உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 46

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 46


வணக்கம் அன்பர்களே! சென்ற வாரம் போலிகளைப் பார்த்தோம். மிக எளிமையான இலக்கணம் என்று அனைவரும் சொன்னீர்கள். அதை இங்கு சென்று நினைவு கூர்ந்து வருவோம். உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 45
     இந்த வாரம் நாம் பார்க்க போகும் இலக்கணம் மெய் மயக்கமாகும்.
  எதாவது இசையையோ பேச்சையோ நடனத்தையோ காட்சியையோ நாம் காணும் போது தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருப்போம். அப்போது நம் உடல் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. இதை மெய்மறந்து ரசித்தேன் மெய்மறந்து போனேன் என்று சொல்வதுண்டு அல்லவா?
  அது போலத்தான்  தமிழிலும் மெய் மயக்கத்தினை காண்போம்.  அதாவது சொல்லில் எப்படி மெய்யெழுத்துக்கள் அமையும் அல்லது தோன்றும் என்பதை பார்க்கப் போகிறோம். சொல்லின் இடையில் வரும் மெய்யெழுத்துக்களோடு எந்த மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஒரு சொல்லினை உருவாக்கும் என்பதை கீழே விரிவாக காண்போம்.
     மெய்யெழுத்துக்கள் பதினெட்டு என்பதை அறிந்திருப்பீர்கள். இந்த மெய்யெழுத்துக்கள் மொழிக்கு முதலில் வராது என்பதையும் முன்பே பார்த்தோம். மறந்திருந்தாலும் நினைவில் கொள்ளுங்கள் தமிழில் எந்த வார்த்தையும் மெய்யெழுத்தை கொண்டு தொடங்காது. சொல்லானது உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் உயிரெழுத்தில் முடியும். மெய்யெழுத்திலும் முடியும் ஆனால் மெய்யெழுத்தில் தொடங்காது. மெய்யெழுத்துக்கள் சொல்லின் இடையில் அல்லது இறுதியில் வரும் ஆனால் முதலில் வராது.
   சொல்லின் இறுதியில் கூட பதினெட்டு மெய்யெழுத்துக்களில் பதினோரு மெய்யெழுத்துக்களே வரும். பிற ஏழு எழுத்துக்கள் வராது. ஆனால் சொல்லின் இடையில் பதினெட்டு மெய்யெழுத்துக்களும் வரும். சொல்லின் இறுதியில் வல்லின மெய்கள் க்,ச்,ட்,த்,ப், ற், மற்றும் மெல்லின மெய், ங் வராது. ( திருத்தம் செய்ய உதவிய நண்பர் சொக்கனுக்கு நன்றி)
   இந்த பதினெட்டு மெய்யெழுத்துக்களும் சொல்லின் இடையில் மயங்கி வருவது இடைநிலை மெய்மயக்கம் என்று பெயர்.
மெய்மயக்கம் உடனிலை மெய்மயக்கம், வேற்றுநிலை மெய்மயக்கம் என்று இருவகைப்படும்.
   பதினெட்டு மெய்களும் சொல்லின் இடையில் மயங்கும்போது மாறிமாறி மயங்கும். சிலமெய்கள் அதே மெய்களோடு மயங்கும் சிலமெய்கள் வேறு வேறு மெய்களோடு மயங்கும். ( இங்கே மயங்கும் என்ற சொல்லுக்கு தோன்றும் என்று பொருள் கொள்க)


மெய்கள் அதே மெய்களோடு மயங்குவது உடனிலைமெய்மயக்கம் என்று வழங்கப்படுகிறது.
 மெய்கள் வேறு வேறு மெய்களோடு மயங்குவது வேற்றுநிலை மெய்மயக்கம் என்று பெயர்.

உடனிலை மெய்மயக்கம்:
    மெய்கள் அதே மெய்களோடு மயங்கும் மயக்கம் உடனிலை மெய்மயக்கம் ஆகும். அதற்குரிய மெய்கள்: க,ங,ச,ஞ,ட,ண, த,ந,ப,ம,ய,ல,வ,ள,ற,ன
இவை மொத்தம் பதினாறு.
எடுத்துக்காட்டு: பக்கம், இங்ஙனம்,தச்சன், விஞ்ஞானம்,பட்டம், கிண்ணம், மொத்தம், முந்நீர், கப்பல், கம்மல், பொய்யாமொழி, அல்லி, எவ்வகை, உள்ளம், சுற்றம், சன்னம்.

