பலே கிழவியும் முட்டாள் திருடர்களும்! பாப்பாமலர்!

பலே கிழவியும் முட்டாள் திருடர்களும்! பாப்பாமலர்!


   வெகு காலத்திற்கு முன்னே கீரனூர் என்ற ஊரிலே ஒரு ஏமாற்றுக்காரன் வசித்து வந்தான். பிறரை ஏமாற்றிப்பிழைப்பதே அவனுக்கு வேலை. அந்த ஊரின் பக்கத்திலே மோகனூர் என்ற ஊர் இருந்தது. அங்கேயும் ஒரு ஏமாற்றுக்காரன் இருந்தான் அவனுக்கும் பிறரை ஏமாற்றுவதே குறிக்கோள் லட்சியம். இந்த இருவரும் ஏமாற்றுவதில் ஒருவரை ஒருவர் மிஞ்சி விட்டார்கள்.
  ஒரு நாள் கீரனூர் காரன் குப்பன் யாரை ஏமாற்றலாம் என்று சிந்தனை செய்து கொண்டு ஒரு தூக்குச்சட்டியில் அடியில்  சாணத்தை நிரப்பி மேலாக சாதம் சிறிதளவு பரப்பி அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அதே சமயம் மோகனூர்காரன் சுப்பனும்  ஒரு தூக்குப்பாத்திரத்தில் அடியில் மணல் நிரப்பி மேலாக சிறிது அரிசி பரப்பி எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
   இந்த இருவரும் வழியில் ஒரு சத்திரத்தில் சந்தித்தனர். குப்பனுக்கு சுப்பனை பற்றி நன்கு தெரியும். அதே போல சுப்பனுக்கும் குப்பனைப் பற்றித்தெரியும்  இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அசட்டுச்சிரிப்பு சிரித்துக் கொண்டு அமர்ந்தனர்.
 அப்போது குப்பன், சுப்பனை பார்த்து, ”அண்ணே! உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி! எனக்குப் பசியே இல்லை! சாப்பாடு வேண்டாம் என்று சொல்லியும் என் மனைவி சாப்பாடு கட்டிக்கொடுத்துவிட்டாள். பசி இல்லை! இந்த சோறு பாழாக போகிறதே”என்று வருத்தமாக இருக்கிறது என்றான்.
   சுப்பனும், ”அண்ணே! உங்களுக்கு பசி இல்லை! ஆனால் எனக்கோ பசி காதை அடைக்கிறது! ஆனால் பாருங்கள் என் மனைவி அரிசியை கட்டிக் கொடுத்து அனுப்பி இருக்கிறாள். இதை சமைத்து நான் எப்போது சாப்பிடுவது? செத்தே போய் விடுவேன் போல!”என்று சலித்துக் கொண்டான்.
   குப்பன்,  “அப்படியானால் நாம் நம் பாத்திரங்களை மாற்றிக்கொள்வோம்! நீ சோறை எடுத்துக் கொள்! நான் அரிசியை எடுத்துக் கொள்கிறேன்! பசிக்கும் போது நான் சமைத்து உண்டு கொள்கிறேன்!”என்றான்.
