தீபாவளியின் கதை!

வெளிச்சத்தின் அருமை இருட்டில் இருக்கும் போதுதான் தெரியும். இருட்டில் தட்டுத்தடுமாறும் பொழுது எங்கிருந்தாவது ஒளிர்க்காதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும் போது தீப ஒளி தோன்றாதா, அதன் நடுவே நாம் குதூகலத்துடன் இருக்கமாட்டோமா என்று எண்ணுகிறோம். இதே போன்ற சிக்கல் தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு ஏற்பட்டது. அவர் இருண்ட காட்டில் தனது மனைவி, மக்களுடன் தவம் செய்து கொண்டிருந்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே அந்த இடம் ஒளிமயமாக ஆகவேண்டும் என விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார். ஒருமுறை சனாதன முனிவர் என்பவர் அங்கு வந்தார். அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம் ஒன்றை கேட்டார். மனிதன் துன்பத்திலிருந்தும், இருளிலிருந்தும் விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் துன்பத்தையே பாதையாக கொண்டு பட்டினி, உடலை வருத்திக்கொண்டு தவம், நேர்ச்சைகள் ஆகியவையாகத் தான் உள்ளன. இது மேலும் மனிதனை துன்பப்படுத்தும் அல்லவா? ஏற்கனவே துன்பப்படும் மனிதன் இன்னும் துன்பத்தை அனுபவித்து தான் நல்வாழ்வைக் காண வேண்டுமா? இதுபோன்ற பாதையைத்தான் நமது சாஸ்திரங்கள் காட்டுகிறதா? மனம் மகிழ்ச்சியடைய சுலபமான வழி ஏதும் இல்லையா? என கேட்டார். இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் உடலை வருத்திக்கொண்டு மெய், வாய், கண், செவி, மூக்கு ஆகியவற்றை அடக்கும் முறையில்தான் ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை.
தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் இருளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் சுலபமாக விடுபடலாம் என போதித்தார். இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து யமதீபம் ஒன்றை ஏற்றிவைக்க வேண்டும். யமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து அகாலமரணம் சம்பவிக்காமல் காத்திடும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசி அன்று நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும். எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்று கூறினார். இப்படித்தான் தீபாவளி திருநாள் தோன்றியது. தீபாவளியன்று இரவில் லட்சுமி குபேர பூஜை செய்து, குபேர வாழ்வை பெறலாம். யமுனையின் சகோதரனான யமதர்ம ராஜாவை தீப ஒளிகளால் பூஜித்து நீண்ட ஆயுளைப் பெறலாம். இந்த பூஜையை சகோதரிகள் சகோதரனுக்காக இந்த பூஜையை செய்ய வேண்டும். அமாவாசை அன்று கேதார கவுரி விரதம் இருந்து அம்பிகையை வழிபட வேண்டும். தீபாவளி என்பது சாதாரண பண்டிகை அல்ல. ஏதோ நீராடி புத்தாடை உடுத்தி, பண்டங்களை உண்பது மட்டும் தீபாவளி அல்ல. அப்படி செய்யும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.

