சாம்பல் கயிறு! பாப்பா மலர்!

சாம்பல் கயிறு! பாப்பா மலர்!

விக்கிரமசிங்கபுரம் என்ற நாட்டை விஷ்ணுவர்மன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். மிகவும் வினோதமான இந்த மன்னன் ஆட்சியில் அனைத்தும் வினோதங்களே! இந்த மன்னர்,புதுமையாக ஒரு சட்டம் போட்டார். ‘நாட்டில் வேலை செய்ய இயலாத முதுமை அடைந்தவர்கள், கிழவர்களை வைத்துக்கொண்டு சோறு போட்டு பராமரிக்க முடியாது. இதனால் நாட்டின் பணம் வீணாகிறது. இவர்களை கொண்டுபோய் மலைப்பகுதிகளில் விட்டுவிடவேண்டும். யாருடைய வீட்டிலும் வயதானவர்கள் இருப்பது அரசுக்கு தெரியவந்தால் கடுமையான தண்டனை அளிக்கப் படும் என்ற சட்டம் தான் அது.
   மன்னரின் இந்த சட்டம் மக்களிடையே சலசலப்பை
ஏற்படுத்தினாலும் மன்னரை மிஞ்சி ஒன்றும் செய்ய முடியாது அல்லவா? அதனால் வயதானவர்களை எல்லாம் மலைக்காட்டிற்குள் சென்றுவிட்டனர் அவர்கள் பிள்ளைகள். அந்த ஊரில் மணிமாறன் என்பவன் வசித்து வந்தான். அவனுக்கு வயதான தந்தை உண்டு. மன்னர் பேச்சைக் கேட்டு தந்தையைக் காட்டில் விட அவனுக்கு மனம் ஒப்ப வில்லை.
  அப்படி செய்யாவிட்டால் அரச நிந்தனைக்கு ஆளாக நேரிடும். என்ன செய்யலாம் என்று யோசித்தான். யாரும் அறியாமல் வீட்டின் பின் பகுதியில் ஒரு சுரங்கம் அமைத்து அதில் தந்தையை மறைத்து வைத்தான். வேளாவேளைக்கு ரகசியமாக உணவளித்து காத்து வந்தான்.
  வேடிக்கை மனிதனான விஷ்ணுவர்ம மகாராஜா ஒருசமயம் மீண்டும் ஒரு வினோதமான  உத்தரவு போட்டார். குடிமகன்கள் ஒவ்வொருவரும் சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறு ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.
   இதைக்கேட்டதுமே அந்த ஊர் மக்கள் ஊரை காலி செய்து கிளம்ப ஆரம்பித்தனர். மணிமாறனும் அரசனின் உத்தரவை தன் தந்தையிடம் கூறினான். நாமும் கிளம்பி விடலாமா அப்பா? என்றும் கேட்டான்.
   மணிமாறனின் தந்தை இது ஒன்றும் செய்ய முடியாத விஷயம் அல்ல. தென்னங்கயிற்றை நன்கு முறுக்கி  சுருட்டி ஒரு தாம்பாளத்தில் வைத்து ஒரு முனையில் தீ வைத்து விடு. பின்னர் தீ அணைந்ததும் சாம்பல் கயிறு கிடைக்கும் என்றார் அவனது தந்தை.
   மணிமாறன் அவர் சொன்னது மாதிரியே செய்து அந்த தாம்பாளத்தை மன்னனிடம் கொடுத்தான். மன்னா! நீங்கள் கேட்ட சாம்பல் கயிறு! என்றான்.
   மணிமாறன் சோதனையில் வென்றுவிட்டதை அறிந்த மன்னன் அவனைப் பாராட்டினான். நாட்டில் நீ அறிவுள்ளவனாக இருக்கிறாய்! இந்தா பரிசு என்று நிறைய பொற்காசுகளை அள்ளித் தந்தான். மணிமாறன் அவற்றை பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
   நாட்கள் ஓடின. ஒரு சமயம் மன்னன் ஒரு மரக் கொம்பை கொடுத்து இதன் அடிப்பாகம் எது? தலைப்பாகம் எது என்று மணி மாறனைக் கேட்டான். ஒரு நாள் அவகாசம் கேட்டான் மணி மாறன். பின்பு அன்று இரவு தந்தையிடம் அரசன் கேட்ட கேள்வியைச் சொன்னான்.
   அந்த மரக்கொம்பை தண்ணீரில் போடு! லேசாக மூழ்கும் பகுதி அடிப்பாகம். மேலாக மிதக்கும் பகுதி தலை என்று சொல்லிக்கொடுத்தார் பெரியவர். மறுநாள் மணிமாறன் தந்தை சொன்னபடி மரத்தை நீரில் போட்டு மன்னனிடம் சரியான விடையைக் கூறினான்.
   சில மாதங்கள் கடந்தன. இப்போது மன்னன் ஒரு கடினப்போட்டியை வைத்தான். ‘அடிக்காமலேயே ஒலிக்க கூடிய மேளம் ஒன்றை செய்து வர வேண்டும்’ என்பதுதான் அது.
   அடிக்காமல் ஒலிக்க கூடிய மேளமா? இது என்ன புதுசாக இருக்கிறது! நம் மன்னருக்கு பைத்தியம் தான் பிடித்து இருக்கிறது என்று பலர் பேசிக் கொண்டார்கள். மணிமாறன் தன் தந்தையிடம் அரசன் சொன்ன மேளத்தை பற்றி சொன்னான்.

