பொய்யை பொய்யால் வெல்லு! பாப்பா மலர்!

பொய்யை பொய்யால் வெல்லு! பாப்பா மலர்!


வெகு காலத்திற்கு முன்னே தமிழ்நாட்டில் அம்புஜம்மாள் என்ற பெண்மணி வேதாரண்யம் என்ற தலத்திலே வசித்து வந்தாள். பின்னர் அந்த அம்மணி திருமணமாகி வசித்த இடம் சுவேதாரண்யம். அம்புஜம்மாளின் கணவர் பெரிய நிலக்கிழார். துன்பமில்லா இன்ப வாழ்க்கை அவர்களுடையது. மிகவும் மகிழ்ச்சி கரமான வாழ்க்கை வாழ்ந்தனர் அவர்கள். அம்புஜம்மாள் இளவயதிலேயே தல யாத்திரை மேற்கொண்டு பல கோயில்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து வருவதில் ஆர்வம் கொண்டவர்.
   சுவேதாரண்யம் என்று சொல்லப்படுகிற திருவெண்காடு தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டதால் அவதரித்தவர் மெய்க்கண்டார். சுவேதாரண்யரை வழிபட்டு சிவநேச குப்தர் என்பவர் பட்டினத்தாரின் அருளினை பெற்றார்.
   கணவரின் அனுமதியோடு அம்புஜம் தினம் தோறும் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவார். பல தலங்களுக்கு தலயாத்திரை சென்று வழிபட்ட அம்புஜம்மாள் திருக்கடவூர், காவிரிபூம்பட்டினம் திருஆக்கூர், திருவிடைக்கழி முதலிய தலங்களுக்குச் சென்று அகமுருகி வழிபட்டாள்.
   இவ்வாறு இந்த அம்மாளின் பக்தி நெறிக்கு உறுதுணையாக இருந்தார் அவரது கணவரான பெருநிலக்கிழார். இவ்வாறு அம்புஜம்மாள் சீர்காழி சென்று தோணியப்பரை வழிபட்டார் ஒருநாள். அப்போது அங்கு ஒரு துறவி எதிர்பட்டார். துறவியைக் கண்டதும் பணிந்து வணங்கி நின்றார் அம்புஜம்மாள்.
   அம்புஜம்மாளின் பக்தி அந்த துறவிக்கு புரியவில்லை! தன்னுடைய பெருமையை நிலைநாட்ட விரும்பினார். அம்மா! உனக்கு என் ஆசிகள்! இந்த காலத்தில் உத்தமமான பக்தர்களை காண்பது அரிது. நீ காரைக்காலம்மையாரைப் போல் காட்சி அளிக்கின்றாய். நான் வடக்கே பத்ரி நாத் முதலிய பல தலங்களை தரிசித்து வருகின்றேன். என்று தன் பெருமை பேசினார்.
     அம்புஜம், சுவாமி! வட இந்திய தலங்களை தரிசித்த தங்களை கண்ணுற்றது என் பெரும் பாக்கியம். பத்ரியில் நாராயணர் பத்து லட்சம் ஆண்டுகள் தவம் செய்தார்களாமே? அங்கு என்ன விசேஷம்? முக்கியமாக அங்கு காணக்கூடியது எது? என்று கேட்டாள்.
   துறவி, இது தான் சமயமென்று, அம்மா! பத்ரியில் ஓர் ஆச்சர்யத்தை நான் கண்டேன். ஒரு கீரைத்தண்டு முளைத்திருக்கிறது. இரண்டு மைல் சுற்றளவு. நான்கு மைல் உயரம். இப்படி ஒரு பிரம்மாண்டமான கீரைத் தண்டு தோன்றியுள்ளது. இந்த அதிசயத்தை நான் அங்கு பார்த்தேன். என்றார்.
  இதைக் கேட்டு அம்புஜம் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். அவளுக்கு படிக்காசு புலவரின் பாடல் நினைவுக்கு வந்தது. அது
   மாதர்க்கு இதம், கவி வாணர்க்குச் சால வணக்கம், குரு
   நாதர்க்கு நீதியோடு ஆசாரம், நண்பின் நயந்தவர்களுக்குக்
   கோதற்ற வாசகம், பொய்க்குப் பொய்,கோளுக்குக்கோள்,அறிவி
   லாதற்கு இரட்டிப்பு அறிவிடையோர் செய்யும் ஆண்மைகளே.


