இந்திர ஜாலம்! விக்கிரமாதித்தன் கதை! பாப்பாமலர்!

இந்திர ஜாலம்! விக்கிரமாதித்தன் கதை! பாப்பாமலர்!


   ஒரு சமயம் விக்கிரமாதித்தன் தன் மந்திரி பிரதானிகளுடன் அரச சபையில் அமர்ந்திருந்தான். அப்போது இந்திரஜாலம் கற்ற ஒருவன் அங்கு வந்தான். அவனை வரவேற்றான் விக்கிரமாதித்தன். அப்போது அந்த ஜாலக்காரன்,  “அரசே! சகல கலைகளிலும் தாங்கள் தேர்ச்சி உள்ளவர். உங்கள் முன்னே என்னுடைய வித்தைகளை காட்டி என் திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன்! அனுமதி அளிக்க வேண்டும்!” என்றான்.
   “இப்போது எனக்கு நேரமில்லை! அரசவையில் முக்கிய பணிகள் இருக்கிறது! நாளை உன் திறமையை கண்டுகளிக்கிறேன்!” என்றான் விக்கிரமாதித்தன்.
   “தங்கள் சித்தப்படியே!” என்ற மந்திரவாதி விடைபெற்றான்.
மறுநாள் அரசன் விக்கிரமாதித்தன் சபையில் அமர்ந்திருந்த போது கையில் கத்தியுடன் பருத்த உருவத்துடன் நன்கு வளர்ந்த தாடியுடனும் வீரம் ததும்பும் முகத்துடனும் வீரன் ஒருவன் கம்பீரமாக வந்தான். அவனுடன் அழகிய பெண் ஒருத்தியும் வந்தாள். அந்த வீரன் அரசனை வணங்கி நின்றான்.
   “வீரனே! நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்று விக்கிரமன் விசாரித்தார்.
  “ மன்னா! நான் தேவேந்திரனின் அடிமை! ஒரு சமயம் எஜமானரால் சபிக்கப்பட்டு இம்மானிட உருவத்தை அடைந்தேன். இப்போது நான் பூமியிலேயே வசித்து வருகிறேன். இவள் என் மனைவி. இன்று தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே மாபெரும் யுத்தம் தொடங்குகிறது. ஆகவே, நான் தேவலோகம் புறப்பட்டுச்செல்கிறேன். நீங்கள் பிற பெண்களை தன் சகோதரிகளாக கருதி நடத்துவதாகக் கேள்விப்பட்டேன். ஆகவே யுத்தத்திற்கு புறப்படும் முன் என் மனைவியை  உங்கள் பாதுகாப்பில் விட்டுச்செல்லலாம் என வந்துள்ளேன். என் எண்ணம் நிறைவேறுமா?” என்று வணக்கத்துடன்  விக்கிரமாதித்தனை நோக்கிக் கேட்டான்.
     வீரனின் வார்த்தைகளைக் கேட்டு சபையோரும் விக்கிரமனும் ஆச்சர்யப்பட்டார்கள். “வீரனே! நீ கவலைப்படாதே! நீ புறப்பட்டு செல்லும் காரியத்தில் வெற்றி உண்டாகட்டும்! நீ திரும்பி வரும் வரையில் உன் மனைவியை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து உன்னிடம் ஒப்படைக்கிறேன்! இதில் சந்தேகம் வேண்டாம்” என்றான் விக்கிரமாதித்தன்.
     வீர்ன் மகிழ்வோடு தன் மனைவியை அரசனின் பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு பிறகு உருவிய கத்தியுடன் வானில் மறைந்தான். அப்போது வானத்திலே இடி இடிப்பது போல ஒரு பெரும் முழக்கம் கேட்டது. கத்திக்ள் கேடயங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் சப்தமும் இரதங்கள் ஓடும் கடகட சப்தமும் கேட்டன. யானைகள் பிளிறின. குதிரைகள் கனைத்தன. அவைகளைத்தொடர்ந்து வீரர்களின் ஆவேசமான கூக்குரல்களும் வெட்டுவெட்டு! கொல்லு! கொல்லு! என்ற சத்தமும் கேட்டன. இதையெல்லாம் கேட்ட சபையோர்களின் ஆச்சர்யத்திற்கு அளவே இல்லாமல் போனது. அனைவரும் உன்னிப்பாக இந்த சத்தத்தை கேட்டுக்கொண்டிருந்தனர். தேவலோகத்தில் நடைபெறும் பயங்கரப் போரை அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர் என்ற நினைப்பில் அவர்கள் இருக்கும் போது உருவிய கத்தியுடன் கூடிய கி ஒன்று அரச சபையின் நடுவில் வந்து விழுந்தது. அதைக்கண்டு சபையோர்கள் திகைத்தனர்.
   “ ஆ! அவ்விளம் வீரனுடைய கை அன்றோ இது! யுத்தத்தால் எதிரிகளால் கொல்லப்பட்டுவிட்டானோ?” என்று வருத்தப்பட்டனர். சிறிது நேரத்தில் அவ்வீரனின் தலையும் உடலும் தனித்தனியாக வந்து வீழ்ந்தன. அந்த வீரனின் மரணம் சபையோரை விசனப்படுத்தியது.  
   வீரன் இறந்துவிழுவதைக் கண்ட அவன் மனைவி ஓடோடி வந்து கீழே கிடந்த தன் கணவனின் உடல் மீது விழுந்து கதறினாள். ஐயோ! இந்த கோரக்காட்சியைக் காணவா என்னை இங்கே விட்டுச்சென்றீர்கள்? என்று அழுதாள்.
    அப்போது விக்கிரமன், அந்த பெண்ணிடம், “ குழந்தாய் வருந்தாதே! நீ இப்படி துக்கிப்பதால் எந்த பயனும் இல்லை! உன் கணவன் இந்திரனுக்காக அசுரர்களிடம் போரிட்டு வீர சுவர்கம் அடைந்துவிட்டான். அவன் புகழ் மூன்று உலகத்திலும் பிரகாசிக்கும்! கவலைப்படாதே! எழுந்திரு! என்று கூறினான்.

