பொய்மை!

பொய்மை!


தொழிலதிபர் மாணிக்க வேல் என்றால் அந்த ஊரில் அறியாதவர்கள் யாரும் கிடையாது. ஒரு காலத்தில் சிறிய கூலித்தொழிலாளியாக இருந்து படிப்படியாக முன்னேறி இன்று ஒரு சிறு தொழிலதிபராக உருவெடுத்து வந்துள்ளார். வளர்ந்தவுடன் பழசை மறந்து விடும் இன்றைய உலகில் இன்னும் பழைய நண்பர்கள், ஊர், என்று எதையும் மறக்காது இருப்பவர்.  எவர் வந்து எந்த உதவி கேட்டாலும் தன்னால் இயலுமாயின் தயங்காது செய்து கொடுப்பவர். கல்லூரிகளை நடத்தி காசு பார்த்துக்கொண்டு கல்வித்தந்தை என்று பட்டம் போட்டுக்கொள்பவர் மத்தியில் தன்னுடைய சொந்த ஊரில் இலவசமாக பள்ளிக்கூடம் நடத்துபவர். இப்படி இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
  அந்த தொழிலதிபர் மாணிக்க வேலின் இல்லத்தில் தான் நான் அமர்ந்து இருந்தேன். என் கையில் சற்று முன் தொழிலதிபரின் மனைவி தந்துவிட்டு போன குளிர்பானம் இருந்தது. எதிரே மாணிக்க வேல் அமர்ந்திருந்தார்.  “கூச்சப்படாம சாப்பிடுங்க! இது நம்ம வீடு மாதிரி” என்றார்.
   நான் ஒரு சமூக சேவகன். ஒரு பள்ளிக்கூடத்தில் வாத்தியார் பணி செய்து ஓய்வு அடைந்தபின் சமூக பணிகளில் அக்கறை செலுத்தி என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். இன்னும் சொல்லப்போனால் இந்த மாணிக்க வேலும் நானும் ஆரம்பப் பள்ளியில் ஒன்றாய் படித்தவர்கள். அவர் ஆரம்பப்பள்ளியோடு நின்றுவிட நான் மேலும் படித்து ஆசிரியர் ஆகி இன்று ஓய்வு பெற்றுவிட்டேன். ஆனால் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய மாணிக்க வேல் கூலிவேலைக்கு போய் பின் படிப்படியாக உயர்ந்து இன்று ஒரு தொழிலதிபர் ஆகிவிட்டார்.
   என்னை அவருக்கு நினைவிருக்குமோ என்னமோ என்றுதான் எண்ணியபடி இந்த வீட்டிற்கு வந்தேன். கேட்டில் காவலாளியிடம் முதலாளியுடைய ஊர்க்காரன் வந்திருக்கிறேன் பேரு எத்திராஜுன்னு சொல்லு என்று சொல்லி அனுப்பினேன். சற்று நிமிடத்தில் அவரே வந்து வாங்க! வாங்க! நீங்க டீச்சரா இருக்கீங்க இல்லே! என்று வரவேற்றார்.
