மங்கள கிரி ஸ்ரீ பானக நரசிம்மர்!

மங்கள கிரி ஸ்ரீ பானக நரசிம்மர்!


  ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் இருந்து குண்டூர் செல்லும் வழியில் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மங்களகிரி என்னும் வைணவத்தலம். இந்த தலத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மராக ஸ்ரீதேவியை இடது மடியில் அமர்த்திக்கொண்டு அருள்புரிகிறார் மகாவிஷ்ணு. இக்கோயிலுக்கு அருகில் மலை மீதுள்ள குகை ஒன்றில் ஸ்ரீ நரசிம்மர் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவருக்கு பானகம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரே ஸ்ரீ பானக நரசிம்மர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.
    பாரதத்தில் உள்ள மலைகள் மகேந்திரம், மலையம், ஸஹ்யம் சுக்திமான், ருக்ஷம் விந்தியம் பாரியாத்ரம் என்ற சப்த குல பர்வதங்கள் என்று விஷ்ணுபுராணத்தில் கூறப்படுகிறது. ஸ்ரீ தேவியாகிய மகாலட்சுமி அமிர்தத்தை விஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து தவக்கோலத்தில் நின்றதன் காரணமாக பாரியாத்ர பர்வதத்திற்கு மங்களகிரி என்ற பெயர் வந்தது. ஹஸ்தகிரி, தர்மாத்ரி, தோத்தாத்ரி, முக்தியாத்ரி, சபலதா என்பவை அதன் மற்றபெயர்களாகும்.
   மங்களகிரி மலையில் மேய்ந்துவந்த பசு ஒன்று தினமும் மாலையில் பால் இல்லாமல் திரும்பியதை கண்ட பசுவின் சொந்தக்காரன் சந்தேகித்து பசுவை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தான். அச்சமயம் ஒருநாள் இரவும் பகலும் கூடும் அந்தி வேளையில் நிழல் உருவம் ஒன்று அப்பசுவின் பாலை அருந்திவிட்டு அருகிலிருந்த குகையில் சென்று மறைவதைக் கண்டான்.
    அன்று இரவு அவனது கனவில் ஸ்ரீ மகாலட்சுமி சமேதராய் ஸ்ரீ நரசிம்மர் காட்சி தந்து தான் நொமுச்சி என்ற கொடிய அசுரனுக்காக குகையில் மறைந்திருப்பதாக கூறி மறைந்தார். மறுநாள் அவன் அந்த குகைத் துவாரத்தில் பசுவின் பாலை ஊற்றினான்.  ஆனால் அதிலிருந்து வழிந்துவிட்ட பாதி பாலை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச்சென்றான்.

   அந்தப் பகுதியை ஆண்டுவந்த அரசன் இதைக் கேள்விப்பட்டு ஸ்ரீ நரசிம்மருக்கு குகைமீது கோயில் எழுப்பியதாக மங்களகிரி தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
   கொட்டைப்பாக்கில் செலுத்திய ஊசிமுனையில் ஒற்றைக்கால் கட்டை விரலில் சூரியனை நோக்கி நின்று பிரம்ம தேவனை தியானித்து தவம்புரிந்தவன் கொடிய அரக்கன் நொமூச்சி. அவனுக்கு காட்சி தந்த பிரம்ம தேவன் எந்த மானிடனாலோ, ஆயுதத்தினாலோ நொமூச்சிக்கு மரணம் ஏற்படாது என்ற வரத்தை கொடுத்துவிட அரக்கன் தேவர்களை துன்புறுத்த அவர்கள் மஹாவிஷ்ணுவை சரணடைந்தார்கள் அதையடுத்து மஹாவிஷ்ணு நரஸிம்ம மூர்த்தியாக மங்களகிரி குகையினுள் நொமூச்சியின் வருகைக்காக காத்திருந்தார். இந்திரன் விடுத்த சக்ராயுதத்தை தன் விரல்களில் ஏற்றுக்கொண்டு குகையருகில் நொமூச்சியை சம்ஹரித்தார் என்று பிரம்மவைவர்த்த புராணத்தின் சங்கரகீதை கூறுகிறது. ஸ்ரீ நரசிம்மரது நகங்கள் சுதர்சன சக்கரத்தின் அம்சமாக இதன் காரணமாக கருதப்படுகிறது.
   கிருத யுகத்தில் அவ்வாறு அமிர்தத்தை அருந்திய நரசிம்மர், திரேதாயுகத்தில் பசுநெய்யையும் துவாபர யுகத்தில் பசுவின் பாலையும் கலியுகத்தில் பானகத்தையும் அருந்தி அருள் பாலிக்கிறார் என்று கூறப்படுகிறது.

