திருப்பரங்குன்றம் முருகா தீவினை அகற்றுவாய்!
திருப்பரங்குன்றம் முருகா
தீவினை அகற்றுவாய்!
அன்னை மீனாட்சி அருளாட்சி
செய்யும் மதுரை மாநகரில் இருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே சென்றால்
ஆறுமுக கடவுளின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றம் நம் கண்களுக்கு திவ்யமாக
காட்சி தரும்.
திரு+பரம்+ குன்றம்= திரு என்றால் அழகிய
மேன்மைபொருந்திய என்றும் பரம் என்றால் பரமேஸ்வரனையும் குன்றம் என்பது சிறிய
மலையையும் குறிக்கும்.
திருப்பரங்குன்றம் மேன்மை பொருந்திய
பரமேஸ்வரனின் மலை என்பது பெயர்க்காரணமாகும். அதற்கேற்ப மலையும் பார்ப்பதற்கு லிங்க
வடிவில் காட்சி தரும்.
சிவபெருமான் பார்வதி தேவீக்கு
பிரம்மோபதேசம் செய்யும் சமயம் அன்னையின் மடியில் இருந்து அதை
கேட்டுக்கொண்டிருந்தார் பாலமுருகன். ஒருவருக்கு உபதேசம் ஆவதை ஒட்டுக் கேட்பது
குற்றமாகும். முருகன் சிவனின் அம்சம்தான் என்றாலும் அவரும் தெய்வக்கடவுள்
என்றாலும் குரு உபதேசம் இன்றி மந்திரம் கற்க கூடாது. இத்தகைய குற்றம் புரிந்ததை
நீக்க பாவம் தொலைய இந்த மலைமீது அமர்ந்து தவம் புரிந்து அந்த பாவம் நீங்கப்
பெற்றார் என்பது தலவரலாறு.
இந்த தலத்தில் முருகப்பெருமான் தெய்வயானை
திருமணம் நடைபெற்றது. சங்க இலக்கியங்களில் பாடல்பெற்ற இந்த தலம் அகநானுறில்
முருகன் குன்றம் என்று வழங்கப்படுகிறது.
திருஞான சம்பந்தர், அப்பர் பெருமான் போன்றவர்கள்
வந்து வழிபட்ட தலம். திருமுருகாற்றுப்படை எழுதிய நக்கீரர் இந்த தலம் வந்து தம்
குறை நீங்கப் பெற்றார்.
முருகப் பெருமான் தன் குற்றம் நீங்க தவம் செய்த
போது சிவபெருமான் மீனாட்சி சுந்தரேஸ்வரராக காட்சி தந்து வரம் தந்தருளினார். அந்த
கோலத்தில் இங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம்
வருபவர்கள் இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை முதலில் வழிபட்டு பின்னர் முருகரை வழிபடுதல்
மரபு ஆகும்.
தென்பரங்குன்றம்: ஆரம்ப காலத்தில் இந்த
கோயிலுக்கு பின் புறம் இருந்த குடைவரைக் கோயிலே பிரசித்திபெற்றிருந்தது.
பராமரிப்பின்றி சிதைந்து போனதால் கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகரை
வடதிசைபார்த்து பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே திருப்பிய பரங்குன்றம் என்று
வழங்கப்பட்டு நாளடைவில் திருப்பரங்குன்றம் என்று மறுவியதாகவும் சொல்லப்படுகிறது.
அறுபடை வீடுகளில் இது முதல் தலமாகும். மற்ற
தலங்களில் நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான் இந்த தலத்தில்
தெய்வயானையுடன் அமர்ந்த கோலத்தில் காட்சிதருவது விசேடமாகும்.
திருப்பரங்குன்றம் முருகன் குடைவரைக் கோயில்
ஆனதால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் கிடையாது. வேலுக்கே அபிஷேகம் நடைபெறும்.
புரட்டாசி கடைசிவெள்ளியன்று இந்த வேல்
மலையிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அறுபடை
வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடைபெறும் தலம் இது ஒன்றே.
