எதிரிகளை அழிக்கும் எட்டுக்குடி வேலவன்! கந்தசஷ்டி ஸ்பெஷல்!
ஏறுமயிலேறி விளையாடும் முகம்
ஒன்று
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம்
ஒன்று
கூறும் அடியார்கள்
வினைதீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல்வாங்கி நின்ற
முகம் ஒன்று
மாறுபடு சூரரை வதைத்த முகம்
ஒன்று
வள்ளியை மணம் புணர வந்தமுகம்
ஒன்று
ஆறுமுக மான பொருள் நீயருளல்
வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்த
பெருமாளே!
காஷ்யப முனிவரின்
புத்திரர்களான சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் கடும்தவமிருந்து
சிவபெருமானிடம் பலவரங்கள் பெற்றனர். ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத
பிள்ளையால்தான் தனக்கு அழிவு வரவேண்டும் என்று கேட்டான் சூரபத்மன்.
அதனால்தான் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து
புறப்பட்ட சுடரில் இருந்து உருவான சிவகுமாரன் கந்தவேள் சூரபத்மனை அழிக்க
உருவெடுத்தார். சின்னஞ்சிறு பாலகனான குமரனை பார்த்த சூரபத்மன், ஏ,சிறுவா நீயா என்னை கொல்லவந்தாய்? இங்கு
நிற்காதே! ஓடிவிடு! என்று பரிகாசம் செய்தான். தன்னுடைய உருவத்தை பெரிதாக்கியும்
பயமுறுத்தினான். மகாசமுத்திரமாக உருமாறினான் சூரபத்மன். உடனே நூறு அக்னிஅம்புகளை
ஏவி கடலை பின் வாங்கச் செய்தார் குமரன். ஆயினும் ஒரு சிறுவனை கொல்வதா என்று
தயங்கினான் சூரபத்மன். அது தனது வீரத்துக்கு இழுக்கு என்றும் பாவமென்றும் அவன்
கருதினான்.
சூரன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப
முயன்றான். அந்த மரத்தினை சக்திவேலால் இரண்டாக பிளந்த முருகன், ஒன்றை மயிலாகவும்,ஒன்றை
சேவலாகவும் மாற்றி தன் வாகனமாகவும் கொடிச்சின்னமாகவும் ஏற்றார்.
வேல் என்பது கொல்லும் ஆயுதம் அல்ல. அது
ஆணவத்தினை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால்தான் வேல்
வேல் வெற்றிவேல் என்று முழங்குகிறார்கள். அந்த வேலானது பிறவித்துன்பத்தை அழித்து
முருகனின் திருவடியில் சேர்க்கும் மகிமை கொண்டது. அத்தனை பெருமையுடைய கந்த வேளினை
கந்த சஷ்டி தினத்தில் தரிசிப்பது மகா புண்ணியமாகும்.
நமது எண்ணத்திற்கு ஏற்ப உருவத்தை மாற்றிக்
கொண்டு காட்சிதருபவர் எட்டுக்குடி சுப்ரமண்ய சாமி. குழந்தையாக எண்ணிப்பார்த்தால்
குழந்தைவடிவிலும் முதியவராக நினைத்துபார்த்தால் வயோதிக வடிவிலும் இளைஞனாக
எண்ணிப்பார்த்தால் இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார். சூரனை அழிக்க
அம்பெடுக்கும் கோலத்தில் இவர் அருள் பாலிப்பதால் இத்தலத்தில் கந்த சஷ்டி
விசேசமானது.
இங்கு சத்ரு சம்ஹார திரிசதை என்னும் சிறப்பு
பூஜை நடத்தப்படுகிறது. எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீர இப்பூஜையை நடத்துவார்கள்.
எதிரிகளால் ஏற்படும் நியாயமான துன்பங்களுக்காக மட்டுமே இப்பூஜையை செய்ய வேண்டும்.