   அப்போது, அந்த பெண், அரசே! என் கணவர் யுத்தத்தில் வீர சுவர்கம் அடைந்துவிட்டார். அவரை தேவகன்னிகைகள் அடைவதை நான் விரும்பவில்லை. அரசே! அக்கினியை மூட்ட உத்தரவிடுங்கள்! நான் நெருப்பில் என் உயிரை மாய்த்து கணவருடன் செல்கிறேன் என்றாள்.
    விக்கிரமன் இந்த சொல்லைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து  “குழந்தாய்! நீ ஏன் அக்கினிப்பிரவேசம் செய்ய வேண்டும்? உன்னை என்னுடைய பெண்ணாக எண்ணி உன்னை பாதுகாத்து வருவேன். தீக்குளிக்கும் எண்ணத்தை விட்டுவிடு!என்று கேட்டான்.
   ஆனால் அந்த பெண்ணோ, "இனி நான் யாருக்காக உயிர்வாழவேண்டும்? யாருக்காக இந்த உடலை வளர்த்தேனோ அவரே யுத்தத்தில் எதிரிகளால் கொல்லப்பட்டுவிட்டார். சந்திரனுடன் நிலவுசெல்கிறது. மேகத்துடன் மின்னல் செல்லுகிறது! அவ்விதமே பெண்கள் தங்கள் கணவர்களை பின் தொடர்ந்து செல்லவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. தந்திகளின்றி யாழ் நாதத்தை எழுப்பாது! சக்கரங்களின்றி வண்டி ஓட்ட முடியாது. அவ்விதமே நூற்றுக்கணக்கான உறவினர்கள் இருந்தாலும் கணவன் இல்லாமல் சந்தோஷத்தை ஒரு மனைவியால் அடையமுடியாது. எனவே என்னை உடன்கட்டை ஏறவிடுங்கள்"என்றாள்.
   அந்த பெண் பிடிவாதம் செய்தமையால்  விக்கிரமாதித்தன் அக்னி மூட்ட ஏற்பாடு செய்தான். அவள் எல்லோரிடமும் விடைபெற்று முகமலர்ச்சியுடன் அக்கினியில் பிரவேசித்தாள். அன்றைய தினம்  அக்காட்சியை காண முடியாமல் ஆதவனும் மேற்கே மறைந்தான்.
   மறுநாள் அரசன் தன் அரசவையில் அமர்ந்திருந்தபோது அப்போது அங்கு அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் முதல் நாள் இறந்து போன வீரன்  கையில் கத்தியுடன் முன்னைவிட பிரகாசம் பொருந்தியவனாக வந்தான்.
  பிரதானிகளுக்கு ஒன்றும் விளங்கவில்லை! தாங்கள் காண்பது கனவா? என்று ஐயப்பட்டனர். முதல் நாள் தலை வேறு உடல் வேறாக விழுந்து தீயில் சாம்பலான அவன் எப்படி உயிருடன் வந்தான் என்பதை அவர்களால் அறிய முடியவில்லை. விக்கிரமனின் நிலை இன்னும் தர்ம சங்கடமாக இருந்தது. இப்போது வீரன் தன் மனைவியைக் கேட்டால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தார் அவர்.
   "அரசே! இந்திரனுக்கும் அசுரர்களுக்கும் நடைபெற்ற போரில் கலந்து என்னால் முடிந்தவரை அசுரர்களைக் கொன்றேன்.யுத்தத்தில் தோல்வியுற்ற அசுரர்கள் ஓடிவிட்டனர். இந்திரன் என்னைப்பாராட்டி என்னை மீண்டும் இந்திரலோகத்தில் இருந்து கொள்ளச்சொன்னார். என் மனைவியை தங்களிடம் ஒப்படைத்து வந்ததையும் மீண்டும் கூட்டி வந்து விடுவதாக கூறி என்று சொல்லி இங்கு வந்தேன். என் மனைவியை ஒப்படையுங்கள்! நான் இந்திரலோகம் செல்ல வேண்டும்" என்றான்.
   விக்கிரமன் பதில் அளிக்க முடியாமல் திணறினான். அந்தப்பெண் உயிருடன் இருந்தால் அல்லவா ஒப்படைக்கமுடியும்? விசனத்துடன் பதில் பேசாமல் இருந்தான்.
  "அரசே! ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்?"என்றான் வீரன்.
 "உன் மனைவி நீ இறந்ததாக கருதி யார் தடுத்தும் கேளாமல் அக்கினிப்பிரவேசம் செய்துவிட்டாள்."என்றனர் அவையோர்.
  "என்ன? என்ன நடந்தது?"என்று அதிர்ச்சியுடன் கேட்டான் வீரன். சபையோர் நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினர். அரசர் எவ்வளவோ தடுத்தும் உன் மனைவி கேளாமல் அக்கினியில் குதித்துவிட்டாள். அரசன் இப்போது பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் என்று வருந்தி கூறினர்.
  அப்போது அந்த வீரன் இடி இடியென சிரித்தான். அரசே! கவலைபடாதீர்கள்! பிற பெண்களை சகோதரிகளாக கருதுவதில் தங்களுக்கு இணை யாரும் இல்லை! நேற்று முன் தினம் உங்களுக்கு வித்தை காட்டுவதாக கூறிச்சென்ற மந்திரவாதிதான் நான். இதுவரை நடந்த அனைத்தும் வேடிக்கையே!  பெண்ணோடு வந்தது இந்திர லோகத்தில் நடந்த போர்! நான் இறந்ததாக காட்டப்பட்டது. என் மனைவி தீக்குளித்தது அனைத்தும் ஜாலம் என்னும் வேடிக்கையே! என்றான் மந்திரவாதி.
   "என்ன உண்மையாகவா? "என்று ஆச்சர்யமாக கேட்டனர் மன்னரும் சபையோரும்.

