பித்ரு தோஷம் போக்கும் அரியத்துறை ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர்!

பித்ரு தோஷம் போக்கும் அரியத்துறை ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர்!
 ஆலய முகப்பு.  மேலே மீசையுடன் சிவன்

சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் வடக்கு நோக்கி பயணித்து கவரப்பேட்டை என்னும் இடத்தை அடைந்து அங்கிருந்து மேற்கே செல்லும் சாலையில் ஒரு மூன்று கிலோ மீட்டர்கள் பயணித்தால் வருகிறது அரியத் துறை என்னும் அரிய தலம்.
   புனிதமான ஆரண்ய நதிக்கரையோரம் அழகுற கம்பீரமாக காட்சி தருகிறது ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர் கோயில். அது என்ன வரமூர்த்தீஸ்வரர்.
   சிவனும் பார்வதியும் ஒன்றாக வந்து தனக்கு அருள்புரிய வேண்டும் என்று விரும்பினார் உரோமசர் என்ற மகரிஷி. அகத்திய மாமுனியின் சிஷ்யரான இவர் பிரம்ம லோகம் சென்று பிரம்மாவிடம் சிவன் – பார்வதி தரிசனம் பெற சிறந்த தலம் எது என்று கேட்டார். அதுவும் தனக்கு வயதான காரணத்தினால் விரைவில் அந்த தரிசனம் வேண்டும் என்று கேட்டார்.
   உடனே பிரம்மா, ஒரு தர்ப்பை சக்கரத்தை உருவாக்கி அதை வீசியெறிந்தார். இது சென்று நிற்கும் இடம்தான் பூமியில் மிக புனிதமான இடம். இங்கே சென்றால் இறைவனின் தரிசனம் விரைவில் உனக்கு கிடைக்கும் என்று சொல்லி அனுப்பினார்.
   தர்ப்பை சக்கரம் பூமியில் விழ அதை தொடர்ந்து வந்தார் உரோமசர். அந்த தர்ப்பை சக்கரம் சுழன்று கொண்டே வந்து விழுந்த இடம் பிரம்மாரண்யம் எனப்படும் அரியத்துறை!
   உரோமச முனிவர், இங்கே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவம் இயற்றினார். சிறிது காலத்திற்கு பின் இறைவன் பார்வதியுடன் காட்சி அளித்து அவர் வேண்டிய வரங்களை தந்து மகிழ்ந்தார்.
  சதி அனுசூயா-அத்திரி தம்பதிகளின் புதல்வரான முகுந்த முனிவர் தென்னகத்தில் ஒவ்வொரு ஆலயமாக தரிசனம் செய்து வந்து காசி நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் அரியத்துறை வந்தார். முகுந்த முனிவரை உரோமச முனிவர் வரவேற்றார். சிவதரிசனம் செய்து வருவதாகவும் காசிக்குச் செல்ல இருப்பதாகவும் முகுந்தர் கூறினார்.
   முகுந்த முனிவரே! சிவனைக் காண அத்தனை தூரம் எதற்குச் செல்ல வேண்டும்? காசியைவிட புனிதமானது இந்த ஷேத்திரம். இந்த ஆற்றில் நீராடி வரமூர்த்தீஸ்வரரை சிரத்தையுடன் வணங்கினால் அவரே நேரடியாக காட்சி தருவார் என்று கூறினார் உரோமசர்.
   உரோமசர் சொன்னபடியே ஆற்றில் நீராடி வரமூர்த்தீஸ்வரரை வணங்கினார் முகுந்த முனிவர்.  உடனே காசியின் காவல் தெய்வமான பைரவர் ரூபத்தில் காட்சி தந்தார் சிவபெருமான். முகுந்த ரிஷி சிந்தை குளிர்ந்து போனார்.
இன்றும் சுரக்கும் வற்றாத கங்கை நீர்
   உரோமசரின் வாக்கை மெய்ப்பிக்க காசியிலிருந்து பைரவர் வடிவில் வந்தார் சிவபெருமான். அவரது சடையில் இருந்து கங்கை நீர் சொட்டியது. பின் கொட்டியது. அது அப்படியே ஆரண்ய நதியில் கலந்து ஓடியது. காசியிலிருந்து அரிய கங்கை நீரை அந்த காலபைரவரே கொண்டுவந்தமையால் இந்த ஊர் அரியதுறை என்று பெயர் பெற்றது.
   காசிக்கு செல்வது எதற்கு? பித்ரு பரிகாரங்கள் செய்வதற்குதானே? அந்த காசியில் ஓடும் கங்கை நீரை காலபைரவரே இங்கு கொண்டு வந்தமையால் இங்கு வீற்றிருக்கும் வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் பித்ரு தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
 மணல் பைரவர்
   இந்த கோயிலின் பக்கத்தில் ஆரணி ஆற்றின் கரையோரம் இன்னும் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கிறது காலபைரவரின் சிரசிலிருந்து விழுந்த கங்கை நீர். ஆரணி ஆறு வறண்டு முள்காடாக மாறி இருந்தாலும், கரையில் உள்ள இந்த சிறு பள்ளத்தில் ஊற்று பொங்கி யாரும் இறைக்காமலேயே ஆற்றுக்குள் சிறு வடிகாலாய் வடிந்துகொண்டிருக்கிறது புனித கங்கை.
 ஆலயத் திருக்குளம்
   முன்னோர் செய்த பாவத்தால் ஒரு குரங்கு இந்தப்பகுதியில் பிறந்து படாத பாடுபட்டது. வேட்டைக்காரர்கள் துரத்த அது இந்த குரங்கு சிவனையும் இங்குள்ள அரசமரத்தையும் சுற்றி ஓடியது. தாகத்தால் தவித்த அது சுனையாக சுரக்கும் கங்கை நீரையும் குடித்துவிட்டு ஈசன் முன் விழுந்தது. அப்படியே மாண்டும் போனது. மறு ஜென்மத்தில் அது காஞ்சிபுரத்து மன்னனாக பிறந்தது. பூர்வ ஜென்ம ஞாபகம் வந்து இந்த கோயிலுக்கு வந்து மண் கோயிலாக இருந்த கோயிலை கற்கோயிலாக எழுப்பியதாக ஆலயவரலாறு கூறுகிறது.
    இத்தகு சிறப்புக்கள் வாய்ந்த இந்த கோயிலில் ஓர் பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது. கிருஷ்ணபரமாத்மாவே அரசமரமாக இருப்பதாக நம்பப்படுகிறது. பாரிஜாத மரத்துக்காக கிருஷ்ணரின் மனைவிகள் சண்டைபோட தலா ஆறுமாதம் அந்த மரத்தை வைத்துக்கொள்ள கிருஷ்ணர் கூறிவிட்டார். மரம் அடிக்கடி இடம் மாறியதால் அந்த மரம் கோபமடைந்து கிருஷ்ணருக்கு சாபம் இட்டுவிட்டது.  நீ ஆயிரம் ஆண்டுகள் அரசமரமாக இருந்து பார் என்று அதன் சாபப்படி இங்குள்ள அரச மரத்தில் கிருஷ்ணர் வசிப்பதாக நம்பப்படுகிறது.
 ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர்- மரகதவல்லி
    பிரகாரத்தில் விநாயகர், சுப்ரமண்யர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை என சன்னதிகள். மிக அழகான புல் தரை பிரகாரம். பின்னர் தெற்கு நோக்கி காட்சி தரும் மரகதவல்லி அம்பிகை. அழகே வடிவாக ஆனந்த சொருபிணியாக காட்சி தருகிறார். அவரை வணங்கியபின் வர மூர்த்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சதுர பீடத்தில் காட்சி தருகிறார்.  பிரகாரத்தில் வடக்கு பகுதியில் காசியில் இருந்து வந்த பைரவர் மணல் பைரவராக காட்சி தருகிறார்.
 உரோமச முனிவர்
   நுழைவாயில் சிறிய கோபுரத்தில் சிவபெருமான் விநாயகர்,பார்வதியுடன் மீசையுடன் இருக்கும் காட்சி சற்றே வித்தியாசமானது.
   பித்ரு தோஷம் உள்ளவர்கள் அரியத்துறை சென்று புனித கங்கை நீரை தெளித்துக்கொண்டு சிறிது அருந்தி வரமூர்த்தீஸ்வரரை மனமுருக பிரார்த்தித்தால் அவர்களுடைய துன்பங்கள் விலகி நன்மைகள் நடக்கும் என்று ஆலய வரலாறு கூறுகிறது.
    தென்னகத்தே கங்கை சுரக்கும் அதிசய ஸ்தலத்தை ஒரு முறை தரிசித்து நலன் பெறுங்கள்.

