அதற்குமேல் பார்க்க முடியவில்லை! கதம்ப சோறு பகுதி 27

கதம்ப சோறு பகுதி 27

அழகிரியின் அலப்பறைகள்!

     திமுகவில் ஸ்டாலினின் திடீர் எழுச்சியால் சுத்தமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டார் அழகிரி. அவரது ஆதரவாளர்கள் ஓவ்வொருவராக ஆப்பு வைத்து கட்சியில் இருந்து நீக்கி கடைசியில் அவரையும் கழட்டிவிட்டுவிட்டார் ஸ்டாலின் சாமர்த்தியமாக. ஜனநாயக முறையில் இயங்கும் கழகம் என்று பெருமை பீத்திக்கொள்ளும் கழகத்தில் கட்சியின் தலைமையை பிடிக்க இரு பிள்ளைகளுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடந்த போரில் கட்சியை பலிகொடுத்து காத்திருக்கிறார் கலைஞர். இந்த சமயத்தில் நானும் ரவுடிதான்… என்று அழகிரி டெல்லி சென்று பிரதமரையும், பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங்கையும் சந்தித்து கையோடு சென்னை வந்து ரஜினியையும் சந்தித்து சென்றிருக்கிறார். இதன்மூலம் இன்னும் கொஞ்சம் குட்டையை குழப்பி சென்றிருக்கிறார். பிரதமரை மட்டும் சந்தித்திருந்தால் ஒருவேளை காங்கிரஸிற்கு ஆதரவாக செயல்பட போகிறார் என்று நினைக்கலாம். இவர் ராஜ்நாத்தையும் சந்தித்து ரஜினியையும் சந்தித்து பேசிவிட்டு கழகம் இப்போது கட்டுக்குள் இல்லை! கலைஞரை காப்பாற்றுவதே முதல் வேலை! என்கிறார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே முடியாமல் பதவி இழந்து இருக்கும் இவரால் கழகத்தையும் கலைஞரையும் காப்பாற்ற எப்படி முடியும்? எல்லாம் ஒரு வெளம்பரம்தான்! என்று தோன்றுகிறது.


முரண்பட்ட கூட்டணி!

    தமிழக பா.ஜ.க கூட்டணியை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது! இவர்களுக்கு எதை நம்பி ஓட்டு போட! கேப்டனுக்கும் டாக்டருக்கும் ஆவாது. இவர்கள் இருவரும் ஒரே கூட்டணி என்றால் நம்ப முடிகிறதா?கூட்டணிக்குள் வந்தும் இன்னும் குழப்பம் முடிந்தபாடில்லை! ஒருவர் மாற்றி ஒருவர் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் இறங்க முதல் முறையாக இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கிய பா.ஜ.க முழி பிதுங்கி நிற்கிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் பா.ஜ.கவின் பலம் மிகக் குறைவு. இரண்டு திராவிடக் கட்சிகளின் முதுகில் ஏறித்தான் இத்தனை காலம் சவாரி செய்துவந்தது. இப்போதும் அப்படியே செய்ய நினைத்தும் அம்மையாரின் பிரதமர் கனவு தனிக்கூட்டணி அமைக்க வைத்துள்ளது. ஒன்றுக்கொன்று முரண்பாடான இந்த கூட்டணி பேருக்குத்தான் கூட்டணி. மற்றபடி சீட்டணி யாகத்தான்  இருக்கிறது. இதில் நாங்கள்தான் அதிக இடங்களை கைப்பற்றுவோம் என்ற முழக்கம் வேறு. முடிவில் டிபாசிட்டையாவது கைப்பற்றுமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது.

யாரடி நீ மோகினி!

