணவு –மிகுதியான உணவு, கடிமணச்சாலை- புதுமையான திருமணச்சாலை, கடிமுரசு- ஒலிக்கும் முரசு, கடிவினை- திருமணவினை கடிமிளகு- காரமான மிளகு இவ்வாறு பதிமூன்று வகையான பொருளைத் தருகிறது.

   சுருக்கமாக ஒருசொல் பலப்பொருள் தருவதும், பலசொல் ஒருபொருளை உணர்த்துவதும் உரிச்சொல் என்று அறிந்து கொள்ளுங்கள்.

இனிக்கும் இலக்கியம்.


 குறுந்தொகை

பாலைத்திணை- தலைவி கூற்று

பாடியவர் – ஓதலாந்தையார்

துறை- ஆற்றாள் என கவன்ற தோழிக்கு கிழத்தி உரைத்தது.

எறும்பி அளையின் குறும் பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி,
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே;
அது மற்று அவலம் கொள்ளாது,
நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே.

விளக்கம்:   தலைவர் சென்ற வழியானது எறும்பின் வளையைப் போல் குறுகிய பல சுனைகளை உடையது; கொல்லனது உலைக்களத்தில் உள்ள பட்டடைக் கல்லைப் போன்ற வெம்மையுடைய பாறைகளின் மேல் ஏறிச்செல்ல வேண்டியுள்ளது. வளைந்த வில்லை உடைய எயினர் என்னும் வழிப்போக்கர் பொருளை கவரும் கள்வர்களை வாழும் வழியானது; என்று அந்த வழி சென்றோர் கூறினர்.  நம்முடைய இந்த ஆரவாரத்தை உடைய ஊரானது அந்த வழியின் கொடுமையை பற்றி எண்ணாது,என்னை வேறுபட்ட சொற்களை கூறி இடித்துரைக்கிறது. என்கிறாள் தலைவி.

   இங்கு ஊர் என்று தோழியினை சுட்டுகிறாள் தலைவி. தன்னை புரிந்து கொள்ளாத தோழியை கோபம் கொண்டு பாடுகிறாள்.
 தலைவி தலைவன் பிரிந்து சென்றான் என்ற வருத்தில் இருப்பதாக தோழி சொல்ல அதை மறுத்து  நீ என்னையே நினைத்து என் வருத்தத்தை பெரிது படுத்துகிறாய் எனக்கு என் துயரைவிட தலைவன் சென்ற வழியின் துயர் மிகக் கொடுமையானது அந்த வழியில் தலைவர் சென்றாரே என்று வருந்துகிறேன் என்று தலைவி எடுத்துரைக்கிறாள்.

  தலைவன் சென்ற வழிக்கு எடுத்தாளப்பட்ட உவமைநயம் என்னே அழகு! மீண்டும் படித்து ரசியுங்கள்!


உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்! மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! நன்றி!

தொடர்புடைய இடுகைகள்:


Comments

 1. குறுந்தொகை
  பெரும் சுவை
  நன்றி நண்பரே

  ReplyDelete
 2. மிகவும் சுவைபட விளக்கியமைக்கு நன்றிகள். தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும். தொடர்ந்து உங்களிடம் பாடம் கற்க ஆசை தான். நேரமின்மையே வர இயலவில்லை. அதற்காக மன்னிக்கவும். நல்லதொரு தகவல்கள். அனைவருக்கும் உதவும். பகிர்வுக்கு நன்றி சகோதரர்.

  ReplyDelete
 3. நன்றி சகோ அவசியமான பதிவே.
  வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 4. ரசிக்க வைக்கும் விளக்கம்... நன்றி...

  ReplyDelete
 5. "//காலம் கடந்தாயினும் இப்போது கற்றுக் கொள்வோமே!//"

  சரியாக சொன்னீர்கள், காலம் கடந்து தான் நான் கற்றுக்கொள்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2