துரத்தும் நிழல்! பகுதி 6
துரத்தும் நிழல்! பகுதி 6
முன்கதை: பாக்கம் கிராமத்தில்
கோவில் பூஜை செய்து வரும் வைத்தியநாத குருக்கள் இளம் மனைவியும் குழந்தையோடு
வசித்துவருகிறார். திடீரென குருக்களின் மனைவி ஹேமாவதிக்கு கால் வீங்கி போகிறது.
வைத்தியம் செய்ததில் குணமாகவில்லை! அவருடைய மாமனார் ஒரு கோபக்காரர். அவர் தன்
மகளின் நோய்க்கு காரணம் வைத்தியநாதனும் அவருடைய தாயும் தான் என்று குற்றம்
சாட்டுகிறார். வைத்தி அதை நிருபீக்க சொல்கிறார். இனி:
வைத்திக்கு தன் அம்மாவின் மேல் பெரிதாக
அப்படியொன்றும் பாசம் இல்லை என்றாலும்
பெற்றவளை குறைசொல்கிறார்களே என்று இருந்தது. அவரது திருமணம் முதலே
பெற்றோர்களுக்கும் அவருடைய மனைவி வீட்டாருக்கும் தகறாரு இருந்து வந்தது.
இத்தனைக்கும் தேடிச்சென்று பெண் கேட்டு திருமணம் செய்துவைத்தார் வைத்தியின் தந்தை.
ஆயினும் திருமணம் தொடங்கியதில் இருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை அரங்கேறிக்
கொண்டிருந்தது. அது இப்போது பெரிதாகி அவரது அன்னை மீது குற்றச்சாட்டாக வந்து
முடிந்திருக்கிறது.
சரி ஆனது ஆகட்டும் இரண்டில் ஒன்று
பார்த்துவிடவேண்டியதுதான். தன் அன்னை மீது குற்றச்சாட்டு வைக்கும்போது அதை இல்லை
என்று நிருபீக்கவேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. எனவே மாமனார் சொன்ன
இடத்திற்கு வர சம்மதித்த அவர் அன்று அதிகாலையிலேயே எழுந்து பூஜைகளை முடித்துவிட்டு
மாமனார் சொன்ன படி எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து வீட்டில் பூஜையறை சமையலறை கூடம்
முதலிய இடங்களில் பூமியில் வைத்து தேய்த்து எடுத்து பையில் போட்டுக் கொண்டு ஏழு
மணி அளவில் பொன்னேரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து காத்திருந்தார்.
அவர் அங்கு ஒரு பத்து நிமிடம் காத்திருந்த
போது மாமனார் சண்முக குருக்கள் வந்து சேர்ந்தார். பின்னர் இருவரும் அங்கிருந்த ஒரு
ஹோட்டலில் காபி அருந்திவிட்டு சென்னை செல்லும் ரயிலுக்கு காத்திருந்தனர். இந்திய
ரயில்வேயின் வழக்கமான தாமதப்படி கொஞ்சம் தாமதமாகவே வந்துசேர்ந்த ரயிலில் ஏறி
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய அவர்கள் அங்கிருந்து மாம்பலம்
ரயிலை பிடித்து மாம்பலம் ரயில்வே நிலையம் வந்தடைந்தபோது மணி ஏறக்குறைய பத்தை
நெருங்கிக் கொண்டிருந்தது. ரயில்நிலையத்தில் இருந்து ஏரிக்கரை தெருவிற்கு ஒரு
சைக்கிள்ரிக்ஷா பேசிக்கொண்டு ஏரிக்கரை தெரு வந்தடைந்தனர். அந்த தெருவில் இறங்கி
மூன்றாவது சந்தில் நுழைந்தபோது ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோயில் அவர்களை வரவேற்றது.
உடல் முழுவதும் வெண்ணைப்பூசிக் கொண்டு கம்பீரமாக காட்சியளித்த அனுமனை வணங்கிவிட்டு
அந்த கோயிலின் பின்புறம் சென்று ஒரு கட்டிடத்தில் நுழைந்தனர். அங்கு கீழே இரண்டு
மூன்று வீடுகளில் ஜோஸ்யம் பார்க்கப்படும், பில்லி சூனியம் ஏவல் மந்திரிக்கப்படும்
என்று போர்டுகள் தொங்கின. அவற்றைக் கடந்து கடைசியாக தெரிந்த மாடிப்படிகளில் ஏறி
மூன்றாவது அறை முன் நின்றனர். மாம்பலம் நடேச ஐயர் அனுமன் உபாசகர் என்ற போர்டு அந்த
வீட்டு சுவற்றில் தொங்கியது.