   சுப்பனும் சம்மதித்து பாத்திரங்களை மாற்றிக் கொண்டான். இருவரும் எதிரெதிர் திசையில் பிரிந்து சிறிது தூரம் சென்று பாத்திரத்தை பிரித்தார்கள். சுப்பன் மடையன்! அரிசியைக் கொடுத்துவிட்டான் சாணியை வாங்கிக் கொண்டு என்று குப்பன் மகிழ்வோடு பாத்திரத்தை பிரித்தால் மேலேதான் அரிசி! உள்ளே பூராவும் மணல்! ”அடச்சீ! ஏமாந்து போனோமே ”என்று வருந்தினான். அங்கே சுப்பன், குப்பனை போல் மடையன் இருக்க முடியாது! நல்ல சோற்றை நமக்குத் தந்துவிட்டு அங்கு மண்ணை சாப்பிட்டுக் கொண்டு இருக்க போகிறான் என்று சிரித்தபடி தூக்கை கவிழ்த்தான். சாணி உருண்டைகள் விழ  “ஐயோ! என்னை இப்படி ஏமாற்றிவிட்டானே குப்பன்! ”என்று தலையில் அடித்துக் கொண்டான்.
   இப்படி வல்லவனுக்கு வல்லவனான இருவரும் ஒருநாள் மீண்டும் சந்தித்தார்கள்.  “நண்பா! இப்படி நாம் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்வதை விட்டு இருவரும் சேர்ந்து யாரையாவது ஏமாற்றிப் பிழைத்தால் என்ன?”என்றான் சுப்பன்.  ”அருமையான யோசனைதான்! அப்படியே செய்வோம்! ”என்று இருவரும் ஒன்றினைந்து அடுத்த கிராமத்திற்கு போனார்கள். அது ஒரு அழகிய சோலைகள் நிறைந்த கிராமம். அங்கு  வயல்களுக்கு நடுவில் ஒரு கிழவி தனியாக வீடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளிடம் நிறைய பணம் இருப்பதைக் கேள்விப்பட்டு அவளை ஏமாற்றி கொள்ளை அடிக்கலாம் என்று இருவரும் திட்டம் போட்டனர்.
   இருவரும் கிழவியிடம் போய் பணிவாக வணங்கி,  “பாட்டி! நாங்கள் கடுமையான உழைப்பாளிகள்! எங்கள் ஊரில் பஞ்சம்! அதனால் வேலை தேடி இந்த ஊருக்கு வந்துள்ளோம்! உங்களை பலரும் புகழ்ந்து சொன்னார்கள். உங்களிடம் வேலை செய்ய ஆசைப்படுகிறோம். எங்களுக்கு பணம் காசு வேண்டாம். உண்ண உணவும் உடுக்க உடையும் கொடுத்தால் போதும். உங்களுக்கு மாடாக உழைப்போம்! ”என்று சொன்னார்கள்.
  கிழவிக்கு இவர்களைப் பற்றி நன்கு தெரிந்து இருந்தது. இந்த பொய்யர்களை நான் நம்புவேனா? இவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.  “இளைஞர்களே! உங்கள் வரவு எனக்கு சந்தோஷத்தை தருகிறது! எனக்கு ஒரு பசுமாடு இருக்கிறது! பரமசாதுவான அதை மேய்த்து வரவேண்டும். ஒரு கால்காணி நிலம் இருக்கிறது. அதற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொட்டி ஏத்தம் கட்டி ஒருவன் இந்த வேலை செய்ய வேண்டும். சுலபமான வேலைகள்தான் இந்த வேலைகளை செய்துவிட்டு வயிறாற உண்ணுங்கள்! ”என்றாள்.