கங்கா ஸ்நானத்தின் தத்துவம்: தீபாவளி திருநாளில் புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அதே முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால் நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணன் நரகாசுரனை அழித்த நாளே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள் என்று பெயர் பெற்றது. அன்று சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்திற்குமே கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின்படி அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால்தான் அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று சொல்கிறார்கள்.
தீபாவளி குளியல்: தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும்; புண்ணியம் உண்டாகும். எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் அன்று ஒன்று சேர்வதால், அன்று எண்ணெய்க் குளியல் செய்பவர்க்கு கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப்பயன் கிட்டும்! தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் கங்கா ஸ்நானம் செய்த பின் புத்தாடை உடுத்தி, பல வகையான பலகாரங்கள் செய்து விஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும் படைத்து பூஜிக்க வேண்டும். தீபாவளியன்று எண்ணெய்யை மனைவி தேய்த்துவிடுவது மிகவும் சிறப்பு என்று கருதப்படுகிறது. வெந்நீரில் குளிக்க வேண்டும்.
பலகாரம் படைப்பது ஏன்?
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு) படைக்கும் படையல் ஆகும். அன்று பிதுர்கள் வருவதாக ஐதீகம். நரகத்தில் இருப்பவர்கள் கூட அன்று விடுதலையாகி வீடுகளுக்கு வருவர் என்று புராணங்கள் கூறுகின்றன. இதனால்தான் நரக சதுர்த்தி என்று பெயர் ஏற்பட்டது. தீபாவளியன்று சூரிய உதயத்துக்கு நான்கு நாழிகைக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். நான்கு நாழிகை என்றால் 96 நிமிடம். அதாவது 6 மணிக்கு சூரிய உதயம் என்றால், அதிகாலை 4.20க்கு குளித்துவிட வேண்டும்.
பாசத் திருவிழா: வட மாநிலங்களில் தீபாவளியை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். முதல் நாள் லட்சுமி பூஜை, இரண்டாம் நாள் நரகசதுர்த்தி, மூன்றாம் நாள் முழுக்கு, ஐந்தாம் நாள் எமதர்ம வழிபாடு என கொண்டாடுகின்றனர். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். அவளுக்கு எமன் தீபாவளி அன்று பரிசுகளை வழங்கி மகிழ்வான். அன்று தங்கை அண்ணனுக்கு விருந்து கொடுப்பாள். இதைக் கொண்டாடும் வகையில் வட மாநிலங்களில் தங்கைகளுக்கு அண்ணன்மார் பரிசு வழங்கும் நாளாக தீபாவளி விளங்குகிறது. மூன்றாம் நாள் திருவிழாவில் இளம்பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் அமிழ்ந்து விடாமலும், அணைந்து விடாமலும் பார்த்துக் கொள்வார்கள். அப்போதுதான் இந்தாண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
வித்தியாசமான தீபாவளி வழிபாடு: ராஜஸ்தானில் தீபாவளியன்று பெண்கள் உடல் முழுவதும் எனாமல் நகைகளை அணிந்து கொண்டு வண்ண ஆடைகள் அணிந்து நடனம் ஆடி மகிழ்வர். தீபாவளியன்று ராமரை வழிபடுவது ராஜபுத்திரர்களின் வழக்கம். மத்தியபிரதேசத்தில் குபேர பூஜை நடைபெறும். குபேரனை வழிபட்டால், பணத்தட்டுப்பாடு வராது என்பது அந்த மாநில மக்களின் நம்பிக்கை. வங்காளத்தில் காளிபூஜை நடைபெறும். தீபாவளியை இந்த மாநிலத்தில் மகா நிசா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். காளியின் உக்கிரத்தை சங்கரன் தணித்த நாளாக தீபாவளியை கொண்டாடுகின்றனர். இமாச்சலபிரதேசத்தில் பசுக்களை அலங்கரித்து வழிபடுவர். ஜைனர்கள் தீபாவளி நன்னாளை மகாவீரர் வீடு பேறு அடைந்த நாளாகத் கொண்டாடுகின்றனர். சீக்கியர்கள் சீக்கிய மதகுரு, குருநானக் பூத உடல் நீத்து புகழுடம்பு எய்திய நாளாக கொண்டாடுகின்றனர். சீனாவில் ஹீம்-ஹூபா மியான்மரில் தாங்கிஜீ, தாய்லாந்தில் லாய்கிரதோஸ் ஸ்வீடனில் லூசியா ஆகிய விழாக்கள் நமது நாட்டு தீபாவளியை போலவே விளக்குகளை வரிசையாக வைத்துக் கொண்டாடுகின்றனர்.
சர்வமத பண்டிகை: தீபாவளியை இந்து மதத்தினரும் மட்டும் கொண்டாடுவதில்லை, பவுத்த, ஜைன மதத்தினரும் கொண்டாடுகின்றனர். ஆசியாவிலேயே தீபாவளிதான் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகையாக திகழ்கிறது. ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை, திரயோதசி, சதுர்த்தசி, பிரதமை ஆகிய நான்கு நாட்களும் தீபாவளியோடு தொடர்பு கொண்டவையாகும். வடமாநிலங்களில் அமாவாசை, பிரதமையிலும் தென் மாநிலங்களில் திரயோதசி, சதுர்த்தசியிலும் தீபாவளி கொண்டாடுகின்றனர்.
தீபாவளிக்கு குபேர பூஜை: செல்வம் என்பது பணம், வீடு, வாசல், நகை என்பது மட்டுமல்ல. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் முன்னோர் சொல்லி வைத்திருக்கின்றனர். கோடிக்கணக்கில் கொட்டி வைத்திருக்கும் பணக்காரர்களில் பெரும்பகுதியினர் சாதாரண சர்க்கரை போட்டு டீ குடிக்கக்கூட முடியாதவர்களாக இருக்கின்றனர். செல்வம் குவிந்து கிடந்தாலும் சாப்பிடக்கூட வழியில்லை. இதே நிலைதான் ரோட்டில் திரியும் பிச்சைக்காரனுக்கும் இருக்கிறது. உழைக்க மனம் வராததால் ஒருவன் பிச்சை எடுக்கிறான். இந்த இரண்டும் இல்லாமல், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற தத்துவத்தை உணர்த்துவதே குபேர பூஜை. பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது குபேரன் உருவானான். லட்சுமி தேவியின் அருளைப் பெற்ற அவன், வற்றாத செல்வத்துக்குச் சொந்தக்காரன் ஆனான். இவனது எஜமான் ஸ்ரீமன் நாராயணன். திருப்பதி தலத்தில் சீனிவாசனாக அவதாரம் செய்து பத்மாவதியை திருமணம் செய்யும் வேளையில், எஜமானுக்கு ஒரு கோடியே 14 லட்சம் பொன் கடன் கொடுத்து பத்திரமும் எழுதி வாங்கிக்கொண்டவன் குபேரன். இந்தக் கடனுக்கு வட்டியாக திருப்பதி கோயிலில் குவியும் உண்டியல் பணத்தை பெற்றுக்கொண்டிருக்கிறான். குபேர பூஜையை என்று கொண்டாடுவது என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. சிலர் தீபாவளிக்கு முதல்நாளும், சிலர் தீபாவளி அன்றும், நடத்துகின்றனர். ஆனால், தீபாவளிக்கு மறுநாள் இந்த பூஜையை நடத்துவதே சிறந்ததுவளர்பிறையில் நல்ல காரியங்களைச் செய்வது வழக்கம். தீபாவளி அமாவாசை நாளில்தான் பெரும்பாலும் வருகிறது. எனவே, அதற்கு அடுத்த நாள் குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ விருத்திக்கு வழிவகுக்கும்.
குபேர பூஜையை ஒட்டி தங்க நகைகள் வாங்கலாம். திருமணங்கள் எல்லா மாதங்களிலும் (சூன்ய மாதங்கள் தவிர) நடந்தாலும் ஐப்பசியில் நடத்துவது விசேஷ அம்சம். ஐப்பசியிலிருந்து குளிர்காலம் துவங்குகிறது. இதிலிருந்து கார்த்திகை, மார்கழி, தை வரை கடும் குளிர் இருக்கும். இந்தக் குளிரால் உடலில் நோய்கள் ஏற்படும். ஐப்பசியில் திருமணம் முடிக்கும் தம்பதிகள் மணவாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பர். மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவனை எந்த நோயும் அண்டுவதில்லை. இதனால்தான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றனர். அது மட்டுமல்ல! ஐப்பசியில் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு மழலைச் செல்வமும் விரைவிலேயே கிடைத்துவிடும் என்பதும் பொதுவான நம்பிக்கை. பூஜை செய்யும் முறை: கோயில்களில் யாகம் செய்யும்போது ஒரு மந்திரம் ஒலிப்பதை பலரும் கேட்டிருக்கலாம். ராஜாதி ராஜாய பரஸ்கஞஸாஹினே, நமோ வயம்வை சரவணாய குரம்ஹே ஸமாகா மான்காம காமா யமக்யம் காமேஸ்வரோவை சரவணோததாது - குபேராய வைஸ்வரவணாய மஹாராஜாய நம என்பதே அந்த ஸ்லோகம். யாகம் ஒன்றை நடத்தும்போது குபேரனை அந்த இடத்திற்கு அழைக்கின்றனர். அந்தக்கோயில் கும்பாபிஷேகம் நடப்பதன் மூலம் ஊரே செழிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். லட்சுமி சிலை அல்லது லட்சுமி படம், லட்சுமியுடன் கூடிய குபேரனின் படம் ஆகியவற்றை பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும். படத்தின் முன் வாழை இலை போட்டு, சாணப்பிள்ளையாரை வையுங்கள். இலையில் நெல்லை குவியலாக கொட்டுங்கள். வசதி உள்ளவர்கள் தங்க நகைகளை வைக்கலாம். வெற்றிலை, பாக்கு, பழம், பஞ்சாமிர்தம், இனிப்பு பதார்த்தங்கள் படையுங்கள்.