   மங்களகிரி மலை எண்ணூறு அடி உயரம் கொண்டது. நானூறு படிகள் ஏறினால் நரசிம்ம தரிசனம் கிடைக்கும். அடிவாரத்தில் பிரம்மராம்பிகை சமேத மல்லேஸ்வரரையும் அருகில் உள்ள கருடாழ்வாரையும் தரிசித்து விட்டு மலை ஏறத் தொடங்கலாம்.
   ஐம்பது படிகள் ஏறியதும் பால்செட்டு வெங்கடேஸ்வர சுவாமியைத் தரிசிக்கலாம். ஒரு சமயம் சர்வ சுந்தரி என்ற அப்சரஸ் பெண் கொடுத்த சாபத்தினால் நாரத மஹரிஷி பாலவிருட்சமாக மாறி நின்றார். வேங்கடேஸ்வர சுவாமி அருகே வளர்ந்த அந்த பால்செட்டு செடி பிற்காலத்தில் மலையடிவாரத்தில் கருடாழ்வார் சன்னதி அருகில் நடப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
  புத்திரப்பேறு கிடைக்காத பெண்கள் ருதுஸ்நானம் முடிந்த தினம் இந்த பால் விருட்சத்தை வலம் வந்து பழங்களை வினியோகித்தால் அவர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கை இங்கு காணப்படுகிறது

     நரசிம்மர் சிலை அகன்ற பித்தளை வாயுடன் உள்ளது. பெரிய சட்டிகளில் பானகம் தயாரித்து வைத்துள்ளனர். இதில் நான்கைந்து சட்டி பானகத்தை நரசிம்மரின் அகன்ற வாயில் ஊற்றுகிறார் அர்ச்சகர். அப்போது மடக் மடக் என மிடறல் சத்தம் கேட்கிறது. குறிப்பிட்ட அளவு குடித்ததும் சத்தம் நின்று விடுகிறது. சட்டியில் இருக்கும் மீதி பானகத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுகிறார். சில சமயங்களில் நரசிம்மர் வாயில் இருந்து பானகம் வெளியேயும் வருகிறது. இந்த வழிபாட்டுக்கு கட்டணம் ரூ.45.  கோயிலிலேயே பானகம் கிடைக்கிறது. இந்த மலை முன்பு  எரிமலையாக இருந்ததாம். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், வெல்லமும், பானக நீரும், தேங்காய் உடைத்த தண்ணீரும் கொட்டிக்கிடந்தாலும், நரசிம்மர் சன்னதியில் ஒரு ஈயோ எறும்போ பார்க்க முடியாது. சர்க்கரையும், எலுமிச்சையும் சேர்ந்த கரைசல் இந்தப்பாறையில் படும்போது, அதன் சூடு தணிந்து, எரிமலை வெடிக்கும் வாய்ப்பு குறைவதற்காக இவ்வாறு செய்யும் பழக்கம் வந்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. நமது முன்னோர் எவ்வளவு பெரிய விஞ்ஞான ஆர்வலர்கள் என்பதற்கு இதுவே சான்று.
   கிருதயுகத்தில் தாங்கள் செய்த நன்மைக்காக சொர்க்கத்தை அனுபவித்த உயிர்கள் மீண்டும் பிறப்பை சந்திக்க காத்திருந்தன. மீண்டும் பூலோகம் செல்ல வேண்டியிருந்ததை எண்ணி வருந்தி இந்திரனிடம் முறையிட்டன. இந்திரன் அவற்றிடம், பூலோகத்திலுள்ள மங்களகிரிக்கு சென்று நரசிம்மரை யார் வழிபடுகிறாரோ, அவர் மீண்டும் சொர்க்கம் பெறுவார், என்றான். அதுபோல, திரேதாயுகத்தில் உயிர்கள் செய்த பாவமும் மங்களகிரி வந்ததால் நீங்கி, பிறப்பற்ற நிலை பெற்றனர். இந்த ஊர் அஞ்சனாத்ரி, தோட்டாத்ரி, முக்தியாத்ரி, மங்களகிரி என்ற பெயர்களால் யுகவாரியாக அழைக்கப்பட்டிருக்கிறது.



முக்தி அளிக்கும் ஸ்ரீ பானக நரசிம்மரை ஒருமுறை சென்று வழிபடுவோம்! வாழ்வில் வளம் பெறுவோம்!

Comments

  1. ஆஹா, தமிழ் நாட்டு கோவில்களிலிருந்து, ஆந்திரா கோவிலுக்கு போயாச்சா!!!! மகிழ்ச்சி.

    புதிய கோவிலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. பல சமயம் தரிசனம் செய்திருக்கிறேன் இந்த பானக நரசிம்மரை. சமீபத்தில் பார்த்தது மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு.

    தகவல்கள் நன்று.

    ReplyDelete
  3. மங்கள கிரி ஸ்ரீ பானக நரசிம்மர்! அறிந்தேன் நன்றி நண்பரே

    ReplyDelete
  4. சிறப்பை அறிந்தேன்... நன்றி...

    ReplyDelete
  5. வணக்கம்
    அறிய முடியாத சிறப்பான தகவல்கலை அறிந்தேன் .... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2