உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 53

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 53

வணக்கம் வாசகர்களே! சென்ற வாரம் அன்மொழித்தொகை குறித்து படித்தோம். இது கொஞ்சம் இலக்கணத்தின் உள்ளே சென்று படிப்பதாக பலருக்கு தோன்றியிருக்கிறது. பலருக்கு கொஞ்சம் கடினமாகக் கூட இருந்திருக்கிறது என்று அறிகிறேன். இதை வாசித்தவர்களும் குறைவே! நாம் வரிசையாக இந்த இலக்கணங்களை கற்காமல் அவ்வப்போது ஒன்று என்று முன்னுக்கு பின்னாக கற்று வருவதும் புரியாமல் போக வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது. இதுவரை 52 பகுதிகள் வந்து பல இலக்கணங்கள் அறிந்து வருகிறோம். இவற்றை வரிசைப்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது. இனி வரிசையாக தொடர்ச்சியாக சில இலக்கணங்களை சொல்லலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதற்கு முன் நாம் பார்த்த தொகைகள் உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை இவற்றை தவிர்த்து வினைத்தொகை, பண்புத்தொகை, வேற்றுமைத்தொகை முதலியனவும் உள்ளன. அவற்றை இன்று பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பு சென்ற வாரம் கற்றதை நினைவு கூற இங்கு செல்லவும். அன்மொழித்தொகை

தொகை என்றால் என்ன?
    சொற்கள் தனித்து நின்றும் மற்ற சொற்களோடு சேர்ந்து நின்றும் பொருள் தரும்.புலவர்கள் இரண்டு சொற்களை இணைத்து சொற்றொடர் அமைக்கும் போது பொருள் தருவதற்காக அவற்றின் இடையே சில சொற்களை சேர்ப்பர். சில சமயம் சேர்க்காமலும் விடுவர். இச்சொற்களை சேர்க்காவிடினும் இச்சொற்களை இருப்பதாக கருதி பொருள் கூறுவர். இவ்வாறு  சொற்கள் சேர்க்கப்படாது மறைந்து நின்று பொருள்  கொடுப்பது தொகை எனப்படும். இந்த தொகையினை கொண்ட தொடருக்கு தொகை நிலைத்தொடர் என்று பெயர்.
பெயர்ச்சொல்லோடும் வினைச்சொல்லோடும் ஏதாவது உருபு மறைந்து இரண்டு சொற்கள் முதல் பலசொற்கள் தொடர்ந்து அமைந்து ஒரு சொல்போல நடப்பவை தொகைநிலைத் தொடர்கள் எனப்படும்.

பெயர்ச்சொல்லோடு பெயர் சொல் சேர்ந்து தொகை நிலைத்தொடர் அமையும்.

பெயர்சொல்லோடு வினைச்சொல் சேர்ந்து தொகை நிலைத்தொடர் அமையும்.

வினைச்சொல்லும் வினைச்சொல்லும் சேர்ந்து தொகைநிலைத்தொடர் அமையாது.

இவ்வாறு தொகைநிலைத்தொடர்கள் ஆறு வகைப்படும்.

அவை 1. வேற்றுமைத்தொகை 2.வினைத்தொகை 3.பண்புத்தொகை 4.உவமைத்தொகை 5. உம்மைத் தொகை 6. அன்மொழித்தொகை.

இதில் இறுதி மூன்றினை சென்றவாரங்களில் படித்தோம். முதல் மூன்று தொகைகளை இப்போது படிப்போம்.

வேற்றுமைத்தொகை: இரண்டு சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபுகள் மறைந்து சொற்கள் தொடர்ந்து வந்தால் அவை வேற்றுமைத் தொகை எனப்படும். முதல் வேற்றுமை மற்றும் எட்டாம் வேற்றுமை தவிர்த்து பிற ஆறு வேற்றுமைகளிலும் இந்த வேற்றுமைத் தொகை அமையும்.

வேற்றுமை உருபுகளை தெரியுமா? ஐ, ஆல், கு, இல், அது, கண். இவையே இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையிலான வேற்றுமை உருபுகள்.

மொழி கற்றான் இந்த தொடரில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது. மொழியைக் கற்றான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

விழியழகி- விழியால் அழகி-  ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை
கல்லூரி சென்றான்  - கல்லூரிக்குச் சென்றான்  - கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு

மலையருவி – மலையில் அருவி – இல் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு.

கண்பார்வை  - கண்ணினது பார்வை – அது என்னும் ஆறாம் வேற்றுமை

பாற்சுவை- பாலின் கண் சுவை- கண் என்னும் ஏழாம் வேற்றுமைத் தொகை.

இப்படி நாம் பேசும் சொற்களில் வேற்றுமை உருபுகள் மறைந்து கிடக்கின்றன. இன்னும் சில சொற்களை எடுத்தால் வேற்றுமை உருபை சேர்த்தாலும் பொருள் வராது. இன்னும் அவ்வுறுப்போடு தொடர்புடைய சொற்களை சேர்த்தாலே பொருள் தரும். இந்த சொற்களும் உருபுகளோடு மறைந்து வரும். உருபுகளோடு வெளிப்பட்டு பொருள் தரும். இவ்வாறு சொற்களின் இடையில் உருபுகளும் அதன் பொருளை விளக்க வரும் சொல்லும் மறைந்து வரும் தொகை உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.