     பழைய கதைகள் பேசிய பின் என்ன விசயம் சொல்லுங்க! என்றார்.
   என்னிடம் படித்த பையன் ஒருவனின் மேல்படிப்புக்கு தேவையான பண உதவியை கேட்டேன்.
  பையன் ப்ளஸ் டூ வில ஆயிரம் மார்க் எடுத்திருக்கான். மெடிக்கல் படிக்கணும்னு ஆசைப்படறான். ஏழ்மையான பையன்.இதுவரைக்கும் என்னால முடிந்த உதவியை செய்து கொடுத்திட்டு இருக்கேன். ஏதேச்சையா உங்க ஞாபகம் வந்துது! நீங்களும் நிறைய உதவிகள் செய்யறதா கேள்விப்பட்டேன்! இந்த உதவியை நீங்க செஞ்சா ஒரு ஏழைப் பையனுக்கு கல்விக்கண் திறந்ததா இருக்கும் என்றேன்.
   ஒன்றுமே யோசிக்கவில்லை!  “என்ன வருஷத்துக்கு ஒரு லட்சம் ஆகுமா? செஞ்சிட்டா போச்சு! படிச்சு முடிக்கிறவரைக்கும் அவனோட செலவு என்னோடது! ஆனா பதிலுக்கு அவன் ஒரு உதவி பண்ணனும்.”
   “இப்ப படிக்கிறவங்க எல்லோரும் வெளிநாடு வெளிநாடுன்னு நம்ம நாட்டை மறந்துடறாங்க! நம்ம நாட்டு காசுல நம்ம நாட்டில படிச்சு நம்ம மக்களுக்கு இல்லே அந்த படிப்பு பயன்படனும். நானே ஒரு ஹாஸ்பிடல் கட்டலான்னு இருக்கேன். அதுலேயே அந்த பையனுக்கு வேலை போட்டு கொடுத்திடறேன். இங்கேயே இந்த மக்களுக்கு அவன் படிப்பு பயன்படனும். இதை கேட்டு சொல்லுங்க! இதை உதவியாத்தான் கேக்கறேன்! கட்டாயப்படுத்தலை! கண்டிப்பா அவன் மேல் படிப்புக்கு உதவி செய்யறேன்” என்றார்.
    ‘ரொம்ப நன்றிங்க ஐயா! உங்க கோரிக்கை நியாயமானதுதான்! இந்த பையன் அதை கட்டாயம் நிறைவேத்துவான்னு நம்பறேன்! அப்ப நான் வரட்டுங்களா?”
  அப்போது காவலாளி உள்ளே வந்து வணக்கம் தெரிவித்து விட்டு ஐயா! உங்களை பார்க்க உங்க பழைய நண்பர் வேதாசலம் வந்திருக்காரு! என்றார்.
  நான் இருக்கேன்னு சொல்லிட்டியா?
     “இல்லீங்க ஐயா! நீங்க ஏற்கனவே சொல்லி வச்சிருக்கிறதாலே வாசல்லேயே நிக்க வச்சிட்டேன்! நீங்க உள்ளே இல்லைன்னு சொல்லிட்டேன்! அவர் நம்பலை! சத்தம் போட்டுக்கிட்டிருக்கார்”
  “ நல்ல வேளை செஞ்சே! அப்படியே சத்தம் போட்டுட்டு போகட்டும்! நான் இல்லேன்னு போய் சொல்லிடு!”
    “அம்மாவையாவது பாக்கணும்னு சொல்றாருங்க!”
“யாரும் இல்லைன்னு சொல்லி அனுப்பிடு!”