நக்கீரர் சன்னதி :சிவபக்தரான நக்கீரர், சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவம் நீங்க, திருப்பரங்குன்றத்தில் தவம் செய்தார்.
அப்போது அருகிலிருந்த குளத்தில் இலை ஒன்று பாதி மீனாகவும், மீதி பறவையாகவும் இருந்ததைக் கண்டு அதிசயித்தார். இதனால் அவரது தவம் கலைந்தது. அச்சமயத்தில் பூதம் ஒன்று சிவவழிபாட்டிலிருந்து தவறிய 999 பேரை சிறை பிடித்திருந்தது. நக்கீரரின் தவம் கலையவும் அவரையும் பிடித்து குகையில் அடைத்தது. நக்கீரர், பூதத்திடம் சிக்கியவர்களை காப்பதற்காக திருமுருகாற்றுப்படை பாடினார். அவருக்கு காட்சி தந்த முருகன் பூதத்தை சம்ஹாரம் செய்து, தனது வேலால் குகையை தகர்த்து அனைவரையும் காத்தருளினார். அப்போது நக்கீரர் முருகனிடம் தன்னை பூதம் தீண்டியதால் கங்கையில் நீராடி பாவத்தை போக்கிக்கொள்ள வேண்டும் என்றார். முருகன் வேலால் பாறையில் ஊன்றி கங்கை நதியை பொங்கச்செய்தார். நக்கீரர் அதில் நீராடி பாவம் நீங்கப்பெற்றார். வற்றாத இந்த காசி தீர்த்தம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கிறது.
மயில்களை அதற்குரிய இயல்பான நிறத்தில்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், திருப்பரங்குன்றம் கோயிலில், வெள்ளை நிற மயில்களைக் காணலாம். சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள் வெண்ணிற மயில் வடிவில் வசிப்பதாக ஐதீகம்.
திருப்பரங்குன்றம் கோயிலில் மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். அருகில் இரட்டை விநாயகர்கள் இருக்கின்றனர். பொதுவாக கோயில்களில் சுவாமியைச் சுற்றி பிரகாரங்களும், பரிவார தேவதைகளும் இருக்கும். ஆனால், திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக அருளுவதாலும், கோயில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை. மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல முடியும். பிள்ளையார்பட்டி குடவறைக்கோயில் என்றாலும், அங்குள்ள சிவன் சன்னதியை சுற்றிவரலாம்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில்
ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 7ம்
தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் போது முருகப்பெருமான் பல்வேறு வகை
வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பது வழக்கம்.
17ம் தேதி பங்குனி உத்திர
திருவிழாவும் 20 ம்தேதி தெய்வயானை திருக்கல்யாணமும் தெப்போற்சவமும் நடைபெற்றது.
இன்று திருப்பரங்குன்றம் முருகன் ரதோற்சவம் சிறப்பாக நடந்தேறியது. நாளை விழாவின்
இறுதி நாளாக தீர்த்தவாரி நடைபெறும்.
திருப்பரங்குன்றம் செல்வோம்!
தீவினைகள் அகலப்பெறுவோம்!
திருப்பரங்குன்றம் ஒரு முறை சென்று வந்துள்ளேன் நண்பரே. இன்று தங்களால் இரண்டாம் முறையாக, திருப்பரங்குன்றம் சென்று வந்த நிறைவு.
ReplyDeleteநன்றி நண்பரே
பலமுறை சென்றதுண்டு... சிறப்பான பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteசிறுவயதில் சென்றது. விவரம் தெரிந்த பின் செல்ல முடியவில்லை.
ReplyDeleteமீண்டும் செல்லத் தூண்டிய பதிவு. நன்றி.
நல்லதொரு பகிர்வு. தங்களின் இந்த பதிவை படித்தபின் ஒரு முறையாவது
ReplyDeleteதிருப்பரங்குன்றம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.
நன்றி சுரேஷ்,.