உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 51

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 51


வணக்கம் அன்பர்களே! உங்களின் பேராதரவினால் 51 வது பகுதியில் அடியெடுத்து வைத்துள்ளது நம் தொடர். சென்ற வாரம் சகோதரி கிரேஸ் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப இந்த தொடரின் அனைத்து பகுதிகளும் ஒரே குறிச்சொல்லில்(லேபிளில்) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எளிய இலக்கணம் இனிய இலக்கியம் என்பது அந்தக் குறிச்சொல். தேவைப்படுபவர்கள் இந்த குறிச்சொல்லினை சொடுக்கி அனைத்து பகுதிகளையும் படிக்கலாம். எளிய இலக்கணம்! இனிய இலக்கணம்

  இந்த வாரம் நாம் பார்க்க போவது உவமைத்தொகையும் உம்மைத் தொகையும்.  
அதற்குமுன் சென்ற வாரம் படித்ததை நினைவு கூற இங்கு: ஒன்றொழிப் பொதுச்சொல்

  உவமைத்தொகை பற்றி நாம் ஏற்கனவே படித்து இருக்கிறோம். இருந்தாலும் மீண்டும் ஒரு முறை நினைவு கூர்வோம். ஒரு பொருளை சிறப்பித்து கூறப்பயன்படுவது உவமைத்தொகை எனப்படும். ஒருவனை வீரன் என்பதாலோ மாவீரன் என்பதாலோ கிடைக்காத பெருமை மாவீரன் அசோகனைப் போன்றவீரன் என்னும்போது பெருமிதம் உருவாகிறது அல்லவா? இவ்வாறு ஒரு பொருளை அதனோடு ஒத்த ஒரு பொருளோடு சேர்த்து சிறப்பித்துக் கூறுவது உவமைத்தொகை ஆகும்.
  பழம் சுவையாக இருக்கும் இனிப்பாக இருக்கும் அதனை இனிப்பான பழம் என்று சொல்லாமல் தேனை ஒத்த இனிப்புடையது என்று சொல்ல தீங்கனி என்று சொல்வோம்.
 அழகிய விழிகள் என்பதை மானைப்போன்ற விழிகள் என்று சொல்ல கயல்விழி என்று சொல்வோம்.
இவையே உவமைத் தொகை என்று சொல்லப்படுகிறது.

மேலும் சில உதாரணங்கள்: கார்குழல், பிறைநெற்றி, கயற்கண், முத்துப்பல், சிங்கநடை, துடியிடை, மலரடி

இந்த சொற்களில் போல,போன்ற என்ற உவம உருபுகள் மறைந்து நிற்கும்.
இந்த உவமைத் தொகையில் முதலில் நிற்கும் சொல் உவமானம் என்றும் பின் நிற்கும் சொல் உவமேயம் என்றும் வழங்கப்படும்.

உதாரணமாக கயற்கண் என்ற தொடரை எடுத்துக் கொண்டால் முதலில் நிற்கும் கயல்- உவமானம், பின் நிற்கும் கண் உவமேயம், கயல் போன்ற கண் என்பது பொருளாகும். இதில் போன்ற என்பது உவம உருபு.

உவமைத்தொகையை போன்று இன்னொன்று உண்டு. அது உம்மைத் தொகை எனப்படும்.

ஒரு சொற்றொடரில் சொற்களை இணைத்து பொருளைக் கொடுப்பது “ உம்” என்ற உறுப்பாகும். இந்த “உம்” என்ற உறுப்பு வெளிப்படையாக தோன்றாது மறைந்து வரும் தொடருக்கு உம்மைத் தொகை என்று பெயர்.

உம்மைத் தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல், என்னும் நான்கு அளவுப்பெயர்களை தொடர்ந்து வரும்.


எடுத்துக் காட்டு:

 1. அக்கா- தங்கை  = அக்காவும் தங்கையும் ஆகிய இருவர் –எண்ணல் உம்மை தொகை
 2. ஒன்றரைபடி – ஒன்றும் அரையும் ( எடுத்தல் உம்மை தொகை)
 3. இரண்டரை ஆழாக்கு  = இரண்டும் அரையும்( முகத்தல் உம்மைத் தொகை)
 4.  மூன்றரை கெஜம்  =  மூன்றும் அரையும்( நீட்டல் உம்மைத் தொகை)

இவ்வாறு உம் மறைந்து வருவது உம்மைத் தொகை .இது மட்டும் இன்றி அன்மொழித் தொகை என்ற ஒன்றும் உண்டு. அதை பிறகு பார்ப்போம்.

இலக்கியசுவை!

சென்றவாரம் போல் இந்த வாரமும் ஒரு குறுந்தொகைப்பாடல்.

