பணியார மழை! பாப்பா மலர்!

பணியார மழை!  பாப்பா மலர்!


 ஒரு ஊர்ல அஞ்சு அண்ணன் தம்பிங்க இருந்தாங்க. அவங்க அஞ்சு பேர்ல கடைசியா பிறந்த பையன் அப்பாவியான மனுசன். அஞ்சு பேருக்கும் கல்யாணம் முடிச்சப்பறம் குடும்ப சொத்தை பாகம் பிரிச்சிக்கிட்டாங்க.
  அப்போ மத்த நாலு அண்ணன்களும் இந்த கடைசித் தம்பியை  ஏமாத்த முடிவு பண்ணிட்டாங்க. சொத்து எதையும் இவனுக்கு கொடுக்காம ஒரு கிழட்டு எருமை மாட்டை மட்டும் கொடுத்து அவனையும் அவன் மனைவியையும் வீட்டை விட்டு விரட்டிட்டாங்க. அவனோட மனைவியாலேயும் எதுவும் எதிர்த்து பேச முடியலை. இதெல்லாம் நாங்க சொந்தமா சம்பாரிச்சது உன் புருஷனுக்குத்தான் ஒண்ணும் தெரியாதே!  ஏதோ பாவம் பார்த்து இந்த எருமை மாட்டை தர்றோம் பார்த்து பிழைச்சிக்குங்கன்னு சொல்லிட்டாங்க. இதுக்கு மேல எதிர்த்து பேசினா வீணா பிரச்சனைதானேன்னு  அந்தம்மாவும் அந்த அப்பாவியும் தனியா ஒரு குடிசை போட்டு தங்கிக்கிட்டாங்க.
    ஒரு நாள் ரொம்பவும் பணமுடையா ஆகிப்போச்சு. அப்பாவியோட மனைவி வீட்டுக்காரர் கிட்டே சொன்னாங்க இந்த கிழட்டு எருமையை எதுக்கு இன்னும் வெச்சிக்கிட்டு யாருகிட்டயாவது வித்துட்டு பணத்தோட வாங்க!ன்னு.
   அப்பாவி புருசனும் அந்த எருமையை ஓட்டிக்கிட்டு ஊர் ஊராப் போனாரு. யாருமே கிழட்டு மாடா இருக்குதுன்னு வாங்கலை! அடிமாட்டுக்கு விக்க இந்த அப்பாவிக்கு மனசு வரலை! அப்பாவிங்கிறதாலே இவரு உண்மையையும் சொல்லிடுவாரு. அய்யா! இது கிழட்டு மாடு! பாலெல்லாம் கொடுக்காது கன்னும் போடாது!ன்னு இப்படி சொன்னா எவன் அந்த கிழட்டு மாட்டை வாங்குவான். யாரும் வாங்கலை!
   இப்படியே ஊர் ஊரா அலைஞ்ச அந்த அப்பாவி ஒரு மத்தியான நேரத்துல ஓரு கருவேல மரத்து அடியிலே மாட்டை கட்டிவிட்டு களைச்சு போய் உக்காந்தாரு. அந்த மரத்து பொந்துல ஒரு ஓணான் படுத்துக்கிட்டு இவரை பார்த்து தலையை ஆட்டிக்கிட்டே இருந்துச்சு. இந்தாளு இன்னும் மாடு விக்கலையேங்கிற யோசனையிலே இருந்தாரா இந்த ஓணான் தலையை ஆட்டறதை பார்த்ததும் அது மாட்ட விலைக்கு கேக்குதுன்னு முடிவு பண்ணிக்கிட்டாரு.
   “ ஆமாமா! விலைக்கு கொடுக்கிற மாடுதான்! உனக்கு ஓணுமா?”ன்னு கேட்டாரு.

