சுகப்பிரசவம் அருளும் திருச்சிராப்பள்ளி தாயுமானவர்!
சுகப்பிரசவம் அருளும்
திருச்சிராப்பள்ளி தாயுமானவர்!
திருச்சி என்றாலே நினைவுக்கு வருவது நகரின்
மையத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்தான்.
நகரில் நுழையும் போதே குன்றின் மேல் காட்சி தரும் உச்சிப்பிள்ளையார் கோவில்.
உச்சிப்பிள்ளையாரை வணங்கும் முன் அந்த
கோட்டையில் எழுந்தருளி இருக்கும் தாயுமானவ சுவாமிகளையும் மட்டுவார் குழலி
அம்மையையும் தரிசிப்பது மரபு.
தென்கைலாயம் என்று
வழங்கப்படும் இந்த தலத்தில் திரிசரன் என்ற மூன்று முகமுடைய அசுரன் வழிபட்டு பேறு
பெற்றதாக கூறப்படுகிறது. இந்த மலையில் சுவாமி, அம்மன், விநாயகர் மூவரும் மூன்று
சிகரங்களில் அமர்ந்த படியால் திரிசிரம் எனப்பட்டது.
பிரம்மகிரி என்றும் வழங்கப்பட்ட இந்த மலை
பார்ப்பதற்கு நந்தி அமர்ந்திருப்பது போல காட்சி தருவதால் ரிஷபாசலம் என்றும் பெயர்
பெற்றது.
இந்த மலைமேல் எழுந்தருளி இருக்கும் ஈசனுக்கு
செவ்வந்தி நாதர், திருமலைக்கொழுந்தர், தாயுமானவர் என்றெல்லாம் அன்பர்களால் அழகிய
தமிழில் வழங்கப்படுகிறார். அன்னை சுகந்த குந்தளாம்பிகை என்றும் மட்டுவார் குழலம்மை
என்றும் விளிக்கப்படுகிறார். சாரமா முனிவர் இந்த இறைவனை செவ்வந்தி மலர்களால் பூஜை செய்தமையால்
செவ்வந்தி நாதர் என்று வழங்கப்படுவதாகவும் மலைமீது அமர்ந்திருப்பதால்
திருமலைக்கொழுந்தர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கின்றனர்.
இரத்தினாவதி என்ற பெண் இங்கு
கோயில் கொண்டுள்ள இறைவன் மீது கொண்ட பக்தி காரணமாக அவளின் மகப்பேறு காலத்தில்
இறைவனே தாயாக வந்து பிரசவம் பார்த்து தொண்டு செய்தார். இதனால் தாயுமானவர் என்றும்
மாத்ருபூதேஸ்வரர் எனவும் இறைவன் அழைக்கப்படுகிறார்.
இந்த நிகழ்ச்சியை எடுத்துக்காட்டும் ஓவியமும்
சிற்பங்களும் இந்த ஆலயத்தில் காணப்படுகிறது அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர்
அருணகிரி நாதர் ஆகியோர் இத்தலத்து இறைவனைப் பாடி உள்ளார்கள்.
கடைவீதியில் இருந்து மலைக்குச் செல்லும்
வழியில் அமைந்திருப்பது மாணிக்க விநாயகர் சன்னதி. கேட்டவரம் தரும் பிள்ளையாரான
இவரை சுற்றி எப்போதுமே பக்தர்கள் கூட்டம். இவரை வணங்கியதும் மலையேறத் துவங்க
வேண்டும். மொத்தம் 273 அடி உயரமுள்ள குன்று இது. 417 படிகள் உள்ளன. கோவிலில்
கேமரா, செல்போன் அனுமதி இல்லை. எனவே பக்தர்கள் கொண்டு சென்றிருந்தால் வழியிலேயே
பிடுங்கி வைத்துக் கொள்கிறார்கள். மலைப்படிகளை கடந்து உள்ளே சென்றால் மேற்கு
நோக்கி இறைவன் லிங்க வடிவில் எழுந்தருளி இருக்கிறார். பெரிய வடிவில் அழகுற
அமைந்துள்ள இவர் மீது பங்குனி மாதத்தில் 23,24, 25 தேதிகளில் சூரியனின்
ஒளிக்கதிர்கள் படும் அற்புதக் காட்சியை கண்டு மகிழலாம்.
