மனுஷி!
மனுஷி!
சென்னைக் கிழக்குக்
கடற்கரைச்சாலையில் மிகவேகமாக வழுக்கிக்கொண்டு பயணித்தது நாங்கள் சென்ற ஊர்தி.
உள்ளே இதமாக குளீருட்டிக்கொண்டிருந்தது காற்று. அதே சமயம் பங்குனிமாத வெயிலில்
சாலையில் கானல்நீர் காட்சிகள் தென்பட்டன. இளையராசாவின் இசை காதுகளைவருட புதுச்சேரி
நோக்கி பயணித்துக்கொண்டிருந்தோம்.
நாங்கள் என்றால் நான், பாஸ்கர், சுமன்,
மற்றும் மகேஷ் ஆகிய நால்வரும்தான். இருபத்தியோராம் நூற்றாண்டின் நவநாகரீக
இளைஞர்களான எங்களுடன் இளமை ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது.
கண்களை ரேபான் குளிர்கண்ணாடி மறைத்துக்
கொண்டிருக்க வாகனத்தின் எதிரே செல்லும் இளவயது பெண்களை சைட் அடித்துகொண்டிருந்தான்
சுமன். மகேஷ் பொறுப்பாக காரை இயக்கிக் கொண்டிருந்தான்.
வார இறுதியில் இம்மாதிரி சுற்றுலா செல்வது
எங்கள் வழக்கம் ஆகிவிட்டது. ஒருவாரம் புதுச்சேரி, ஒருவாரம் ஆந்திரா அருகேயுள்ள
தடா, இன்னொருவாரம் பழவேற்காடு, அடுத்தமுறை திருப்பதி இப்படி எங்காவது சென்று
மைண்ட் ரிலாக்ஸாகி வருவதால் ஒருவாரமும் இயந்திரமாய் கழியும் பி.பி.ஒ பணியை
ஒப்பேற்ற முடிந்தது.
வேகம் பெற்ற கார் திடீரென குறைந்து “கிரிச்”
என ‘ப்ரேக்’கிட்டது. ‘என்னடா மகேஷ்?’
அங்கேபார்! என்று மகேஷ் சைகை செய்தான்.கண்ணாடிவழியே பார்த்தபோது ஒரு மூதாட்டி
மாங்காய்களை கீற்று போட்டு விற்றுக்கொண்டிருந்தாள்.
“டேய்! உனக்கு இதே வேலையாப் போச்சு! உனக்கென்ன
மசக்கையாடா மாங்கா தின்ன?” சுமன் சிடுசிடுத்தான்.
‘கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை!”
‘உனக்கு பிடிச்சா வாங்கிக்கடா மச்சான்! ஆனா
என்னை இப்படி கழுதைன்னு சொல்லாதே!’
‘அப்படிவா வழிக்கு!’
கதவை திறந்து மகேஷ் இறங்கவும் நாங்களும்
இறங்கினோம். சாலையோரத்தில் ஒரு கோணியைவிரித்து அதில் மாங்காய்களை
அடுக்கியிருந்தாள் அந்த மூதாட்டி. அப்படி ஒன்றும் வியாபாரம் இல்லை போலும்.
மத்தியான வெயில் சுட்டெரிக்க அதில் இருந்து தப்பிக்க ஒரு குடை வைத்திருந்தாள்.
“டேய்! கிழவிக்கு வியாபாரம் எதுவும் ஆகலை
போலிருக்கு? நம்ம காருல இருந்து இறங்கறதை பார்த்ததும் அதும் கண்ணுல ஒரு பல்பு
எரியுது பார்!”
பீட்ஸாவும் பர்கரும், சக்கைபோடும் இந்த
காலத்தில் இந்த மாங்காய்களை வாங்க யார் இருக்கிறார்கள்? பாவம்தான் அந்த மூதாட்டி!
“இருக்கட்டும்டா! வியாபாரம் கிடைச்சுதுன்னு ஒரு
சந்தோஷம் இருக்கத்தானே செய்யும்?’
