பாரதத்தில் மோடியும் தமிழ்நாட்டில் லேடியும் ஓரங்கட்டப்பட்ட டாடியும்! கதம்பச்சோறு! பகுதி 36

கதம்ப சோறு பகுதி 36


பிரதமர் மோடி:  

எல்லோருடைய கணிப்பையும் மீறி 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டது பா.ஜ.க. இதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வென்று சாதித்து காட்டிவிட்டார். பத்து ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வெறும் 44 தொகுதிகளில் மட்டும் வென்று எதிர் கட்சி அந்தஸ்துக்கு கூட கெஞ்ச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. தொங்கு பாராளுமன்றங்கள் பலவற்றைப் பார்த்து சலித்துப்போன மக்கள் இந்த முறை நிலையான வலுவான ஆட்சி அமைய விரும்பினார்கள் போலும். காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மூன்றாவது அணி என்று சொல்லப்பட்ட அணியின் ஸ்திரமில்லாத போக்கு போன்றவையே பா.ஜ.க வின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம். மோடியின் தலைமையில் இந்த வெற்றியை கொண்டாடும் பா.ஜ.க உள்ளடி அரசியல்களில் இறங்காமல் நல்ல ஆட்சியை தருமானால் காங்கிரஸை கலைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் நோக்கத்தை நிறைவேற்ற உதவி புரியலாம். ஏகப்பட்ட சவால்கள் மோடிக்கு காத்திருக்கின்றன. அதை எப்படி எதிர்கொள்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். வாழ்த்துக்கள் மோடி.

சாதித்துக்காட்டிய அம்மா:  
இந்தியா முழுமையும் எப்படியோ மோடி அலை வீசினாலும் நாற்பதும் நமதே என்ற கோஷத்துடன் இறங்கிய அதிமுக 37 தொகுதிகளில் வென்று நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற சாதனையை படைத்திருக்கிறது. எம்.ஜி. ஆர் கூட இதை சாதிக்க வில்லை. அம்மா சாதித்து காட்டி இருக்கிறார். ஆனால் இத்தனை எம்.பிக்கள் இருந்தும் ஆட்சியில் பங்கேற்க முடியாது. மோடி தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டார். எதிர்கட்சியாக தமிழகத்திற்கு சேர வேண்டிய உரிமைகளை கேட்டுப்பெறலாம். ராஜ்ய சபாவில் அதிமுகவின் சேவை பா.ஜ.க விற்கு தேவை என்பதால் மோதல் போக்கை அம்மா கைவிட்டு அனுசரித்து நடந்தால் தமிழகம் பிழைத்துக் கொள்ளும். சிங்கிடம் காட்டிய மோதல் போக்கு தொடர்ந்தால் 37 எம்பிக்களை அனுப்பிய தமிழக மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும். அம்மா பிளான் என்னவென்று போகப் போகத்தான் தெரியும்.
குறைந்த பட்சம் பத்து தொகுதிகளையாவது கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட திமுக ஒற்றை இலக்கை கூட எட்டவில்லை. பெருந்தலைகள் உருண்டன. இதற்கு கட்சியில் ஊழலுக்கு சொல்லப்பட்ட ஒப்புச்சப்பில்லாத விளக்கமும் உட்கட்சி பூசலும்தான். பலர் சீட் கிடைக்காமல் உள்ளடி வேலைகள் செய்ய உளுத்துப் போனது கழகம். அழகிரியை நீக்கியதால் மதுரையில் பாதிப்பு. மற்ற இடங்களில் உள்குத்து என்று திணறலில் டாடியை ஓரங்கட்டி பிரசாரத்தில் வெளுத்து கட்டியும் ஒன்றையும் சாதிக்க முடியவில்லை!

