வீமன் சொன்ன நியாயம்! பாப்பா மலர்!

வீமன் சொன்ன நியாயம்! பாப்பா மலர்!


வெகு காலத்திற்கு முன்னர் ராமன் என்பவரும் சோமன் என்பவரும் தீர்த்தயாத்திரைக்கு புறப்பட்டனர். தீர்த்த யாத்திரை என்பது பல்வேறு புண்ணிய தலங்களுக்குச் சென்று நீராடி இறைவனை தரிசித்து வருதல் ஆகும். அந்த காலத்தில் இப்போது உள்ளது போல பேருந்துகளோ, இரயில் வண்டிகளோ கிடையாது. வசதி படைத்தவர்கள் குதிரைவண்டி, மாட்டு வண்டியில் பயணிப்பர். வசதியற்றோர் நடைபயணம்தான் மேற்கொள்ளவேண்டும்.

   ராமனும் சோமனும் சில இடங்களுக்கு மாட்டு வண்டியில் வாடகைப் பேசி பயணித்தனர். சில இடங்களுக்கு நடந்தே சென்று இறை தரிசனம் செய்தனர். இன்றுள்ளது போல அன்று ஓட்டல்கள் கிடையாது. அதுமட்டுமின்றி பழந்தமிழர் உணவை விற்பனை செய்ய மாட்டார்கள். பெரும் சத்திரங்களைக் கட்டி அங்கு வருவோர்க்கு உணவு சமைத்து இலவசமாக வழங்குவர் சில செல்வந்தர்கள். அதனால் ராமனும் சோமனும் அது போன்ற சத்திரங்களில் தங்கியும் சில சமயம் உலர் பழங்கள், கோதுமைமாவு, திணைமாவு, அவல், போன்ற எளிதில் கெட்டுவிடாத பொருள்களை உடன் எடுத்துச்சென்று அவ்வப்போது பசியாறி புண்ணியத் தலங்களை தரிசனம் செய்தனர்.
   அவர்கள் அப்படி யாத்திரை செய்து வருகையில் இறுதியாக கன்னியாகுமரி சென்றார்கள். அங்கு குமரி அன்னையை தரிசனம் செய்து இறுதியாக ஊர் திரும்ப முடிவு செய்திருந்தார்கள். அங்கு அன்னை தரிசனம் அழகுறக் கண்டு அந்த ஊரில் இருந்த ஓர் சத்திரத்தில் வந்து தங்கினார்கள். அவர்களிடம் கொஞ்சம் கோதுமை மாவு இருந்தது. அதைக் கொண்டு ராமன் ஐந்து ரொட்டிகளும் சோமன் மூன்று ரொட்டிகளும் தயார் செய்தனர்.
   நல்ல பசிவேளை! இரவு ஒன்பதுமணியை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே அவ்விருவருக்கும் வேண்டிய நண்பன் காமன் என்பவர் வந்தார். விருந்தினரை இருவரும் வரவேற்றனர். வந்தவருக்கு உணவு தந்து உபசரிக்க வேண்டும் அல்லவா? அதுவல்லவோ தமிழர் பண்பாடு. இருப்பது ராமன், சோமன், காமன் மூவர். ரொட்டிகளோ எட்டு எப்படி பங்கிடுவது? மூவரும் உண்ணவேண்டுமே?
   ராமன் சிறிது யோசித்தார். ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகளாக நறுக்கினார். எட்டு ரொட்டிகள் 24 துண்டுகளாகியது. தலா எட்டு துண்டுகள் உண்டு முடித்தார்கள். காமன் விடியற்காலையில் எழுந்துவிட்டார். மேஜைமீது எட்டுரூபாயை வைத்துவிட்டு சென்றார்.
  விடிந்ததும் எழுந்த ராமனும் சோமனும் மேஜைமீதிருந்த எட்டு ரூபாயைப் பார்த்தார்கள். காமன் தான் வைத்து சென்றிருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். நண்பா!, காமன் எட்டு ரூபாய் வைத்து சென்று இருக்கிறார். நான் ஐந்து ரொட்டிகள் வைத்திருந்தேன். எனக்கு ஐந்து ரூபாயும் மூன்று ரொட்டிகள் வைத்திருந்த உனக்கு மூன்று ரூபாயும் என பிரித்துக் கொள்வோம் என்றார் ராமன்.
    சோமன் அதை ஒத்துக் கொள்ளவில்லை! ராமா! நீ சொல்வது நியாயம் இல்லை! இங்கு எட்டு ரூபாயை நாம் கண்டோம். ஆளுக்குப்பாதி நான்கு நான்கு ரூபாய் எடுத்துக் கொள்வோம்! என்றார்.
  ஆனால் ராமன், எனக்கு ஐந்துரூபாய் சேரவேண்டும் என்று வாதிட்டார். சோமன் ஆளுக்கு பாதியாகத்தான் பிரிக்க வேண்டும் என்று சொல்ல வாதம் வலுத்தது.

