உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 52

 உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 52


வணக்கம் அன்பர்களே! வாரம் தோறும் தமிழ் கற்கும் இப்பகுதி சிறப்பாக வளர்ந்து வருகிறது. சென்ற வாரம் உவமைத்தொகை, உம்மைத்தொகையை பார்த்தோம். இதற்கு முன்னரே பண்புத்தொகை குறித்து பார்த்தோம்.  இந்த வாரம் பார்க்க இருப்பது. அன்மொழித்தொகை ஆகும்.
சென்ற வாரம் படித்ததை நினைவு கூற இங்கு செல்லவும். உவமைத் தொகையும், உம்மைத் தொகையும்

அன்மொழித்தொகை:
 வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை ஆகிய ஐந்து சொற்றொடர்கள் இடையே உருபுகள், காலம், சொற்கள் ஆகியவை மறைந்து நின்று பொருள் கொடுக்கின்றன. இந்த உருபுகள், காலம், சொற்களுக்கு ஏற்றவாறு சொற்றொடர்களை மேலே கண்ட வேற்றுமை, பண்பு, வினை, உவமை, உம்மை, தொகைகளாக அடக்குகிறோம். இந்த ஐந்து தொகைகளோடு நில்லாமல் மேலும் தொகைகள் விரிவு அடைகின்றன. இப்பொழுது பார்த்த காலம், உருபுகள், உறுப்புக்கள் இல்லாது வேறு சொற்கள் தொகைகளுக்கு புறத்தே நின்று மறைந்து பொருள் தருகின்றன.

  தொகை நிலைத் தொடர்களுக்கு புறத்தே சில மொழிகளாகிய உருபுகள் மறைந்து நின்று பொருள் கொடுப்பதற்கு அன்மொழித் தொகை என்று பெயர்.

 அன்மொழி- அல்மொழி- அல்லாத மொழி என்று பொருள் கொள்ள வேண்டும். வேற்றுமை உருபுகள், பண்பு, உவம உருபுகள், உம் என்னும் உறுப்புக்கள் ஆகியவை அல்லாத வேறு மொழிகள் அன்மொழி என்று கொள்ள வேண்டும்.

உதாரணமாக பொற்றொடி வந்தாள் என்ற தொடரை எடுத்துக் கொள்ளுங்கள்.


பொற்றொடி இதை விரிக்கும் போது பொன்+ தொடி = பொன்னால் செய்யப்பட்ட வளையல் என்று பொருள் ஆகிறது.
ஆகவே பொற்றொடி என்பது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை என்று இலக்கணம் வகுக்கலாம்.

  இந்த தொடர் இதோடு நில்லாமல் வந்தாள் என்று முடிகிறது.
இதை விரிக்கும் போது பொன்னால் செய்யப்பட்ட வளையல் அணிந்த பெண் வந்தாள் என்று விரியும்.

அணிந்த, பெண் என்பது தொகைச்சொல்லில் மறைந்து நிற்கிறது. 
மேலும் இதில் வந்தாள் என்ற வினைமுற்றைத் தழுவி தொகைக்கு புறம்பாக நிற்கிறது. எனவே இதை அன்மொழித் தொகை என்று சொல்வர்.

பொற்றொடி = மூன்றாம் வேற்றுமை உருபும்  பயனும் உடன் தொக்கத் தொகை.

பொற்றொடி வந்தாள் = மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைப் புறத்து பிறந்த அன்மொழித் தொகை.

பொற்றொடி என்பது வளையலை குறிக்கும் போது வேற்றுமைத் தொகை, அதுவே பெண்ணைக் குறிக்கும் போது அன்மொழித் தொகை ஆகிறது.

மேலும் சில அன்மொழித் தொகைகள் பூங்குழல் இனிது பாடினாள்.  யாப்பிலக்கணம், நாவலர் வந்தார், கிள்ளிக்குடி போனான். புறநானூறு கற்றான்.  வளர்மதி நோக்கினாள்,  பைங்கிளி பேசினாள். கார்குழல் தேரோட்டினாள்.

ஓரளவேனும் புரிந்ததா? மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள். இதன் விரிவை அடுத்த வாரம் படிக்கலாம்.

இலக்கியசுவை!
  நற்றிணை பாடல் ஒன்றை பார்ப்போம். குன்றியனார் என்பவர் இந்த பாடலை எழுதியுள்ளார். நெய்தல் திணையில் தோழி கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது.

  ஞான்ற ஞாயிறு குடமலை மறைய
  மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
  இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,
  அலவன் ஆடிய புலவு மணல் முன்றிற்
  காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின்,
  ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தற்
  புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
  மல்லல் இருங் கழி மலி நீர் சேர்ப்பதற்கு,
  அமைந்து தொழில் கேட்டனன்றோ இலமே; ‘முன்கை
  வார் கோல் எல் வளை உடைய வாங்கி,
  முயங்கு’ என கலுழ்ந்த இவ் ஊர்
  எற்று ஆவது கொல், யாம் மற்றொன்று செயினே?

விளக்கம்: ஞாயிறாகிய கதிரவன் மேற்கு மலையில் மறைந்தது. மாலை மயங்கும் அந்த நேரத்தில் பரதவர் குடியால் மகிழ்ந்து எளிதினில் பிடித்த மீன்களை எளிதில் விற்றனர். நண்டு விளையாடிய புலால் மணக்கும் மணல் முன்றிலை உடைய அழகிய சிறுகுடி. அந்த சிறுகுடிக்கு செல்லும் ஒழுங்குபட்ட வழியில் ஆய்ந்த நீலமணியின் மொட்டு அவிழ்ந்தார்ப் போல நெய்தலின் புல்லிய இதழ் குவிந்த மலர் கெடும்படியாகக் பரதவர் மிதித்துச் செல்வர். இவ்வாறான வளப்பம் மிக்க கரிய கழியுள்ள கடல் நீர் சேர்ப்பற்கு  யாம் உடன்பட்டு தொழில் கேட்டோம் இல்லை.  அப்படியிருக்க முன்கையில் நெடிய கோல் தொழிலமைந்த ஒலிவளைகள் உடைய முயங்குக எனக் கூறி அழுதது இவ்வூர். யாம் மற்றொன்று செயின் இவ்வூர் என்ன பாடுபடுமோ?
தலைவன் வந்து மறைந்திருப்பது கண்டு தோழி தலைவிக்கு இவ்வாறு சொல்லுகிறாள்.
உள்ளுறை உவமம்: பரதவர்கள் தாம் பெற்ற மீனை எளிதிலே மாறி வழியிலுள்ள நீலமலரை மிதித்துச் செல்வர் என்று சொன்னது. தலைவன் தான் பெற்ற செல்வத்தை எளிதில் எம்மிடம் கொடுத்து தலைவியை மணந்து ஊரார் கூறிய அலரை மிதிப்பது போலச் செய்து தன் ஊர் செல்வான் என்பதாகும்.
கடலிலே பிடித்த மீன்களை எளிதில் விற்று பணமாக்கி வரும் தலைவன் அதைக் கொடுத்து தலைவியை சிறைபிடித்து சென்றால் இந்த ஊர் மக்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று தோழி தலைவிக்கு கூறுகின்றாள்.


மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொறு சுவையான பாடலுடன் சந்திப்போம்!

உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து இத்தொடர் சிறக்க உதவுங்கள்! நன்றி!.

Comments

  1. நற்றிணை பாடலின் விளக்கமும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உள்ளுறை உவமம் மிக மிக அருமை ஐயா...!

    ReplyDelete
  3. நிறைய தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது, நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!