பொற்குடம்- பொன்னால்குடம்- ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு மறைந்து வருகிறது. ஆனால் முழுமையான பொருளைத் தரவில்லை. இதையே பொன்னால் செய்த குடம் என்னும் போது பொருள் விளங்குகிறது. இந்த செய்த என்பது உருபின் பயனை விளக்க வருகிறது. இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்று சொல்லப்படுகிறது.

கைவிரல் –கையில்விரல்- கையில் உள்ள விரல்- ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
ஓரளவேனும் புரிந்ததா? மீண்டும் படித்துப்பாருங்கள்! அடுத்த வாரம் வினைத்தொகை படிக்க தயாராக இருங்கள்.

இனிக்கும் இலக்கியம்.

நற்றிணை

மருதத்தினை

பரத்தையரிடம் இருந்து பிரிந்து வந்த தலைவனிடம் தலைவி கூறுவதாக பரணர் பாடிய செய்யுள்.

கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முனைஇ,
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர!
வெய்யை போல முயங்குதி: முனை எழத்
தெவ்வர் தேய்த்த செவ் வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என்
ஒலி பல் கூந்தல் நலம் பெற புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன் மன்? யான் மறந்து அமைகலனே!

விளக்கம்: வலிமையான கால்களை உடைய எருமை குட்டைகளில் மலரும் கழுநீர் மலரை மேய்ந்து பொய்கையில் உள்ள குளிர்ந்த தாமரை மலர்களை வெறுக்கும். கையில் பெரிய தடியை ஏந்தி பெரும் வீரரைப்போல நடந்து சென்று பக்கத்தில் குன்றுபோல் சேர்ந்து கிடக்கும் வெள்ளையான மணலில் படுத்து உறங்கும் வீரனே!

   நீ இப்போது என் மீது மிகுந்த காதல் உள்ளவன் போல நெருங்குகிறாய்!. ஆனால், போர் எழுந்தால் பகைவர்களை தொலைப்பவனும் சிவந்த வேற்ப்படைகளை உடையவனுமான வயவன் என்பவனுக்கு உரிமையானது நீர்வளம் மிக்க இருப்பையூர். அவ்வூரைப் போலவே என்னுடைய தழைத்த பல்கூந்தல் அழகு பெற சூட்டிய அரும்புகள் மலர்ந்த பூச்சரத்தை வாடும்படி செய்த பகைவன் நீ. நான் உன்னுடைய செய்கையை மறந்து விடவில்லை. ஆகவே நீ என்னை நெருங்காதே என்கிறாள் தலைவி.

உள்ளுறை உவமம். எருமை தாமரையை வெறுத்து கழுநீரை மேய்ந்து மணற்குன்றில் சென்று தூங்கும் என்று சொன்னது தலைவன் தலைவியை விரும்பாது பரத்தையின் இன்பத்தை நாடி சென்று அங்கு படுத்து உறங்குகிறான் என்பதை குறிப்பதாகும்.
சுருக்கமாக கிளி போல பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வைப்பாட்டி என்று பழமொழி சொல்வார்களே அதை சொல்லி தலைவனை விரட்டுகிறாள் தலைவி.

என்ன அழகானதொரு உள்ளுரை உவமம். சிறப்பான பாடல் அல்லவா?

இந்த கவிதைக்கான படம் நண்பர் வெங்கட நாகராஜ் கவிதை எழுதச்சொல்லி பதிவிட்டது. பொருத்தமாக இருப்பதால் எடுத்துக்கொண்டேன்! நன்றி!

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!.

மேலும் தொடர்புடைய இடுகைகள்:

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 50


உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 51

இத்தொடரின் அனைத்து பகுதிகளையும் படிக்க.

எளிய இலக்கணம் இனிய இலக்கியம்

Comments

 1. http://blogintamil.blogspot.fr/2014/04/blog-post_3587.html

  ReplyDelete
 2. அருமையான விளக்கம் கொடுத்து இருக்கின்றீர்கள்§

  ReplyDelete
 3. சுவையான இலக்கிய விளக்கம்... நன்றி... எடுத்துக் கொண்ட படமும் அருமை... பாராட்டுக்கள்...

  ReplyDelete
 4. இதையெல்லாம் நான் படித்திருக்கிறேனா என்று தெரியவில்லை. உங்களால் கொஞ்சம் கொஞ்சம் இலக்கணம் கற்றுக் கொண்டு வருகிறேன். நன்றி.

  ReplyDelete
 5. #கிளி போல பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வைப்பாட்டி #
  சொல்ல வந்த கருத்து உள்ளங்கை நெல்லிக்கனி போன்று புரிந்தது !

  ReplyDelete
 6. அருமையான இனிமையான விளக்கம் நண்பரே
  நன்றி

  ReplyDelete
 7. மிகவும் தெளிவான விளக்கம். இலக்கணத்தில் மறைந்தும் மறையாத பல செய்திகள் உள்ளன என்று தெரிகிறது. நனிநன்றி.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!