சென்னை திருவான்மீயூர் மருந்தீசர்!
சென்னை திருவான்மீயூர்
மருந்தீசர்!
தொண்டை மண்டலம்
சிவாலயங்களுக்கு பெயர் பெற்றது. பழம் பெருமை மிக்க சிவாலயங்கள் நிறைந்தது. அந்த
வகையில் தொண்டை நாட்டின் புராதன
கோயில்களில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயமும் ஒன்று.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஆகியோர்
இத்தலத்து இறைவனை போற்றி பாடியுள்ளனர். மயிலை கபாலீஸ்வரர் ஆலயம் போன்றே இந்த
ஆலயமும் அளவில் ஒத்துள்ளது. பிரகாரத்தில் 108 சிவலிங்கங்கள் 12 வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன.
திருவான்மியூர் ஈசன் தானாகவே தோன்றிய சுயம்பு
லிங்கமாகும். தொண்டை நாட்டின் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 25 வது திவ்ய ஷேத்திரமாக
கணக்கிடப்பட்டுள்ளது. தன்னை பணிந்து போற்றி நிற்கும் அடியார்களின் பிணியை அகற்றும்
மருந்தீசராக அருள்பாலிக்கிறார் சிவன்.
வால்மீகி முனிவர் இவ்விறைவனை பூஜித்தததால்
வால்மீகிநாதர் என்ற பெயரும் இவருக்குண்டு. காமதேனு தன் பாலினால் இவ்விறைவனை
அபிஷேகம் செய்து அருள் பெற்றது.
காமதேனு அறியாமல் சிவன்
சிரசில் ஏற்படுத்திவிட்ட கால் குளம்பின் வடு இன்றும் காணலாம். இது
பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
சூரியன் சந்திரன் இருவரும் இவ்வீசனை
பூஜித்தமையால் இக்கோயிலில் நவக்கிரகங்கள் இல்லை. மருந்தீசர் மேற்கு நோக்கி அருள்
பாலிக்கிறார். தியாகராஜருக்கு தனி சன்னதி அமைந்து உள்ளது. இத்தலத்து அம்மன் ஸ்ரீ
திரிபுர சுந்தரி அம்பிகை தெற்கு நோக்கி அருள் பாலிக்கின்றாள்.
வசிஷ்டமுனிவர்
செய்த சிவபூஜைக்காக,
இந்திரன் தன்னிடமிருந்த
காமதேனுவை கருடன் அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர், அதனை புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார். கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் கேட்க, இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக
உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்றார். அதன்படி, இங்கு வந்த காமதேனு சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றது. இதனால், இங்குள்ள இறைவன் "பால்வண்ணநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
கொள்ளைக்காரராக
இருந்த வால்மீகி, திருந்திட எண்ணம் கொண்டு இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை, அவர் சிவனை தரிசிக்க வந்தபோது, அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த லிங்கத்தை அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட, சுவாமியின் தலையிலும், மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது.
அகத்தியருக்கு உபதேசம்: அகத்திய முனிவர் இங்கு வந்து சுவாமியை வணங்கி தவம் செய்தார். அவருக்கு, வன்னி மரத்தடியில் காட்சி தந்த சிவன் உலகில் தோன்றியுள்ள நோய்களுக்கு
உண்டான மருந்துகளைக்குறித்தும், மூலிகைகளின் தன்மைகள் குறித்தும் உபதேசம் செய்தார். எனவே, இத்தலத்து ஈசன் "மருந்தீஸ்வரர்' எனப்படுகிறார்.
மேற்கு திரும்பிய சிவன்: அபயதீட்சிதர்
எனும் பக்தர் ஒருவர், சுவாமியை வழிபட வந்தபோது கடும்மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, அவரால் நீரைக்கடந்து சுவாமியைக்காண
வரமுடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் சுவாமியின் முதுகுப்பகுதியை மட்டும்தான்
தரிசிக்க முடிந்தது. வருத்தம்கொண்ட அவர்,
"சிவனே! உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள மாட்டாயோ?' என வேண்டினார். அவருக்காக சிவன் மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால், இங்கு சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.
ராஜேந்திர சோழன் ராஜாதிராஜன் இரண்டாம்
ராஜேந்திரன் ஆகிய சோழர் கால கல்வெட்டுக்கள் ஆலயத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது.
இக்கோயிலை பற்றிய கல்வெட்டுக்கள் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள், மயிலை
கபாலீஸ்வரர் கோயில்களிலும் காணப்படுகிறது. பங்குனி பிரம்மோற்சவம் சிறப்பாக
கொண்டாடப்படுகிறது.
திருவான்மியூர் தியாகராஜர் வீதிப்புறப்பாடு
இரவிலேயே நடைபெறுகிறது. ஸ்ரீ பாதம் தாங்கி சென்று வீதிப்புறப்பாடு நடைபெறும்.
இப்புறப்பாட்டின் போது திருநடனம் நடைபெறுவது கண்கொள்ளா காட்சியாகும்.
சென்னையில் இருந்து மகாபலி புரம் செல்லும் வழியில்
அடையாற்றுக்கு அருகில் திருவான்மியூர் அமைந்துள்ளது.
காலை 6மணி முதல் மணி 12வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
மருந்தீசர் அறியா தகவல்கள் அறிந்தேன் நன்றி நண்பரே
ReplyDeleteபல தகவல்கள் சிறப்பு... நன்றி...
ReplyDeleteஅருமை சுரேஷ் சமீபத்தில் இந்த பழமையான கோவிலுக்கு சென்று வந்தேன். மேற்குப் புறமாக சிவன் பார்த்திருப்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதன் காரணம் இப்போதுதான் அறிந்தேன்.
ReplyDeleteஇங்கு கோசாலையும் உண்டு +
நல்ல பகிர்வு நன்றி