அவல் திருடன்! பாப்பா மலர்!
அவல் திருடன்! பாப்பா மலர்!
முன்னொருகாலத்தில்
வாழவந்தான்புரம் என்ற ஊரில் வயதான பெண்ணொருத்தி தனியாக வசித்துவந்தாள். அந்த
பாட்டிக்கு பல் இல்லை. அதனால் அவல்
இடித்து தண்ணீரில் ஊறவைத்து அதை சாப்பிடுவாள். இரவு முழுவதும் ஊறவைத்த அவலை பகலில் மெதுவாக அசைபோட்டு தின்பாள்.
ஒருவேளைதான் உணவு. அதுவே அவளுக்கு மிகவும் பிடித்தும் இருந்தது.
ஆனால் அதற்கும் அவளுக்கு ஒரு சோதனை வந்தது.
சமீப காலமாக அவள் ஊறவைக்கும் அவலியில்
பாதி அவலையாரோ திருடி தின்றுவிட்டார்கள்
மீதமுள்ள உணவு அவளுக்கு
போதவில்லை. அதனால் அவள் மிகவும் வருத்தம் அடைந்தாள். அந்த ஊர் தலைவரிடம் சென்று
முறையிட முடிவு செய்தாள்.
அப்படி அவள் தலைவரிடம் செல்ல முடிவு செய்து
அந்த ஊர் ஏரிக்கரை வழியாக சென்ற போது அங்கிருந்த ஒரு நண்டு என்ன பாட்டி? எங்கு
செல்கிறாய்? என்று கேட்டது.
நண்டாரே! நானோ வயதான பல்லில்லாதா பாட்டி! ஊற
வைத்த அவல்தான் என் உணவு! அதையும் ஒரு
திருடன் திருடி தின்றுவிடுகிறான்! அதை ஊர் தலைவரிடம் சொல்லத்தான் சென்று
கொண்டிருக்கிறேன் என்றாள்.
நீ திரும்ப போகும் போது என்னையும் உன்
வீட்டிற்கு கொண்டுபோகிறாயா? உன் நன்மைக்குத்தான் நான் சொல்கிறேன்! என்றது நண்டு!
சரிசரி அப்படியே செய்கிறேன்! என்றாள் பாட்டி!
அடுத்து அவள் சென்ற வழியில் ஒரு பெரிய
விளாம்பழ மரம் இருந்தது. பாட்டி பாட்டி எங்கு செல்கிறாய்? என்று கேட்டது அந்த
மரத்தில் பழுத்த ஒரு விளாம்பழம்.
என்னுடைய ஊறவைத்த அவலை யாரோ திருடித் தின்று
விடுகிறார்கள் அதை தலைவரிடம் சொல்லி நியாயம் கேட்கப் போகிறேன் என்றாள் பாட்டி!
அப்படியா! நீ திரும்பி வரும்போது என்னை உன்
வீட்டிற்கு எடுத்துச் செல்! உனக்கு உதவுவேன் என்றது விளாம்பழம். சரி அப்படியே
செய்கிறேன் என்று பாட்டி கிளம்பினாள்.
அப்படியே நடந்து சென்றபோது வழியில்
மாட்டுச்சாணம் சாலையில் கிடப்பதை பார்த்தாள். அந்த சாணம் பேசியது! பாட்டி இந்த
வெயிலில் எங்கு கிளம்பிவிட்டாய்? என்று கேட்டது.
என்னுடைய அவல் உணவை ஒரு திருடன் திருடி
தின்றுவிடுகிறான். அவனை கண்டுபிடித்து தண்டிக்குமாறு ஊர்த்தலைவரிடம் சொல்லப்
போகிறேன் என்றாள் பாட்டி!
ஓகோ! உன்னிடம் திருடுபவனை பிடிக்க வேண்டியது
அவசியம்தான்! சரிசரி திரும்பும்போது என்னையும் உன் வீட்டிற்கு கூட்டிச்செல்!
உனக்கு உதவுவேன் என்றது சாணம். அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு நடந்தாள்
பாட்டி.
அப்படி சிறிது தொலைவு நடந்தபோது வழியில் ஒரு
பேனாக்கத்தி கிடந்தது. வயதான பாட்டியே
எங்கே செல்கிறாய்? என்று கேட்டது அந்த கத்தி.
ஒவ்வொரு இரவும் எனது உணவு திருடு போகிறது.
திருடனை கண்டுபிடிக்குமாறு கூற தலைவரிடம் செல்கிறேன்! என்றாள் பாட்டி!
அப்படியா! போய்விட்டு திரும்பும்போது
என்னையும் உன் வீட்டிற்கு கூட்டிப்போ! நான் உனக்கு உதவுவேன் என்றது கத்தி. கிழவி
தலைவரின் இல்லத்திற்கு சென்று தலைவரிடம் நடந்ததை கூறினாள்.
தலைவரோ! ஊரில் நிறைய திருடு
அதிகரித்துவிட்டது. அந்த திருடனைபிடிக்கவே முடியவில்லை! அவல் திருடனை பிடிப்பதற்கு கூடவா நான் வீரர்களை
அனுப்ப முடியும்? ஏதாவது பெருச்சாளி கிருச்சாளி தின்று இருக்கும்! போய் மருந்து
வாங்கி வை! மாட்டிக்கும் என்று சொல்லிவிட வருத்தமுடன் திரும்பி வந்தாள் பாட்டி.
வழியில் கத்தி என்ன பாட்டி! சொல்லிவிட்டாயா?
தலைவர் என்ன சொன்னார். என்று கேட்டது.