   மறுநாள், குப்பன் பழைய சோற்றை தின்றுவிட்டு பசுமாட்டை ஓட்டிக்கொண்டு போனான். சுப்பன் தண்ணீர் இறைத்தான். பசுமாடு கிழவி சொன்னது போல சாதுவாக இல்லை! தும்பை அறுத்துக் கொண்டு காடு மேடெல்லாம் ஓடியது. அதனுடன் ஓடி ஓடி குப்பன் வாடிப்போனான்.
   அதே போல சுப்பன் தண்ணீரை இறைத்து இறைத்து ஓய்ந்தான். வாய்க்காலில் தண்ணீர் ஓடியதே தவிர கழனிக்கு செல்லவில்லை! வாய்க்காலில் இருந்த ஒரு சுரங்க வழியாக வேறு வயலுக்குச் சென்றுவிட்டது. மாலை வரை இறைத்தும் வயல் நனையவில்லை! சோர்ந்து போன சுப்பன் வீடு வந்தான்.  அன்று இரவு குப்பனும் சுப்பனும் தூங்கும் சமயம் பேசிக்கொண்டார்கள். குப்பன்,  “அண்ணே! என் வேலை சுலபமாக இருந்தது! மாடு பரமசாது. ஒரு தோப்பில் மேயவிட்டு படுத்து இருந்தேன்! மாலையானதும் ஓட்டிவந்தேன்! ”என்றான்.
  சுப்பனும்,  “தம்பீ! நானும் கால்காணி நிலத்தில் நீரை சிறிது நேரத்தில் பாய்ச்சிவிட்டேன்! பின்னர் அங்கிருந்த மரத்தினடியில் படுத்து தூங்கிவிட்டு மாலையானதும் வீடு வந்தேன். ”என்று அளந்துவிட்டான்.
   “ அப்படியானால் நாளை நான் வயலுக்கு நீர்பாய்ச்சுகிறேன்! நீ பசுமாட்டை மேய்! ”என்றான் குப்பன். சுப்பனும் நமட்டுச்சிரிப்புடன் ஒத்துக்கொண்டான்.
   இருவரும் இப்படி ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டது அறியாமல் பசுமாட்டை ஓட்டிக்கொண்டு சுப்பனும் வயலுக்கு நீர்பாய்ச்ச குப்பனும் சென்றார்கள். மாடு அறுத்துக்கொண்டு ஓட, வயலில் நீர் பாயவில்லை! அன்று இரவு ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டார்கள்.
   “ சரி! சரி! நம்மை நாமே ஏன் ஏமாற்றிக்கொள்ளவேண்டும்! நம்மை ஏமாற்றிய இந்த கிழவியை பழிவாங்க வேண்டும். இவளை ஏமாற்றி இவளிடம் உள்ள பணத்தை பறித்துக்கொண்டுபோய் பங்கிட்டு கொள்வோம்! ”என்றான் சுப்பன். இதை கேட்டுக்கொண்டு இருந்தாள் அந்த கிழவி.
   மறுநாள் குப்பனும் சுப்பனும் காலையில் வேலைக்கு போனதும் தன்னிடம் உள்ள நகைகளையும் காசுகளையும் வெள்ளிச்சாமான்களையும் ஒரு பானையில் போட்டு ஓர் இடத்தில் புதைத்து வைத்தாள். ஒரு பெரிய இரும்பு பெட்டியில் ஓட்டுத்துண்டுகளையும் செங்கற் கருங்கற் சல்லிகளையும் நிரப்பி மேல் மூடி வைத்து பூட்டி ஒரு துணியால் கட்டி வைத்தாள்.