சுகந்த குந்தளாம்பிகை என்னும் மட்டுவார்
குழலி தனது நான்கு கரங்களில் மேலிரு
கரங்களில் அங்குசம் பாசம் தாங்கியும் கீழிரு கரங்கள் அபயவரத முத்திரைகளுடனும்
அருள்பாலிக்கின்றாள். இந்த கருவறையின் வெளிப்புறச்சுவர்களில் ஆதிசங்கரரின் ஸ்ரீ
சௌந்தர்ய லஹரி பாடல்கள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளன.
இறைவனையும் அம்பாளையும் தரிசித்து வெளியே
வருகையில் மண்டபத்தில் 63 நாயன் மார்கள் உள்ளார்கள். அவர்களை கண்டு வழிபட்டு நவக்கிரக
சன்னதிக்கு வந்தால் இங்குள்ள நவகிரகங்கள் அனைத்தும் சூரியனை பார்த்த முகமாக
இருக்கின்றன. இங்கு நவகிரகங்களை வழிபட்டால் எல்லாவிதமான நவகிரக தோஷங்களும் விலகும்
என்கின்றனர்.
உச்சிப்பிள்ளையாரை வழிபட செல்லும் வழியில்
முதலில் காண்பது பல்லவர் கால குடைவரை கோயில். சிவபெருமானுக்காக பல்லவன்
மகேந்திரவர்மனால் ‘லலிதாங்குர பல்லவேஸ்வர கிருஹம்’ என்ற இந்த கோயில்
அமைக்கப்பட்டது. இங்கு மேற்குச்சுவரில்
கங்கையை தன் சடையில் தாங்கிய கோலத்தில் சிவபெருமானின் கங்காதர வடிவினை காணலாம்.
இந்த அழகிய காட்சி வேறு எங்கும் காணக் கிடைக்காது. இந்த சிற்பத்துக்கு அருகில்
கல்வெட்டுக்கள் குணபதி என்ற மன்னனால் இந்த கோயில் தோற்றுவிக்கப்பட்டது பற்றியும்
காவிரி நதியின் அழகையும் வர்ணிக்கின்றன.
நதிப்பிரியனான சிவபெருமான் காவிரியின் அழகை
பார்த்து அவள் மீது காதல் கொண்டுவிடுவானோ என்று பார்வதி சிவனருகில் நீங்காமல்
அமர்ந்து கொண்டு இந்த காவிரி ஆனவள் பல்லவ மன்னனுக்குரியவள் என்று சொல்லிய வண்ணம்
இருக்கிறாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
இதைக் கடந்து சென்று படியேறிச் சென்றால் உச்சிப்பிள்ளையாரை
தரிசிக்கலாம். அரங்கத்துப் பெருமான் திருவரங்கத்தில் கோயில் கொள்ள விரும்பிய
பொழுது பிள்ளையாரே சிறுவனாக தோன்றி உதவி செய்ததாகவும் அதனால் விபிஷணன் கோபம்
கொண்டு சிறுவனை துரத்த அந்த சிறுவன் மலைமீது ஏறி உச்சிப் பிள்ளையாராக ஆனதாக கதை
ஸ்தல வரலாறு கூறப்படுகிறது. வீபிஷணன் ரங்க விமானத்தை தூக்கி வரும் காட்சியை
சித்தரிக்கும் சிற்பம் ஒன்றும் இங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காணப்படுகிறது.
உச்சிப்பிள்ளையார் கருணை வடிவாக காண்பவர்களுக்கு வரம் வழங்க அவரை தரிசித்து
முடித்து வெளிவரும் போது அங்கிருந்து
பார்க்கையில் காவிரியின் அழகும் திருவரங்க கோயிலையும் திருவானைக்கா கோயிலையு
திருச்சி நகர அழகினையும் காண முடிகிறது.
