உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 54

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 54


வணக்கம் வாசகர்களே! சென்ற வாரம் படித்த இலக்கணம் நினைவில் இருக்கிறதா? தொகைச்சொற்களில் வேற்றுமைத்தொகை குறித்து விரிவாக படித்தோம். நினைவு கூற இங்கு சென்று வாருங்கள். வேற்றுமைத் தொகை


   நினைவுக்கு வந்து விட்டதா? வேற்றுமைத்தொகைக்கு அடுத்து வருவது வினைத்தொகை எனப்படும்.

  காலம் காலமாக தமிழாசிரியர்கள் வினைத்தொகைக்கு எடுத்துக்காட்டாக ஊறுகாய் என்ற சொல்லை சொல்லிக்கொடுத்திருப்பார்கள். இது உங்களுக்கு நினைவுக்கு இருக்கிறதா?

   சொற்றொடரில் காலம் மறைந்து தருவது வினைத்தொகை.சொற்றொடர்களில் மூன்று காலமும் மறைந்து நின்று பொருள் தரும். அச்சொல்லை விரிக்கையில் மூன்று காலத்திற்கும் பொருந்தி வரும். வினைப் பகுதியில் இருக்கும். பெயர்சொல்லை முன் உள்ள சொல் தழுவி வரும்.

சுருக்கமாக மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச்சொல்லால் தழுவப்பெற்று வரும் தொடர் வினைத் தொகை எனப்படும்.

எடுத்துக்காட்டாக  அலைகடல் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள்.

  அலைகடல் – அலைத்த கடல்
               அலைக்கின்ற கடல்
               அலைக்கும் கடல்.
என்று விரித்து பார்க்கும் போது மூன்று காலத்திற்கும் பொருந்தி வருகிறது.

பகுதியாக அலை என்ற வினைச்சொல் வருகிறது கடல் என்ற பெயர்சொல்லை தழுவி வருகிறது. இது வினைத்தொகை.

குடிநீர்- குடித்த நீர், குடிக்கின்றநீர், குடிக்கும் நீர்

ஊறுகாய் – ஊறியகாய், ஊறுகின்ற காய், ஊறும்காய்

இவையெல்லாம் வினைத்தொகைக்கு சில உதாரணங்கள்.

பண்புத்தொகை:

   சொற்றொடரில் பெயர்ச்சொல்லுக்கு இடையே பண்பை விளக்கும் “ஆகிய” என்ற பண்பு உருபு மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும். எளிமையாக சொல்லை பிரித்தால் மை வந்தால் பண்புத்தொகை என்று சொல்லுவர்.

செந்தாமரை- செம்மை+ தாமரை-  செம்மை ஆகிய தாமரை

கடுங்கதிர்=   கடுமை+ கதிர்  - கடுமையாகிய கதிர்

மூதூர் =  முதுமை+ ஊர் – முதுமையாகிய ஊர்.

இன்சொல் = இனிமை+ சொல் – இனிமையாகிய சொல்

இவை பண்புத்தொகைக்கு சில எடுத்துக்காட்டுக்கள்.

இரு பெயராட்டு பண்புத்தொகை

  இரண்டுபெயர்ச்சொற்கள் ஒட்டிய சொற்றொடரில் நிலைமொழி சிறப்புப்பெயராகவும் வருமொழி பொதுப்பெயராகவும் இருந்து இடையே ஆகிய என்ற பண்பு உருபு மறைந்து வருவது இருபெயராட்டுப்பண்புத்தொகை என்று சொல்லப்படுகிறது. இரு பெயராட்டுப் பண்புத்தொகையில் சிறப்புப்பெயரை சொல்லும்போதே பொதுப்பெயர் சுட்டப்படும்.

எடுத்துக்காட்டு:
   சாரைப்பாம்பு- சாரை என்பது சிறப்புபெயர் பாம்பு என்பது பொதுப்பெயர்
இந்திய நாடு இந்தியா என்பது சிறப்புப்பெயர் நாடு என்பது பொதுப்பெயர்
மாமரம் – மா என்பது சிறப்புப்பெயர்- மரம் என்பது பொதுப்பெயர்.

இனிக்கும் இலக்கியம்:

  நற்றிணை

பாடியவர் நக்கண்ணையார்

  துறை: நெய்தல்


உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவை கனவியா அங்கு,
அதுகழிந்தன்றே- தோழி!- அவர்நாட்டுப்
பனி அரும்பு உடைந்த பெருந்தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.


விளக்கம்: ஊரின் உள்ளே நன்கு பழுத்து தொங்கிக்கொண்டிருக்கும் மாமரத்தின் உயர்ந்த கிளையிலே கோரைப்பற்களை முன்னே நீட்டிக்கொண்டு தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் வவ்வால்கள் தூங்கிக்கொண்டிருக்கும். அப்போது அதன் கனவில் போரிலே வெல்லும் திறமையுடைய சோழர் குடியில் பிறந்த அழிசி என்பவனின் நாட்டில் உள்ள பெரிய காட்டில் பழுத்துக்கிடக்கும் புளிப்புச்சுவையுடைய நெல்லிக்கனியை  சுவைப்பதாக நினைத்து மகிழும். அது போல நானும் என் கனவில் அவர் நாட்டில் உள்ள பெரிய பருத்த அடியை உடைய புன்னை மரத்தின் குளிர்ந்த அரும்புகள் மலர்ந்துள்ள கடற்கறை துறையில் மேயும் சிப்பிகளின் மீது புன்னைமொட்டுக்கள் பனியினால் வீழ அதைக்கண்டு மகிழும் பரதவர்களையும் குளிர்ந்த கானலையும் நினைக்க அப்பொழுது அவரோடு நானிருப்பதாக எண்ணி மகிழ்கிறேன். அதுவும் இப்போது மறைந்துவிட்டது.

   தலைவன் வேலையின் காரணமாக பிரிய, தலைவி தலைவனின் பிரிவாற்றாமைத் துயரில் தோழியிடம் கூறும் கூற்றாக பாடல் அமைந்துள்ளது. வவ்வால் பறவை நெல்லியை கனவில் நினைப்பது போல தலைவி தலைவரை கனவில் காண்கின்றாள். தோழி வருகையால் கனவு கலைந்து அவள் மகிழ்ச்சி குலைந்து போனதாம்.

  உவமை நயங்களும் பொருள் நயங்களும் சிறந்த இந்த பாடலை ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.


தங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!  

மேலும் தொடர்புடைய இடுகைகள்

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 51


உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 52

Comments

  1. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரா தங்களின் பகிர்வினைப்
    படிக்கும் அனைவரும் பயனுற வேண்டும் .சிறப்பான இப் பகிர்வுக்கு
    மிக்க நன்றி .வாழ்க தமிழ் ....

    ReplyDelete
  3. இனிக்கும் இலக்கிய விளக்கமும் அருமை...

    ReplyDelete
  4. அருமையான பாடல், விளக்கம், கற்று பயன் பெற இலக்கண தமிழ் சிறப்பான பதிவு நன்றி! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  5. நல்ல விளக்கம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  6. வினைத்தொகையைப் பற்றி எளிதாக பபுரிந்து கொள்ளக்கூடிய விளக்கம் அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2