சூரியன் பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்! பாப்பா மலர்!
சூரியன்
பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்! பாப்பா மலர்!
வானத்துல ரொம்ப தொலைவுல உள்ள
ஒரு நட்சத்திர குடும்பத்துல சூரியன், சந்திரம், காற்று ஆகிய மூவரும் பிறந்து
வளர்ந்து வந்தார்கள். அப்போ அவங்க ஊருல ஒரு வீட்டுல விருந்து நடந்தது.
அந்த விருந்துக்கு போக மூன்று பேரும்
ஆசைப்பட்டாங்க! உடனே மூணு பேரும் தங்களோட அம்மாக்கிட்ட வந்து அம்மா! “அம்மா! பக்கத்து ஊரில எங்க நண்பன்வீட்டுல பெரிய
விருந்து வைக்கறாங்களாம்! வடை பாயாசம்,லட்டு, அதிரசம்னு இனிப்பெல்லாம் நிறைய
விருந்துல உண்டாம். எங்களோட நண்பன் கூப்பிடறான். நாங்க போயிட்டு வரட்டுமா?”ன்னு
கேட்டாங்க.
“அப்படியா
பசங்களே! நண்பன் வீட்டு விருந்துன்னு சொல்றீங்க! போகாட்டி நல்லா இருக்காது!
போயிட்டு பத்திரமா திரும்பி வந்துருங்க”ன்னு மூணு பேரையும் வழி அனுப்பிச்சு
வச்சாங்க அம்மா!
இந்த மூணு பேரும் விருந்துக்கு போனாங்க! அங்க
தடபுடலா விருந்து நடந்துகிட்டு இருந்துச்சு. இவங்களை பார்த்த உடனேயே அவங்க நண்பன்
வாசல்லேயே வந்து வரவேத்து கூட்டிட்டுப் போனான். “வாங்க!வாங்க! நீங்க வந்ததுல எனக்கு ரொம்ப
மகிழ்ச்சி!” அப்படின்னு சொல்லி சாப்பாட்டு ஹாலுக்கு கூட்டிட்டு போயி விருந்து
பறிமாறினான்.
விதவிதமான பலகாரங்கள், இனிப்பு வகைகள்,
காரவகைகள், குளிர்பானங்கள் விருந்து அட்டகாசமா இருந்துச்சு. மூணு பேரும் ஆசையோட விருந்து சாப்பிட்டாங்க. வீட்டில அம்மா
இருக்காங்களே அவங்களுக்கு ஏதாவது கேட்டு வாங்கி போய் கொடுப்போம்னு சூரியனுக்கும்
காத்துக்கும் தோணவே இல்லை! வயிறு முட்ட சாப்பிட்டு கிளம்பினாங்க! சந்திரன் மட்டும்
தயங்கி தயங்கி சாப்பிடவே அவனோட நண்பன் “என்னப்பா
எதுக்கு தயங்கறே? வெக்கப்படாமே
சாப்பிடுன்னு” சொன்னான். அப்போ சந்திரன், “ நண்பா! வீட்டில தினம் தினம் எங்க
அம்மாதான் வேளா வேளைக்கு ருசியா சமைச்சுப் போடுவாங்க! எங்களோடவே உக்காந்து
சாப்பிடுவாங்க! அவங்களை விட்டுட்டு சாப்பிடறது மனசுக்கு கஷ்டமா இருக்கு! இத்தனை
பலகாரங்கள் இருந்தாலும் சாப்பாடே உள்ள இறங்க மாட்டேங்குது!” அப்படின்னான்.
“அப்படியா!
இதுக்கு ஏன் கவலைப்படறே! நீ தயங்காம சாப்பிடு! உங்கம்மாவுக்கு தேவையானதை நான் ஒரு துணியில பத்திரமா மூட்டை கட்டிக்
கொடுக்கறேன்”னு அவனோட நண்பன் சொல்லி அதே மாதிரி மூட்டைக்கட்டி கொடுத்த பிறகுதான் சந்திரனுக்கு
சோறே உள்ளே இறங்குச்சு. விருந்து நல்லபடியா முடிஞ்சதும் மூணு பேரும் வீட்டுக்கு
கிளம்பினாங்க! நண்பனும் வழி அனுப்பி வைச்சான்.
இவங்களோட அம்மா! ஆவலோட வீட்டு வாசல்லேயே
காத்துட்டு இருந்தாங்க! “என்னப்பா!
விருந்து நல்லபடியா முடிஞ்சுதா? என்னென்ன பலகாரங்கள் போட்டாங்க?” அப்படின்னு
விசாரிச்சாங்க. மூவரும், நல்லபடியா முடிஞ்சுதும்மா! “விதவிதமான பலகாரங்கள்! சுவையோ அருமை! ரசிச்சு
ருசிச்சு சாப்பிட்டோம்”னு சூரியன் சொன்னான்.
“அப்படியா!
நீ ரசிச்சு சாப்பிட்டே சரி! உன் அம்மாவுக்கு என்ன கொண்டு வந்தே?”ன்னு கேட்டாங்க
அம்மா.