செல்லும் வழி: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து  கும்மிடிபூண்டி, திருப்பதி, காளஹஸ்தி, சத்தியவேடு செல்லும் பேருந்துகளில் ஏறி கவரைப்பேட்டையில் இறங்க வேண்டும். கட்டணம் ரூ 25. அங்கிருந்து ஆட்டோ மூலம் இந்த ஊருக்கு செல்லலாம் ஆட்டோ கட்டணம் ரூ 70.
நடை திறக்கும் நேரம்: காலை 7- 12,  மாலை 5- 8.
தொடர்புக்கு: 9894821712. 


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி.

Comments

 1. காஞ்சிபுரம் நகரில் இருந்து செல்லும் மார்க்கம் தாங்கள் அறிந்திருந்தால் தெரிவியுங்கள் நண்பரே! அரியதொரு தகவல்! பதிவும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பரே! காஞ்சிபுரத்தில் இருந்து பூந்த மல்லி வந்து அங்கிருந்து செங்குன்றம் வந்து, பிறகு கவ்ரைப்பேட்டை செல்லலாம். இதை விட காஞ்சி புரத்தில் இருந்து கோயம்பேடு வந்து செல்வது சுலபமான ஒன்று.

   Delete
 2. மற்றும் ஒரு கோவிலை அறிமுகபடுத்தியதற்கும், செல்லும் வழி, பயணக் கட்டணம் முதற்கொண்டு விரிவான விளக்கத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 3. சிறப்பான தகவல்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 4. அருமையான தல வரலாறு.
  பதிவாளருக்கு வாழ்த்துக்கள்.
  ஓம் நமசிவாய.

  ReplyDelete
 5. இக்கோயில் வளாகத்தில் தர்ப்பணம் செய்ய அனுமதி உண்டா என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2