பின்னர் திருவிளக்கேற்றி பூஜை செய்யுங்கள். வடக்கு நோக்கி நின்று குபேரனை நினைத்து வழிபடுங்கள். எனக்கு கொடுத்த இந்த வாழ்விற்கு நன்றி. இது என்றும் நிலைத்திருக்க உன் அருள் வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள். வறுமையான நிலையில் இருப்பவர்கள், குபேரனே! எனது குடும்ப வறுமை நீங்கி போதுமான செல்வம் கிடைத்திட அருள் செய் என்று வேண்டுங்கள். பூஜைக்கு பிறகு, ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள். கோயிலுக்கு சென்று மகாலட்சுமியை வழிபட்டு வாருங்கள். வற்றாத செல்வம் வீட்டில் தங்கும். லட்சுமி கடாட்சமாய் நம் வீடு என்றும் திகழ குபேர பூஜை வழிவகுத்துக் கொடுக்கும். குபேர பூஜையன்று எதுவுமே செய்ய வசதி இல்லாதவர்கள், பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே போதும்; கோடி புண்ணியம் தேடி வரும். பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜையை குபேர பூஜையாகக் கருத சாஸ்திரத்தில் இடமிருக்கிறது. செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம். சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வைத்திருக்க வேண்டும். வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும். இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.
 நன்றி: தினமலர்



Comments

  1. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2