கழுதையான மாமியார்! பாப்பா மலர்!

கழுதையான மாமியார்! பாப்பா மலர்!


நல்லாத்தூர் என்ற கிராமத்தில் வடிவேலன் என்பவன் வசித்துவந்தான். வயதான தாயாரும் மனைவியும் உடன் வசித்து வந்தனர். வடிவேலனின் மனைவிக்கு மாமியாரைக் கண்டாலே ஆகாது. சதா கரித்துக் கொட்டுவாள். வடிவேலன் ஒரு வாயில்லா பூச்சி. மனைவியை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டான்.
   ஒரு நாள் வடிவேலனிடம் அவன் மனைவி, "இந்த கிழத்துக்கு வடித்துக் கொட்ட என்னால் ஆகாது. பேசாமல் கொண்டுபோய் நம்ம ஊரை அடுத்திருக்கும் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடுங்கள்!"என்றாள்.
   வடிவேலன் முதல் முறையாக வாய் திறந்து, "பாவம்! அவர்கள் என்ன செய்தார்கள்? கண் வேறு தெரியாது! நீ போட்டதை சாப்பிட்டுவிட்டு ஒரு மூலையில் விழுந்துகிடக்கிறார்கள்! அவரைப் போய் காட்டில் விடச் சொல்கிறாயே?"என்று கேட்டான்.
  அவனது மனைவியோ மிகவும் மூர்க்கமாக, "நான் சொல்வதை கேட்பதாக இருந்தால் இந்த வீட்டில் இருப்பேன்! இல்லையென்றால் என் அம்மா வீட்டிற்கு போய்விடுவேன்! நீங்களும் உங்கள் அம்மாவும் எப்படியோ இங்கே இருந்து கொள்ளுங்கள்" என்றாள்.
   இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த கண் தெரியாத தாய், வடிவேலனை கூப்பிட்டு, "வேலா! என் காலம் முடிந்துவிட்டது! நீங்கள் வாழ வேண்டியவர்கள்! என்னால் நீங்கள் பிரிய வேண்டாம்! என்னை கொண்டுபோய் காட்டில் விட்டுவிடு!"என்று கண்ணீருடன் கூறினாள்.
   வேறு வழியின்றி வடிவேலன், தாயைக் கூட்டிக்கொண்டு காட்டிற்கு சென்றான். காட்டினுள் வெகு தூரம் சென்ற பின் ஓர் பாழடைந்த மாளிகை ஒன்று தென்பட்டது. அங்கே தன் தாயை உட்கார வைத்துவிட்டு உண்பதற்கு கொஞ்சம் உணவுகளை கொடுத்துவிட்டு, "அம்மா! என்னை மன்னித்துவிடு! என் மனைவியை அடக்க வழியில்லாமல் உன்னை இங்கே கொண்டுவிட்டேனே!"என்று அழுதான்.
    அவன் தாய் அவனை தேற்றி, "மகனே! அழாதே! அவரவர் விதியை யாரால் மாற்றமுடியும்? நான் இங்கேயே மடிய வேண்டும் என்று விதி இருந்தால் அதன்படி நடக்கட்டும்! நீ போய்வா!" என்று வழி அனுப்பினாள்.
   பின்னர் கண் தெரியாத அந்த அம்மாள் அங்கிருந்த ஒரு தூணின் மறைவில் ஒடுங்கிப் படுத்துக் கொண்டார். நேரம் கடந்தது. நள்ளிரவு நேரத்தில் அந்த மண்டபத்தில் வசிக்கும் இரண்டு பூதங்கள் அங்கே வந்தன. அவை இரண்டும் அந்த மண்டபத்தின் படியில் அமர்ந்து கொண்டன.
   "எனக்கு ஒரு ரகசியம் தெரியும்!" என்றது முதல் பூதம்!
"என்ன என்ன சொல்லு?"என்றது இரண்டாவது பூதம்.
   "இந்த மண்டபத்தின் முன்னே இருக்கிற செடியில் இருக்கிற இலைகளை பறித்து கசக்கி கண்ணில் விட்டால் கண்பார்வை கிடைக்கும். அரியவகை மூலிகை இது!"என்றது முதல் பூதம்.
   "அப்படியா! இது யார்க்கும் தெரியாது போயிற்று! இல்லாவிட்டால் இந்த ஊர் ராஜகுமாரியின் பார்வைக்கோளாறை சரி பண்ணி நல்ல சன்மானம் வாங்கி கொண்டிருப்பார்களே!" என்றது இரண்டாவது பூதம்.
   ”ஆமாம் ஆமாம் அந்த ராஜகுமாரி வாழ்க்கை முழுக்க பார்வையில்லாமல்தான் இருக்க போகிறாள்!” என்று சிரித்தது முதல் பூதம்
  ”சரி சரி! பேசியது போதும்” என்று சொல்லிவிட்டு இரண்டு பூதங்களும் கிளம்பி விட்டன.
   பொழுதுவிடிந்ததும் அந்த அம்மாள் மெல்ல தட்டுத் தடுமாறி வெளியே வந்தாள். அங்கே தடவி தடவி எதிரே இருந்த செடியை கண்டுபிடித்து அதன் இலைகளை பறித்து கசக்கி கண்ணில் விட்டுக் கொண்டாள். சற்று நேரத்தில் அவள் கண்களில் ஒளி பிறந்தது. நல்ல பார்வை கிடைத்தது. அருகே இருந்த செடியில் இருந்து கொஞ்சம் இலைகளை பறித்துக் கொண்டாள். அந்த ஊரின் அரண்மனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
    “மன்னா! ராஜகுமாரியின் கண்களை நான் குணப்படுத்துகிறேன்! பார்வை கிடைக்கச் செய்கிறேன்!”சொல்லும் மூதாட்டியை வியப்பாக பார்த்தான் மன்னன்.
   “பெரிய பெரிய வைத்தியர்கள் எல்லாம் பார்த்துவிட்டார்கள்! நீ என்ன செய்ய போகிறாய்?”
    “ஏதோ எனக்கு தெரிந்த வைத்தியம் செய்கிறேன் மன்னா! நான் வைத்திருக்கும் மூலிகை அபூர்வமானது! கண்டிப்பாக பார்வை கிடைக்கும்.”
    “சரி! முயன்று பாருங்கள்!”

