“ஜௌபாங்க்! வாதாங்க்” பாப்பாமலர்!

 “ஜௌபாங்க்! வாதாங்க்”  பாப்பாமலர்!


பழமுதிர் காட்டில் நரிக்குடும்பம் ஒன்று வசித்துவந்தது. தாய், தந்தை, மூன்றுகுட்டிகள் என அந்த நரிக்குடும்பம் அந்த காட்டில் சுற்றி அலைந்து கொண்டிருந்தது. அதற்கு தங்குவதற்கு வீடு எதுவும் இல்லை. இதனால் மழையிலும் வெயிலிலும் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தது அந்த நரிக்கூட்டம்.
   ஒரு நாள் தாய் நரியானது கணவனிடம், “முன்போ நாம் இருவர் மட்டும்தான் இருந்தோம். இன்று நம் குடும்பம் வளர்ந்து மூன்று பிள்ளைகள் பிறந்துவிட்டது! நமது குட்டிகளை மழையிலும் வெயிலிலும் நனையவிட்டால் அவை இறந்து போய்விடும். அவற்றை காப்பாற்ற வசதியான ஒரு வீடு தேட வேண்டும்” என்று சொன்னது.
  பின்னர் அவை காடு முழுவதும் சுற்றி அலைந்து ஒரு குகை ஒன்றினைக் கண்டன. அந்த குகையின் முன் புலியின் காலடித் தடங்கள் காணப்பட்டன. அப்பா நரியானது மனைவியிடம் சொன்னது, அன்பே! இது புலியின் குகை! நாம் இங்குதான் தங்கியாக வேண்டும். இப்போது அது வெளியில் சென்றுள்ளது. திரும்ப வரும் போது நாம் நம் புத்திசாலித்தனத்தால் அதை விரட்டிவிட வேண்டும். இதை விட்டால் வேறு பாதுகாப்பான இடம் இந்த காட்டில் இல்லை என்று சொன்னது.
 அன்று முதல் குட்டிகளுடன் அந்த குகையில் நரி வசிக்க ஆரம்பித்தது. ஒரு வார காலம் வரை எந்த ஆபத்தும் இல்லை! ஒரு வாரம் கழிந்த பின்னர் ஒருநாள் வெளியே சென்றிருந்த புலி குகைக்கு வந்தது. புலி வருவதை தூரத்தில் இருந்து கவனித்து விட்டது தந்தை நரி.
    அன்பே! புலி நம் குகைக்கு வருகிறது! அது வந்துவிட்டால் நம் கதி அதோகதிதான்! எனவே நான் சொல்கிறபடி செய்! இப்போது நம் பிள்ளைகளை கிள்ளிவிடு! அவை அழும்! நான் ஏன் பிள்ளைகள் அழுகிறது என்று கேட்பேன்! அதற்கு பசிக்கிறது! அவைகளுக்கு புலிகளை சாப்பிட வேண்டுமாம் என்று கூறு. அப்புறம் நடப்பதைப் பார்! என்று சொன்னது.
    புலி குகை வாசலை நெருங்கியதும் அம்மா நரி குழந்தைகளை கிள்ளி அழவைத்தது. அப்பா நரி முன்பு பேசி வைத்தது போலவே பிள்ளைகள் ஏன் அழுகிறது? என்று குரலைமாற்றி கேட்டது.
  அவைகளுக்கு பசிக்கிறதாம்! புலிகள்தான் உணவாக வேண்டுமாம்! தாய் நரியும் குரலை மாற்றி கடுங்குரலில் சொன்னது.
   குகைக்குள் பேச்சுக்குரல் கேட்டு வாசலில் நின்ற புலி, அவைகளுக்கு சாப்பிட புலிகள்தான் வேண்டுமாம் என்று கேட்டதும் பயந்து போனது. அட ராமா! இதென்ன சோதனை! என்னுடைய குகையில் ஏதோ ராட்சதர்கள் புகுந்து விட்டார்கள் போலுள்ளதே! அவர்கள் கண்டிப்பாக அரக்கர்களாகத்தான் இருக்க வேண்டும் அதனால்தான் புலியைச் சாப்பிட வேண்டும் என்று கேட்கிறார்கள்! என்று நினைத்து தயங்கி நின்றது.
  இப்போது உள்ளே இருந்து மீண்டும் குரல் கேட்டது. நான் எங்கிருந்து புலிகளை கொண்டுவருவேன்! இதுவரை கிடைத்த புலிகளை எல்லாம் பிடித்து கொடுத்துவிட்டேன்! என்றது.
   இப்படி சொல்லி பிரயோசனம் இல்லை! எப்படியாவது ஒருபுலியைப் பிடித்துவாருங்கள்! இல்லையென்றால் குழந்தைகளின் அழுகை நிற்காது! என்றது தாய் நரி.
  தந்தை நரியோ! ஸ்.. சத்தம் போடாதே! வெளியே புலியின் வாசம்! வருகிறது. நான் பிடித்து விடுகிறேன்! எனது ஜௌபாங்கை எடு! அவனை வாதாங்க்! பண்ணிவிடுகிறேன்! என்று கர்ண கடூரமாக பேசியது.