நான் வித்தியாசமாக அவரை பார்த்தேன். “ என்ன ஐயா! வீட்ல இருந்திட்டே இல்லைன்னு சொல்றான்னு பாக்கறீங்களா?” என்றார்.
 ஆம் என்பது போல தலையசைத்தேன்.
   “என்ன பண்றது ஐயா! இவன் வேதாசலம் என் கூட ஒண்ணா கூலி வேலை செஞ்சவன். அப்பவே என் கிட்ட கடன் வாங்குவான்! நான் பலமுறை கண்டிப்பேன். காதிலேயே வாங்க மாட்டான். நிறைய கடனாளி ஆகி தற்கொலைக்கே கூட முயற்சி செஞ்சான். எப்படியோ பிழைச்சு எழுந்தான். அந்த சமயத்துல நான் உதவி பண்ணி பழைய கடனை எல்லாம் அடைச்சேன். அவன் பிழைக்க ஒரு வழி பண்ணி ஒரு கடை வச்சிக் கொடுத்தேன்.”
     அவர் தொடர்ந்தார்.  “பாவி! அப்பவும் அவன் திருந்தலை! வியாபாரத்தை ஒழுங்கா பார்க்காம அதையும் தொலைச்சுட்டு வந்து நின்னான். சரி! போகட்டும்னு இந்த முறை திரும்பவும் உதவி பண்ணி ஒரு வேலையிலே சேர்த்துவிட்டேன். அங்கேயும் நிலைகலை! எனக்கே அலுப்பா போயிருச்சு!”
   போன தடவை இங்க அவன் வந்தபோது, என்னடா இப்படி எல்லாத்தையும் வீணடிச்சுட்டு பொருப்பில்லாம இருக்கியேன்னு கேட்டா சிரிக்கிறான். மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்!னு தத்துவம் பேசறான். திருந்தறமாதிரி தெரியலை. ஒருத்தன் தடுமாறி கீழே விழுந்தான்னா தூக்கி நிறுத்தி உதவி செய்யலாம்.ஆனா வேணுமின்னே குடிச்சிட்டு விழறவனை தூக்கி நிறுத்தினா என்ன பிரயோசனம்? அப்படியும் ரெண்டுமுறை உதவி செஞ்சேன். அவன் பயன் படுத்திக்கலை! யாராவது உதவறாங்கன்னு அவன் இப்படி பொறுப்பில்லாம இருக்கான். உதவி கிடைக்கலைன்னு தெரிஞ்சுதுன்னா அப்புறம் தானா முயற்சி பண்றானான்னு பார்ப்போம். அப்ப அவனுக்கே தெரியாம உதவி பண்ணலாம்!”
   இப்ப அவனுக்கு என் மேல கோபம் வரத்தான் செய்யும். ஆனா அந்த கோபமே அவனை மாத்திறதுக்கு ஒரு தூண்டு கோலா மாறும்னு நினைக்கிறேன்! மாறினா சந்தோஷம்! நான் செய்யறது சரிதானே! என்றார்.
      “சரிதான் சார்! ஆனா  அவர் திருந்தனுமே! உங்களை மாதிரி இன்னொருத்தர் கிடைச்சா அவர் முதுகிலே சவாரி செய்யாம இருக்கணுமே!”
   “இவனை பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சி யாரும் சேர்க்கறது இல்லே! நான் மட்டும்தான் ஏதோ உதவிகிட்டு இருந்தேன் அதனால யாருகிட்டேயும் போக முடியாது.”
    “ஆனா தற்கொலைக்கு முயற்சி செஞ்சாருன்னு சொல்றீங்களே! திரும்பவும் அதுமாதிரி செஞ்சிட்டாருன்னா!”
   “அப்ப யாருமே இல்லைன்னு அந்த முடிவு எடுத்தான். இப்ப பொண்டாட்டி பிள்ளைங்க இருக்குது இல்லே அவங்க பார்த்துப்பாங்க! மறைமுகமா அவங்க கிட்டே சொல்லி வச்சிருக்கேன்!”
     “ஒரு நல்ல காரியத்துக்கு பொய் சொல்லலாம்னு வள்ளுவரே சொல்லியிருக்கார். இவன் திருந்தனும்னா இப்ப நான் இல்லேன்னு பொய் சொல்றதை தவிர வேற வழி இல்லை!”
    “கரெக்ட் சார்! உங்க பொய்மையில் ஒரு வாய்மை இருக்கு! உங்க நண்பர் திருந்த வாய்ப்பும் இருக்கு” என்றேன்.
 அவர் முகத்தில் மகிழ்ச்சி குடிகொண்டது.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. நண்பர் திருந்தினால் சரி...

  ReplyDelete
 2. திருந்துவாரா!?

  ReplyDelete
 3. அருமையான கதைநண்பரே
  சில நேரங்களில் இது போன்ற அதிர்ச்சி வைத்தியம்தான் பலனளிக்கும்

  ReplyDelete
 4. இந்த நல்ல குணம்தான் அவரை உச்சிக்கு கொண்டு போயிருக்கு !

  ReplyDelete
 5. தூங்குபவனை எழுப்பலாம் தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்ப முடியுமா என்ன. எல்லாம் கடவுளுக்கு தான் வெளிச்சம். நன்றி ! வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
 6. திருந்தினால் சரிதான்...

  நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தளிர் சுரேஷ்.

  ReplyDelete
 7. கதை முழுவதும் ஆங்காங்கே பல கருத்துக்கள்... அருமை...

  ReplyDelete
 8. கதை அருமை. திருந்தினால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. இங்கேயும் மனிதர்கள்....!

  ReplyDelete
 10. ஒரு சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள் பிறவிக்குணத்தை மாற்றிக்கொள்ள அவர்களாகவே முனைந்தால் தான் உண்டு...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2