ஆபரேசன் அமைச்சரவை!
    தமிழக அமைச்சரவை அமாவாசைக்கு அமாவாசை நடுங்கிக் கொண்டிருக்கும். அம்மா கொடநாடு போய் வந்தால் அமைச்சர்களுக்கு வயிற்றைக் கலக்கும். ஏனென்றால் அப்போதெல்லாம் அமைச்சர்களின் பதவிகள் காணாமல் போகும். தேர்தல் முடிவுகள் வந்தவுடன் சில அமைச்சர்கள் நீக்கப்படலாம் என்ற செய்திகள் கசிந்து கொண்டிருந்தன. அது உண்மையாக்கப் பட்டு முதலில் மூன்று அமைச்சர்கள் அப்புறம் ஒன்று நான்கு பேர் இப்போது பதவி இழந்தார்கள். நால்வர் அணியில் வலம் வந்த கே.பி முனுசாமியும் அதில் ஒருவர். பி.வி ரமணா மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் தப்பித்து வந்தவர் இப்போது மாட்டிக்கொண்டார். ஏற்கனவே நீக்கப்பட்ட மூன்று பேர் மீண்டும் அமைச்சர்களாகி உள்ளனர். அதிமுகவில் இந்த களையெடுப்பு சகஜமான ஒன்றுதான். இந்த பயம் இருப்பதால்தான் இந்த கட்சி இன்றளவும் இந்த வெற்றிகளை பெற்று வருகிறது. ஆட்டம் போடும் அமைச்சர்களை ஆதாயத்திற்காக வைத்து கொண்டிருந்ததால்தான் இன்று திமுக அடிமட்டத்திற்கு போய் விட்டது. இனியாவது அமைச்சர்கள் திருந்துவார்களா தெரிய வில்லை.


 டீ வி கார்னர் :பிங்கோ கனெக்‌ஷன்
    ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில் விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் ஒரு கேம் ஷோ பிங்கொ கனெக்‌ஷன். சினிமா சம்பந்தமான கேம் ஷோ இது மூன்று டீம்கள். நடத்துபவர் ஜகன். கலோக்கியலாய் அசத்தலாக நடத்துகிறார். சினிமா சம்பந்தமான க்ளுக்கள் புகைப்படங்களாக காட்டப்பட அதிலிருந்து சினிமா பெயர், பாடல் வரி, சினிமா பிரபலங்கள் போன்றவற்றை கண்டுபிடிக்க வேண்டும். சில எளிமையாக இருந்தாலும் பல கஷ்டப்படுத்துகிறது. மிக அருமையாக நேரம் போவதே தெரியாமல் செல்கிறது இந்த ப்ரோகிராம். ஒரு முறை பாருங்கள்! அப்புறம் தவற விடமாட்டீர்கள். இந்த வாரம் சுஜிபாலாவுடன் வந்திருந்த அவரது சகாவான பெண் கலக்கலாக பதில் சொல்லி அசத்தினார். அவரது டீமே இறுதியில் வெற்றிப்பெற்றது.

கிச்சன் கார்னர்.
    காரவளை:
 தேவையான பொருட்கள் : மைதா 1\4 கிலோ அரிசி மாவு 1\4 கிலொ ரவை 200 கிராம், தேங்காய் 1 இஞ்சி, மிளகாய் விழுது, வெண்ணெய் சிறிதளவு, உப்பு தேவையான அளவு. எண்ணெய்.

  செய்முறை: இஞ்சி மிளகாய் விழுதை தேங்காய்த் துருவலுடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மைதா அரிசி மாவை கலந்து ரவை வெண்ணெய் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர் அதனுடன் இஞ்சி விழுது சேர்த்து பிசையவும். சிறிய அளவில் மாவை உருட்டி வட்டமாக வளைத்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து கொஞ்சம் கொஞ்சமாக பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  சுவையான காரவளை சுடச்சுட சாப்பிட ரெடி.

டிப்ஸ்! டிப்ஸ்!டிப்ஸ்!

 ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையைத் தூவி அதனுள் பிஸ்கெட்டை போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்பு கையில் சிறிதளவு உப்பை தடவிக்கொண்டால் மாவு கைகளில் ஒட்டாது.

உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.

மிதியடிக்கு அடியில் அதே சைஸில் பழைய நியுஸ் பேப்பரை வெட்டி வைத்து விட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்து இருக்கும். துப்புறப்படுத்த சுலபமாக இருக்கும்.

பிரிட்ஜை டீ பிராஸ்ட் செய்யும் போது உருகும் ஐஸ் வாட்டரை வீணாக்காமல் சேமித்து கார் பேட்டரிக்கு டிஸ்டில் வாட்டராக பயன்படுத்தலாம்.

இட்லி மாவு புளிக்காமல் இருக்க வெற்றிலையை காம்பு கிள்ளாமல் மாவு பாத்திரத்தில் குப்புற இருப்பது போல இரண்டு வெற்றிலையைப் போடவும். இரண்டு நாட்களுக்கு பொங்காமலும் புளிக்காமலும் இருக்கும்.

 என் நூலகம்!
   எளிய முறையில் பிணியகற்றும் தெய்வீக மூலிகைகள்
  ஆசிரியர் ஞானோதய வைத்தியர் டாக்டர் சி.கே. மாணிக்கவாசகம்.
 வெளியீடு: நர்மதா பதிப்பகம். பக்கங்கள் 340 விலை ரூ 140.
    நர்மதா பதிப்பகம் எப்போதுமே நல்ல நூல்களையே வெளியிடும். ஆன்மீகம், யோகா, மூலிகைகள் என சிறப்பான நூல்கள் இந்த பதிப்பகத்தால் வெளிவந்து இருக்கின்றன.  அந்த வகையில் மூலிகை வைத்தியம் சம்பந்தமான இந்த நூலும் அவர்களுடைய சிறந்த வெளியீடுகளில் ஒன்று. இந்த புத்தகத்தின் முதல் நாற்பது பக்கங்கள், முன்னுரை, பதிப்புரை பாராட்டுரைகளுக்குச்சென்று விடுகிறது. மீதமுள்ள 300 பக்கங்கள் நமக்கு பல நல்ல மூலிகைகளையும் அதை பயன்படுத்தும் முறைகளையும் பல தெரியாத தகவல்களையும் தருகிறது. 65 அத்தியாயங்கள் பல்வேறு நோய்களுக்கு சித்த மருத்துவங்களை கூறுகிறது. பின்னர் ஒரு மூன்று நான்கு கட்டுரைகளும் கால்நடை வைத்தியங்களும் பின்பகுதியில் உள்ளன. பெரும்பாலான வைத்தியர்கள் வெந்நீர் குளியல் வெந்நீர் சாப்பிட அறிவுருத்துவார்கள். இவர் வேண்டாம் என்கிறார் வெந்நீர் தொடர்ந்து குடித்து குளித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்கிறார். வாழைமரம் கட்டுவது ஏன்? மாவிலைத்தோரணம் கட்டுவது எதற்கு? செம்மண் எதற்கு பூசுகிறோம்? அருகம்புல்லின் மகிமை இதைப்பற்றி ஒரு அத்தியாயம் அலசுகிறது. நார்ச்சத்து நமது உயிர்ச்சத்து என்ற அத்தியாயத்தில் நார்ச்சத்தின் அவசியத்தையும் அவை நமக்கு என்ன செய்கின்றன என்றும் விரிவாக கூறியுள்ளார் வாழைத்தண்டு சாறு முள்ளங்கி சாறு தயார் செய்து தினமும் 100 மில்லி காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பு அருந்தி வந்தால் 50% மாரடைப்பு வருவதை தடுக்கலாம் என்றும் சொல்கிறார். இந்த மாதிரி ஏராளமான தகவல்கள் புத்தகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. நல்ல தரமான பேப்பரில் நல்ல அச்சில் பைண்டிங் செய்து இந்த புத்தகம் கிடைக்கிறது. இதில் உள்ள தகவல்களுக்கு இந்த புத்தகத்தின் விலை பெரிதே இல்லை. சித்த மருத்துவ ஈடுபாடு உள்ளோர் அனைவரும் படிக்க வேண்டிய  அருமையான புத்தகம்.