வெளியே இருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர்.ஒரு
அரைமணி நேரம் கடந்திருக்கும். இந்த அரை மணி நேரத்தில் இருவரும் ஏதும்
பேசிக்கொள்ளவில்லை! சென்னை மாநகரில் மாம்பலம் அன்றும் ஒரு பெரிய நகரம்தான்.
இருப்பினும் இவர்கள் இருந்த இடத்தில் ஒரு அமானுஷ்ய அமைதி நிலவியது. சுற்றிலும்
பசுமை போர்த்தியபடி மாமரங்கள், வேப்பமரங்கள், புங்க மரங்கள் சூழ்ந்து அதில் வசித்த
அணில், காகம், மைனா போன்ற பறவைகளின் ஒலி தவிர வேறு எதுவும் கேட்கவில்லை! அந்த
அறையின் உள்ளே இருந்து தாழம்பூ ஊதுவத்தியின் மணம் மட்டும் ரம்மியமாக வீசிக் கொண்டு
இருந்தது. அரை மணி நேரம் கடந்தபின் வெளியே இருவர் வந்தனர். அவர்கள் முகத்தில்
திருநீறு பூசிக் கொண்டு இருந்தனர். கைகளில் கறுப்பு கயிறு அணிந்து திருப்தியாக
சென்றனர். அவர்கள் சென்றபின் ஆஜானுபாகுவான ஒருவர் தலையில் உச்சிக்குடுமியோடு நாமம்
அணிந்து மிகப்பருமனான உடலை அசைக்க முடியாமல் மெதுவாக நடந்து வெளியே வந்தார்.
அவரைக் கண்டதும் சண்முக குருக்கள்
எழுந்திருத்தார். பின்னாலேயே வைத்தியும் எழுந்திருக்க அவர் கை அமர்த்தினார்.
பரவாயில்லே உக்காருங்கோ! தீர்த்தம் சாப்பிடறேளா! டேய்! கொழந்தே மணி! இவாளுக்கு
தீர்த்தம் எடுத்துவா! என்றார்.
உள்ளே இருந்து அவரால் குழந்தே என்று
விளிக்கப்பட்ட மணி ஒரு நாற்பதைக் கடந்த வயதில் வெற்று உடம்பில் ஆங்காங்கே திருமண்
பூசிய கோலத்தில் கையில் ஒரு செம்புடன் வெளிப்பட்டான். மறுகையில் வைத்திருந்த
வெண்கல தம்ளரில் நீரை ஊற்றி இருவருக்கும் கொடுத்தான்.
அதை இருவரும் அருந்தி முடித்ததும்,
சொல்லுங்கோ! என்றார். நான் ஏற்கனவே ரெண்டு நாள் முன்னாடி வந்து போயிருக்கேன்
உங்களுக்கு நினைவிருக்கலாம்! என் பொண்ணு! இவருக்கு கொடுத்திருக்கேன்! அவளுக்கு ஒரு
வாரமா திடீர்னு கால் வீங்கி இருக்கு! எந்த வைத்தியம் பார்த்தாலும் குணமாகலை! ஒரு
வேளை செய்வினையா இருக்குமோன்னு சந்தேகம்! உங்க கிட்ட வந்து சொன்னப்போ இவரை
கூட்டிவர சொன்னீங்க! நீங்க சொன்னபடி எலுமிச்சம் பழத்தை ஆத்துல தரையில உருட்டி
எடுத்து வந்திருக்கார். நீங்கதான் எதா இருந்தாலும் நிவர்த்தி பண்ணனும் என்றார்
சண்முக குருக்கள்.
நடேச ஐயர்! தீர்க்கமாக ஒரு பார்வை
இருவரையும் பார்த்தார். சரி உள்ளே வாங்கோ! அனுமன் கிட்டே அஞ்சனம் போட்டு
பார்த்துடலாம் என்று அழைத்துவிட்டு ரூமினுள் நுழைந்தார். பூஜைக்கு நான் சொன்ன பொருளெல்லாம்
வாங்கிட்டேளா? என்றார்.
வைத்தி மாமனாரை பார்க்க, அவர் தன் பையில்
இருந்த வாழைப்பழம் வெத்தலைப்பாக்கு அவல்கடலை, எலுமிச்சம்பழம் கற்பூரம் விபூதி
போன்றவைகளை எடுத்து தட்டில் வைத்தார். அத்துடன் தட்சணையாக 21ரூபாயும் வைத்தார்.