ஹே சங்கர ஸ்மஹர! பிரமாதிநாத
மன்னாத! ஸாம்ப! சசிசூட! ஹர! திரிசூலின்
சம்போ! சுகப்பிரசவகிருத்! பவ! மே தயாளேச
ஸ்ரீ மாத்ரு பூத! சிவ! பாலய மாம் நமஸ்தே!
பெண்கள் சுகப்பிரசவம் அடைய
இந்த ஸ்லோகத்தை சொல்லி தாயுமானவ சுவாமிகளை வேண்டிக் கொள்வதும். பிரசவம் சிறப்பாக
நடைபெற்றதும் வாழைத்தார் படைப்பதும் இன்றும் இந்த கோவிலில் வழக்கத்தில் உள்ளது.
சிராப்பள்ளி மேவிய சிவனே
போற்றி என்று மாணிக்கவாசகர் போற்றிய இத்தலத்து இறைவனுக்கு சித்திரை மாதத்தில்
தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். பங்குனியில் தெப்பத் திருவிழாவும்.
விநாயகசதுர்த்தி, ஆடிப்பூரம், நவராத்திரி விழாக்களும் சிறப்பாக நடைபெறும்.
கர்ப்பிணிகள் மட்டுமின்றி அனைவரும் சென்று
தரிசித்து வர வேண்டிய அற்புதமான ஆலயம் திருச்சிராப்பள்ளி உச்சிப் பிள்ளையார்
கோவில். நான் இரண்டு வருடங்கள் முன் சென்று வந்தேன். நீங்களும் சென்று தரிசித்து
வாருங்கள்!
(படங்கள்: இணையத்திலிருந்தும் தகவல்கள் ஆன்மீக இதழ்களில் இருந்து தொகுத்தது)
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
கல்லூரியில் படித்த காலங்களில் மலைக்கோட்டைக்கு சென்று வந்தேன், உங்களுடைய பதிவு மீண்டும் நியாபகப்படுத்தி விட்டது. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநான் திருச்சியில் படித்ததால் ஒவ்வொரு outingகும் மலைக்கோட்டை தான் சகோ! ஆஹா நானும் இதை தான் சொல்லவந்தேன் !
Deleteமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை தரிசித்திருக்கிறேன். தாயுமான சுவாமி பார்த்தேனா என்று நினைவில்லை. சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் வந்தது!
ReplyDeleteமலைக் கோட்டையின் உச்சியில் காற்று வாங்கிய படி திருச்சிராப் பள்ளி நகரையே, ஒரு பருந்தப் பார்வை பார்ப்பதில் உள்ள சுகமே தனிதான்.
ReplyDeleteபலமுறை அனுபவித்துள்ளேன் நண்பரே
நன்றி
அற்புதமான கோயிலின் சிறப்பான தகவல்கள்... நன்றி...
ReplyDeleteமற்றும் ஒரு முறை கோட்டையை சுற்றிப்பார்த்த உணர்வு! நன்றி சார்!
ReplyDeleteநானும் இரண்டு தடவை போயிருக்கிறேன். இன்று தான் மகிமைகளை விபரமாக அறிந்தேன் நன்றி வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஒரு வருடம் முன்பு சென்றது..மலைக்கோட்டை ஏறுவது எளிது எனினும் அது எதோ ஒரு பரவசத்தை கொடுக்கும்.. பகிர்தலுக்கு நன்றி..
ReplyDeleteபல முறை சென்று வந்த கோவில்....
ReplyDeleteமுன்பெல்லாம் அங்கே படம் எடுக்க அனுமதி உண்டு. இப்போது தான் விடுவதில்லை. காமிரா கட்டணம் கட்டினால் சில இடங்களில் மட்டும் படம் எடுத்துக் கொள்ளலாம்....