உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 56

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 56


  வணக்கம் அன்பர்களே! தமிழ் கற்கும் இந்த பகுதியில் இலக்கணங்களை கற்க ஆரம்பித்த பின் நம்முடைய தமிழ் அறிவு வளர்ந்து வருவதை அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள். சென்ற வாரம் தொகா நிலைத்தொடர்கள் குறித்து அறிந்து கொண்டோம்.  அதை நினைவு கூற இங்கு தொகாநிலைத் தொடர்கள்

இந்த வாரம் நாம் கற்க இருப்பது ஒரு,ஓர் குழப்பம். அது என்ன ஒரு, ஓர் குழப்பம்.

    சாதாரணமாக பேச்சுவழக்கில் ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தாராம் என்று கதை சொல்லுவோம். ஆனால் எழுதும் போது ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தாராம் என்றுதான் எழுத வேண்டும். ஆனால் நம்மில் பெரும்பாலோர் இப்படி எழுத மாட்டோம். பேச்சுவழக்கிலேயே எழுதிவிடுவோம். இது இலக்கண வழக்கப்படி தவறு ஆகும். இது பலருக்கு தெரியாது.

   ஒன்று என்னும் எண் இலக்கணவிதியின் காரணமாக வருமொழியை நோக்கி ஒரு, ஓர் என்று விகற்பித்து வரும். இந்த இரண்டு சொற்களும் தனித்து வராது. எப்பொழுதும் பெயர்ச்சொற்களை வருமொழியாகக் கொண்டு அவற்றைத் தழுவியே வரும்.

   வருமொழியாக வரும் பெயர்ச்சொல்லின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் நிலைமொழி எண்ணுப்பெயராக “ஓர்” என்றும் மெய்யெழுத்தோடு கூடிய உயிர்மெய் எழுத்தாக இருந்தால் “ஒரு” என்றும் அமையும்.


      சரியான வாக்கியம்     - தவறான வாக்கியம்.
   ஓர் அறை                  ஒரு அறை
   ஓர் இனம்                   ஒரு இனம்
   ஓர் ஊர்                     ஒரு ஊர்
   ஓர் எண்ணம்                 ஒரு எண்ணம்
   ஓர் உலகம்                   ஒரு உலகம்.
    ஒருகப்பல்                   ஓர் கப்பல்
    ஒரு தட்டு                   ஓர் தட்டு 
   ஒரு பலகை                  ஓர் பலகை

இதே போலவே இரு- ஈர் குழப்பமும் வரும்.

   இரு+ ஆண்டுகள்   இரு ஆண்டுகள் என்று எழுதக்கூடாது. ஈராண்டுகள் என்பதே சரி
    இரு+ ஆயிரம் – இருவாயிரம் தவறு, ஈராயிரம் என்பதே சரி
     இரு+ மலர்கள்  இருமலர்கள் என்றும் இரு+ குழந்தைகள் இருகுழந்தைகள் என்றும் எழுதலாம்.

   அதாவது வருமொழியில் உயிரெழுத்து வருமாயின் ஓர்- ஈர் என்றும் மெய்கலந்த உயிர்மெய் எழுத்து வருமாயின் ஒரு- இரு என்றும் எழுத வேண்டும்.

    இதே போலவே அது அஃது குழப்பமும் உண்டு.
  அது+ உயிர்  அஃது உயிர் என்று எழுத வேண்டும்.

   அது+ மரம்  அது மரம் என்று எழுத வேண்டும்.

அது+  இறைவன்  அஃது இறைவன் என்றும்
அது+ நிலம்   அது நிலம் என்றும் எழுத வேண்டும்.

   வருமொழியில் வரும் முதலெழுத்து உயிராக இருந்தால் ஆய்த எழுத்து சேர்ந்து அஃது என்று வரும் என்று அறிந்து கொள்ள வேண்டும். 