  ஓணான் எப்பவும் போல தலையை ஆட்டிச்சு. உடனெ இவரு விலை பேச ஆரம்பிச்சிட்டாரு. அவரோட மனைவி விலை எப்படி பேசனும்னு சொல்லிக் கொடுத்து அனுப்பிச்சிருந்தாங்க. அவங்க சொன்ன மாதிரியே இவரு மாட்டோட விலை நூறு ரூபாய்!னு சொன்னாரு.
  ஓணான் தலையை ஆட்டாம இருந்துச்சு. சரி விலை அதிகம்னு தலையை ஆட்டலை போலன்னு பத்து ரூபாய் கொறச்சு சொன்னாரு. அப்பவும் ஓணான் தலையை ஆட்டலை. இன்னுமா கொறைச்சு கேக்கறன்னு திரும்பவும் பத்து ரூபா கொறச்சாரு.
 அப்பவும் ஓணான் தலை அசைக்கவே இல்லை. ஒரு வழியா இவரு ஐம்பது ரூபான்னு சொல்லவும் அந்த நேரம் பார்த்து ஓணான் தலை அசைக்கவும் சரியா இருந்துச்சு.
  அட இதை முதல்லேயே கேட்டு இருக்கலாம்ல! சரி ஐம்பதுக்கு கொடுத்திடறேன்! இந்த மாட்டை இங்கேயே விட்டுடறேன் ஐம்பதுரூபா கொடுன்னு கேட்டாரு. ஓணான் தலையை அசைச்சது.
  ஓ! நாளைக்கு வந்து வாங்கிக்க சொல்றியா சரி! என்று சொல்லிவிட்டு மாட்டை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பி விட்டார் அந்த அப்பாவி. மறுநாள் காசு வாங்க அந்த மரத்து கிட்ட போயி பார்த்த  மாட்டை காணோம். ஓணான் மட்டும் தலையை ஆட்டிக்கிட்டு படுத்துகிடந்துச்சு.
  “என்னோட பணத்தை கொடுன்னு இவரு கேட்க ஓணான் தலையை ஆட்டுச்சு. என்ன தலையை ஆட்டறே! என்னோட பணத்தை கொடுன்னு திரும்பவும் அப்பாவி கேட்டாரு! ஓணான் அசையாமல் இருக்கவே அப்பாவிக்கு கோவம் வந்துருச்சு.
“மரியாதையா பணத்தை கொடு! இல்லேன்னா என்னோட மாட்டைத் திருப்பிக்கொடு!”ன்னு சத்தம் போட்டு கையை ஓங்கினாரு.
     ஓணான் பயந்து போய் மரத்து உச்சிக்கு ஏறிப்போச்சு. இவரும் விடாம துரத்திக்கிட்டு மரத்துல ஏறினாரு. ஓணான் கிளைக்கு கிளை தாவ இவருக்கு கோவம் அதிகமாயிருச்சு. மரத்தை பிடிச்சு உசுக்கினாரு. ஓணான் பொத்துன்னு கீழே விழுந்து ஒரு வெடிப்புல போய் புகுந்துகிச்சு. இவரு விடறதாவே இல்லை. என்கிட்டேயே ஏமாத்தறே! அப்படின்னு சொல்லிக்கிட்டு ஒரு காஞ்சிப்போன குச்சியை எடுத்து அந்த வெடிப்பை நோண்டி ஓணானை பிடிக்க முயற்சி பண்ணாரு. ஓணான் இவரு தோண்ட தோண்ட உள்ளே போய் புகுந்துச்சு! ஆனாலும் இவரு விடாம தோண்ட ஒரு குடம் ஒண்ணு தென்பட்டுச்சு. அத எடுத்து அதன் மூடியை திறந்து பார்த்தாரு அப்பாவி. உள்ளே நிறைய தங்க காசுகள் இருந்துச்சு.
   அட ஓணானே! இதை கொடுக்கத்தான் இம்புட்டு ஆட்டம் காட்டினியா? அப்படின்னு சொல்லிட்டு அந்த குடத்தை எடுத்துட்டுப் போய் தன் மனைவிகிட்ட கொடுத்தாரு.
  அவங்க மனைவிக்கு ஒரே ஆச்சர்யம்! “ ஏதுங்க இவ்வளவு பணம்?” எப்படி கிடைச்சதுன்னு கேட்டாங்க! இந்த அப்பாவி ஓணானுக்கு மாடு வித்த கதையை சொல்லி முடிச்சாரு.
  அந்தம்மாவுக்கு சிரிப்பா வந்துச்சு! இருந்தாலும் அந்த அம்மா புத்திசாலியாச்சே! இது புதையல்! எதேச்சையா இவருக்கு கிடைச்சிருக்கு! இது வெளியே தெரிஞ்சா அரசாங்கத்துக்கு தெரிஞ்சி பொருளும் போயிடும் தண்டணையும் கிடைக்கும். கடவுளா பார்த்து கொடுத்த இந்த காசை காப்பாத்திக்கணுமே என்ன செய்யலாம்னு யோசிச்சாங்க!.