  "ஆம் அரசே! இது அனைத்தும் ஜாலமே! என் திறமையை காட்டவே அவ்வாறு செய்தேன்! "என்றவன் அந்த பெண்ணையும் வரச்செய்தான்.
  அப்போது அரசவையில் பாண்டிய மன்னனிடம் இருந்து கப்பம் வந்துள்ளது என்று காவலன் ஒருவன் தெரிவித்தான்.
   "என்னென்ன அனுப்பி வைத்துள்ளான்?"என்று கேட்டான் விக்கிரமாதித்தன்.
  "அரசே! எட்டுகோடிப் பொன், தொண்ணூற்று முன்று துலாம் முத்துக்கள் ஐம்பது மதயானைகள், முன்னூறு குதிரைகள், நூறு நடனமாதர்கள், "இவை அனைத்தையும் பாண்டிய மன்னர் கப்பமாக அனுப்பியுள்ளார்.
   "மந்திரி! இவை அனைத்தையும் இந்திர ஜாலம் செய்த இந்த மந்திரவாதிக்கு பரிசாக கொடுத்துவிடுங்கள். அப்போதுதான் நாம் இவனை சரிவர கவுரவித்ததாக இருக்கும். இதுவரை அனேகர் நம் சபையில் வித்தைகள் செய்திருந்தாலும் இவனைப் போன்ற திறமையானவனை நான் கண்டதில்லை!"என்று மந்திரவாதியைப் புகழ்ந்தான் விக்கிரமாதித்தன்.
   பரிசுகளைப் பெற்ற மந்திரவாதி அரசனை வணங்கி விடைபெற்றான்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. நூறு நடனமாதர்களை பரிசாக பெற்ற மந்திரவாதி என்ன ஆனான்னு தகவல் ஏதும் கிடைத்ததா ?

  ReplyDelete
  Replies
  1. அது எப்படிங்க, எவ்வளவோ பரிசை அரசர் கொடுத்திருக்கும்போது, அந்த நூறு நடனமாதர்களை மட்டும் கேள்வி கேக்குறீங்க????

   Delete
 2. 100 நடனமாதர்கள் பரிசா ?
  Killergee
  www.Killergee.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. அது எப்படிங்க, எவ்வளவோ பரிசை அரசர் கொடுத்திருக்கும்போது, அந்த நூறு நடனமாதர்களை மட்டும் கேள்வி கேக்குறீங்க????

   Delete
 3. நம்ப முடியாத ஜாலம்..... இதெல்லாம் கதையில் மட்டுமே சாத்தியமோ :)

  ReplyDelete
 4. நல்ல இந்திரஜால கதை.

  ReplyDelete
 5. எவ்வளவு முறை படித்தாலும் ரசிக்க வைக்கும் விக்கிரமாதித்தன் கதை..

  ReplyDelete
 6. நல்ல கதை நன்றாக ரசித்தேன்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2