 அதே போல உயிர்மெய்யெழுத்தான “ய்” என்பது அரை உயிர் எனப்படும். இந்த ய் கலந்த உயிர்மெய்யெழுத்து வருமொழியில் வருமானால் ஓர்- ஈர் என்றே எழுத வேண்டும். ஒர்+ யானை  ஓர் யானை, இரு+ யானை ஈர்யானை.

   செய்யுளில் ஓசையும் தளையும் தட்டுமானால் இந்த விதி தளர்த்தப்பட்டு வருமொழி முதல் உயிர்மெய்யாக இருந்தாலும் நிலை மொழி ஓர், எனப் போடுவதுண்டு. 

  எ.கா} எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்.
   ஒரு ஓர் குழப்பம் தீர்ந்ததா? மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள் எளிதாக புரியும்.

  இனிக்கும் இலக்கியம்!
  நற்றிணை
   பாலைத்திணை, தலைவன் கூற்று
பாடியவர்  ஆவூர் காவிதிகள் சாதேவனார்.


    பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,
    வான் தளி பொழிந்த காண்பு இன் காலை,
    அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
    மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்
    வீ பெய் கூந்தல் வீசு வளி உளர
    ஏகுதி- மடந்தை! எல்லின்று பொழுதே;
     வேல் பயில் இறும்பில் கோவலர் யாத்த
     ஆ பூண் தெண் மணி இயம்பும்,
    ஈகாண் தோன்றும், எம சிறு நல் ஊரே.

விளக்கம்}  ஏகுதி மடந்தை முதல் நல் ஊரேமுடிய வரிகள்:
 மடந்தையே! மூங்கில் நிரம்பிய சிறுகாட்டில் கோவலர் ஆவினத்தின் கழுத்தில் கட்டிய தெளிந்த ஓசையுடைய மணிச்சத்தம் கேட்கும் எமது சிறிய நல்ல ஊர் இதோ தெரிகிறது பார்! விரைவாக நடப்பாயாக!

 பாம்பு முதல் வளி உளர முடிய வரிகள்
  பாம்பு தன் புற்றிலே அடங்கிக் கிடக்கும் படி முழக்கமிட்டு வலப்பக்கத்தில் உயர்ந்து மேகம் மழைத்துளிகளைப் பொழியும் காட்சிக்கினிய காலை நேரம் இது. இந்த காலை வேளையில் நீண்ட நீலமணி போன்ற கழுத்தும் அழகிய தோகைகளையும் உடைய மயிலானது தன் தோகைகளை வியப்படையும்படி விரித்து ஆடும். அந்த மயிலின் தோகை போன்ற உன் மலர் சூடிய கூந்தல் இந்த காலைக்காற்றில் விரிந்து ஆடுகிறது. வெயில் குறைந்த இந்த பொழுதில் விரைந்து செல்வாயாக!

தலைவனும் தலைவியும் உடன் போக்கு நிகழ்த்துகையில் தன்னுடைய ஊர் அருகில் உள்ளது விரைந்து நடப்பாயாக என்று சொல்லுவதை கவிஞர் தன் அழகிய கற்பனையில் என்னமாய் பாடியிருக்கிறார் பாருங்கள்!

  மீண்டும் அடுத்த பகுதியில் இன்னொரு அழகிய பாடலுடன் சந்திப்போம்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தொடர்புடைய பதிவுகள்:



Comments

  1. தமிழன் என்றொரு இனமுண்டு.

    ReplyDelete
  2. தமிழன் என்றொரு இனமுண்டு.அவனுக்கு இலக்கணம் அறியாமலே எழுதும் குணம் உண்டுன்னு உங்கள் பதிவில் இருந்து தெரிந்து கொண்டேன் !

    ReplyDelete
  3. அழகிய கவிதையும் தமிழ் பற்றிய பயனுள்ள பதிவும் நன்றி ..!

    ReplyDelete
  4. ஒரு, ஓர் வித்தியாசத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. தொடருங்கள்.
    பாடலும், படமும் அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2