   தனுஷ்- நயன் –சரண்யா மோகன் நடித்த இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.  ஒரு மழை வேளையில் நயனை முதலில் தனுஷ் பார்த்து அதன் பிறகு அவர் வாழ்வில் அதிர்ஷ்டம் அவரால்தான் வந்தது என்று அவர் மேல் காதலாக நயன் அதை மறுக்க தனுஷின் தந்தையாக ரகுவரன் நயனிடம் சென்று கேட்கும் காட்சி, அதற்கு முன் இண்டர்வியுவில் தனுஷ் பாஸாகிவிட்டேன் என்று சொல்ல ஏம்மா இவன் பாஸாயிட்டானா? என்று கேட்பது, கிராமத்து வீட்டில் சரண்யா மோகனின் அலப்பறைகள் என சுவாரஸ்யமான திரைப்படம். தமிழ் சினிமாவில் அந்தக் கால நாயகிகளில் சரோஜா தேவிக்கு பிறகு தற்போது நயனுக்கு மட்டுமே கிளாமர் மற்றும் நடிப்பும் நன்றாக வருகிறது. எத்தனையோ சர்ச்சைகளில் நயன் மாட்டிக்கொண்டாலும் அவரது நடிப்பு திறமைக்கு ஒரு சல்யூட்! சென்ற ஞாயிறன்று சன் டீவியில் ஒளிபரப்பானது படம் முழு படமும் பார்க்கவில்லை! சில காட்சிகள் பார்த்தேன். அதில் ரகுவரன் தனுஷோடு சேர்ந்து தண்ணி அடித்துவிட்டு படுக்கச் செல்வார். தடுமாறுவார். தனுஷ் கைக் கொடுக்க எங்க ஊருல இப்பவும் எனக்கு பொண்ணு கொடுப்பாங்க! என்று சலம்பிவிட்டு படுக்கையில் படுப்பார். என்னை அடிச்சதும் அப்படி ரோஷம் வருது! என்னை ரொம்ப பிடிக்குமா உனக்கு? என்று தனுஷிடம் கேட்பார். ரொம்பவே டச்சிங்கான சீன் அது! வீ மிஸ் யூ ரகுவரன்!

ஸ்விட் வெந்தயக் கஞ்சி!


வெயில் இப்போதே கொளுத்த ஆரம்பித்துவிட்டது. ஃபேன் இல்லாமல் வீட்டினுள் உட்கார முடியவில்லை! இத்தனைக்கும் வீட்டு வாசலில் புன்னை மரம் படர்ந்துள்ளது. கோடைக்கு ஏற்ற ஒரு கஞ்சி இது. முகநூலில் கூட வெந்தய கஞ்சி பற்றி மதுரைத்தமிழனோ யாரோ சொல்லியிருந்தார்கள். இதோ என் பங்கிற்கு.
   தேவையான பொருள்கள்:
   வெந்தயம் 2 டேபிள் ஸ்பூன்
புழுங்கல் அரிசி 4 டேபிள் ஸ்பூன்
வெல்லம் பொடித்தது 3 டேபிள் ஸ்பூன்
மோர் 1 கப், உப்பு 1 சிட்டிகை

வெந்தயம் அரிசி இரண்டையும் ஆறுமணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் இரண்டையும் மைய அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் மிதமான தீயில் வேக விடவும். வெல்லம், மோர் உப்பு சேர்த்து பருகவும்.
   வெல்லம் இல்லாமல் உப்பு மட்டும் சேர்த்தும் பருகலாம்.
பழைய மங்கையர் மலர் ஒன்றில் படித்த கோடை டிப்ஸ் இது!

டிப்ஸ்! டிப்ஸ்!டிப்ஸ்!

   தோசைக்கு மாவு அரைக்கும் போது அதில் இரண்டு உருளைக்கிழங்குகளை தோல் நீக்கி சேர்த்தரைக்கவும். மறுநாள் தோசை வார்த்தால் பொன்னிறமாக மிருதுவாக இருக்கும்.

எலுமிச்சை சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும்.

குழந்தைகளுக்கு தங்கத்திலான தோடுகளை அணிவிக்கும்போது திருகாணியில் நகபாலிஷ் சிறிது தடவி மாட்டினால் தோடு இறுக்கமாக பிடித்துக்கொள்ளும் சீக்கிரம் கழலாது.

ஸ்கெட்ச் பேனா கறையை போக்குவதற்கு அசிடோன் (நகப்பூச்சு அழிக்கும் திரவம்) தடவினால் போதும். கறை போயே போச்!

ப்ளாஷ்பேக்!
    பசங்க இயக்குனர் பாண்டி ராஜ் தமிழ் தி இந்துவில் ஞாயிறு தோறும் ப்ளாஷ்பேக் என்று ஒரு தொடர் எழுதி வருகிறார். அவரின் சின்ன வயசு நினைவுகளை அழகாக நினைவு கூறுகிறார். போன வாரம் அவர் பேனாக்களை பற்றி எழுதியதை படித்தபோது என்னுடைய பேனா நினைவுகள் மலர ஆரம்பித்தது. விகடனில் வட்டியும் முதலும் ராஜு முருகன் படித்திருக்கிறேன். அந்த சாயல் இவரது எழுத்திலும் கொஞ்சம் இருந்தாலும் நம்மை அப்படியே நமது சின்ன வயது காலத்திற்கு அப்படியே அழைத்துச் சென்றுவிடுகிறார். ஆசை ஆசையாக சைக்கிள் வாங்கியதை ஒருவாரம் சொன்னார். அப்படியே சின்னவயசு காதலை ஒருவாரம் சொன்னார். இந்த வாரம் சின்ன வயசில் வளர்த்த நாய்க்குட்டிகளை பற்றி சொல்லியிருக்கிறார். அவர் சொல்லும்போது கதைமாந்தராக நாமும் மாறி அவருடன் பயணிக்கிறோம். அருமையான தொடர் இது. ஒரு முறை படித்துப் பாருங்கள்.