  கிழவி அந்தப் புரம் சென்றாள். ராஜகுமாரியின் கண்களில் பச்சிலையை கசக்கி சாறு பிழிந்தாள். சற்று நேரத்தில் கண் திறந்த ராஜ குமாரி!  “அப்பா! என்னால் பார்க்க முடிகிறது!”என்று தந்தையைக் கட்டிக் கொண்டாள்.
   “பெரிய பெரிய வைத்தியர்கள் குணப்படுத்த முடியாததை நீங்கள் குணப்படுத்தி விட்டீர்கள்! நீங்கள் யார்?”
    “வயதான அனாதை! பிள்ளையும் மருமகளும் கைவிட்ட ஏழை நான்.”
    “பரிதாபம்! சரி நீங்கள் தங்க ஒரு வீடு ஒதுக்கி தருகிறேன்! உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கச் செய்கிறேன்.” என்ற மன்னன். அந்த அம்மாவிற்கு ஒரு வீட்டை ஒதுக்கி தந்து சகல வசதிகளையும் செய்து கொடுத்தான்.
  அவர் அந்த வீட்டில் தங்கிக் கொண்டு தன்னிடம் இருந்த மூலிகை மூலம் கண்பார்வை இழந்தோரை குணப்படுத்தி வந்தாள்.
    இந்த செய்தி வடிவேலன் மனைவிக்கு எட்டியது. அவளுக்கு பொறாமை தீ புகைந்தது. நாம் துரத்திவிட்ட கிழவி வசதியாக வாழ்வதா? என்று புகைந்தாள்.
   கணவனை அழைத்து, போய் அம்மாவை அழைத்துவாருங்கள்! இனி நம்முடனே இருக்கட்டும்! அப்படி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள் என்றால் காட்டில் என்ன நடந்தது என்றாவது தெரிந்து வாருங்கள்! என்று சொல்லி அனுப்பினாள்.
   வடிவேலனும் தாயின் வீட்டிற்கு வந்து,  “அம்மா! என் மனைவி திருந்தி விட்டாள் தங்களை அழைத்துவரும்படி கூறினாள்” என்றான். மருமகளின் குணம் அறிந்த அந்த அம்மாள் ”வடிவேலா! இனி நான் அங்கு வருவதற்கு இல்லை! வேறு ஏதாவது இருந்தால் பேசு!” என்றார்.
    “சரி அம்மா! உங்களுக்கு எப்படி திடீரென கண் வைத்தியம் செய்யும் திறமை வந்தது?”
   ”அது ரகசியம்!”
 “என்னிடம் கூடவா சொல்ல மாட்டீர்கள்?”
  “ உன்னிடம் சொன்னால் உலகத்துக்கே சொன்ன மாதிரி ஆகிவிடுமே?”
   ”நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்! சொல்லும்மா!”
   “நீதான் காரணம்! நீ என்னை அந்த மண்டபத்தில் விட்டுவிட்டு வந்தாயா?” அப்புறம்…. நடந்ததை சொல்லி முடித்தார் அவர்.
   வடிவேலன் விடைபெற்று மனைவியிடம் வந்து அம்மா சொன்னதை அப்படியே சொல்லி முடிக்க,  “அப்படியா சங்கதி! பூதங்கள் தான் இந்த ரகசியத்தை சொல்லுச்சா!”
    “இதோ பாருங்கள்! உங்கள் அம்மா வைத்தியம் செய்வது போல எங்கள் அம்மாவும் வைத்தியம் செய்ய வேண்டும்! அரசரிடம் பரிசு வாங்க வேண்டும். இப்போதே என் அம்மாவை அந்த மண்டபத்தில் கொண்டு போய் விடுங்கள்! விடிகாலையில் மீண்டும் அழைத்து வாருங்கள்” என்றாள்.
   வடிவேலனும் தன் மாமியாரை அழைத்து சென்று அந்த மண்டபத்தில் விட்டான். வழக்கம் போல அன்றும் அந்த இரண்டு பூதங்கள் நள்ளிரவில் வந்தன.
    “நண்பா! நம் ரகசியத்தை யாரோ அறிந்து கொண்டார்கள். அந்த ராஜ குமாரிக்கு பார்வை திரும்பி விட்டது! அது மட்டுமில்லாமல் நிறைய பேருக்கு பார்வை வரவழைத்து விட்டார்கள்.”
   “ஆம் நண்பா! அன்றே எனக்கு சந்தேகம்! இங்கே மனித வாடை வீசுவது போல் ஓர் நினைவு!”
  ”நினைவு இல்லை நண்பா! மனித வாடைதான் வீசுகிறது! அதோ பார் யாரோ மண்டபத்தில் படுத்திருப்பது போல தெரியவில்லை!”
    “ஆம்! யாரங்கே!” பூதம் குரல் கொடுக்க
மாமியார் எழுந்தார்! ”பூதங்களே வந்து விட்டீர்களா? சொல்லுங்கள்! ரகசியத்தை சொல்லுங்கள்!”
  பூதங்கள் சிரித்தன!