   அங்கு ஜௌபாங்கும் இல்லை! வாதாங்கும் இல்லை! புலியை ஏமாற்ற நரி சொன்ன கற்பனை பொருள்கள்தான் அது! ஆனால் புலிக்கு அது தெரியாது அல்லவா? அதற்கு பயத்தில் கால்கள் நடுங்கிப்போனது. நான் வெளியே இருப்பதை கண்டுபிடித்துவிட்டானே! இனி இங்கிருந்தால் ஆபத்து! விட்டால் போதும்! இனி இந்த பக்கமே தலைவைத்து படுக்க மாட்டேன் என்று தலைதெறிக்க ஓடியது.
  புலி ஓடியதை பார்த்து நரிகள் இரண்டும் விழுந்து விழுந்து சிரித்தது. நல்ல வேளை! நம் புத்தியால் தப்பித்தோம்! ஆனால் இன்னும் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். இந்த புலி யாரையாவது கூட்டி வந்தாலும் வரும்! என்றது நரி.
   புலி விழுந்தடித்து ஓடுவதை கண்டது அந்த காட்டில் வசிக்கும் குரங்கு ஒன்று. அது ஆச்சர்யத்துடன், எல்லோரையும் ஓட வைக்கும் புலியார் இன்று இப்படி பயந்து ஓடுகிறாரே! என்னவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டது. அது புலியின் குறுக்கே வந்து நின்று, புலியாரே! ஏன் இப்படி ஓடுகிறீர்? என்ன நேர்ந்துவிட்டது? என்று கேட்டது.
   ஐயா! குரங்காரே! வழியைவிடும்! என்னுடைய குகையில் ராட்சதர்கள் புகுந்துவிட்டார்கள்! அவர்களிடம் இருந்து தப்பிக்கவே இப்படி ஓடுகிறேன்! அவர்கள் என்னை பிடிக்கும் முன் இந்த காட்டைவிட்டே சென்று விட வேண்டும். இல்லாவிட்டால் என்னைபிடித்து தின்று விடுவார்கள் என்று நடந்ததை கூறியது புலி.
   புலியை தின்னக் கூடிய ராட்சதர்களா? அப்படி இருக்க வாய்ப்பு இல்லையே? இது ஏதோ சூழ்ச்சி! என்று குரங்கு நினைத்துக் கொண்டது.
   வீராதி வீரரான தாங்கள் பயப்படலாமா? உங்களை யாரோ ஏமாற்றுகிறார்கள்! வாருங்கள் அங்கு யார் இருக்கிறார்கள் என்று ஒரு கை பார்த்துவிடலாம்! என்றது குரங்கு.
   எனக்கு உயிர் மேல் ஆசையிருக்கிறது! வீணாக வந்து உயிரை விட மாட்டேன்! என்றது புலி.
  நீங்கள் ஒரு முட்டாள்! அதனால்தான் இப்படி பயந்துஓடுகிறீர்கள்! இப்படி நீங்கள் ஓடியதை காட்டில் இருக்கும் விலங்குகள் அறிந்தால் அவைகளுக்கு உம்மிடம் பயம் இருக்குமா? என்று கேட்டது குரங்கு.
  புலிக்கு கோபம் அதிகமானது, என்னையா முட்டாள் என்று சொல்லுகிறாய்! என் நேரம்! உனக்கு தைரியம் இருந்தால் என்னோடு வா! அந்த  ராட்சதர்களை பார்த்தால் நீயும் மிரண்டு போவாய்! என்றது.
  நீங்கள் அந்த ராட்சதர்களை பார்த்தீர்களா? இல்லை இல்லை குரலே பயங்கரமாக இருந்தது.
  அவ்வளவுதானே! ஒரு கை பார்த்துவிடுவோம்! என்ற குரங்கு புலியை பின் தொடர்ந்தது.
   இதை எதிர்ப்பார்த்திருந்த நரி, மனைவியிடம் சொன்னது, அந்த முட்டாள்புலி, குரங்கை அழைத்து வருகிறது. இப்போது பார் வேடிக்கையை என்று பிள்ளைகளை கிள்ளிவிட்டது. உடனே குட்டி நரிகள் அழுதன.
  நரி இப்போது கோபமாக குரலை மாற்றி பிள்ளைகள் ஏன் அழுகிறது? என்று கேட்டது.
   நீங்கள் தான் புலியை பிடித்து தரவில்லையே! அவை பசியில் அழுகிறது! நீங்கள் புலியைக் கொண்டு வரும் வரையில் அவைகள் அழுகையை நிறுத்தாது.
  உடனே நரி சொன்னது, இரு இரு அவசரப்படாதே! பிள்ளைகளின் மாமாவிடம்  புலியை அழைத்துவரும்படி சொல்லியிருந்தேன். அவன் அழைத்து வருவான். அதோ அவன் வந்து கொண்டிருக்கிறான் என்ற அது பிள்ளைகளை பார்த்து,

