யார் ஜெயிப்பார்கள்? கதம்ப சோறு பகுதி 33

கதம்ப சோறு பகுதி 33

யார் ஜெயிப்பார்கள்?


தமிழகத்தில் கடந்தவாரம் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஒரு சில அசம்பாவிதங்கள் தவிர நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது. அதுவும் இல்லாமல் அதிகம் பேர் வாக்களித்தனர். இளைய தலைமுறையினர் பலர் ஆர்வமுடன் வாக்களித்துள்ளனர். மலேசியாவில் இருந்து வாக்களிக்க ஒரு நண்பர் வந்து வாக்களித்துள்ளார். வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது. ஆனாலும் சென்னையில் வழக்கம் போல வாக்குப்பதிவு சதவீதம் மிக குறைவு. அதுவும் தென் சென்னையில் மிகக் குறைவு. நிறைய படித்தவர்கள் நிறைந்த இந்த நகரத்தில் வாக்களிக்க இவர்கள் விரும்பாததன் காரணம் புரியவில்லை! ஆனால் சென்னை போன்ற நகரங்களில் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்பட்டியலில் பெயர் விடுபட்டு தவறான முகவரி அச்சிடப்பட்டு என்று பல்வேறு குழப்பங்கள் வேறு. இப்படி சில குழப்பங்கள் இருப்பினும் இத்தனை தேர்தல்களைவிட இந்த முறை தேர்தல் ஆணையம் சிறப்பாகத்தான் செயல்பட்டுள்ளது. ஆனால் ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடாவை ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை! வாக்களிப்புக்கு முந்திய நாள் இரவு ஓட்டுக்கு இருநூறு வீதம் ஆளுங்கட்சி அளித்ததாக பல்வேறு ஊர்களில், தொகுதிகளில் பேசிக்கொள்கிறார்கள். எங்கள் ஊரிலும் பட்டுவாடா நடந்தது. தாத்தா கட்சியும் பணம் கொடுத்தது. அதை நிர்வாகிகளே பிரித்துக்கொண்டுவிட்டார்கள். காங்கிரஸ் மற்றும் உதிரிக் கட்சிகள்தான் பணப்பரிவர்தனை செய்யவில்லை! அதுவும் சிவகங்கையில் ஓரளவு பணம் புரண்டதாகவே கேள்விப்பட்டேன். இதை தடுக்கமுடியவில்லை என்று தேர்தல் ஆணையரே பேட்டிக்கொடுத்ததையும் பேப்பர்களில் படித்தேன். அதுவும் இல்லாமல் இந்த முறை நோட்டா புகுத்தப்பட்டது. இளைய தலைமுறையினர் இந்த ஆப்ஷணை தேர்ந்தெடுத்து உள்ளனர். எங்கள் ஊரில் மட்டும் சுமார் 35 பேர் நோட்டா போட்டதாக என்னிடம் தெரிவித்துள்ளனர். வாக்குரிமை ரகசியம்தான்! ஆனால் என்னிடம் படித்த மாணவர்களான இவர்கள் சகஜமாக நாங்க நோட்டாவுக்கு போட்டுவிட்டோம் என்று சொன்னபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இளைய தலைமுறை விரும்பும் வேட்பாளர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். இந்த காரணங்களால் ஆளுங்கட்சியே அதாவது அதிமுகவே அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தோன்றுகிறது பார்ப்போம்.

முகுந்த் வரதராஜன்!