   ஒருவன் பிரம்மாஸ்திரம் விட்டால் தானும் பிரம்மாஸ்திரம் விட வேண்டும். கையால் அடிக்கக்கூடாது. இதே போல பொய்யை பொய்யால் வெல்ல வேண்டும் என்று எண்ணினாள்.
   சுவாமிஜி! ஆ! ஆ! என்ன ஆச்சர்யம்! பத்ரியில்- பனிமலையில் இரண்டுமைல் சுற்றளவு நான்கு மைல் உயரம் கொண்ட கீரைத் தண்டை தாங்கள் பார்த்தீர்கள் என்பது மிக ஆச்சர்யம்தான்.
   நானும் ஒரு சமயம் கேதாரம் போயிருந்தேன். அங்கே ஒரு குயவன் சட்டி செய்து கொண்டிருந்தான். அந்த சட்டியின் சுற்றளவு நான்கு மைல், உயரம் எட்டு மைல், அத்தனை பெரிய அளவில் அந்த சட்டியை பலரை வைத்துக்கொண்டு செய்து முடித்தான். அதைப்பார்த்து அசந்து போனேன் நான் என்றாள்.
   இதைக்கேட்ட துறவி கண்களை அகலமாக விழித்த்து அவளைப் பார்த்தார். “அம்மா! அவ்வளவு பெரிய சட்டி எதற்கு? என்ன உபயோகம்?” என்று கேட்டார்.
  அம்புஜம், சுவாமிஜீ! இது உங்களுக்கு விளங்கவில்லையா? என்ன சுவாமி இத்தனை நாடுகள் சுற்றிய உமக்கு இது கூடத் தெரியவில்லையா? நீர் கண்டதாகப் புளுகிய கீரைத் தண்டை சமைப்பதற்கு!” என்றாள்.
   இதைக்கேட்ட துறவி நாணி வாயடைத்துப் போனார். பயனின்றி பொய் பேசியதின் பயனை உணர்ந்தார். இனி யாரிடமும் இவ்வாறு வீண் புளுகு பேசக்கூடாது என்று அறிந்துகொண்டார்.
   அம்புஜம் அவ்வாறு தன் மதி நலத்தால் அவரைத் திருத்தினாள்.
   பெண்ணறிவு நுண்ணறிவு.

 (வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுகளில் சொன்ன கதை)


தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. படிக்காசு புலவரின் பாடல் அற்புதம் நண்பரே
  சேமித்து வைத்துக் கொண்டேன்
  நன்றி

  ReplyDelete
 2. அற்புதமான கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 3. மிக மிக நல்ல கதை. கிருபானந்த வாரியார் அற்புதமான ஆன்மீக உரை கதைகளுடன் சொல்லியவர். பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 4. கதையும் அருமை. அது சொன்ன கருத்தும் அருமை.

  அருமையாக சொன்னீர்கள். இந்த தளத்தில் திறன் பேசி குறித்த தகவல்களை எளிய ஆங்கிலத்தில் தமிழர் ஒருவர் எழுதியிருக்கிறார். அனைவருக்கும் பயன்படும் என நினைக்கின்றேன்.

  சுட்டி: நோக்கியா போனின் சிறப்பம்சங்கள்

  ReplyDelete
 5. துறவிக்கு எதற்கு இந்த வீண் ஜம்பம் ?

  ReplyDelete
 6. நல்ல கதை. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2