இன்று மட்டுமல்ல அன்றும் கணவனை எவ்வளவு தவறு செய்தாலும் மன்னித்தனர் பெண்கள். இந்த பாடல் பரத்தையருடன் கூடி வந்த தலைவனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெண்ணின் மனசாட்சியை கூறுகிறது.


ஔவையாரின் இந்த பாடலைப் பாருங்கள்!

  அரில் பவர் பிரம்பின் வரிப் புற விளை கனி
  குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
  தன் துறை ஊரன் பெண்டினை ஆயின்,
  பல ஆகுக, நின் நெஞ்சில் படரே
  ஓவாது ஈயும் மாரி வண் கைக்
  கடும் பகட்டு யானை நெடுந் தேர் அஞ்சி
  கொன் முனை இரவு ஊர் போலச்
  சில ஆகுக நீ துஞ்சும் நாளே.

துறை: பரத்தையரிடம் செல்வதற்காக தலைவியைப் பிரிந்த தலைவன் மீண்டும் தலைவியிடம் சேர வந்தபோது தலைவி சொல்லியது.

துறை விளக்கம்: பரத்தையரிடம் சென்றுவிட்டு மீண்டும் வந்த தலைவன் தலைவியிடம் சமாதானம் வேண்டி நிற்க அவன் மேல் கோபம் உடையவளாயினும் அவள் நெஞ்சம் தலைவனிடத்து செல்வதை அறிந்த தலைவி தன் நெஞ்சிற்கு சொல்லியது.

பாடல் விளக்கம்:  நெஞ்சே! ஒன்றுடன் ஒன்று பற்றி பிணைந்து கிடக்கும் பிரம்புக் கொடிகளின் பின்னே வரிகளை உடைய விளைந்த பழங்களை ஆழமான நீரையுடைய குளத்தில் உள்ள கெண்டை மீன்கள் கவ்விப் பிடிக்கும் இடமாகிய தண்ணீர் உள்ள நீர்த் துறைகளை உடைய தலைவனுக்குரிய மனைவியாக நீ இருந்தாயானால் உன் உள்ளத்தில் துன்பம் அதிகரிக்கும்.
    காலமும், இடமும், பெறுவார் தகுதியும் நோக்கி பொழியாமல் எப்பொழுதும் கொடுக்கும் மேகம் போன்ற கைம்மாறு கருதாது வண்மையுடைய கையினையும் விரைந்த செலவை உடைய ஆண் யானைகளையும் உயர்ந்த தோள்களை உடைய அதியமான் அஞ்சியின் அச்சத்தை தரும் போர்க்களத்தில் உள்ள ‘இரவை’ என்னும் ஊரில் உள்ளார் போல நீ துயிலும் நாட்களும் சிலவே ஆகும்.

தலைவனை மன்னித்து ஏற்றுக்கொண்டால் அவனை மீண்டும் பிரியத்தான் நேரிடும். அதனால் துன்பங்களே உண்டாகும்.அதனால் நீ துயிலும் நாட்களும் சிலவே ஆகும். என்கிறாள். தலைவன் செல்வச்செழிப்பை காட்ட பிரப்பம் கொடிகள் காய்த்து பழுத்து உதிரும் கெண்டை மீன்கள் உடைய குளங்கள் உடைய ஊரன் என்றார். இவ்வாறு வசதியுள்ளவனை பரத்தையர் விரைவில் கவர்ந்து கொள்வர் என்பது உள்ளுரை உவமம்.
    தலைவன் வசதி படைத்தவன், அவனை பரத்தையர் எளிதில் கவர்ந்து கொள்வர். அவனும் பரத்தையரிடம் செல்லுபவன். அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டால் மீண்டும் துன்பம் ஏற்பட்டு அதியமான் போர்க்களத்தில் இருந்த இரவை ஊரினர் தூங்காது தவித்தது போல நீயும் தூங்காமல் தவிக்க நேரிடும் என்கிறது அவளது மனசாட்சி.

என்ன ஒரு அருமையான பாடல்!

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!

மேலும் தொடர்புடைய இடுகைகள்

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 48

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 49


உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து இத்தொடர் சிறக்க உதவுங்கள்! நன்றி!.

Comments

 1. பயனுள்ள தகவல்களைப் பகிர்வதற்கு நன்றி

  ReplyDelete
 2. ஔவையாரின் பாடல் விளக்கம் சிறப்பு...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 4. அன்பின் இனிய புத்தாண்டு
  நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 5. இனிக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா உங்களுக்கும்
  உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்
  உரித்தாகட்டும் .

  ReplyDelete
 6. தெள்ளத்தெளிவான விளக்கம், அருமை!

  ReplyDelete
 7. பயனுள்ள பதிவு. பாராட்டுகள்.

  ReplyDelete
 8. அருமையான பதிவு. ஔவையாரின் பாடல் விளக்கமும் அருமை.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!