“அம்மா!
விருந்துக்கு நீ வந்தா சாப்பிட்டிருக்கலாம்! அங்க இலையிலே போட்டதை எப்படி எடுத்து
வரமுடியும்? நாங்க சாப்பிட மட்டும்தான் முடியும் எதுவும் நான் கொண்டுவரலை”ன்னு
சொல்லிட்டான் சூரியன்.
“சரிப்பா!
நீயாவது ஏதாவது கொண்டுவந்தியா?” அப்படின்னு காற்றுக்கிட்டே கேட்டாங்க அம்மா.
“இல்லேம்மா!
பலகாரங்களை பார்த்ததும் பசி அதிகமாயிருச்சு! உங்க நினைவே வரலை! நீங்க வந்திருந்தா
சாப்பிட்டு இருக்கலாம்! நான் ஒண்ணும் கொண்டுவரலைம்மா!” என்றான் காற்று.
அதைக்கேட்டு மனம் நொந்து போன அம்மா, “நீ என்னப்பா!” என்று சந்திரனை கேட்கவே, “அம்மா! பலகாரங்களை பார்த்த உடனே உன் நினைவுதான்
எனக்கு வந்தது. என் நண்பன் கிட்டே சொல்லி உனக்கு தனியா சாப்பாடு பலகாரங்கள் மூட்டைக்கட்டி வாங்கி வந்து
இருக்கேன்” என்று ஒரு பையில் தாய்க்கு எடுத்து வந்த உணவை எடுத்து இலை போட்டு
பறிமானினான்.
இதைப் பார்த்ததும் அந்த அம்மாவுக்கு மகிழ்ச்சி
தாளவில்லை! அதே சமயம் மற்ற இரண்டு மக்களையும் பார்த்து கோபத்துடன், ‘உல்லாசமாக சென்று விருந்தை பார்த்ததும்
உங்களுக்கு தாயின் நினைவே வரவில்லையே? சூரியா! நீ தன்னலத்தோடு நடந்து கொண்டதால்
இன்று முதல் உன் ஒளி எல்லாம் நெருப்பை போல் வெப்பம் உடையதாகவும், எதையும்
சுட்டெரிக்கும் தன்மை உடையதாகவும் ஆகக் கடவாய்! உன் தகிப்பு தாங்காமல் அவரவர்
நிழல் கண்ட இடத்திற்கு ஓடுவார்கள். தங்கள் தலையை மறைத்துக் கொள்வார்கள். உன்னை
திட்டித் தீர்ப்பார்கள்.” என்று சாபம் இட்டாள்.
இந்த சாபத்தினால்தான் சூரியன் இப்போதும் கொடிய
வெப்பம் உடையவனாக இருக்கிறான். புல் பூண்டுகளை சுட்டெரித்து கருகச்செய்கிறான்.
கோடைக்காலத்தில் சூரியனை மக்கள் திட்டி தீர்க்கிறார்கள். அதற்கடுத்து, காற்றை நோக்கிய
அந்த தாய், “எரியும் தீக்கு துணை போகும்
காற்றே! ருசியான விருந்து கிடைத்ததும் தாயை மறந்து விட்டாய் அல்லவா? அதனால் அக்னி
நட்சத்திர காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் வேளையில் நீ அனல் காற்றாக மாறி
மக்களிடம் அவப்பெயர் பெறக் கடவது!” என்று சபித்தாள். அது போலவே இன்றும் அனல்
காற்று வீசுகிறது. மக்கள் சபிக்கிறார்கள்.
கடைசியாக சந்திரனை பார்த்து, “குழந்தாய்! விருந்தை கண்டதும் மகிழ்ந்து என்னை
மறக்காமல் நீ சாப்பிட்டதை எல்லாம் எனக்காகவும் மூட்டை கட்டி வாங்கி வந்து எனக்கு
தந்து உபசரித்தாய். இதனால் என் வயிறு குளிர்ந்தது. இது போலவே நீயும் எப்போதும்
குளிர்ச்சியாக விளங்குவாய்! மக்கள் உன்னை புகழ்ந்து கவிபாடுவார்கள். நிலாச்சோறு
உண்பார்கள். உன்னை ரசித்து மகிழ்வார்கள்.” என்று வரம் தந்தாள்.
அன்னை அன்போடு தந்த வரத்தினால் இன்றும் நிலா
குளிர்ச்சியுடன் காட்சி தந்து அனைவரும் ரசிக்கும் படி இருக்கிறது. அனைவரும்
ரசித்து மகிழ்கிறார்கள்.
(நாடோடிக் கதைகளில் இருந்து
தழுவல்)
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அட, இப்படி ஒரு பொருள் கூட உண்டா..
ReplyDeleteகுழந்தைகளுக்கு சொல்வதற்கு ஒரு நல்ல கதை.
பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி
அருமையான கதை நண்பரே நன்றி
ReplyDeleteஅட ஆச்சர்யமா இருக்கே இப்பிடியும் ஒரு கதை இருக்கா !
ReplyDelete