மெய்கள், வேறு மெய்களோடு மயங்கும் வேற்று நிலை மெய்மயக்கம் எனப்படுகிறது. அதற்குரிய மெய்கள் ங,ஞ,ட,ண, ம,ய,ர,ல,வ,ழ, ள, ற,ன இவை பதினான்கு.

எடுத்துக்காட்டு: பங்கம், லஞ்சம், காட்சி, விண்கலம், அந்தணர்,தம்பட்டம், பொய்ம்மணல், மோர்க்குழம்பு, வேல்கொடிது, தெவ்பெரிது, ஆழ்கிணறு, கொள்கலம், நிற்க, பொன்மலர்.

மெய்கள் பதினெட்டில் க ச த ப என்னும் நான்கு மெய்கள் தவிர மற்ற மெய்கள் வேற்று மெய்களோடு மயங்கும். இந்த நான்கு எழுத்துக்கள் மட்டும் உடனிலை மெய்மயக்கத்தில் மட்டும் வரும். தனக்கு அடுத்து அதே மெய்யிலே மட்டும் வரும்.
 உதாரணமாக நோக்கம் எச்சம், உத்தமன், ஆப்பம் போன்ற சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள்.  நோக்கம் என்பதில் க் அடுத்து க வந்துள்ளதை பாருங்கள்.
அப்படி எனில் பக்தி, சக்தி, பகவன், சபலம் போன்ற சொற்களில் வேற்று மெய்கள் வந்துள்ளதே என்கிறீர்களா? இவை தமிழ் சொற்கள் கிடையாது. வடமொழி சொற்களாம். பக்தி கிடையாது பத்தி என்பதே தமிழ் சொல் என்கிறது இலக்கணம்.

அதே போல ர, ழ ஆகிய மெய்களுக்கு அடுத்து அதே சொற்கள் வந்து சொல்லமையாது. முற்றம், சுற்றம் என்று சொற்கள் வரும். முர்ரம், குர்ரம் என்று சொற்கள் தமிழில் கிடையாது.

பள்ளம், கள்ளம் என்ற சொற்கள் உண்டும் ஆனால் பழ்ழம், கழ்ழம் போன்ற சொற்கள் கிடையாது.

மெய்கள் பதினெட்டில் க,ச,த, ப, என நான்கும் தம்முடன் தாமே மயங்கி சொற்கள் உருவாக்கும்.
ர,ழ இரண்டும் தம்முடன் பிற மெய் கலந்து சொற்களை உருவாக்கும்.
மீதமுள்ள பன்னிரண்டு மெய்களும் தம்முடன் தாமேயும் தம்முடன் பிறமெய் கலந்தும் சொற்கள் உருவாகும்.
 சொற்கள் இவ்வாறுதான் அமையும் என்று அறிந்து கொண்டால் நாம் எழுதுவதில் பிழை இருக்காது. நல்ல தமிழை எழுதலாம் அல்லவா?

இதுவும் இல்லாமல் இனநிலை வேற்றுமெய்மயக்கம் என்று ஒன்றும் இருக்கிறது. அதை பிறகு பார்ப்போம்.

இலக்கிய சுவை!


புறநானூறு:
பாடாண் துறை: பாடப்படும் ஆண் மகனது வீரம், கல்வி, கொடை சிறப்புக்களை புகழ்ந்து பாடுவது.
பாடியவர் : கழைதின் யானையார்.
துறை: பரிசில் துறை

1.ஈயென இரத்தல் இழிந்தன்று அதன் எதிர்
2.ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
3.கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன் எதிர்
4.கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.
5.தெண்ணீர் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
6.உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே
7.ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச்
8.சேறொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
9.உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்
10.புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
11.உள்ளிச் சென்றோர் பழியலர் அதனாற்
12.புலவேன் வாழியர் ஓரி விசும்பின்
13.கருவி வானம் போல
14.வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே.