    அன்னிக்கு ராத்திரி புருசன் தூங்கினப்புறம் நிறைய பணியாரம் சுட்டு முடிச்சாங்க. புருசன் வாசத்திண்ணையிலே தூங்கிட்டு இருந்தாரு. இவங்க மறைஞ்சி நின்னுக்கிட்டு தன்னோட புருசன் மேல பணியாரங்களை அள்ளி அள்ளி வீசீனாங்க!
    அந்த ஆளு திடுக்குன்னு முழிச்சிக்கிட்டான். இது என்னடா மேல வந்து விழுதுன்னு பார்த்தா பணியாரம்! ஆச்சர்யம் தாங்கலை அவனுக்கு. தன்னை சுத்திக்கிடந்த பணியாரங்களை பொறுக்கி எடுத்துக்கிட்டு மனைவியையும் கூப்பிட்டு இதோ பாரு பணியார மழை பேஞ்சிருக்கு இந்தா நீயும் சாப்பிடுன்னு ஒண்ணை எடுத்து கொடுத்தாரு.
 அவங்க மனைவியும் ஆமாங்க! பணியார மழை! பணியார மழை பொழிஞ்சிருக்கு!ன்னு சொல்லி பணியாரங்களை பொறுக்கி எடுத்து கூடையிலே போட்டுக்கிட்டாங்க. அன்னிக்கு ராத்திரி முழுக்க பணியார மழையை பத்தி புருஷன் பேச இவங்க நமட்டு சிரிப்பு சிரிச்சிக்கிட்டாங்க.
   பொழுது விடிஞ்சது! இந்த அப்பாவி கிட்ட அவங்க அண்ணன் காரனுங்க எங்கடா உன் மாடுன்னு கேக்க இவரு ஓணானுக்கு மாடு வித்த கதையை சொல்லி பொற்காசு கிடைச்சதை சொன்னாரு.
  அவனுங்களுக்கு பொறுக்கலை! நம்மளவிட தம்பி பணக்காரன் ஆயிருவான் போல இருக்கேன்னு ராஜா கிட்ட போய் சொல்லிட்டாங்க!
   ராஜாவும் இவங்களை விசாரணைக்கு கூப்பிட்டு அனுப்பினாரு. இந்தம்மா பொற்காசுகளை எல்லாம் பத்திரமா ஒரு இடத்திலே பதுக்கி வைச்சிட்டாங்க! அப்புறம் அரண்மனைக்கு கணவரை கூட்டிக்கிட்டு போனாங்க.
  விசாரணை துவங்கிச்சு. பொற்காசுகளை பத்தி ராஜா கேள்வி கேட்க அந்த அப்பாவியோட மனைவி தைரியமா பதில் சொன்னாங்க. “மகாராஜா! நாங்க ஏழை! எங்களுக்கு ஏதுங்க பொற்காசு! இவரு ஒரு அப்பாவிங்க! இவங்க அண்ணன் மாருங்க ஏமாத்தி விரட்டி அடிச்சதும் இல்லாம இப்ப அபாண்டமா இப்படி பழி சுமத்தறாங்க! அவரு பேசுறது எல்லாம் வேடிக்கையா பைத்தியக்காரத்தனமா இருக்கும்! இருக்கிற ஒரு கிழமாட்டை வித்து வரச்சொன்னா அதை தொலைச்சுட்டு இப்படி சொல்லிக்கிட்டு திரியறாரு! நீங்களே கேளுங்கன்னு” சொன்னாங்க.
  ராஜா கேட்டாரு!  ‘ஏம்பா! உனக்கு பொற்காசுங்க எப்படி கிடைச்சுது!”
  அப்பாவி சொன்னான்.  “ஓணாணுக்கு என்னோட மாட்டை வித்தேனுங்க! அதுதான் விலையா கொடுத்துதுங்க”
   ராஜாவுக்கு குழப்பம் ஆகிருச்சு! ”ஓணானாவது பொற்காசு கொடுத்து மாடு வாங்குவதாவது! என்ன இது வேடிக்கையா இருக்கே!”
    “ஆமாங்க! ஓணான் தான் கொடுத்தது!
என்னைக்கு கொடுத்தது!”
  அன்னிக்கு ராத்திரி ஊரெல்லாம் பணியார மழை பேய்ஞ்சுதுங்களே! அன்னிக்குதாங்க!
   “என்னது பணியார மழையா!”
 “ஆமாங்க! பணியார மழை பேஞ்சுதுங்க! நானும் என் பொஞ்சாதியும் கூட பொறுக்கி சாப்பிட்டோமுங்க!”
 இதைக்கேட்ட மாத்திரத்தில் அரசவையே சிரித்தது. இவன் ஒரு அப்பாவி மட்டுமல்ல முட்டாளும் கூட. என்று ராஜா முடிவு கட்டினார்.
   விசாரணையை தள்ளுபடி செய்து இவர்களை அனுப்பி விட்டார்.

அந்த அம்மா தன்னோட புத்தி சாதுர்யத்தால புருஷனை காப்பாத்துனது மட்டுமில்லாம நீண்ட காலம் சந்தோஷமா வாழ்ந்தாங்க.

(செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. அப்பாவிக் கணவனானாலும்,
  மனைவி புத்திசாலிதான்
  அருமையான கதை நண்பரே
  நன்றி

  ReplyDelete
 2. ஏற்கனவே தெரிந்த கதைதான் என்றாலும் பலகாலம் கழித்து மீண்டும் இன்று படிக்கும் பொழுது சுகமாகத் தான் இருக்கிறது.
  பகிர்விற்கு நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 3. அருமையான கதை.
  நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 4. நல்ல கதை தான் இப்போ தான் அறிகிறேன்.நன்றி வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
 5. பெரியவர்களுக்கே சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
 6. நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 7. சுவாரஸ்யம்தான்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!