பிள்ளைகளே அழாதீர்கள்! உங்களின் தாய் மாமா குரங்கார் புலியை அழைத்து வந்து விட்டார். நீங்கள் இஷ்டம் போல பசியாறுங்கள் இனி அழ வேண்டியது இல்லை! அந்த ஜௌபாங்கை எடுங்கள்! நான் புலியை வாதாங்க்! பண்ணிவிடுகிறேன் என்றது.
   இதுவரை குரங்குடன் வந்த புலிக்கு இந்த வார்த்தைகளை கேட்டதும் கோபம் மிகுந்தது. அடேய் குரங்கே! என்னை ஏமாற்றி அழைத்து வருகிறாயா? என்று குரங்கின் மேல் பாய முற்பட்டது. குரங்கு அங்கிருந்த மரத்தில் தாவி மறைந்தது. புலி இனி இங்கிருந்தால் ஆபத்து! என்று தலை தெறிக்க ஓடியது. இனி அந்த பக்கம் அது தலையெடுத்து படுக்காது.
   நரியும் அதன் மனைவியும் இந்த காட்சியைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தன. இனி கவலையில்லை! இனி அந்த புலியின் தொல்லை நமக்கில்லை என்று சொன்ன நரி இனி நம் குழந்தைகளை காப்பாற்றிவிடலாம் என்று மகிழ்வுடன் சொன்னது.

புத்தியுள்ளவன் பிழைப்பான்.

(செவிவழிக்கதையை தழுவி எழுதியது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!.

Comments

  1. ஆ! சூப்பர் கதை! அருமையாக தொகுத்துள்ளீர்கள்! இதைத்தான் நரித் தந்திரம் என்பார்களோ!?

    ReplyDelete
  2. அருமையான கதை
    நன்றி நண்பரே

    ReplyDelete
  3. எழுத்தாளர் சார்,

    ஒரு கவிதை எழுதியுள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொன்னால் மகிழ்ச்சியடைவேன்.

    நிலவை ரசியுங்கள்
    நிதம் அதற்கு
    நேரம் தாருங்கள்

    ஒரு நேரம்
    ருசியுங்கள் உணவை
    நிலவொளியில்

    உள்ளங்கள் இடம் மாறும்
    உற்சாகம் கரைபுரளும்-உம்
    இல்லத்தில்

    நெடுநேரம் தேய்கிறது
    நிற்காமல் காய்கிறதே
    நமக்காக

    உணருங்கள்
    ஒதுக்கும் நேரம் அதற்கல்ல
    நமகென்றே!!

    கதிர்முருகன்.


    திருத்தம் இருந்தாலும் சொல்லுங்களேன் ப்ளீஸ்........

    ReplyDelete
    Replies
    1. நிலவை ரசிக்காத கவிஞர்கள் இல்லை! உங்கள் முதல் கவிதையும் நிலவை குறித்து இருப்பதில் மகிழ்ச்சி! முதலில் என்னை பெரிய எழுத்தாளனாய் மதித்து கருத்து கேட்பது இன்னும் மகிழ்ச்சியினையும் பொறுப்பினையும் தருகிறது. நிலவை பற்றிய உங்கள் எண்ணங்கள் சிறப்பு! சிறப்பாக எழுதியுள்ளீர்கள்! தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

      Delete
  4. மீண்டும் ஒரு நல்ல கதை.
    பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  5. நல்ல கதை ...எனக்கு சின்ன வயசில சிறுவர் மலரில் படிச்ச கதை எல்லாம் இப்போ ஞாபகம் வருது....

    ReplyDelete
  6. அருமையான கதை.... ரசித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2