   அந்த சமயம் அந்த ஊரில் இருந்த வீமன் என்றவர் அங்கு வந்து சேர்ந்தார். என்னப்பா விசயம்? என்ன சண்டை என்று கேட்டார்?
   சண்டையெல்லாம் ஒன்றுமில்லைங்க! என்று நடந்ததை இருவரும் கூறி நீங்களே நியாயம் சொல்லுங்க! என்றனர்.
  வீமன் சிறிது நேரம் யோசித்தார். பின்னர் ராமனிடம் ஏழு ரூபாயும் சோமனிடம் ஒரு ரூபாயும் கொடுத்தார்.
  வீமன் நல்ல திடகாத்திரமான பலசாலியாக இருந்தார். அவரது உருவத்தை பார்த்து எல்லோருக்கும் பயம். என்ன ராமா, சோமா இந்த பங்கில் உங்களுக்கு திருப்திதானே! என்று கேட்கவும் அவரை எதிர்த்து என்ன பேசுவது என்று தயங்கினர் இருவரும். என்ன தயக்கம்? எதுவாயிருந்தாலும் கேளுங்கள் என்றார் வீமன்.
   இதென்ன நியாயம்? ராமனே மூன்று ரூபாய் தருவதாக சொன்னார். நீங்கள் ஒரு ரூபாய்தானே தருகிறீர்கள்? முதலில் ராமன் சொன்னபடியேவாது தாருங்கள் என்றார் சோமன்.
    வீமன், “ சோமா உன்னுடைய ரொட்டிகள் மூன்று அவை ஒன்பது துண்டுகள் ஆனது. அதில் நீ எட்டு துண்டுகளை உண்டு ஒரு துண்டை விருந்தாளிக்கு கொடுத்தாய். ராமனுடைய ரொட்டிகள் ஐந்து அவை பதினைந்து துண்டுகள் ஆகின. அவற்றில் ஏழு துண்டுகளை விருந்தாளிக்கு கொடுத்தார்.  கணக்குப்படி ஏழு துண்டுகள் தந்தவனுக்கு ஏழு ரூபாய். ஒரு துண்டு தந்த உனக்கு ஒரு ரூபாய்! இதுதானே நியாயம்! என்றார்.
  வீமன் சொன்ன கணக்கும் தீர்ப்பும் இருவருக்குமே பிடித்துவிட்டது. நல்ல நியாயம் வழங்கினீர்கள்! என்று இருவரும் விடைபெற்று தீர்த்த யாத்திரையை நல்லபடி முடித்து ஊர் திரும்பினார்கள்.
  
(செவிவழிக்கதை தழுவல்)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. உண்மையான நியாயம்தான்.
  அருமை நண்பரே

  ReplyDelete
 2. நல்ல தீர்ப்புதான்

  ReplyDelete
 3. நாட்டாமை நல்ல தீர்ப்பை தான் வழங்கியிருக்கிறார்.

  நல்ல கதை, பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2