“அனாமிகா”

 “அனாமிகா”

  சென்னை வழியாக பெங்களூரூ செல்லும் அந்த விரைவு வண்டியின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் என் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.  நான் இன்றைய இளைஞன். காதுகளில் ஒன்றை ஸ்டட்ஸ் எனப்படும் கம்மலுக்கு இடம் கொடுத்துவிட்டு வாரிய தலையை கலைத்துவிட்டு அதில் செம்பட்டை கலரை ப்ளீச் செய்து வாயில் சூயிங்கம் மென்று கொண்டு காதுகளில் இயர்போனை சொருகி ஏ. ஆர் ரகுமானின் இன்னிசையைக் கேட்டுக்கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
     செண்ட்ரல் ரயில் நிலையம் ஜனத்திரளை சமாளித்துக் கொண்டு இருந்தது. சென்னை வெயில் சுட்டெரித்தது பெட்டிக்குள் வரை வந்து வாட்டியது. டீ சமோசா வியாபாரங்கள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த ரயில் இன்னும் ஐந்து நிமிடங்கள் இங்கு நிற்கும். அதுவரை இந்த கடும் புழுக்கத்தை  அனுபவித்துதான் ஆக வேண்டும் போல சட்டை பட்டன் ஒன்றை திறந்துவிட்டுக்கொண்டு சிறிது பெருமூச்சு விட்டேன். திடீரென ஒரு வித்தியாசமான நறுமணம் பெட்டிக்குள் வீசவும் நிமிர்ந்தேன்.
    ரயில் நிலையத்தின்  சமோசா, வடை, அழுக்குவாடை, மூத்திரவாடைகள் நடுவே அவ்வப்போது இப்படி நறுமணம் வீசுவது வாடிக்கைதான். யாரோ உயர்ந்த ரக சென்ட்டை அள்ளித்தெளித்து யான் பெற்ற இன்ப பெருக இவ்வையகம் என்று மற்றவர்களுக்கும் வாரி வழங்கி சென்று கொண்டிருப்பார்கள். சில நொடிகள் அந்த வாசம் நம்மை கடந்து போகும். ஆனால் இந்த நறுமணம் பெட்டியில் தொடர்ந்து வீசவும் பெட்டிக்குள் நோக்கினேன்.
      இளம்பெண்ணொருத்தி தன் விரித்த கூந்தலை கோதிவிட்டவாறு லக்கேஜ்களை தூக்க முடியாமல் உள்ளேவந்து தன் இருக்கையை தேடிக்கொண்டிருந்தாள். நஸ்ரியாக்களையும் காஜல் அகர்வால்களையும் தோற்கடிக்கக் கூடிய நிறம். இளமை ஆங்காங்கே பீறிட்டு வழிந்து கொண்டிருக்க ஒருவழியாய் அவள் தனது இருக்கையை கண்டுபிடித்துவிட்டாள். என் இருக்கைக்கு நேர் எதிரில் இரண்டாவதாக அமர்ந்தவள் என்னை நோக்கி ஒரு புன்னகை புரிந்தாள்.
    பதிலுக்கு நானும் ஒரு புன்னகையை உதிர்த்தேன். அவ்வளவுதான். உடனே  அவள் வலைவிரித்தாள்.  “எக்ஸ்கியுஸ்மீ! உங்க சீட்டை மாத்திக்க முடியுமா?”
    “எதுக்கு? இது நான் முன்பதிவு செய்து பெற்ற சீட்!”
 “ஹலோ! நாங்களும் ரிசர்வ் பண்ணித்தான் டிரெயின்ல வரோம்!”
  “அப்ப ஏன் சீட்டை மாத்திக்க சொல்றீங்க! நீங்க ரிசர்வ பண்ண சீட்டில நீங்க வாங்க! நான் சீட்டை மாத்திக்க மாட்டேன்.”
    “ஷிட்!”என்று தலையில் அடித்துக் கொண்டு ஏதோ முணுமுணுத்தாள். பெண்களின் கோபம் கூட அழகாகத்தான் இருக்கிறது.
  சற்று நேரத்தில் ரயில் நிலையத்தில் கசமுசாவென சில சத்தங்கள். அதை பொருட்படுத்தாமல் யாருக்கோ போன் செய்தாள். அதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். என்னுள் ஏதோ இரசாயண மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது போலும். இருக்கையில் அமர முடியவில்லை. நெளிந்தேன். அழகான பெண்,இவளின் அறிமுகத்தை பேச்சுத்துணையை  கடுமையாக பேசி கெடுத்துக்கொண்டாயே!  .
