மாப்பிள்ளை புலி! பாப்பா மலர்!

மாப்பிள்ளை புலி! பாப்பா மலர்!


நரசிங்க புரம் என்ற ஊரில் ஒரு ஏழை பிராமணர் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மனைவியும் கல்யாண வயதில் ஒரு பெண்ணும் இருந்தார்கள். மிகவும் கஷ்ட ஜீவனம் அவர்களுடையது. கஷ்டப்பட்டு பிச்சை எடுக்கும் நிலையில்தான் அவர்கள் இருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் சாப்பாடு என்பதே அரிதான ஒன்றாக இருக்கையில் அந்த பெண் அண்டை வீட்டிற்கு சென்றாள்.
  அங்கே இரண்டு சிறுவர்கள் அரிசிப்புட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அதன் மணம் அவளை ஈர்த்தது. இந்தா அக்கா! கொஞ்சம் சாப்பிடு! என்று சிறுவர்கள் ஒரு வாய் கொடுத்தார்கள். அதை சாப்பிட்டதும் அதன் சுவை அவள் நாக்கில் தங்கிவிட்டது. அன்று முதல் அவள் அரிசிப்புட்டு சாப்பிட வேண்டும் என்ற நினைவிலேயே இருந்தாள்.
   ஒருநாள், “ அம்மா! அம்மா! எனக்கு அரிசி புட்டு செஞ்சு தர்றியா?” என்று அம்மாவிடம் கேட்டும் விட்டாள். அந்தணரின் மனைவி அழ ஆரம்பித்தாள். “ மகளே! எனக்கும் விதவிதமாய் செய்து சாப்பிட ஆசைதான்! ஆனால் நம் தரித்திரம்! நம் வீட்டில் ஒரு மணி அரிசிக் கூட இல்லை! பிச்சை எடுத்து சாப்பிடுகிறோம்! இதில் அரிசிப்புட்டுக்கு என்ன செய்வது?” என்று அழுதபடி கூறினாள்.
   அன்று இரவு அந்த அந்தணர் வீடு திரும்பியதும், மனைவி மகளின் ஆசையைக் கூறினாள். அந்தணர், “சரி கவலைப்படாதே! நாளை ஜமிந்தாரின் வீட்டில் திதி இருக்கிறது. கட்டாயம் அரிசி கிடைக்கும். அதில் புட்டை செய்து கொடு!” என்றார்.
    அந்த கிராமத்து ஜமிந்தார்  நல்ல மனிதர். அவர் தன் தந்தையின் நினைவு நாளுக்கு திதி கொடுப்பது வழக்கம். ஏழை பிராமணரை அழைத்து வேண்டிய மட்டும் அரிசி, பதார்த்தங்கள், பால், தயிர், வெல்லம், வாசனை திரவியங்கள்,  என பலவற்றை தானமாக கொடுத்தார். பிராமணரும் அதைப்பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தார். மனைவியிடம் கொடுத்து அரிசிப்புட்டு செய்யும்படி கூறினார். பிராமணரின் மனைவி சமையலில் கெட்டிக்காரி. அவள் அரிசிப்புட்டு சமைக்கும் வாசம் வெளியில் பரவியது. அண்டை வீட்டில் இருப்போர் அதன் மணத்தில் ஈர்க்கப்பட்டனர்.
    இந்த வாசத்தால் ஈர்க்கப்பட்ட காக்கா ஒன்று பிராமணரின் வீட்டு கூறையில் வந்து அமர்ந்தது. அட! இந்த வீட்டில் எதையோ ருசியாக சமைக்கிறார்கள்! சமைத்ததும் முதலில் எனக்குத்தான் படைப்பார்கள்! என்று கூறையின் மீதே காத்திருந்தது.
   நேரம் கடந்தது. பிராமணரின் மனைவி அரிசிப்புட்டை சமைத்து முடித்தாள். பசி வேகத்திலும் ருசியான உணவை கண்டு நாளானதாலும் அவர்கள் காகத்திற்கு உணவிட மறந்து விட்டனர். முதலில் கணவனுக்கும், பிறகு மகளுக்கும் பறிமாறிய அவள் எஞ்சியிருந்ததை தான் உண்டு முடித்துவிட்டாள்.