  “நீதானா! எங்கள் ரகசியங்களை தேடி வந்தது! உனக்கு ரகசியம் வேண்டுமா?”என்றன.
    “ஆம்! ஆம்! சொல்லுங்கள்!”
 “விடிந்தால் கழுதையாக போ! இதுதான் ரகசியம்! எங்கள் ரகசியத்தையா திருடுகிறாய்? உனக்கு இதுதான் சரியான தண்டனை!”என்று சாபம் கொடுத்த பூதங்கள் பறந்து சென்றன.
  விடியற்காலையில் வந்த வடிவேலன் மாமியாரை கூட்டிக் கொண்டு நடந்தான். பொழுது பொல பொலவென விடிய விடிய மாமியார் கொஞ்சம் கொஞ்சமாக கழுதையாக மாறலானாள்.
   வீடு வந்து சேர்ந்தான்.
 “என்னங்க! எங்க அம்மாவை கூட்டி வரச் சொன்னா கழுதையை கூட்டி வந்திருக்கீங்களே?”
   ”ம்.. இதுதான் உங்க அம்மா!”
   “என்னங்க சொல்றீங்க?”
   “வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!” என்றான் வடிவேலன்.
  “ஐயோ! அம்மா!”என்று தலையில் அடித்துக் கொண்டு அழலானாள் அவன் மனைவி.

நீதி: கெடுவான் கேடு நினைப்பான்.

 (செவி வழிக் கதையை தழுவி எழுதியது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. கெடுவான் கேடு நினைப்பான்
  அருமையான நீதிக் கதை நண்பரே நன்றி

  ReplyDelete
 2. #“வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”#
  இப்படித்தான் இந்த பழமொழி வந்ததா ?அறிய கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி !

  ReplyDelete
 3. மிக நல்ல நீதிக்கதை.எனது இரண்டாம் வகுப்பில் இதை கேட்டு இருக்கிறேன்......இன்னும் பல செவிவழி கதைகள் பதிவிடுங்கள்.

  ReplyDelete
 4. சூப்பர் ஆஅ இருக்கு அண்ணா பாப்ஸ் கதைகள் ...ஊரிலிருது குட்டிஸ் சும்மர் லீவ் க்கு வரும் ...அதுகளுக்கு மெய்க்க இந்த மாறி கதை தேவைப்படும் ...நன்றிங்க தளிர் அண்ணா

  ReplyDelete
 5. கொஞ்சம் கொஞ்சம் தெரியும்னாலும் இன்றே முழுக்கதையும் அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. அருமையான ஒரு நீதிக்கதை. பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 7. இதுதான் "வர வர மாமியார் கழுதைபோலானாள்" பழமொழியின் கதையா? நன்றி!. (நான் கேள்விப்பட்டிருந்த கதை இது போல சுவாரஸ்யமாய் இல்லை) -

  ReplyDelete
 8. கெடுவான் கேடு நினைப்பான்....

  நல்ல கருத்து சொல்லும் கதை. பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?