     நல்லவாய்ப்பு, அவள் மூலமாகவே வந்தது. இடத்தை விட்டுக்கொடுத்து அவள் முகவரி, அல்லது போன் நெம்பர் வாங்கி இருக்கலாம். அப்புறம் அவள் விருப்பப்பட்டால் அவளோடு டூயட் பாடி பீச், சினிமா என்று சுற்றலாம். எல்லாவற்றையும் கெடுத்துக் கொண்டாயே என்றது மனது.
   ஏதோ முன் பின் தெரியாத பெண் மீது எதற்கு தேவையில்லாத கரிசனம். அவள் யாரோ? அவள் வந்து கேட்டால் சீட்டை விட்டுத் தரவேண்டுமோ? நீ செய்ததுதான் சரி! அவள் எக்கேடு கெட்டால் உனக்கென்ன? என்று சீறியது மனசாட்சி
   மனசுக்கும் மனசாட்சிக்கும் இடையே இப்படி தர்க்கம் நடந்து கொண்டு இருக்கையிலேயே டிரெயின் கிளம்பிவிட்டது. டிரெயினின் தடக் தடக் சத்தத்தில் அப்படியே ரஹ்மானின் இசையைக் கேட்டபடி சென்றபோதுதான் அவள் மீண்டும் அழைத்தாள்.
     “எக்ஸ்கியுஸ் மீ!”
   இந்த முறை தவறவிட்டுவிடாதே! என்றது மனம்.
  “ எஸ்!   ஐயம் நவீன்! யுவர் குட் நேம் ப்ளீஸ்!” என்றேன் குரலை குழைத்துக் கொண்டு.
       “அனாமிகா!”
   “நைஸ் நேம்! பெங்களூரு உங்க சொந்த ஊரா?”
   “நோ! நோ! நான் சென்னைதான்! பெங்களூருவில் ஒரு ஐ.டி கம்பெனியில் வொர்க் பண்ணிக்கிட்டிருக்கேன்! நீங்க?”
    “நானும் பெங்களூருவில் தான் வெளிநாட்டுக்காரனுக்கு குடை பிடிக்கும் ஒரு கம்பெனியில் கூட சேர்ந்து குடை பிடிக்கிறேன்!”
    “நல்லா பேசறீங்க? ஆனா இடத்தை விட்டு தர மாட்டேன்னு சொல்லிட்டீங்களே!”
     “விண்டோ சீட் என் பேவரிட்! அதை யாருக்கும் விட்டுக் கொடுத்தது இல்லை!”
      “எனக்கு கூடவா?” குழைந்தாள்.
 “உனக்கு வேண்டுமானால் இதயத்தில் இடம் தரட்டுமா?” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.
   ”இல்லை! நீங்கள் என்ன ஸ்பெஷலா? விட்டுக்கொடுப்பதற்கு..”
 “ஒரு பதினெட்டு வயது இளம்பெண் கேட்டால் உங்களைப் போன்றவர்கள் வழிந்து கொண்டு எல்லாம் தருவார்கள்! நீங்கள் ரயில் பெட்டியின் மூட்டை பூச்சி  கடிக்கும் ஒரு சீட்டை விட்டுத் தர மறுக்கிறீர்கள்.”
    “ஹாஹா! பரவாயில்லை! நீயும் நல்லா பேசுகிறாய்! இந்த இடம் வேண்டுமானால் நீ என்ன தருவாய்?”
    “என்னது…?” சீறினாள்.
   “கூல்டவுன் அனாமிகா! நான் தவறாக எதையும் சொல்லவில்லை! உனக்கு இந்த சீட்டை விட்டு தர வேண்டும் என்றால் எனக்கு உன் நட்பு வேண்டும். நண்பர்களுக்கு எதையும் விட்டு தர நான் தயார்!”
     “ஓக்கே! நாம் ப்ரெண்ட்ஸ் ஆயிருவோம்!” அவள் கைநீட்டினாள். அதை தொட்ட போது என்னுள் அருவிக்குள் குளிப்பது போல ஒரு உணர்வு. பஞ்சைவிட மென்மையான அவள் கைகளை விடுவிக்க மனமில்லாமல் விடுவித்தேன். எழுந்து அவளுக்கு இடம் கொடுத்தேன்.