இவர்களை தெரிந்து கொள்வோம்:
    இன்று வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வழக்கு, கோர்ட் என்று அரசியல்வாதிகள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அன்று எளிமையாக இருந்த காமராஜரை நாம் அறிவோம். அவரைப்போல் வாழ்ந்த இந்த அசாம் மாநில முதல்வரை அறிந்து கொள்ள இங்கு செல்க: இப்படியும் இருந்தார்கள்!

படிச்சதில் பிடிச்சது:
      வாய்ப்பே இல்லை!
  திருமணமானதில் இருந்து அந்த இளைஞன் நாளுக்கு நாள் மெலிந்து போய் கொண்டிருந்தான். வீட்டில் அனைத்துவிதமான மருத்துவ முறைகளை மேற்கொண்ட பிறகும் உடல் தேறியபாடில்லை. வேறு வழி இல்லாமல் மனைவியுடன் மருத்துவமனைக்குச் சென்றான்.
  பிரபல மருத்துவர் அவனை பரிசோதித்தார். பரிசோதனை முடிந்ததும் இளைஞனை வெளியே அனுப்பிவிட்டு அவன் மனைவியிடம், “நீங்கள் பயப்படுகிற மாதிரி அவருக்கு உடலில் எந்தவித கோளாறுகளும் குறைபாடுகளும் இல்லை. நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். இன்றிலிருந்து உங்கள் வீட்டை நீங்கள் மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளவேண்டும் காலையில் உங்கள் கணவருக்கு சுவையான சிற்றுண்டி தரவேண்டும். எப்பொழுதும் சிரித்த முகத்தோடு பேசவேண்டும். நீங்கள் சிறிது கூட கோபம் கொள்ள கூடாது. அதே போல தொலைக்காட்சி தொடர்களை பார்க்காதீர்கள். புதிய துணிமணிகள் வேண்டும் என அவரை நச்சரிக்காதீர்கள் இதே போன்று ஒரு வருடம் செய்தீர்களானால் அவர் நன்றாகத் தேறிவிடுவார்” என்றார்.
  மௌனமாக எழுந்த மனைவி மருத்துவருக்குரிய தொகையை கொடுத்துவிட்டு கணவனுடன் வெளியேறினாள். வழியில் இளைஞன் அவளிடம், “நீண்ட நேரமாக மருத்துவரிடம் எனது உடல் தேறுவது குறித்துக் கேட்டுக்கொண்டிருந்தாயே! அவர் என்ன சொன்னார்? என்று கேட்டான்.
  அதற்கு மனைவி, “நீங்கள் தேறுவதற்கு எந்தவித வாய்ப்பும் வழியும் இல்லையாம்…! என்றாள்.


தஙக்ள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. கதம்ப சோறு சுவையாக உள்ளது!

    ReplyDelete
  2. கதம்ப மாலை மணக்கிறது !

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி..
    கடைசி செம சிரிப்பு..

    ReplyDelete
  4. அனைத்துமே அருமை! நண்பரே! கதம்ப சோறு மிகவும் சுவையாக இருந்தது!

    ReplyDelete
  5. டிப்ஸ் சூப்பர்.
    "வாய்ப்பே இல்லை" - சான்ஸே இல்லை....... ரொம்ப சூப்பர்.

    ReplyDelete
  6. அருமையான புத்தக தகவலோடு அனைத்தும் அருமை...

    ReplyDelete
  7. அனைத்துமே ரசித்தேன். கடைசி - முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படித்து ரசித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2