வாக்குறுதி!
வாக்குறுதி!
தேர்தல் களை கட்டியிருந்தது.
இரண்டு பிரதானக் கட்சிகள் தனித்து நிற்க சில்லறைக் கட்சிகள் என்று நான்கு ஐந்து
முனைப்போட்டிகள். இதனால் ஒவ்வொரு வாக்கும் சிதறிப்போகக் கூடாது என்பதில் கண்ணும்
கருத்துமாக இருந்தன இரண்டு பிரதான கட்சிகளும்.
தொகுதிகளுக்கு பார்த்து பார்த்து வேட்பாளர்களை
நிறுத்தியிருந்தன இரண்டு கட்சிகளும். ஜாதி, மதம், பணம் என்ற அடிப்படையில்தான்
பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்து இருந்தன இரண்டு கட்சிகளும்.
இருப்பதிலேயே பெரிய தொகுதி அது. தற்சமயம்
ஆளுங்கட்சி வசம் இருந்தது. எதிர்கட்சிக்கும் அங்கு பெரிய செல்வாக்கு உண்டு. அந்த
தொகுதியின் முடிவை நிர்மாணிப்பதில் அந்த தொகுதியில் அடங்கியிருந்த ஒரு பெரிய
கிராமத்தின் பங்கு அதிகம். அங்கு எந்த கட்சிக்கு வாக்கு விழுகிறதோ அந்த கட்சிதான்
ஜெயிக்கும். எனவே எல்லாக் கட்சிகளும் அந்த கிராமத்தையே சுற்றி சுற்றி வரும். எல்லா
தேர்தல்களைப் போல அல்லாமல் இரண்டு தேர்தல்களாய் பணம் வேறு ஓட்டுக்கு விலை பேசப்படுகிறது.
சென்ற முறை ஆளுங்கட்சி நோட்டுக்களை அள்ளிவீச வெற்றிக்கனியை சாதாரணமாக
பறித்துவிட்டிருந்தது.
இந்த முறை நிலைமையோ தலைகீழாக இருந்தது. ஒவ்வொரு
தொகுதியிலும் ஆளுங்கட்சிக்கு நிகராக போட்டிப் போட்டு பணம் கொடுத்துக்
கொண்டிருந்தது எதிர்கட்சியும். தேர்தல் ஆணையம் வியாபாரிகளின் பணங்களை பிடுங்கிக்
கொண்டிருந்ததே தவிர இந்த மாதிரி பண விநியோகத்தை பிடித்ததாக தகவலே இல்லை!
ஆளுங்கட்சி அந்த தொகுதியை தக்க வைத்துக்கொள்ள
முடிவெடுத்து அந்த ஊரில் நிறைய இருந்த ஜாதிக்காரரை வேட்பாளராக அறிவித்தது.
எதிர்கட்சி சும்மா இருக்குமா? அதே ஜாதிக்காரரை வேட்பாளராக அறிவித்து ஜாதி
ஓட்டுக்களை பிரித்தது. இரண்டு கட்சிகளும் அந்த தொகுதியில் வென்றே தீருவது என்று
கங்கணம் கட்டிக் கொண்டது.
ஆளுங்கட்சி வேட்பாளரின் வாகனம் அந்த ஊரின்
தலைவரின் வீட்டின் முன்னால் வந்து நின்றது. கரை வேட்டி பளிச்சிட கஞ்சிமொடமொடப்பு
குறையாத வெள்ளைச் சட்டையோடு மீசையை முறுக்கிவிட்டபடி இறங்கினார் ஆளுங்கட்சி
வேட்பாளர்.
வீட்டின் முன் ஏதோ வாகனம் வந்து நிற்கிறதே
என்று வெளியே வந்த தலைவர் ஆளுங்கட்சி வேட்பாளரை பார்த்ததும், புன்னகைத்தவாறே,
அடடே! நம்ம தம்பி! வாங்க வாங்க! என்று வரவேற்று சேரை எடுத்துப் போட்டு
உட்காரச்சொன்னார். உள்ளே இருந்த மனைவியிடம், ஏலே! தம்பி வந்திருக்காப்பல! குடிக்க
ஏதாவது தண்ணி கொண்டா! என்று சொன்னவர், அப்புறம் தம்பி! என்ன விசயம்?
“ஐயா! உங்களுக்கு தெரியாதது இல்லை!