நடேச ஐயர் தட்டில் விபூதியை கொட்டி அதில் ஏதோ
அட்சரங்களை எழுதி ஊதுபத்தி ஏற்றி விபூதியின் மையத்தில் கற்பூரம் ஏற்றி வைத்து மனதை
நிலைப்படுத்தி அமர்ந்தார். சற்று நேரத்தில் உம்! என்று கொட்டினார். வைத்தி கொடுத்த
எலுமிச்சம் பழத்தை தட்டில் வைத்தார்.
சற்று நேரம் கற்பூரத் தணலில் காட்டினார். அது அப்படியே வதங்கியது. பின்னர் வெற்றிலை ஒன்றை எடுத்து அதில் அவர்
வைத்திருந்த மை டப்பாவில் இருந்து மை ஒன்றை தடவி அதற்கு ஊதுவத்தி காட்டி ஏதோ
உச்சரித்தார். சிறிது நேரம் கற்பூரத் தணலில் காட்டினார். மீண்டும் ஏதோ மந்திரங்களை
உச்சரித்தார். இப்போது வெற்றிலையை பார்த்தார். அவர் முகத்தில் ஒரு புன்முறுவல்
உதித்தது. பின் இருவரையும் அருகில் வரும்படி அழைத்தார்.
அவர்களிடம் அந்த வெற்றிலையைக் காட்டினார்.
அதில் ஒரு பெண் உருவம் தென்பட்டது. அந்த பெண் உருவத்தை உற்றுப்பார்த்த வைத்தி
அதிர்ந்தார். அவர் முகம் இருண்டுபோனது. அவரால் இதை நம்ப முடியவில்லை! அவர் இதயம்
சுக்குநூறாக நொருங்கிப்போனது. ஆம் அந்த வெற்றிலையில் தெரிந்தது அவரது தாயின்
உருவம்.
அப்படியே தலையில் கைவைத்து இடிந்து போய்
அமர்ந்த வைத்தியை பார்த்து ஒரு இகழ்ச்சியாக சிரித்தபடி! என்ன மாப்ளே இப்படி
இடிஞ்சிப் போய் உக்காந்துட்டேள்! என்றார் சண்முக குருக்கள்!
வைத்தியின் உதடுகள் துடித்தன! ஆனால்
வார்த்தைகள் வரவில்லை!
உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம்! ஆனா நான்
எதிர்ப்பார்த்துதான் வந்தேன்! ஆனது ஆய் போச்சு! இனி என்ன செய்யலாமுன்னு
பார்ப்போம்! வைத்தி தலையசைக்க நடேச ஐயரும் பூஜையை முடித்து எழுந்தார்.
ஏன் ஒரு மாதிரி இருக்கேள்! வெற்றிலையிலே
தெரிஞ்சது யாரு? ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்கேள் என்றார்.
வெற்றிலையிலே தெரிந்தது இவரோட தாயார்! அதான்
இவர் இப்படி ஆயிட்டார்! மேல என்ன பண்ணனும் நீங்க சொல்லுங்கோ!
இவாத்துல செய்வினை இருக்கிறது உண்மைதான்!
பூமிக்கடியிலே புதைச்சு வச்சிருக்கா! அதை எடுத்திட்டா எல்லாம் சரியாயிரும்! யாரு
செஞ்சாங்கிறதைதான் மை போட்டு காட்டினேன்.
சரி! அதை எப்படி எடுக்கிறது?
இந்த வயோதிக காலத்துல நான் வெளியே வர்றது
இல்லே! ஒண்ணு பண்றேன்! என் மாப்பிள்ளையையும் இன்னொருத்தரையும் அனுப்பி வைக்கிறேன்!
ஒரு நூற்றம்பது ரூபா ஆகும்! அப்புறம் கொஞ்சம் சாமான்கள் நான் எழுதி கொடுக்கிறதை
வாங்கி வையுங்க! வர்ற அமாவாசை அன்னிக்கு அவங்களை அனுப்பி வைக்கிறேன்!
இருவரும் மவுனமாக தலையாட்டினர். வைத்தியின்
மனதில் ஒரு பெரிய சூறாவளியே நிகழ்ந்து கொண்டிருந்தது. அது ஓய்ந்ததா? அடுத்தவாரம்
வரை காத்திருங்கள்!
நிழல் துரத்தும்
(6)
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
thurathum nizal 6 ku apparom illaya ??
ReplyDelete