உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 49
உங்களின் தமிழ் அறிவு எப்படி?
பகுதி 49
வணக்கம் அன்பர்களே! சென்ற
வாரம் மூவகை மொழிகள் பற்றி அறிந்துகொண்டிருப்பீர்கள். அவை மிக சுலபமான இலக்கணமாக
இருந்தது என்றும் சொல்லியிருந்தீர்கள். இன்று பார்க்க போவதும் சுலபமான ஒன்றுதான்.
அதற்குமுன் சென்ற பகுதியை நினைவு கூற இங்கு சென்று வரவும். மூவகை மொழிகள்!
இன்று நாம் பார்க்க போவது திணையும் பாலும்!
ஆஹா! இது ஏதோ உணவு சமாச்சாரம்
என்று நினைத்து விடாதீர்கள். திணை என்பது பல பொருள்களை சொல்லும் ஒரு சொல்.
திணைக்கு ஒழுக்கம், குலம், இனம், என்று பல பொருள்கள் உண்டு. உலகத்து பொருட்களை
எல்லாம் இனம் படுத்தி உயர்திணை, அஃறிணை என்று இருவகைப் படுத்தி உள்ளனர்.
உயர்திணை: பகுத்தறியும் திறன்
படைத்த இனத்தை உயர்திணை என்று சொல்லுகிறோம். எடுத்துக்காட்டாக, மனிதர், தேவர், கடவுள்,
நரகர், அசுரர் போன்றோர் உயர்திணையில் வருவர்.
அஃறிணை: பகுத்தறியும் திறன்
இல்லாத மற்ற பொருள்கள் உயிருள்ளவையாக இருந்தாலும் உயிரில்லாதவையாக இருந்தாலும் அவை
அஃறிணை என்று வழங்கப்படும்.
எடுத்துக் காட்டாக, மயில்,
எருது, மண், மரம், செடி, போன்றவை அஃறிணை பொருட்களாகும்.
இந்த இருதிணைகளில் அடங்கிய பொருட்களை
ஐந்துவகை பால்களாகப் பிரிக்கிறது இலக்கணம்.
பால் என்ற சொல்லுக்கு பகுப்பு என்று பொருள்.
இந்த பால் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து
வகைப்படும்.
ஆண்பால், பெண்பால், பலர்பால்
உயர்திணையில் மட்டும் வரும்.
ஒன்றன்பால், பலவின் பால்
அஃறிணையில் மட்டும் வரும்.
ஆண்பால்: உயர்திணையில் ஆணைக்
குறிப்பது ஆண்பால் எனப்படும்.
எ.கா} கண்ணன், ராமன், மன்னன்.
பெண்பால்: உயர்திணையில்
பெண்ணைக் குறிப்பது பெண்பாலாகும்.
எ.கா} அரசி, யமுனா, இறைவி,
காவேரி.
பலர்பால்: உயர்திணையில்
ஒன்றுக்கு மேற்பட்ட ஆடவரையோ பெண்டிரையோ அல்லது இருபாலரையுமே சேர்த்து உரைப்பது
பலர்பால் எனப்படும்.
எ.கா} ஆடவர், காளையர்-
ஆண்பால் பன்மை
பெண்டிர், தோகையர்- பெண்பால் பன்மை
மக்கள், குழுவினர் – இருவர் பன்மை.
ஒன்றன்பால்: அஃறிணையில் ஒரு
பொருளை தனியாக குறிப்பது ஒன்றன் பால் எனப்படும்.
எ.கா} புலி, மயில்,சுவடி, புல்
பலவின்பால்: அஃறிணையில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை
குறிப்பதற்கு பல பொருட்களை கூட்டமாக குறிப்பதற்கு பலவின்பால் என்று பெயர்.
எ.கா} மான்கள், நூல்கள், மாடுகள், விலங்குகள்,
மந்தை
அஃறிணையிலும் களிறு, சேவல், கடுவன், எருது போன்றவை
ஆண்பாலையும், பிடி, பேடை, மந்தி, பசு போன்றவை பெண்பாலையும் தெரிவித்த போதிலும் இவை
சிறுபான்மை என்பதால் இலக்கண முறையில் ஒன்றன்பால் என்ற பகுப்பிலேயே அடங்கி
விடுகிறது. அதே போல் தோகை விரிக்கும் மயில் ஆணாக இருந்தாலும் அவை பறவைகளில்
பெண்ணாகவே கருதப்படுகிறது. ஒன்றன்பாலிலேயே கூறப்படுகிறது.