ஆளுங்கட்சி வேட்பாளரா நம்ம தொகுதியிலே நிக்கிறேன்! நம்ம ஜாதிக்காரன். நீங்க ஒரு
வார்த்தை சொன்னீங்கன்னா இந்த ஊரே கட்டுப்படும். எல்லோரும் எனக்கு
ஓட்டுப்போடுவாங்க! சுலபமா ஜெயிச்சுருவேன்!”
“ என்ன தம்பி இப்புடி கேட்டுபுட்டே! நானும்
நம்ம கட்சிதானே! உனக்கு செய்யாம வேற யாருக்குச் செய்யப்போறேன்! ஆனா…!”
“ ஐயா! நீங்க எதுக்கு தயங்கறீங்கன்னு
புரியுது! எதிர்கட்சிக்காரன் பணத்தை இறைக்கிறான்! நாம இலவசமா ஓட்டு கேட்டா போட
மாட்டாங்கதான்! அவனை விட நான் அதிகமாவே தர்றேன்! ஆனா நிச்சயம் நீங்க எனக்காக நம்ம
ஜனங்க கிட்ட பேசனும்!”
“கண்டிப்பா தம்பி! நம்ம ஊருல ஒரு மூவாயிரம் ஓட்டு
இருக்கும்! அதுல எப்படியும் ஒரு இரண்டாயிரம் ஓட்டு நம்ம ஜாதிக்காரங்களுதான்!
எதிர்கட்சி காரனும் இதே ஜாதிக்காரனா போயிட்டதாலதான் இப்ப பணச்செலவு! ஜாதியா?
பணமா?ன்னு முடிவு பண்ணும் போது பணம் தான் முன்னே நிக்கும்! அவன் தலைக்கு எவ்வளோ
கொடுக்கிறானோ அதைவிட அதிகமா கொடுத்துட்டா வெற்றி நம்ம பக்கம்தான்!”
“ அவன்கிட்ட அந்த அளவுக்கு பணம் கிடையாது ஐயா!
நான் ஓட்டுக்கு இரண்டாயிரம் தரேன்! அவன் ஆயிரத்துக்கு மேல தரமாட்டான். இந்தாங்க
இரண்டாயிரம் ஓட்டுக்கு நாலு லட்சம்! உங்களுக்கு தனியா ஒரு லட்சம்! அஞ்சு லட்சம்
இருக்கு! நீங்கதான் பார்த்து பண்ணனும். ஒரு ப்ரிப் கேஸை காரில் இருந்து எடுத்து
வரச் செய்து கொடுக்க தலைவர் பெற்றுக்கொண்டார்.
“கண்டிப்பா உங்களுக்குத்தான் அந்த
ரெண்டாயிரம் ஓட்டும்! நீங்க கவலைப்படாதீங்க! நீங்கதான் ஜெயிக்க போறீங்க!” என்று
அவனை அனுப்பி வைத்தார்.
ஆளுங்கட்சி வேட்பாளர் போனதும், தலைவரின் மனைவி
வெளியே வந்தார். “ என்னங்க! இது உங்களுக்கே நியாயமா இருக்குதா? ரெண்டு நாள்
முன்னாடிதானே எதிர்கட்சிக் காரங்க கிட்ட இதே மாதிரி அஞ்சு லட்சம் வாங்கினீங்க!
அவர் கிட்டேயும் இதே மாதிரி சொன்னீங்க! இப்ப இவர் கிட்டேயும் இதே மாதிரி
சொல்றீங்க! நீங்க யாருக்குத்தான் ஓட்டு போடப்போறீங்க?”
பார்த்துட்டே இரு! உனக்கே புரியும் என்றார்
தலைவர் அர்த்த புஷ்டியாக.
தேர்தல் நாளுக்கு ஒரு வாரம் முன்பு தலைவர்
ஊர்க்காரர்களை அழைத்தார். பகிரங்கமாக சொல்லாமல் ஒவ்வொரு குடும்பத்தினரில் ஒருவரை
அழைத்து காதில் ஏதோ சொன்னார். உங்க குடும்பத்திலே கலந்து பேசி முடிவெடுத்துட்டு
நாளைக்கு வந்து சொல்லுங்க என்றார்.
அடுத்தநாள் அனைவரும் தலைவர் சொன்னபடி
கேட்பதாக சொன்னார்கள். அப்படியே செய்யவும் செய்தார்கள்.
தேர்தல் முடிந்தது. முடிவுகள் வந்தது. யாரும்
எதிர்பார்க்காதபடி அந்த தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளர் வென்றிருந்தார்.
ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் ஆவேசம் அடைந்தன. ஏனெனில் இரண்டாயிரத்து சொச்சம்
நோட்டா ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன.
