“பூமாராங்க்”
“பூமாராங்க்”
‘என்னம்மா! எந்த மாப்பிள்ளையை
பெண் பார்க்க வரச்சொல்றது? தரகர் வந்து கேட்டுக்கிட்டே இருக்கார்! மகன்
ரமேஷ் கேட்கவும், அந்த செங்கல்பட்டு பையனையே ஓக்கே சொல்லிடலாம்டா! என்றாள் அவனது அம்மா
மீனாட்சி.
தனது ஒரே தங்கைக்கு ஏற்ற வரமாக
தேடிக்கொண்டிருந்தான் ரமேஷ். ஏகப்பட்ட ஜாதகங்களை சலித்து எடுத்ததில் ஒன்றிரண்டு
தேறியது. அதிலும் சிலவற்றை கழித்தான். வேலை சரியில்லை, பையன்
வயசானவனாகத்தெரிகிறான் என்று சிலவற்றை கழித்து இறுதியில் இரண்டு ஜாதகங்களை ஓக்கே
செய்தான். ஒன்று செங்கல்பட்டு பையனுடையது. தொழில்நுட்பத்துறையில் வேலை! நல்ல
சம்பளம், அழகு ஆனால் சொந்த பந்தம் என்று நிறைய இல்லை! பிள்ளை தனியாக சென்னையில்
வசிக்கிறான். கல்யாணமானதும் அவனுடன் சென்னையில்தான் பெண் குடித்தனம் நடத்த
வேண்டும்.
மற்றொன்று கொஞ்சம் தூரம் திருச்சி பக்கம்
பையனும் இஞ்சினியர்தான். நல்ல வேலை! அழகு ஆனால் அவனுக்கு ஏகப்பட்ட சொந்தங்கள்,
அண்ணன், தங்கை, அத்தை, மாமா, ஒன்றுவிட்ட சித்தப்பா என்று ஏகப்பட்ட உறவுகளாம்.
கல்யாணமானதும் தனிக்குடித்தனம் ஏதும் கிடையாது. மாமியாருடன் தான் குடித்தனம் என்று
தெரிந்தது.
திருச்சி இடமே ரமேஷிற்கு பிடித்து இருந்தது.
ஏகப்பட்ட உறவுகள்! ஏதாவது ஒன்று என்றால் உதவிக்கு ஓடிவருவார்கள்! தங்கையை தாங்கிப்
பிடிப்பார்கள் என்று நினைத்தான். என்ன ஒன்று கொஞ்சம் தூரம். இன்றைய நவீன உலகில்
திருச்சி ஒன்றும் அடுத்த கண்டத்தில் இல்லை அல்லவா? திருச்சி மாப்பிள்ளையை
பெண்பார்க்க வரச்சொல்லி விடலாம்! அதற்குமுன் அம்மா என்ன சொல்கிறார்கள் என்று
கேட்டுவிடலாம் என்றுதான் அம்மாவிடம் பேச்சை ஆரம்பித்தான். அம்மாவின் முடிவு
அவனுக்கு ஆச்சர்யத்தை தந்தது.
“என்னம்மா!
திருச்சி ரொம்ப தூரம்னு தயங்கிறியாம்மா?” என்று கேட்டான்.
“அதெல்லாம்
இல்லைடா! அங்க ஏகப்பட்ட சொந்தங்கள் இருக்கு! கூட கூட்டுக்குடும்பம், இவ கல்யாணமாகி
போனா மாமியார், மாமனார், நாத்தனார், மச்சினன்னு ஏகப்பட்ட பேருங்க! எல்லோரையும்
கவனிச்சிக்கனும் அனுசரிச்சு நடந்துக்கணும்! ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அங்க வந்து
டேரா போடுவாங்க! அவங்களுக்கு வடிச்சுக் கொட்டணும்! ஒரே பொண்ணை வளர்த்து அவங்க
கிட்ட அல்லல் பட அனுப்பனுமா? சென்னையில மாமியார்-மாமனார் தொல்லைக் கூட இல்லாம
ஜாலியா இருக்கலாம் இல்லையா? எதுவானாலும் இவங்க இஷ்டம்! பர்மிசன் கேக்க வேண்டியது
இல்லை! நினைச்சதை சாதிச்சுக்கலாம்!”
என்றாள்.
“என்னம்மா
சொல்றே நீ! சொந்த பந்தங்களை அனுசரிச்சு நடந்துக்கறதுல என்ன தப்பு? அதுவும் அவங்க
தினமுமா வீட்டுக்கு வரப்போறாங்க? ஏதோ ஒரு விசேசம்னு வரப்போறாங்க! அதுவும் இல்லாம
மாமியார்- மாமனார் இவங்க கூட இருந்தா ஒரு பாதுகாப்பு கிடைக்கும் இல்லையா?”