எதிரிகளை அழிக்கும் நோக்கத்துடன் செய்யக் கூடாது. தேய்பிறை சஷ்டியில் இந்த பூஜை
செய்தால் நல்ல பலன் கிடைக்கும். பயந்த சுபாவம் உள்ள குழந்தைகளை இத்தலத்திற்கு
அழைத்து வந்து முருகனை வழிபட்டால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை!
எல்லோர் வீடுகளிலும்
அதிகாலையில் ஒலிக்கும் கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலம் எது தெரியுமா? ஈரோடு
மாவட்டம் சென்னிமலை சுப்ரமண்ய சுவாமி கோயில்தான்.
இந்த கவசத்தை இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள்
காங்கேயத்தை அடுத்த மடவிளாகத்தை சேர்ந்தவர். இவர் மைசூர் தேராச உடையாரின்
காரியஸ்தர். கவசத்தை அரங்கேற்ற வேண்டிய இடம் சென்னிமலைதான் என்பதை முருகன் அருளால்
உணர்ந்தார். அதன்படி அங்கே அரங்கேற்றினார். சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக என்னும்
வரிகள் சென்னிமலையை குறிக்கும். சிரம் என்ற சொல்லுக்கு தலை என்று பொருள், சென்னி
என்பதும் தலை, மலைகளில் தலையாயது சென்னிமலை என்று பொருள் படும்.
சிறப்பு மிக்க சென்னிமலை முருகனை கந்த சஷ்டி
தினத்தில் வழிபடுதல் சிறப்பாகும்.
வாரியார் வாக்கு!
முழுமதி போன்ற ஆறு முகங்களும் ஒளிவீசும் 12
மலர்விழிகளும் வைரம் பதித்த செஞ்சுட்டி போன்ற திருவாபரணங்களும் ரத்தின குண்டலங்கள்
அணிந்த 12 காதுகளும் செந்தாமரை மலர்ந்தது போன்ற 12 திருக்கரங்களும் பவள மலை மேல்
வெள்ளியருவி ஓடுவது போன்ற திருமேனியில் மிளிரும் முப்புரிநூலும் புகழ்பெற்ற
ஆடைகளும் அரைஞான் மணிகளும் பலவினை அகற்றும் பாதாரவிந்தங்களும் கொண்ட அவனது திரு
உருவத்தின் பேரழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
ஒரு பெரிய நகரத்திற்கு ஆறுவழிகள்; அவை பல
இடங்களில் இருந்து புறப்பட்டு பலவகையாக வளைந்து வருகின்றன. முடிவில் அவை அந்த
நகரத்திலேயே வந்து முடிகின்றன. அது போல ஆறு சமயங்களும் பல்வேறு வகையாக தொடங்கி
பல்வேறு விசயங்களை போதித்தாலும் இறுதியில் அவை முழுமுதல் கடவுளான
முருகப்பெருமானிடம் முடிவடைகின்றன. ஆறு சமயத்திற்கு தலைவன் என்பதாலேயே குமரனுக்கு
ஆறு திருமுகங்கள். அந்த ஆறு திருமுகங்களிலும் ஈஸ்வரனுடைய குணங்கள் இலங்குகின்றன.
கந்த சஷ்டி இன்று முருகர் ஆலயங்களில் விசேஷமாக
கொண்டாடப்படுகின்றது. முருகனின் பேரழகை தரிசித்து பெருங்கருணை பெற்றுய்ய கந்தன்
ஆலயங்களுக்கு செல்வோம்! கந்தன் அருள் பெறுவோம்!
எட்டுக்குடி தகவல் அருமை.
ReplyDeleteஓம் சரவணபவா !
வணக்கம் சகோதரரே.
ReplyDeleteஎட்டுக்குடி முருகனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். வாரியின் வாக்கும் அருமை. சூரசம்காரம் இன்று விராலிமலையில் பார்த்தேன். வீட்டுக்கு வந்தவுடன் தங்கள் பதிவும் கண்டது மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி. நல்லதொரு பதிவுக்கு பாராட்டுக்கள்.