அதற்குமேல் பார்க்க முடியவில்லை!

   காலைமணி எட்டு. தெரு சுறுசுறுப்பாக இருந்தது.நான் கண்ணாடிக் கதவு வழியே கவனித்துக் கொண்டிருந்தேன். 17 வயது பையன் ஒருவன் நீல நிறப் பையை ஆட்டிக்கொண்டு போனான். சற்று நேரத்தில் ஒரு கார் ஓசைப்படாமல் வந்தது. எதிர்சாரியிலிருந்த பச்சை கம்பி போட்ட வீட்டு முன் நின்றது. முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டு, கார்க் கண்ணாடிக் கதவுகளை ஏற்றிவிட்டு, காரை ஓட்டிவந்தவர் வீட்டுக்குள் போய்விட்டார்.
    பக்கத்து மாடியிலிருந்து இதை ஒரு நெடிய ஆசாமி கவனித்துக் கொண்டிருந்தார். வீட்டுக்குள் போனவர் கால்மணிநேரமாகியும் வரவில்லை. வீட்டுக்குள்ளிருந்து வேறொருவர் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு கையில் தோல்பையுடன் வேகமாக வெளிவந்தார். வாசலிலிருந்த சைக்கிளில் ஏறி விர்ரென்று கிளம்பினார்.
   ஒரு வழுக்கைத் தலை மனிதர் அதை கவனித்தும் கவனியாதது மாதிரி வந்துகொண்டிருந்தார். 23 வயது பெண்ணொருத்தி நெற்றியில் திலகமில்லாமல் அவசரமாக தெருவில் வந்தவாறு இருந்தாள். அவள் கையில் இருந்த பைக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. பொட்டில்லாத அந்த நடுத்தர வயதுப் பெண் என்னவோ கூறிச் சென்றாள்.
   ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த வாலிபன் கம்பி போட்ட வீட்டு வாசலில் சட்டென்று நின்றான். என்னை அவன் கண்கள் சந்தித்தன. அடுத்த கணம் என்னை நோக்கிக் கத்தி ஒன்று மெதுவாக வந்தது….
   (மேற்கொண்டு தெருவை வேடிக்கை பார்க்க இயலவில்லை, சலூன் காரர் என்னைக் கூப்பிட்டுவிட்டார். கிராப் வெட்டிக்கொள்ள)

(பழைய  குமுதம் இதழில் வெளியான ஒருபக்க  கதை)

டிஸ்கி) சென்ற வாரம் ஒரே கதம்ப சோறு ஒரே தகவல் களஞ்சியமாக இருக்கிறதே கொஞ்சம் மாற்றலாமே என்று முத்துநிலவன் சொல்லியிருந்தார். மாற்றி இருக்கிறேன் பிடித்து இருக்கிறதா? இன்னும் என்னென்ன செய்யலாம்? உங்கள் கருத்துரையில் சொல்லுங்கள்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. யாரடி நீ மோகினி - ரகுவரன் அவர்களுக்கு இது தான் கடைசியாக நடித்த படம் என்று சொன்னார்கள்... ம்...

    வெந்தயக் கஞ்சி செய்முறை குறிப்பு + டிப்ஸ்களுக்கு நன்றி...

    அனைத்தும் கலந்த கதம்ப சோறு மேலும் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ரகுவரன் அவர்களை நினைவு கூர்ந்ததில் நெஞ்சம் நெகிழ்ந்தது.

    ReplyDelete
  3. கூட்டணி - சீட்டணி - :)

    ReplyDelete
  4. சரோஜா தேவிக்கு பிறகு தற்போது நயனுக்கு மட்டுமே கிளாமர் மற்றும் நடிப்பும் நன்றாக வருகிறது. //

    யப்பா...உள்குத்து கேள்விப்பட்டுருக்கேன், இதென்ன கொலைவெறி உள்குத்து !

    கதம்பம் சூப்பர்...!

    ReplyDelete
  5. சுவையான சத்தான கதம்பச் சோறு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. க்தம்பச் சோறு மிகவும் சுவையாக உள்ளது!

    சம்மர் டிப்ஸ் மிகவும் அருமை!

    அருமை!

    ReplyDelete
  7. கதம்ப சோறு அருமை..... பாராட்டுகள்.

    ReplyDelete
  8. கதம்ப சோறு அருமை. உங்களின் இந்த கதம்ப சோற்று பகுதியில் எப்பவும் எனக்கு பிடித்தது, டிப்ஸ் தான். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2