“என்னடா
பொல்லாத பாதுகாப்பு? மாமியார்னு இருந்தா இருபத்திநாலுமணி நேரமும் ஏதாவது
நச்சரிச்சிட்டு இருப்பா! எனக்கு இதைபண்ணு
அதைப் பண்ணுன்னு! நாத்தனார் இருந்தா அவ பொறாமையில எரிவா! இதெல்லாம் எம் பொண்ணுக்கு
தேவையா? எந்த கஷ்டமும் இல்லாம என் பொண்ணு சந்தோஷமா இருக்கணும்! செங்கல்பட்டு
பையனையே வரச்சொல்லிடு! தரகர்கிட்ட, ஏதாவது கூட குறைய கேட்டாகூட பார்த்து
செஞ்சிடலாம்!” அம்மா சொல்லிக் கொண்டே போக மவுனமாக நடந்தான் ரமேஷ்.
அம்மாவின் விருப்பப் படியே செங்கல்பட்டு
மாப்பிள்ளை வந்து பார்த்துவிட்டு போக கல்யாணமும் நிச்சயம் ஆகியது. ஒரு வாரம்
கடந்திருக்கும். வாசலில் ஒரு டெம்போ வந்து நிற்க, ரமேஷ் தன்னுடைய பொருள்களை
எல்லாம் அதில் ஏற்ற ஆரம்பிக்க என்னடா ரமேஷ்? என்ன இதெல்லாம்? எதுக்கு
பொருள்களெல்லாம் வண்டியிலே ஏத்தறே?
“அம்மா! நான் தனிக்குடித்தனம் போகப்
போறேன்மா! புதுசா வீடு பார்த்துட்டேன்! அங்கதான் கிளம்பிட்டிருக்கேன்!”
“என்னடா இது! திடீர்னு! யார்
சொல்லிக்கொடுத்தாங்க?”
“நீதாம்மா சொல்லிக் கொடுத்தே!”
“என்னது நான் சொல்லிக்
கொடுத்தேனா? எப்படா நான் தனிக்குடித்தனம் போன்னு சொன்னேன்?”
“அன்னிக்கு தங்கைக்கு வரன் தேடும்போது தனியா
இருக்கற தம்பதிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லே! சுதந்திரமா இருக்கலாம்னு நீதானே
சொன்னே?”
“அது உன் தங்கைக்குடா?”
“ ஏம்மா! உன் பொண்ணுக்கு ஒரு
நியாயம்! உன் மருமகளுக்கு ஒரு நியாயமா?”
“உன் மருமகளுக்கும் சுதந்திரமா இருக்கணும்னு ஆசை இருக்கும் இல்லையா?”
“நான்
அதுக்கு தடையா இருந்தேனாடா?” கண்களில் நீர் வழிய கேட்டாள் அம்மா.
“அதெல்லாம் தெரியாதும்மா! உன் பொண்ணு
மட்டும் மாமியார் நாத்தனார் தொல்லை இல்லாம இருக்கணும் ஆசைப்படற இல்லே! அதையே உன்
மருமகளும் ஆசைப்பட்டா என்ன தப்பு?” மகன் கேட்ட கேள்வி சுளீர் என்று உரைக்க பதில்
வரவில்லை மீனாட்சிக்கு.
‘ ரொம்ப நன்றிம்மா! நீதான் இந்த யோசனைக்கு
வழிவகுத்தே! நானும் என் குடும்பம்! என் மனைவின்னு சுதந்திரமா இருக்கேன்! வரட்டுமா!
பை! டெம்போவில் பொருட்களை ஏற்றிவிட்டு மனைவியுடன் கிளம்பிவிட்டான் ரமேஷ்!
தன் திட்டம் தன்னையே திருப்பி தாக்கிவிட
ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்து நின்றாள் மீனாட்சி.
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
மீனாட்சிக்கு இதை விட பெரிய தண்டனை யாரும் தர முடியாது... நாட்டில் பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள்....
ReplyDeleteஅருமையான படிப்பினை!! எல்லா மருமகன்களும் இவ்வாறு சிந்திக்க
ReplyDeleteஆரம்பித்து விட்டால் மாமியார் தொல்லை அகன்று எல்லோருமே
மகிழ்வுடன் வாழலாம் என்று உணர்த்திய பகிர்வுக்குப் பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் சகோதரா .இன்றைய எனது பகிர்வினையும் முடிந்தால்
தவறாமல் படித்துப் பாருங்கள் .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .
யூகிக்க முடிந்த கதை .. ஆனாலும் நல்லாருக்கு ...
ReplyDeleteமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
ReplyDeleteஅருமையான கதை நண்பரே
நல்ல கதை. அவர்கள் சொன்னதே அவரளிடம் திரும்பி வந்துவிட்டதே! :)
ReplyDeleteகதை நல்லாயிருக்கு நண்பா!!
ReplyDelete