திணையும் பாலும் நன்றாக
அருந்தினீர்களா? மீண்டும் ஒருமுறை படித்தால் நன்கு விளங்கும். இனி இலக்கிய சுவைக்கு சென்று பார்ப்போம்!
அகத்திணை பாடும் நற்றிணையில்
ஒரு செய்யுளை காண்போமா?
இதைப்பாடியவர் வெள்ளைக்குடி
நாகனார். துறை நெய்தல்.
பளிங்கு செறிந்தன்ன பல்
கதிர்இடைஇடை,
பால் முகந்தன்ன பசு வெண்
நிலவின்,
மால்பிடர் அறியா, நிறையுறு
மதியம்!
சால்பும் செம்மையும் உடையை
ஆதலின்,
நிற் கரந்து உறையும் உலகம்
இன்மையின்,
எற் கரந்து உறைவோர் உள்வழி
காட்டாய்!
நற் கவின் இழந்த என் தோள்
போல் சாஅய்,
சிறுகுபு சிறுகுபு செரிஇ,
அறி கரி பொய்த்தலின், ஆகுமோ
அதுவே?
விளக்கம்: பளிங்குகள் ஒன்று
சேர்ந்தது போன்ற நிலாக்கதிர்கள் ஒளிவீச அவற்றின் இடையே பசுவின் பாலை முகர்ந்து
வைத்தார்ப் போல பசுமையுடைய வெண்மை நிலா; மேகத்தின் பிடறியில் தோன்றி பிறர் அறியாத
கலைகள் நிறைந்த திங்களே!
நீ
அமைதியும் நேர்மையும் உடையாய். ஆதலால் உனக்கு ஒளிந்து வாழும் உலக உயிர்கள்
இல்லை. ஆனால் எனக்கு ஒளிந்து வாழும் ஒரு காதலர் உண்டு. அவர் இருக்கும் இடத்தை
எனக்கு காட்டுக. அவ்வாறு நீ காட்ட மாட்டாய்.
‘ நீ அறிந்ததை எனக்கு கூறாமல்
பொய்த்திருக்கிறாய்! நல்ல அழகை இழந்த என் தோள் போல மெலிந்து சிறிது சிறிதாக
குறைந்து செல்வாயாக! நீ தேய்ந்து செல்வதால் என் காதலரை காட்டுவது உனக்கு முடியாதே!
என்கிறாள் தலைவி.
பொருள் தேட நெடுந்தொலைவு
செல்கிறான் காதலன். அவன் இல்லாது பசலை படர்ந்து தோள் மெலிந்த தலைவி வானில் தவழும்
நிலவிடம் இவ்வாறு கூறுகின்றாள். உலகம் முழுவதும் ஒளி வீசக்கூடிய நிலவிற்கு தலைவன் எங்கிருக்கிறான் என்பது தெரியும்.
தெரிந்தும் அது தலைவனை காட்டவில்லை. சால்பும் செம்மையும் உடைய நிலா இவ்வாறு
பொய்யுரைப்பதால் அது தன்னைப் போல மெலிந்து குறைந்து தேய்ந்து போகிறது! என்று
சாபமிடுகிறாள் தலைவி.
என்ன ஒரு அழகான கற்பனை!
மீண்டும் அடுத்த பகுதியில்
சந்திப்போம்!
உங்கள் பின்னூட்டங்களை
அனுப்பி ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
மேலும் தொடர்புடைய இடுகைகள்!
இதையும் படித்து பாருங்களேன்!
நற்றிணை செய்யுள் பழைய இனிய பாடல்களையும் ஞாபகப் படுத்தியது... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்று தான் சகோதரி பகிர்ந்து கொண்டார்கள்... இதைப் பார்த்ததும் உங்கள் கருத்துரை தான் ஞாபகம் வந்தது...
ReplyDeletehttp://ponmalars.blogspot.com/2014/03/make-blogger-widgets-to-scrolling-list.html
சந்தேகம் இருந்தால் dindiguldhanabalan@yahoo.com
09944345233
நன்றி நண்பரே! நானும் சென்று பார்த்தேன்! பொறுமையாக செய்ய வேண்டும்! முயன்று பார்க்கிறேன்! தேவைப்படின் அழைக்கிறேன்! நினைவு வைத்துக்கொண்டு தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி! வீட்டில் அனைவரும் நலமா நண்பரே!
Deleteநன்றி நண்பரே
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteஒன்றன்பால்,பலவின்பால் இவையெல்லாத்தையும் பள்ளியில் படித்தபின் மீண்டும் ஒரு முறை நியாபகப்படுத்திவிட்டீர்கள். நன்றி.
ReplyDelete