“ ஆனா இவங்களுக்கு காருல வந்து இறங்கினா தனி
ரேட்டே வச்சிருவாங்க பார்த்து உஷாரா நடந்துக்க”
“போடா! அப்படி என்ன சொத்தையாடா எழுதி
வாங்கிடுவா அந்த கிழவி”
“மகேஷ் உனக்கு சொன்னா புரியாது! போய்
அனுபவிச்சாத்தான் தெரியும்!”
மகேஷ் அருகே வந்ததும் அந்த
பாட்டி புன்னகைத்தாள் நல்ல ஒட்டுமாங்கா தம்பி! நல்லா இனிப்பா இருக்கும்! எத்தனை
வேணும்? என்றாள்.
“ ஆளுக்கு ரெண்டு துண்டம் கட்பண்ணி மிளகாத்
தூவி கொடுபாட்டி!”
இரண்டேநிமிடத்தில் ஆளுக்கு இரண்டு
துண்டங்களை சீவி மிளகாய் போட்டு ஒருகாகித துண்டில் வைத்து நீட்டினாள் பாட்டி.
பாட்டி சொன்னது போல மாங்காய் அவ்வளவாய்
புளிக்க வில்லை! மிளகாய் உப்பு சேர்த்து நாவில் நீர் ஊற ஒரேநிமிடத்தில் தீர்ந்து
போனது.
“பாட்டி எவ்வளவு ஆச்சு?”
“நல்லா இருக்குதாப்பா? இன்னும் தலா ரெண்டு
துண்டம் தரட்டுமா?”
நான் மகேஷின் முதுகில் இடித்தேன். ‘சொன்னென்ல!
பாரு நடக்கிறதை!’
“சரி பாட்டி! எனக்கு இன்னும் ரெண்டுதுண்டு
கொடு! உங்களுக்கெல்லாம்டா?”
“நீ மட்டும் வாங்கிக்கடா! எங்களுக்கு
வேணாம்!”
“ஏந்தம்பி! உங்களுக்கு பிடிக்கலையா?”
“அதெல்லாம் இல்லை! எங்களுக்கு வேணாம்!”
மகேஷ் அந்த இரண்டு துண்டங்களையும் தின்று
முடித்துவிட்டு பர்சில் கைவிட்டான். நூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்து நீட்டினான்.
“ஏந்தம்பி இம்புட்டு காசு?”
” பின்னே எவ்வளவு பாட்டிம்மா?” நக்கலாக
கேட்டேன்.
“பத்து ரூவாத்தான் ஆச்சு தம்பி! ஒரு துண்டம்
ஒரு ரூவா தான்!”
‘என்னது!’ ஆச்சர்யத்தில் மலைத்துப்
போனேன்.
இதுவே வேறு யாராவதாக இருந்தால் காரில் வந்து
இறங்கியதற்கும் எங்கள் தோற்றத்தையும் பார்த்து நூறு ரூபாயை சுவாகா
செய்திருப்பார்கள். பத்து ரூபா ஒரு துண்டு என்று ஏமாற்றியிருப்பார்கள். இந்த கிழவி
என்னடாவென்றால் ஒரு ரூபாய்க்கு ஒரு துண்டு என்று இன்னமும் விற்றுக்
கொண்டிருக்கிறது.
பாட்டி! சரி மீதி சில்லரை கொடு! என்றேன்.
‘சில்லரை இல்லே தம்பிகளா? நீங்களே இருந்தா
கொடுங்களேன்!”
அப்படி போகிறதா? சரி நீயே வைத்துக் கொள் என்று
நம் வாயால் வரவைக்க முயல்கிறது என்று எண்ணினேன். நூறு ரூபாய் ஒன்றும் எங்களுக்கு
பெரிய விசயம் இல்லை என்றாலும் பாட்டியின் சாதுர்யம் பாரேன்! என்று எதையோ
குழப்பியது மனசு.
சரி! பாட்டி!எங்ககிட்டேயும் சில்லரை இல்லையே!
என்றேன்.
பாட்டியின் முகம் வாடிப்போனது. அப்படியா
தம்பிங்களா! என்கிட்டேயும் சில்லரை இல்லே! நீங்கதான் முத போணி! வேற யாரும்
பக்கத்துல இல்ல மாத்தி கொடுக்கலாம்னு பார்த்தா? நல்லா தேடிப்பாருங்க தம்பி!