   காஷ்மீர் தீவிரவாதிகளுடனான மோதலில் பலியான தமிழக வீரர் முகுந்த் வரதராஜன். 31 வயது நிரம்பிய இந்த இளைஞர் திட்டமிட்டு வாழ்பவர். தந்தையை உடன் தங்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று மூன்று படுக்கையறை உள்ள வீட்டை சமீபத்தில்தான் வாங்கியுள்ளார். இளம் மனைவி, அழகான பெண் குழந்தை என்று வாழ்க்கையை துவங்க வேண்டிய காலத்தில் இப்படி அகாலமாக உயிரை விட்டுவிட்டார். நாட்டை காப்பதற்கான போராட்டத்தில் உயிரை இழப்பது சகஜம் என்றாலும் இளம் வீரரை நம்பியிருந்த குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துவிட்டது. நாட்டைக்காக்கும் வீரர்கள் தன்னலம் மறந்து பொது நலத்திற்காக நாட்டுக்காக இன்னுயிரையும் தருகின்றனர். கார்கில் போராட்டத்தின் போதும் ஏராளமான வீரர்கள் இப்படி உயிரைக்கொடுத்துதான் மண்ணை மீட்டனர். நாம் இங்கு சுகமாக இருக்க அங்கே கஷ்டப்படும் கண்ணியவான்கள்தான் ஜவான்கள். இவர்கள் ஜாதி,மதம் கடந்தவர்கள். நாட்டைநேசிப்பவர்கள். துரதிருஷ்ட வசமாக இறந்த முகுந்த் வரதராஜன் மரண அஞ்சலியில் ஜாதி துவேஷம் பாரட்டப்பட்டது வருந்தத்தக்கது. இறந்த பின் ஒருவரை ஜாதிக்காரன் தானே! என்று பேசுவது எந்தவிதத்தில் நியாயம். யாராக இருந்தாலும் உயிர் ஒன்றுதான். அந்த உயிரை நாட்டுக்கு அர்ப்பணித்தவர்களை நாம் தூக்கி வைத்து கொண்டாட வேண்டாம். குறைந்த பட்சம் கேவலப்படுத்தாமலாவது இருக்க வேண்டும். பேஸ்புக்கில் இந்த வீரருக்கான அஞ்சலி பதிவுகளில் நாகரீகமற்ற முறையில் ஜாதி துவேஷத்துடன் சில கமெண்ட்கள். பின்னர் அந்த கமெண்ட் போட்டவரை புறக்கணிப்போம் என்று பதிவுகளை காண முடிந்தது. இறந்தவர் உயர்ஜாதியாக இருந்தாலும் சரி! தாழ்ந்த ஜாதியாக இருந்தாலும் சரி அவரது உயிர் ஒன்றுதான்! அவர்கள் குடும்பத்திற்கு இழப்புதான்! நாட்டிற்கும் இழப்புதான்! இதை புரிந்து கொண்டு வீரர்களை கவுரவிக்க வேண்டும்.

அச்சச்சோ மும்பை இண்டியன்ஸ்!

   ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம் என்று செய்திகளை சென்ற ஆண்டு நடந்த சில போட்டிகளின் முடிவுகள் என்னை ஐ.பி.எல் பார்ப்பதில் இருந்து விலக்கிவைத்துள்ளன. ஆனாலும் மறுநாள் தினசரிகள் மற்றும் இணையத்தில் முடிவுகளை தெரிந்து கொள்வேன்.ஒவ்வொரு வருடமும் ஒரு அணி அதள பாதாளத்திற்கு செல்லும். முதல் வருடம் கொல்கத்தா, அப்புறம் டில்லி, பஞ்சாப், கொச்சி என்று சில அணிகள் முதலில் ஆரவாரமாக கிளம்பி புள்ளிப்பட்டியலில் கடைசிக்கு தள்ளப்படும். ஆனால் இந்த வரிசையில் சென்னை, மும்பை, பெங்களூரு அணிகள் மட்டும் செல்லாமல் குறைந்த பட்சம் அரையிறுதி வரை வந்துவிடும். இந்த வருடம் அதற்கு திருஷ்டிபட்டுவிட்டது போலும். சென்றவருடம் மும்பை இண்டியன்ஸ் அடிமேல் அடி வாங்கி விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி கண்டு கடைசி இடத்தில் இருக்கிறது. சென்னை அணியில் இருந்தபோது கலக்கிய ஹசி, போலார்டு, ராயுடு, மலிங்கா என்று நட்சத்திர வீரர்கள் இருந்தும் ஒரு ஒருங்கிணைப்பு வீரர்களிடம் இல்லை! ஏனோ தானோ என்றுதான் ஆடுகிறார்கள் போல! மேட்ச் பார்க்காததால் சரியாக அவதானிக்க முடியவில்லை! ஆனால் இவர்கள் ஆடும் விதத்தை மாற்றி இன்றைய போட்டியில் வென்று தொடர்ந்து வெற்றிப்பாதையில் சென்றால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி யோசிக்க முடியும். அதேசமயம் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் இந்த சீசனில் ஆனந்த அதிர்ச்சிகளை தந்து கொண்டிருக்கிறது. மேக்ஸ்வெல்லும் மில்லரும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக இணைந்து மற்ற அணிகளை மிரட்டிக் கொண்டிருக்கின்றனர். இதை தவிர்த்து பார்த்தால் முதல் போட்டியில் தோற்றாலும் அதன் பின் நான்கு போட்டிகளில் வென்று அசத்தி வருகிறது சென்னை. இந்த அணி இந்த முறையும் அரையிறுதி வரையாவது செல்லும் என்று தோன்றுகிறது. மும்பை அணி சிம்மன்ஸை இன்று தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இன்றாவது வெல்லுமா பார்ப்போம்!

