அட்சராப்பியாசம் அளிக்கும் இன்னம்பூர் எழுத்தறிநாதர்!

அட்சராப்பியாசம் அளிக்கும் இன்னம்பூர் எழுத்தறிநாதர்!


இன்னும் ஒரே வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து நன்கு படிக்க வேண்டும் என்று ஆயத்தப்படுத்தாத பெற்றோர்களே இல்லை. கேரளாவில் கோவில்களில் விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் என்னும் நெல்லில் எழுத்து எழுதவைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது உண்டு. இந்த மாதிரி வழக்கம் தமிழக கோயில்களில் இப்போது நடைபெறுவதாகத் தெரியவில்லை.
      இந்த அட்சராப்பியாசம் நிகழ்ச்சி கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவிலில் வருடம் தோறும் நடைபெறுகிறது. புதிதாக பள்ளியில் சேர உள்ள குழந்தைகள் இந்த கோவிலுக்கு வந்து எழுத்தறிநாதரை அர்ச்சனை செய்து வணங்கி நெல்லில் எழுதி பழகுகின்றனர். ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு செம்பருத்திப் பூவை தட்டில் பரப்பி எழுத பயிற்சி தரப்படுகிறது.

    பேச்சுத்திறமை இல்லாதவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவுக் கூர்மை பெறுவார்கள் என்ற நம்பிக்கை இந்தப்பகுதியில் காணப்படுகிறது.

   தல வரலாறு:  சோழமன்னரிடம் கணக்கராக பணியாற்றிவர் சுதன்மன் என்ற சிவபக்தர். அவரை பிடிக்காதவர்கள் அவரைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் மன்னரிடம் கூறி கோள் மூட்டினர். இதனால் மன்னருக்கு சுதன்மர் எழுதிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே சுதன்மரை அழைத்து உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையாக உத்தரவிட்டான்.
     சிவபக்தரான சுதன்மர், உரிய கணக்கு காட்டியும் மன்னன் நம்பவில்லையே! வீண்பழி ஏற்படுகிறதே! என்று சிவனிடம் வருந்தி முறையிட்டார். உடனே, சிவன் சுதன்மரின் வடிவத்தில் மன்னரிடம் சென்று கணக்கை காட்டி மன்னனின் சந்தேகத்தினை நீக்கிவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் சுதன்மர் கணக்குடன் மன்னரை சந்திக்க சென்றார். அப்போது மன்னன், சுதன்மரே! இப்போதுதான் கணக்குக் காட்டிச்சென்றீர்! மீண்டும் ஏற்கனவே காட்டிய கணக்கை ஏன் காட்ட வருகிறீர் என மன்னன் கேட்டான்.

   அப்போது தான் இப்போதுதான் வருவதாகவும், இதுவரை இறைவன் சன்னதியில் இருந்ததையும் சுதன்மர் சொல்ல, வந்தது இறைவனே என்று மன்னன் உணர்கிறார். சுதன்மரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன் அவரிடம் மன்னிப்பு கேட்டதோடு சிவனுக்கு பெரிய கோவிலையும் எழுப்பினான்.
   சுதன்மர் வழிபட்ட ஈசன் சுயம்பு லிங்கம். எனவே தான் தோன்றீசர் என்று வழங்கப்பட்டது. இறைவன் சுதன்மர் வடிவில் வந்து கணக்கு காட்டியமையால் எழுத்தறிநாதர், அட்சரபுரிஸ்வரர் என்ற நாமங்களும் ஏற்பட்டன.

   அகத்தியருக்கு இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் என்பதாலும் இந்த பெயர் வந்தது என்றும் சொல்கின்றனர். இங்கு இரண்டு இறைவிகள். கொந்தார் குழலம்மை என்னும் சுகந்த குந்தளாம்பாளும் நித்திய கல்யாணி அம்மனும் இரு தனி  சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர்.
    சூரியன் இந்த தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றதாக ஒரு வரலாறும் உண்டு. சூரியனுக்கு “இனன்” என்ற பெயர் உண்டு. இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால்  ‘இனன் நம்பு ஊர்’  என்று பெயர். காலப்போக்கில் ‘இன்னம்பூர்’ என்று மாறிவிட்டது.

   இத்தலத்து இறைவன் மீது சூரியன் வழிபாடு இன்றும் நடக்கிறது. லிங்கம் மீது ஆவணி 31, புரட்டாசி 1,2 மற்றும் பங்குனி 13,14, 15 தேதி காலையில் சூரியனின்  கதிர்கள் விழுகிறது. 

ஆலயம் திறக்கும் நேரம்: காலை 7 -12 மணி மாலை 4-8 மணி

செல்லும் வழி: கும்ப கோணத்திலிருந்து திருப்புறம்புயம் செல்லும் ரோட்டில் 8 கி.மீ தூரத்தில் இன்னம்பூர் உள்ளது.
தொடர்புக்கு: 96558 64958.




Comments

  1. இன்னம்பூர் எழுத்தறிநாதர் இதுவரை அறியாத கோயில் மற்றும் செய்தி அறிந்தேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. "//அட்சராப்பியாசம் நிகழ்ச்சி கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவிலில் வருடம் தோறும் நடைபெறுகிறது.// ''

    - புதிய தகவல்.

    இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது, பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. சிறப்பை அறிந்தேன்... நன்றி...

    ReplyDelete
  4. கும்பகோணத்துக்கு அருகில் இருக்கிறது இந்த கோவில் பல வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன் தங்களின் பகிர்வுக்கு நன்றி எழுத்தறிவிக்கும் இறைவன் நம் எல்லோருக்கும் அருள் தருவாராக

    ReplyDelete
  5. ”அகத்தியருக்கு இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் ” நாமும் வணங்க வேண்டிய தலம் தான் தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  6. புதியதோர் கோவில் பற்றிய தகவல்......

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2