    காகம் காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போனது. பாத்திரங்களை கழுவி வைப்பதை பார்த்த காகம், அட மோசக்காரர்களே! என்னை ஏமாற்றிவிட்டீர்களே! எனக்கு சிறிதும் தராமல் முழு உணவையும் நீங்களே சாப்பிட்டு விட்டீர்களே! உங்களை பழி வாங்கியே தீருவேன்! என்று  சபதம் செய்தது.
   நரசிங்கபுரத்தை அடுத்து ஒரு பெரிய காடு இருந்தது. காட்டில் ஒரு பெரிய புலி வசித்து வந்தது. காகம் அந்த புலியிடம் சென்றது. “ புலியாரே! உனக்கு நல்ல பெண்ணை பார்த்து வந்துள்ளேன்! எங்கள் ஊர் பிராமணருக்கு அழகான பெண் உள்ளாள். அவள் உங்களையே மணக்க விரும்புகிறாள். நீங்கள் அவளை மணந்து கொண்டால் ஜோடிப்பொருத்தம் சிறப்பாக இருக்கும்.” என்றது.
   மனித பெண்ணை எனக்கு யாராவது திருமணம் செய்வார்களா? என்ன தான் அந்த பெண் விரும்பினாலும் இது நடக்காத காரியம்! என்று சொன்னது புலி.
   புலியாரே! எல்லாம் நடக்கும்! நீ அவர்களுக்கு தினமும் சிறிதளவு உணவை அனுப்பி வை! பின்னர் பெண் கேள்! கட்டாயம் கொடுப்பார்கள் என்றது.
  “ எந்த உணவை அவர்களுக்கு அனுப்புவது?”
   ”உன் வீட்டில்தான் எலுமிச்சை மரங்கள் உள்ளதே! தினமும் சில பழங்களை அவர்களுக்கு அனுப்பு. நானே அதை கொண்டு சென்று அவர்கள் வீட்டில் கொடுத்து நீ கொடுத்ததாக சொல்லிவிடுகிறேன்” என்றது.
    புலி மகிழ்ச்சியுடன் சம்மதித்தது. பின்னர் தினமும் சில எலுமிச்சம் பழங்களை காகம் மூலம் பிராமணருக்கு கொடுத்து அனுப்பியது. காகமும் புலியிடம் இன்னும் கொஞ்ச நாள் பொறு! அவர்கள் மகளை உனக்கு கட்டி வைக்க சொல்கிறேன்! என்று சொல்லியது.
    காகத்தின் புளுகை புலி நம்பிவிட்டது. அந்த பெண்ணை மணந்து கொள்ளலாம் என்று மனக்கோட்டை கட்டிவிட்டது. ஒரு நாள் எலுமிச்சம் பழங்கள் தீர்ந்து போகவும், காகத்திடம் கோபமாக இத்தனை நாள் பழங்கள் கொடுத்து என் மரத்தில் இருந்த பழங்கள் கூட தீர்ந்துவிட்டது. எப்போது அவர்கள் திருமணம் செய்து வைப்பார்கள் என்று சத்தம் போட்டது.
   உடனே பயந்த மாதிரி நடித்த காகம், இன்றே சென்று அவர்களிடம் சொல்கிறேன்! என்று சொல்லிவிட்டு பறந்தது.
    புலியின் கோபத்தைத் தான் காகம் எதிர்பார்த்தது. எனவே அது மகிழ்ச்சியுடன் பிராமணரின் வீட்டுக்கு வந்து,   ‘பிராமணரே! இத்தனை நாள் உங்களுக்கு எலுமிச்சம் பழம் கொடுத்ததற்கு பிரதி உபகாரமாக புலி உங்கள் பெண்ணை மணந்து கொள்ள விரும்புகிறது! புலிக்கு உங்கள் பெண்ணை கட்டிவைக்க ஏற்பாடு செய்யுங்கள்! இல்லையெனில் அது உங்கள் எல்லோரையும் கொன்று தின்றுவிடும்!”என்று சொன்னது.