மீண்டும் ஜுனோ!

   சுஜாதா ஆனந்த விகடனில் என் இனிய இயந்திரா எழுதிய போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சில அத்தியாயங்கள் படித்து இருக்கிறேன். என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தி எங்கேயோ இழுத்துச் செல்லும் அந்த நாவல். அதை மீண்டும் படிக்க வேண்டும் என்றொரு ஆசை. இந்த நாவலின் தொடர்ச்சியை மீண்டும் ஜுனோ என்று சில வருடங்கள் கழித்து விகடனில் எழுதினார் சுஜாதா. அதில் வரும் ஜுனோ என்ற குட்டி நாயின் சாகசங்கள் அது பேசும் டயலாக்குகள் கலக்கலாக இருக்கும். இதை அப்போதே ரசித்து படிப்பேன். துரதிருஷ்டவசமாக அப்போது இந்த புத்தகம் சேகரிக்கும் பழக்கம் அப்போது என்னிடம் இல்லை. இதனால் சேகரிக்காமல் விட்டுவிட்டேன். புத்தகச்சந்தையில் கிழக்கு பதிப்பகத்தில் சுஜாதாவின் பல நாவல்கள் இருக்க இந்த புத்தகத்தை பார்த்தேன். எடுத்து பிரித்து பார்த்தேன் விலை ரூ 175. இவ்வளவு கொடுத்து வாங்க வேண்டுமா என்று யோசனை. வைத்துவிட்டு வெளியே வந்து ஒரு ரவுண்டு மற்ற பதிப்பகங்களுக்கு சென்றேன். இறுதியில் சுஜாதா என்னை ஜெயித்துவிட புத்தகத்தை வாங்கிவந்தேன். ஒரு சுபதினத்தில் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். வைக்க மனம் வரவில்லை. சாப்பாட்டிற்கும் டிபனுக்கும் என்னை வேண்டி அழைக்கவேண்டியதாயிற்று. அவ்வளவு இண்ட்ரஸ்டிங். எப்போதோ படித்தது என்பதால் கதை மறந்து போயிருந்ததால் அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வம். ஜுனோவின் சாகஸங்கள். சுஜாதாவின் சுவையான வசனங்கள், கதாபாத்திரங்கள் மனதை கவர்கிறார்கள். மூன்று முறை உயிர் தப்பிய ஜுனோ இறுதியில் கவிதை சொல்லி இறக்கும் போது அதாவது செயலிழக்கும் போது என்னை அறியாமல் கண்களில் ஒரு நீர்த்துளி வந்தது. என்னதான் அறிவியல் வளர்ந்தாலும் மனித மூளையின் முன் அவை உன்னதமல்ல என்று சொல்லும் நாவல். எத்தனை முறை படித்தாலும் சலிக்காத ஒன்று.
மீண்டும் ஜீனோ , பக்கங்கள் 312, விலை ரூ 175, கிழக்குப்பதிப்பகம் ராயப்பேட்டை, சென்னை.

கிச்சன் கார்னர்!