விளக்கம்;
வரி 12-14 : வானத்தில் இருந்து வரைமுறை இல்லாது பொழியும்வரையில்லாது வழங்கும் வள்ளலே  வல்வில் ஓரியே நீ வாழ்க.
வரி 1: வறுமையால் இழிந்தவன் ஒருவன் எனக்கு தா என்று இரத்தல் இழிவானது.
 வரி 2.அப்படி இரந்து வருபவனிடம் இல்லை என்று சொல்லுதல் அதனைவிட இழிவானது.
வரி 3. அப்படி ஒருவன் இரக்க வரும்போதே குறிப்பறிந்து கொடுப்பது ஒருவனுக்கு உயர்வாகும்.
வரி 4. அப்படி கொடுப்பவனிடம் வாங்கமாட்டேன் என்று மறுப்பது அந்த கொடையை விட உயர்ந்தது ஆகும்.
வரி5. தெளிந்த நீர்ப்பரப்பையும் ஓங்கி ஒலிக்கும் அலைகளை உடைய கடல்நீரை
வரி6 நீர் வெட்கை தாகம் உடையோர் அருந்த மாட்டார்
வரி 7. பசுவும் மற்ற விலங்குகளும் சென்று குடிக்கும் குட்டைநீர் கலங்கி இருந்தாலும்
வரி 8 சேற்றுடன் படர்ந்து சிறியதாக இருந்தாலும்
வரி 9. அந்த நீரை அருந்துவதற்கு வழிகள் பல உண்டு. அதையே அருந்துவர்.
வரி 10. 11பெரிய வள்ளல்களை சந்திக்க சென்று பரிசில் பெற முடியாவிடில் வள்ளல்களை பழியாது, புறப்படுகையில் ஏற்பட்ட பறவை நிமித்தங்களை பழிப்பர் புலவர்கள்.

வல்வில் ஓரியை சந்தித்து பரிசில் பெற வந்த கழைதின் யானையார் வல்வில் ஓரியிடம் பரிசில் பெற இயலவில்லை. இருப்பினும் அவனை இகழாது புகழ்ந்து இவ்வாறு பாடுகிறார்.
 வறியவன் ஒருவன் இருப்பவனிடம் பொருளை வேண்டுதல் இழிந்தது. அப்படி இரப்பவனிடம் இல்லை என்று சொல்லுதல் அதைவிட இழிந்தது ஆகும். வறியவன் வரும்போதே அவன் குறிப்புணர்ந்து இல்லை எனாது கொடுப்பது உயர்ந்தது ஆகும். பெரிய பரப்பில் தெளிந்த நீரையுடையதாக இருந்தாலும் கடல் நீரை அருந்த முடியாது. சிறிய அளவில் சேற்றுடன் கலங்கி பசுவும் மற்ற விலங்குகளும் குடித்த நீரானாலும் குளத்து நீர் சுவையானது. அதை குடிப்பதற்கு பலர் முனைவர். பல வழியும் உண்டு. வல்வில் ஓரியே  வள்ளல்கள் பரிசில் தராது போனால் அவர்களை புலவர்கள் பழிக்க மாட்டார்கள். தாம் புறப்பட்ட நேரம் சரியில்லை என்று பறவை நிமித்தங்களைத்தான் பழிப்பார்கள். இல்லை எனாது வரையறை இல்லாது வழங்கும் வானம் போல வரையின்றி வழங்கும் வல்வில் ஓரியே நீ வாழ்க!  என்று வாழ்த்துகிறார் புலவர்.

நல்ல நீதிக்கருத்தோடு அற்புதமான உவமை கலந்து வல்வில் ஓரியை வாழ்த்தும் புலவரின் தமிழறிவு புல்லரிக்க வைக்கிறது அல்லவா?

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்!
 மேலும் தொடர்புடைய இடுகைகள்:


உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் செய்து தெரிவியுங்கள்! அது இந்த பகுதியை சிறப்பாக்க உதவும். நன்றி!
Comments

 1. இனிய தமிழமுதம்..
  தங்கள் பணி - மேலும் சிறப்புடன் தொடரட்டும்!..

  ReplyDelete
 2. என்னே தமிழறிவு...! வரிக்கு வரி விளக்கத்திற்கு பாராட்டுக்கள்... நன்றி...

  ReplyDelete
 3. வணக்கம். தங்களது தமிழ் பணிக்கு வாழ்த்துக்கள்
  "//சொல்லின் இறுதியில் கூட பதினெட்டு மெய்யெழுத்துக்களில் பதினோரு மெய்யெழுத்துக்களே வரும். பிற ஆறு எழுத்துக்கள் வராது.//"

  இதில் 11 + 6 = 17 தான் வருகிறது. இன்னும் ஒன்று இருக்கிறதா? அல்லது தட்டச்சுப்பிழையா?

  மேலும் வராத எழுத்துக்கள் எண்ணனென்ன என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தவறை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி சொக்கன். சொல்லின் இறுதியில் வல்லின மெய்கள் ஆறும் க்ச்ட்த்ப்ற் மெல்லின மெய் ங் கும் வராது. திருத்தம் செய்துவிடுகிறேன்! நன்றி!

   Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2