     மாலையில் குப்பனும் சுப்பனும் வீடு திரும்பினர். கிழவி அவர்களுக்கு நல்ல உணவு போட்டு உபசரித்தாள். பின்னர்,  “அருமைப் பிள்ளைகளே! நீங்கள் என்னிடம் வந்தது எனக்கு பெருமகிழ்ச்சி! நான் இறந்தபிறகு என் செல்வங்கள் அனைத்தும் உங்களுக்குத்தான். எனக்கு வேறு வாரிசோ சந்ததியோ கிடையாது. எல்லாமே உங்களுக்குத்தான். இதோ இந்தப் பெட்டியில் நான் சம்பாதித்து வைத்த சொத்துக்கள் இருக்கின்றன. இந்த காட்டில் திருடர் பயம் அதிகம் ஆகிவிட்டது. ஆதலால் இந்த பெட்டியை நமது கிணற்றில் இறக்கிவிடுங்கள். இது ரகசியமாக இருக்கட்டும்! யாருக்கும் தெரிய வேண்டாம். எனக்குப்பிறகு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்! ”என்றாள்.
   கிழவி தானாக வந்து வலையில் விழுந்தாள் என்று இருவரும் உள்ளூற மகிழ்ந்து ”அப்படியே ஆகட்டும் அம்மா! ”என்று அந்த பெட்டியை தூக்கமாட்டாமல் தூக்கிச்சென்று கிணற்றில் இறக்கிவிட்டார்கள். அன்று இரவு கிழவி தூங்கியதும், குப்பன் சுப்பனை அழைத்து, இதைவிட நல்ல சமயம் கிடைக்காது! கிழவி தூங்குகின்றாள். கிணற்றில் இருக்கும் பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவோம்! சரியா? என்று கேட்டான்.
   சுப்பன் ஒத்துக்கொண்டான். குப்பன் கிணற்றுக்குள் இறங்க சுப்பன் மேலிருந்து கயிறை விட்டான். குப்பன் கிணற்றில் உள்ளே இறங்கி பெட்டியை திறந்து பார்த்தான். அவ்வளவும் ஓட்டுச்சில்லுகளும் சல்லிக் கற்களும்!  “அடி பொல்லாத கிழவியே என்னை ஏமாற்றிவிட்டாயே! ”என்று மெல்ல தனக்குள் சொல்லிவிட்டு பெட்டியில் இருந்த கற்களை எடுத்து விட்டு அதனுள் அமர்ந்துகொண்டு மூடியை மூடிவிட்டான்.
  சுப்பன் பெட்டியை மேலே இழுத்தான். பெட்டி மேலே வந்தது. குப்பன் கிணற்றின் உள்ளேயே இருக்கட்டும். அவன் மேலே வருவதற்குள் இந்த பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடிவிட வேண்டும் என்று குப்பனை ஏமாற்ற நினைத்து பெட்டியை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு ஓடினான் சுப்பன்.
   ரொம்பதூரம் ஓடிய பின் இனி குப்பன் வரமாட்டான் என்ற தைரியத்தில்  “அந்த மடையன் குப்பனை ஏமாற்றிவிட்டேன்! இந்த பணம் முழுதும் எனக்குத்தான்” என்று உரக்கக் கூறினான்.
  அப்போது பெட்டிக்குள்ளிருந்து,  “தம்பி சுப்பா! நீயா என்னை ஏமாற்ற முடியும்! நான் தான் உன்னை ஏமாற்றினேன்! ”என்று சொன்னான் குப்பன்.
   சுப்பன் அதிர்ந்து பெட்டியைக் கீழே இறக்கினான். அதனுள் இருந்து குப்பன் வெளிப்பட உடன் சில கற்கள் மட்டுமே பெட்டியில் இருப்பதை கண்டு சுப்பன் அதிர்ச்சியுற்றான்.
    “அடே! சுப்பா! நம் இருவரை விட அந்த கிழவி பலே ஏமாற்றுக்காரி! பெட்டியில் கற்களை போட்டு ஏமாற்றிவிட்டாள்” என்று விழுந்து விழுந்து சிரித்தான் குப்பன்.
     சுப்பன்,  “நண்பா! ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழ்ந்தது போதும்! அந்த கிழவி நமக்கு சரியான பாடம் கற்றுக்கொடுத்தாள். இனியாவது உழைத்து வாழ்வோம் ”என்றான்.
    “உண்மைதான் நண்பா! இனி உழைத்து பிழைப்போம்!”என்று குப்பனும் ஆமோதித்தான்.
  அதுமுதல் இருவரும் பிறரை ஏமாற்றுவதை விட்டு உழைத்து வாழ ஆரம்பித்தனர்.


செவிவழிக் கதை தழுவி எழுதியது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. கிழவி பலே கிழவிதான்
  நன்றி நண்பரே

  ReplyDelete
 2. கதைக்கு ஒக்கே.. நிஜத்தில் ஏராளமான ஏமாற்றுகாரர்கள் உலவிக் கொண்டு தானே இருக்கின்றனர்..

  ReplyDelete
 3. பாட்டி பலே பாட்டியாக இருக்கிறாரே.... எப்படியோ குப்பனும் சுப்பனும் திருந்தினார்களே......

  நிஜத்தில் இப்படி நடப்பது கடினம் தான்! :)

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2