வெஜிடபிள் வடை!
 என்னுடைய சகோதரியிடம் இந்த பகுதிக்கு ஒரு ரெசிபி கேட்டேன்.அவர்கள் சொன்ன சிம்பிளான ரெசிபி இது. மாலையில் காபி அல்லது டீக்கு முன் சாப்பிட வசதியாக இருக்கும்.
  தேவையான பொருட்கள்:
   கடலைபருப்பு 1 கப், கோஸ் துறுவியது 1 கப்
  கேரட் துருவியது 1 கப், பீன்ஸ் நறுக்கியது 1 கப். வரமிளகாய் 4 சோம்பு 2 டீஸ்பூன் (அரைத்தது) வெங்காயம் 1 1\2 கப் (நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது தேவையான அளவு. மிளகாய்த் தூள், உப்பு, எண்ணெய். தேவையான அளவு.
  செய்முறை: முதலில் கடலைப்பருப்பை சிறிது உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின் அதனுடன், கோஸ், கேரட், பீன்ஸ் வெங்காயம், சோம்பு, மிளகாய் சேர்த்து அரைக்கவும். மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பிசையவும். தண்ணீர் விட வேண்டாம். உருண்டைகளாக பிடித்து பின் வடைகளாக தட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும். தேங்காய் சட்னியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இன்னிக்கு ஈவ்னிங் செஞ்சு பாருங்க!

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!


அதிகமாய் காபி, டீ குடித்து வயிற்றுப்பிரச்சனை ஏற்பட்டால் கொஞ்சம் ஜீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் தெரியும்.

இட்லி மிளகாய்பொடியை மிக்ஸியில் நைஸாக திரித்து மிளகுப்பொடி போடும் குப்பியில் கொட்டி வைத்துக் கொண்டால் பொடி தோசை ஊற்றும் போது தூவ சமமாக பரவி காரம் கம்மியாக இருக்கும்.

பசும்பாலை சிறிது ஓமம் கலந்து நன்றாக கொதிக்கவிட்டு வடிகட்டி சாப்பிட சளி, வறட்டு இருமல், காணாமல் போய்விடும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி சின்ன வெங்காயம் பூண்டு மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று இன்சுலின் சுரக்கும். சர்க்கரை நோயும் காணாமல் போகும்.

வெளியூர் செல்லும் போது தோசை ஊத்தப்பம் போன்றவற்றை இலேசாக தண்ணீர் தடவி பிறகு பேக் செய்தால் வறண்டுபோகாமல் மிருதுவாக இருக்கும்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி நண்பகல் 1.30 மணிக்கு பின் போட வேண்டும். குட்டிக்குழந்தைகள் சாதரணமாக அதிக நேரம் தூங்கும். தடுப்பூசி போடப்பட்ட 24 மணி நேரத்தில் அவர்களுடைய உடல் வெப்ப நிலை இலேசாக அதிகரிக்கும். நண்பகலில் தரப்படும் தடுப்பூசிக்கு பிறகு குழந்தைகளுக்கு நல்ல தூக்கம், சிறிதளவு உஷ்ண உயர்வு தடுப்பூசியால் கிடைக்கும் முழு பலன்களையும் பெறச்செய்யும் என்று பேட்ரியாடிக்ஸ் என்னும் அமெரிக்க பத்திரிக்கை கருத்து கணிப்பு சொல்கிறது.

ஜோக்கு!

   ஒரு ரூம்ல மூணு டீச்சர் உட்கார்ந்திட்டிருக்காங்க. ஒருத்தர் தமிழ் டீச்சர். இன்னொருத்தர் இங்கிலிஷ் டீச்சர், இன்னொருத்தர் கணக்கு டீச்சர்.
  அப்ப திடீர்னு அந்த ரூம்ல திருடன் புகுந்திட்டான்.
இங்கிலீஷ் டீச்சர்,  ‘தீஃப் தீஃப்’னு கத்தினாங்க.
  தமிழ் டீச்சர் “திருடன் திருடன்”னு கத்தினாங்க!
மேத்ஸ் டீச்சர் எப்படி கத்துவாங்க?
  தெரியலையே!
 “420! 420!”னு தான் கத்துவாங்க!

(படிச்சதில் பிடிச்சது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. மீண்டும் ஜூனோ அல்ல... மீண்டும் ஜீனோ!

    எவ்வளவு விஷயங்கள் சேர்த்து எழுதி இருக்கிறீர்கள்!

    ReplyDelete

  2. வணக்கம்!

    சாதிப் பெயா்சொல்லிச் சார்ந்து பிழைப்பவரை
    மோதி மிதிப்பாய் முகத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  3. அற்புதமான மணம்மிக்க கதம்பம்
    நுகர்ந்து மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சிறப்பான கதம்ப சோறு. சுஜாதா..... என்றும் மறக்க முடியாத எழுத்தாளர்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2