  “மகனே! தேவையான தோல்களை தயார் செய்து கொள்! பின்னர் மலைப்பகுதிக்குச் சென்று தேனிக்கூடு ஒன்றை தேனிக்களோடு பெயர்த்து வந்து அதனை மேளத்தின் உள்ளே வைத்து மேளத்தை கட்டிவிடு. பின்னர் நடப்பதைப் பார்!” என்றார்.
   தந்தை சொன்ன விதமே மேளம் தயார் செய்து அதை அரசரிடம் கொடுத்தான் மணிமாறன். அரசன் மேளத்தை வாங்கிய சமயம் மேளத்தின் உள்ளே இருந்த தேனிக்கள் பறக்க முயற்சி செய்து பக்க வாட்டில் மோத மேளம் ஒலிக்க ஆரம்பித்தது. ஆம் யாரும் அடிக்காமலேயே மேளம் ஒலித்தது.
   அரசன் மணிமாறனை மெச்சினான். மணிமாறா! உன் அறிவு வியக்க வைக்கிறது! இதற்கான விடையை எப்படி கண்டுபிடித்தாய்? என்று கேட்டான்.
   அரசே! இதற்கான விடை மட்டுமல்ல! இதற்கு முன்பு நீங்கள் சொன்ன இரண்டு புதிர்களுக்கும் விடை நான் கண்டுபிடிக்க வில்லை! என் தந்தைதான் கண்டுபிடித்தார். இந்த அளவிற்கு அறிவு முதிர்ச்சி எனக்கு கிடையாது. வயதானவர்கள் பெரியவர்கள் அனுபவ சாலிகள், அனுபவம் அவர்களுக்கு நிறைய அறிவைக் கொடுக்கிறது. உங்கள் உத்தரவை மீறி என் தந்தையை என்னுடனேயே மறைவாக வைத்துள்ளேன். அவர் கண்டுபிடித்ததுதான் இந்த விடை! என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறினான் மணிமாறன்.
     மணிமாறா! என் கண்ணைத் திறந்தாய்! பெரியவர்களை வேண்டாதவர்கள் என்று காட்டுக்கு விரட்டியது தவறு என்று உணர்கின்றேன். உன் பெற்றோர் மட்டுமல்ல அனைவரது பெற்றோர்களையும் நாட்டுக்கு அழைத்து வர சொல்லி விடுகிறேன். இனி வயதானவர்களும் நம் நாட்டில் பிள்ளைகளோடு வாழட்டும். அவர்களின் அனுபவ அறிவு நாட்டுக்கு உதவட்டும் என்று சொன்னான் மன்னன்.
    மன்னனின் மனதை மாற்றிய தந்தையின் அறிவை எண்ணி பெருமிதம் கொண்டான் மணிமாறன்.

(செவிவழிக்கதையை தழுவி எழுதியது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!  

Comments

  1. முதியோர்களை போற்ற வேண்டும் என்று அறிவுறுத்தும் கதை. பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்க நல்ல கதை..

    ReplyDelete
  3. சிறப்பான அறிவுரை சொல்லும் கதை.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2