ஆவேசமாக, இருவரும் அந்த ஊர் தலைவரின் முன்
வந்து நின்றனர். என்ன தலைவரே! இப்படி மோசம் பண்ணிட்டீங்க! ரெண்டு பேருகிட்டேயும்
ஒருத்தருக்கு தெரியாம ஒருத்தர்கிட்ட பணம் வாங்கிட்டு இப்படி ரெண்டு பேரையுமே
ஏமாத்திட்டீங்களே? என்றனர்.
“இப்படி வாக்கு கொடுத்திட்டு ஏமாத்தலாமா
தலைவரே?”
“அப்ப நாங்க மக்கள் வாக்கு கொடுத்து ஏமாத்த
கூடாது! நீங்க மக்கள் பிரதிநிதிகள் வாக்கு கொடுத்திட்டு ஏமாத்தலாமா?”
இந்த ஊரிலே ஒரு பள்ளி கட்டிடம் இடிஞ்சு போற
மாதிரி இருக்குன்னு சொல்லி எத்தனை வருசம் ஆச்சு! அதை சரி பண்ணீங்களா ரெண்டு
பேரும்! ரோடு வசதிதான் சரியா இருக்கா? ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் வேணும்னு எத்தனை
நாளா கேட்டுகிட்டு இருக்கோம்! இது எல்லாம் செஞ்சு தர்ரேன்னு வாக்கு கொடுத்து
வாக்கு வாங்கிட்டு போன உங்க ரெண்டு கட்சியும் எதையாவது செஞ்சு கொடுத்திருக்கா?
இல்லை இல்லே! எத்தனை தடவை நாங்க ஏமாறது? ஒரு தடவை உங்களை ஏமாத்தினோம்! நீங்கதான்
வாக்கு தவறுவீங்களா? நாங்களும் வாக்கு தவறி காண்பிச்சு இருக்கோம்!”
“நீங்க கொடுத்த பத்து லட்சம் ரூபாயை வச்சி
பள்ளிக் கட்டிடம் கட்டப் போறோம்! இந்தாங்க அதுக்கான நன்கொடை ரசீது! இனியாவது ஜாதி, பணம்னு யோசிக்காம மக்களுக்கு
நல்லது செய்ய முயற்சி பண்ணுங்க!”
தலைவர் ஆவேசமாக பேசி முடிக்க இருவரும் தலையை
தொங்கப் போட்டுக் கொண்டனர்.
ஒவ்வொரு ஊரும் இப்படி மாத்தி
யோசித்தால் மாறுதல் நிச்சயம்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரா .
ReplyDeleteநல்ல பதிவு சுரேஷ், சிந்திக்க வேண்டிய விஷயம்.
ReplyDeleteமாத்தி யோசிக்கனும் என்பதுலாம் சரிதான். நோட்டாவுக்கு ஓட்டுப் போட்டால் எப்படி சுயேட்சையாய் நின்னவர் ஜெயிக்க முடியும்?!
ReplyDeleteகதைப்படி அந்த கிராமத்தில் உள்ள 2000 ஓட்டுக்கள் வெற்றியை நிர்ணயிக்கும். ஆனால் அந்த இரண்டாயிரம் ஓட்டும் நோட்டாவுக்கு போனதால் இரண்டு வேட்பாளர்களுக்குமே வெற்றி கிடைக்கவில்லை! இவர்களுக்கு போட்டியாக இருந்த இன்னொருத்தர் சுயேச்சையோ மற்ற கட்சியோ வென்றிருப்பார்.பல முனை போட்டி என்பதால் ஓட்டுக்கள் பிரிகையில் சில ஓட்டு வித்தியாசத்தில் சுயேச்சைகள் வெல்ல வாய்ப்பு உள்ளதே!
Deleteம் ...
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
என்ன எழுதியும் ஏற்பாரா? கட்சிகளின்
பின்னே கிடப்பார் பிழைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
நல்லதொரு சிந்தனை....
ReplyDeleteஅனைவரும் மாற்றி யோசிக்க வேண்டுமே...
நல்ல பகிர்வு. காலத்திற்கு ஏற்ற பதிவும் கூட. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாறுதல் தருவதற்கு தானே தேர்தல். சிந்தனைக்குரிய பகிர்வு
ReplyDeleteசிந்தனைக்கு உரிய பதிவு
ReplyDeleteநன்றி நண்பரே
நடந்தால் நன்றாகத்தானிருக்கும்!
ReplyDeleteநல்ல பதிவு. கதைக்கு நன்றாக இருந்தாலும் நிஜத்தில் நடந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ReplyDelete