       பிராமணர் பயந்து போனார். ஊர் ஜமீன் தாரிடம் போய் முறையிட்டார். அந்த ஜமீன் தார், பயப்படாதீர்கள்! அந்த புலியை வரச்சொல்லுங்கள் அதற்கு பாடம் கற்பிப்போம்! என்றார்.
   காகத்தை வரவழைத்து, புலியை வரசொல்லுங்கள்! அது ஒரு மாப்பிள்ளை போல உடையணிந்து வரட்டும். அவையின் நடுவில் அமர்ந்து ஆடல் பாடல்களை ரசிக்கட்டும். பின்னர் விருந்து உண்டு எங்கள் பெண்ணை மணந்து கொள்ளட்டும் என்று சொல்லி அனுப்பினார் பிராமணர்.
   பிராமணரின் வீட்டு புழக்கடையில் முன்னூறு அடுப்புக்களை மூட்டினர். அவற்றில் முன்னூறு வாணலிகளை வைத்து அதில் எண்ணெயை காய்ச்சினார்கள். பின்புறத்தில் இருந்த கிணற்றின் மீது ஒரு மெத்தையை விரித்தார்கள். தாரை, தப்பட்டை என்று ஆரவாரமாக இருந்தார்கள்.
   புலி மகிழ்ந்து போனது. ஏற்கனவே காகம் மூலம் செய்தி அறிந்த அது, கிராமத்தில் நடக்கும் ஆரவார ஏற்பாடுகளை கேள்விப்பட்டு ஆவலுடன் பிராமணரின் வீட்டுக்கு கிளம்பியது. சிறந்த உடை ஒன்றை அணிந்து கொண்டு தலையில் தலைப்பாகை அணிந்து மாப்பிள்ளை கோலத்துடன் அது பிராமணரின் வீட்டை அடைந்தது.
   புலியை கண்டதும் பிராமணரும் மக்களும் கொட்டடித்து வரவேற்று கிணற்றின் அருகே அழைத்துச்சென்று அந்த மெத்தையின் மீது அமரும்படி கூறினர்.
  குஷியில் இருந்த புலி தாவி குதித்து மெத்தை மீது ஏறவும் மெத்தை சரிந்து புலியுடன் கிணற்றில் விழுந்தது. தண்ணீர் இல்லா அந்த கிணற்றில் புலியின் முதுகு முறிந்து போனது. இதுதான் சமயம் என்று வாணலியில் கொதித்து கொண்டிருந்த எண்ணெய்களை கிணற்றில் ஊற்றி கொள்ளிக்கட்டைகளை வீச நெருப்புப் பற்றி புலி இறந்து போனது.
   இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த காகம் பயந்து போனது. ஏ காகமே! நீ தான் இதற்கு காரணமா? என்று பிள்ளைகள் சிலர் உண்டிகோலால் அடிக்க காகமும் மாண்டு போனது.
     பிராமணர் வீட்டுப் பெண் காப்பாற்றப்பட்டாள். தனக்கு உதவிய ஜமின் தாருக்கும் பொது மக்களுக்கும் பிராமணர் நன்றி கூறினார்.

(செவிவழிக்கதை)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. சின்ன வயதில் அம்புலிமாமா புக் படித்த அதே ஃபீலிங் !!!

  ReplyDelete
 2. அட...
  பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 3. நல்ல கதை எனக்கும் அம்புலிமாமா வாசித்த பீலின்ங் தான் இருந்தது. நன்றி ! வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 4. நல்ல கதை. பாகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

  ReplyDelete
 5. நல்ல கதை. காகம் செய்த தந்திரத்தால் புலியும் மாண்டு போனதே....

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2