   மாறி அமர்ந்ததும் அவள் கேட்டாள்.  “லாங் ஜர்னி போனா எல்லோரும் நாவல்ஸ் படிப்பாங்க? நீங்க எதாவது புக்ஸ் வச்சிருக்கீங்களா?”
    “எனக்கு எப்பவுமே சுஜாதா நாவல்ஸ்தான் பேவரிட்!”
    “ஐயோ! எனக்கும் சுஜாதான்னா ரொம்ப பிடிக்கும்! இப்ப என்ன புக் கொண்டு வந்திருக்கீங்க?”
      “மீண்டும் ஜீனோ”  
   “செம இண்ட்ரஸ்டிங்கான சயிண்டிபிக் நாவல்! கொடுங்களேன் படிச்சிட்டு தர்றேன்!”
      “புத்தகங்களை நான் இரவல் கொடுப்பது இல்லை!”
   ”திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களா? இப்பத்தானே சொன்னீங்க நண்பர்களுக்கு எதை வேணும்னாலும் தருவேன்னு!”
    “நண்பர்களுக்கு எதை வேணும்னாலும் தரலாம்! ஆனா நமக்கு பிடிச்ச ஒண்ணை நம்ம காதலிங்களுக்கு மட்டும்தான் தரமுடியும்!” கண் சிமிட்டினேன்!
     அவள் வெட்கத்துடன்  தலை கவிழ,  “ஐ லவ் யூ அனாமிகா!” என்றபடியே அவளை நோக்கி நகர்ந்தேன்.
    “யோவ்! பார்த்தா டீசண்டா இருக்கே! இப்படியா சீட்லேயே தூங்கி வழிவே! எழுந்து உக்காருய்யா!”
    திடுக்கிட்டேன்! அடச்சே! நடந்தது எல்லாம் கனவா?  வண்டி ஏதொ ஒரு ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தது. எதிரில் அந்த பெண்ணைக் காணவில்லை! ஒரு வேளை டாய்லெட் சென்றிருக்கலாம். வந்தவுடன் நாமே சென்று வலிய இடத்தை விட்டுக் கொடுத்து பேச்சை வளர்க்கலாம்! யோசித்துக் கொண்டு இருக்கையில் நன்கு அமர்ந்தேன்.
   எதிர் இருக்கையில் அடியில் அவள் கொண்டுவந்த பை இருந்தது. ஜன்னல் வழியே நோக்கினேன். அது அது.. அனாமிகா..தானே ப்ளாட்பார்மை விட்டு இறங்கி சென்று கொண்டிருக்கிறாளே இங்கே பையை விட்டு எங்கே போகிறாள்.
   பரபரப்புடன்  “ஹலோ! ஹலோ மிஸ்! உங்க பேக்! அதை விட்டுட்டு போறீங்களே!” என்று  கத்திக்கொண்டே எழுந்தேன்.  பேக்கை எடுத்துக்கொண்டு இறங்கி  “ஹலோ ஹலோ மிஸ்!”என்று குரல் கொடுக்க அவள் நின்றாள்.
    கையை உயர்த்தினாள்! அவள் கைகளில் என்ன அது செல்போனா அது? என்ன நான் கூப்பிடுவதை கவனிக்காமல் அதை நோண்டிக்கொண்டிருக்கிறாள்? எப்படியும் அவளிடம் நல்ல பேர் வாங்கிவிட வேண்டும் என்று நான் யோசிக்கையில்தான் அது நிகழ்ந்தது.
   “பூம்” என் கையில் இருந்த பை வெடிக்க, என் கனவு சிதறிப்போகையில்  அந்த அனாமிகா அந்த புகையில் காணாமல் போய்க் கொண்டிருந்தாள்.

   தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. ஹா...!

    சென்ட்ரல் தீம்!

    ReplyDelete
  2. விதி வலியதோ ?
    த ம +1

    ReplyDelete
  3. என்னடா... அதுக்குள் நட்பு, காதல்னு போறாங்களே... இயல்பா இல்லையேன்னு மனசுல நினைச்சு முடிக்கறதுக்குள்ள அடுத்த திருப்பம் மற்றும் அழகான முடிவு. நன்று.

    ReplyDelete
  4. எதிர்பாராத முடிவு .. அருமையான கதை

    ReplyDelete
  5. நல்ல கதை. நடுவில் கொஞ்சம் செயற்கையாக தெரிந்தாலும் அதை கனவு என்று சொல்லி,நன்றாக முடித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2