உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 34

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 34

சென்ற வாரம் கார்த்திகை தீபம் என்பதால் இந்த தொடரை தொடர முடியவில்லை! அதற்கு முன்பு தமிழில் சொல்லின் முதலில் இந்த எழுத்துக்கள்தான் வரவேண்டும் என்ற மரபை பற்றி படித்தோம். அதை நினைவு கூற இங்கு செல்லவும்
   சொல்லின் இடையில் என்னென்ன எழுத்துக்கள் வரலாம் என்றும் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. அதை இந்த வாரம் பார்ப்போம்!
  ஐ என்ற எழுத்து மட்டும் உயிர்மெய்யெழுத்தின் இடையில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் இருந்து ஒரு மாத்திரை குறைந்து ஒலிக்கும். உதாரணமாக இணயம், உமயம்மை,பழய, வலயர், பாளயம் முதலிய சொற்களில் வரும்,ண, ம,ழ,ள,ல எழுத்துக்களின் ஒலிகள் ணை,மை,ழை,ளை, லை எழுத்துக்களின் குறுக்கம் ஆகும். இது ஐகாரகுறுக்கம் என்றும் வழங்கப்படும். இவ்வாறு பேச்சுவழக்கில் ஒலிக்கலாமே தவிர எழுதும்போது சரியாகத்தான் எழுத வேண்டும்
  அதேபோல் சொல்லின் இடையில் வல்லின மெய்களான ட்,ற் ஆகிய ஒற்றெழுத்துக்கள் வரும்போது அடுத்து இன்னொரு வல்லின ஒற்று மிகுந்து வராது. காட்சி என்பது சரியான சொல், காட்ச்சி என்பது தவறானது. சாட்சி என்பது சரியானது, சாட்ச்சி என்பது தவறானது.

 சரியான சொல்- பிழையான சொல்
வெட்கம்-             வெட்க்கம்
முயற்சி                முயற்ச்சி
பயிற்சி                 பயிற்ச்சி
கடற்கரை             கடற்க்கரை

மொழியின் இடையில் வரும் எழுத்துமரபுகளில் முக்கியமானவை மட்டும் இவை. இதை அறிந்து கொண்டாலே பிழைகளை தவிர்த்து விடலாம்.

தமிழ் சொல்லின் இறுதியிலே வரும் எழுத்து மரபுகள்.

மெய்யெழுத்துக்களில் வல்லின ஒற்றெழுத்துக்களான க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் வருவதில்லை. வேற்றுமொழி சொற்களை எழுதுகையில் இதில் சிக்கல் வருவது உண்டு.
  உதாரணமாக மார்க், கேட்ச், பேட், பாத், மேப் என்ற ஆங்கில சொற்களை அப்படியே தமிழ்படுத்தும்போது அப்படியே எழுதுகிறோம். தவிர்க்க முடியாத சூழலில் இதை எழுத வேண்டுமெனில் அதற்கு இணையான தமிழ் சொல்லை சேர்த்து எழுதி சரி செய்யலாம் உதாரணமாக மேப் என்பதை மேப்பு என்றும் மார்க் என்பதை மார்க்கு என்றும் எழுதலாம்.
  உயிர் எழுத்துக்களில் ஊ, எ, ஏ,ஒ, ஔ ஆகிய எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் வராது.
  எ, ஒ ஆகிய உயிரெழுத்துக்கள் பேச்சுவழக்கில் வரும். ஆனால் எழுத்து வடிவில் வராது. உதாரணம் ஊரிலே, அங்கெ, வாங்கொ

சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும் எழுத்துமரபுகளை அறிந்து கொண்டோம்! இனி பிழையின்றி எழுதிப் பழகுவோம்.
இனி இனிக்கும் இலக்கிய சுவைக்குள் புகுவோமா?


காதல் இல்லாத கவிதைகள் இல்லை எனலாம். பண்டைய இலக்கியங்களிலும் காதல் சுவை மிளிர்ந்து காணப்படும். முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களை புகழ்ந்து பாடும் ஒரு செய்யுள் இதில் கைக்கிளை வகை செய்யுள்கள் அதிகம். கைக்கிளை என்பது ஒருதலைக் காதல்.

பாண்டியனை ஒருதலையாய் காதலித்த பெண்ணொருத்தி பாடுகிறாள் கேளுங்கள்.

   உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
   கழுதை செவியரிந் தற்றால்- வழுதியைக்
   கண்டநம் கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள்
   கொண்டன மன்னோ பசப்பு.

வயலிலே விளைந்த உளுத்தஞ்செடிகளை ஊரிலே வளர்ந்த கன்று மேய அதை விட்டுவிட்டு கழுதையை பிடித்து காதை அறுத்தார்களாம். அதேபோல பாண்டியனை கண்டு காதல் கொண்டாள் ஒருத்தி. பாண்டியனை பார்த்தது அவள் கண்கள். தவறு செய்த அக்கண்களுக்குத்தானே தண்டனை தரவேண்டும். ஆனால் மாறாக அவளது தோள்களுக்கு தண்டனை தரப்பட்டதாம். இது என்ன நியாயம் வழுதியை கண்ட கண்கள் சும்மா இருக்க தோள்கள் பசந்துவிட்டதே! என்று பாடுகிறாள். பசப்பு என்பது பசலையை குறிக்கும். பசலைநோய் என்பது மெலிந்து போதலை குறிக்கும். பாண்டியனை ஒருதலையாய் காதலித்து மெலிந்து போன பெண்ணொருத்தி தன்னுடைய மெலிவை இப்படி அழகான கவிதையாக்கி இருக்கிறாள்.
 இதை கொண்டுதான் மேய்ந்த மாட்டை விட்டு கழுதையின் காதறுத்தானாம்! என்ற பழமொழியும் தோன்றியிருக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!  நன்றி!

தொடர்புடைய பதிவுகள்

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 33

உங்கள் தமிழ் அறிவு எப்படி? பகுதி 32


Comments

 1. தொடர்ந்து தமிழ் இலக்கணம் குறித்து எழுதுங்க. அற்புதமாக எளிதாக வந்துள்ளது.

  ReplyDelete
 2. தமிழை பிழையின்றி எழுத நீங்கள் சொல்லும் அத்தனை விடயமும் அருமை .

  ReplyDelete
 3. மிகவும் பயனுள்ள பகிர்வு .வாழ்த்துக்கள் சகோதரா தொடர்ந்தும் தங்கள்
  ஆதரவினைத் தாருங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 4. இலக்கிய சுவை இனிக்கிறது... தொடருங்கள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2