தலைவர் சொன்னதை கூறிய பாட்டி, என் பேச்சை
தலைவர் காதில் வாங்கவே இல்லை! இப்படி சொல்லிவிட்டார்! என்றாள். சரிபாட்டி! என்னை
உன் வீட்டுக்கு கூட்டிப்போ திருடனை பிடித்துவிடலாம் என்றது கத்தி.
சரி என்று கத்தியை எடுத்துக் கொண்டு அப்படியே
சாணம், விளாம்பழம், நண்டு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்
பாட்டி.
வீட்டினுள் நுழைந்ததும் பாட்டி! என்னை
புல்வெளியில் போடுங்கள் என்றது கத்தி.
சரி என்று புல்தரையில் கத்தியை போட அது
புற்களுக்கிடையில் மறைந்துகொண்டது. அப்போது சாணம் என்னை மரப்பலகையில் வைக்கவும்
என்றது. பாட்டியும் எதையும் கேட்காது மரப்பலகையில் சாணத்தை வைத்தாள். விளாம்பழம்
என்னை அடுப்பினுள் வையுங்கள் என்றது. பாட்டியும் அவ்வாறே செய்தாள். இறுதியாக நண்டு
பாட்டி என்னை நீங்கள் ஊறவைக்கும் அவல் தூக்கில் போட்டு வையுங்கள் என்றது.
அதன்படியே செய்தாள் பாட்டி.
ஊரே உறங்கிய சமயம் நடு இரவில் அந்த
பாட்டியின் வீட்டில் திருடன் நுழைந்தான். தினமும் அவல் தின்ற ருசி! அவனை அழைத்தது.
இந்த வீட்டில் அவல் தின்றுவிட்டு ஊரில் பல வீடுகளில் கன்னம் வைப்பது அவன் பழக்கம்.
வழக்கம் போல் அவல் தூக்கில் கையை வைத்தான் அவன். உள்ளே இருந்த நண்டு அவனது கையை
வெடுக்கென கடித்துப் பிடித்துக் கொண்டது. ஆ! ஆ! என கத்தியபடி கையை உதறிய அவன்
வலிக்கு இதவாக இருக்கும் என்று அடுப்பு தணலில் காட்டச் சென்றான். திருடன் ஒத்தடம்
கொடுக்க அடுப்பின் அருகில் செல்லவும் அதனுள் இருந்த விளாம்பழம் வெடித்து அவன்
முகத்தில் சிதறியது.
முகத்திலும் கண்களிலும் விளாம்பழம் சிதற
அவனுக்கு வலியுடன் பயமும் அதிகமாயிற்று. இருட்டில் என்ன நடக்கிறதென்றே தெரியாது
அவன் பயந்துபோய் வெளியே ஓடிவர மரப்பலகையில் இருந்த சாணத்தை மிதித்து விட்டான். அட
இது! என்ன? பிசுபிசுவென ஒட்டிக்கொள்கிறதே என்று அவன் அதை புல்வெளியில்
தேய்க்க புல்லில் மறைந்திருந்த கத்தி
வெளிப்பட்டு அவன் காலை கிழித்தது. கத்தி ஆழமாக வெட்டிக்கிழித்துவிட வலி பொறுக்காது
திருடன்! ஆ! ஐயோ! அம்மா! என்று அலறினான்.
இதென்ன! பூதம் புகுந்த வீடா? என்னை யாராவது
காப்பாத்துங்கள்! என்று கத்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விழித்துக்
கொண்டார்கள். அவர்கள் விரைந்து வர திருடன் வசமாக மாட்டிக் கொண்டான்.
இவன் திருடன்! அடியுங்கள் பிடியுங்கள் என்று
மக்கள் அவனை சூழ்ந்து தர்ம அடி கொடுக்க பல நாள் திருடிய அவன் வசமாக மாட்டிக்
கொண்டான். எல்லோரும் அவனை பிடித்து தலைவரிடம் ஒப்படைத்தனர். அவர் அவனை காவலில்
வைத்து சிறையில் அடைத்தார்.
பாட்டி தனக்கு உதவிய நண்டு, சாணம்,
கத்தி,விளாம்பழம் முதலியவைக்கு நன்றி கூறினாள். அதற்கு பிறகு அவளது உணவு திருடு
போகவே இல்லை!
(செவிவழிக்கதை தழுவல்)
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அழகான பாட்டிக் கதை!.. விடிய விடிய இந்த மாதிரி கதைகளைக் கேட்டதெல்லாம் நினைவுக்கு வருகின்றது.
ReplyDeleteஐந்தறிவுகளும்,அற்றினைகளும் உதவினாலன்றி இன்றைக்கு நாட்டில் கொள்ளைகளை ஒழிக்க முடியாது என்பது உண்மைதான் !
ReplyDeleteஎனக்கு என் தாத்தா சொன்ன பல கதைகளின் ஞாபகம் வருகிறது....
ReplyDeleteஅருமையான கதை
ReplyDeleteஅருமையான கதை..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஅருமையான கதை. இது போல் பெரிய கதைகள் பிறருக்கு உதவும் கதைகள் முன்பு நிறைய பாட்டி, அம்மா எல்லாம் சொல்வார்கள்.
ReplyDeleteகுழந்தை நினைவுகளை மீண்டும் கிளறிய கதை. பாப்பா மலரில் வெளியானமைக்குப் பாராட்டுகள் சுரேஷ்.
ReplyDeleteஆஹா! மிக அருமையான கதை!
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி!
பாட்டிகதை நல்ல கதை குழந்தை போலவே ரசித்தேன்.
ReplyDeleteநன்றி வாழ்த்துக்கள் ....!
google follower ல் joint பண்ண இயலவில்லை.
My child hood days r coming to my mind.....tks
ReplyDeleteஅருமையான கதை. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி
ReplyDelete