என்றது.
உடனே மகேஷ், பரவாயில்ல பாட்டி! இந்த காசை
நீயே வச்சிக்க! என்றான்.
இல்ல தம்பிங்களா! காசை இப்படி செலவு
பண்ணாதீங்க! இந்தா பிடி! என்று திருப்பிக் கொடுத்தது பாட்டி.
“பாட்டி! அப்ப உன் காசு?”
நீங்களே சொல்லிட்டீங்க பாட்டின்னு! உங்களை என்
பேரப்புள்ளைங்களா நெனச்சிக்கிறேன்! பேரப்பசங்களுக்கு நாலுதுண்டு மாங்கா கொடுத்ததா
எடுத்துக்கிறேன்! இதனால நான் ஒண்ணும் ஏழையாயிட மாட்டேன்! பார்த்து பத்திரமா
போய்வாங்க தம்பிங்களா? என்றது பாட்டி புன்னகைத்துக் கொண்டே!
அந்த மூதாட்டியின் முகத்தில் சந்தோஷம்
இருந்ததே தவிர வியாபாரம் போய்விட்டதே! என்ற அறிகுறி துளியும் இல்லை!
இயந்திர உலகில் எல்லாவற்றையும் வியாபாரமாய்
பார்த்து பழகிவிட்ட எனக்கு அந்த மூதாட்டி “மனுஷியாக” தென்பட என் கணிப்புக்கள்
தவிடு பொடியாக கையெடுத்து வணங்கினேன்.
தன்னிச்சையாக என் பையில் இருந்து நூறு ரூபாயை
எடுத்து அந்த பாட்டியின் கையில் வைத்து பாட்டி இதை மாங்கா வாங்கினதுக்கு
கொடுக்கலை! உன் பேரனா கொடுக்கிறேன்! வாங்கிக்க! என்றபோது என் கண்ணில் சில
நீர்த்துளிகள் எட்டிப்பார்த்தன.
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
மனதார உடனே உணர்ந்தது அருமை...
ReplyDeleteWell done thalir..our mindset have been formed because of the prevailing environments...
ReplyDeleteஅருமை நண்பரே அருமை.
ReplyDeleteசிறுகதையாக இருந்தாலும், உண்மையில் இதுபோன்ற மனுஷிகளும், மனிதர்களும் ஏராளமாக் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மாங்காய் விற்ற மனுஷி !..
ReplyDeleteஇது ஒரு கதையாகவே தெரியவில்லை!..
அருமை!...
மனிதநேயம் மிக்க உள்ளத்தில் வாழும் தெய்வங்களை இந்த
ReplyDeleteஇடங்களில் தான் உணர முடிகின்றது ! அருமையான படைப்பு
வாழ்த்துக்கள் சகோதரா .
ம் ...
ReplyDeleteஅருமை... பல சமயங்களில் நாம் ஏமாற்றுவார்கள் என நினைப்பவர்கள் ஏமாற்றுவதில்லி. தெரியாமலே பல இடங்களில் ஏமாறுகிறோம்.....
ReplyDeleteநல்ல கதை. பாராட்டுகள்.
இப்படியான சில மனித உள்ளங்கள் இருப்பதால் தான் இப்போதைய மழையாவது...கதை அருமை...
ReplyDeleteமிக அருமையான கதை! இன்னும் மனித நேயம் மிக்க மக்கல் இருக்கத்தான் செய்கின்றார்கள்! அதனால்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது போலும்!
ReplyDeleteநல்ல கதை! பாராட்டுக்கள்!
(நாங்கள் இது வரை இந்தக் கதைக்கு 3,4 கமென்ட்ஸ் இட்டு அது ப்ளாகர் பிரச்சினை பண்ணியதால் வந்ததா என்று தெரியவில்லை! வந்ததில் எது உங்களுக்குப் பிடித்ததோ அதை ப்ப்ளிஷ் செய்து கொள்ளுங்கள்)
அருமையான கதை சுரேஷ். ஏழைகளிடம் தான் மனிதாபிமானம் இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள்.