உங்கள் தமிழ் அறிவு எப்படி? பகுதி 32

உங்கள் தமிழ் அறிவு எப்படி? பகுதி 32


வணக்கம் வாசக பெருமக்களே! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! சென்ற பகுதியில் ஒலிமயக்கத்தில் ந-ன-ண ஒலிமயக்கம் பார்த்தோம்.
   இந்த பிழை பெரும்பாலும் சிலருக்குத்தான் ஏற்படும். ஓரளவுக்கு சகித்தும் கொள்ளலாம். ஆனால் உச்சரிப்பில் ஏற்படும்  ல-ழ-ள ஒலி மயக்கம் என்பதை பொருத்துக்கொள்ள முடியுமா? “ழ” என்னும் ஒலி தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்து. இதை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை எனில் அப்புறம் தமிழனாய் வாழ்ந்துதான் என்ன பயன். நம் தாய்மொழியை சரியாக உச்சரிக்க கற்றுக் கொள்ளாமல் ஆங்கில மொழிகளில் சரியாக உச்சரிக்க நாம் பழகி வருகிறோம். இது நம் தாய்மொழிதானே என்று அசிரத்தையாக இருந்து விடுகிறோம்.
     ஒருபாடகர், மேடைப்பேச்சாளர், செய்தி அறிவிப்பாளர், போன்றோருக்கு இந்த ல-ழ-ள ஒலி வேறுபாடு அறிந்திருக்க வேண்டிய ஒன்று. வாழைப்பழத்தை வாளப்பழம் என்பதும் தமிழை தமில் என்றும் வலியை வளி என்றும் உச்சரித்தால் தமிழ் அறிஞர்கள் மட்டுமல்ல தமிழ் ஆர்வலரும் வேதனைப்படுவர். தனியார் தொலைக்காட்சிகள் இந்த உச்சரிப்பு விஷயத்தில் கவனத்தில் கொண்டு தொகுப்பாளர்களை தேர்ந்தெடுக்க முயற்சிக்க வேண்டும். இந்த தொகுப்பாளினிகளின் கொஞ்சல் தமிழ் கேட்க சகிக்க வில்லை! மேலும் சென்னைவாசிகள் பலருக்கு தமிழ்வார்த்தைகள் மறந்துவிட்டன போலும். மார்னிங் ஃபோர் தர்ட்டிங்கு எழுந்து வாக்கிங்க் போனேன்! ஈவினிங் ஏர்லியா வந்துடறேன் மூவிக்கு போலாம்! என்றும் தமிழை ஆங்கிலம் கலந்து பேசும் கலாசாரத்தில் வாழ்ந்துவருகிறோம். இந்த நிலையில் உச்சரிப்புப் பற்றி அக்கறை இருக்காதுதான். ஆனாலும் அறிந்துகொள்வோம்! ஆர்வமுள்ளோர் பின்பற்றுவோம்.
     சொற்களின் பொருள் அறிந்து கொண்டால் உச்சரிப்பு சரியாக வரும். ஒரேமாதிரியான சொல் வெவ்வேறு பொருளினை கொண்டிருக்கும் அதில் சிலவற்றை காண்போம்.
   ஆல்- ஆலமரம் ஆள்- ஆட்சிசெய், ஆழ்- ஆழமாக
   விலை- கிரயம் விளை- முளைத்தல், விழை- விருப்பம்
   கலை- அழகு  களை- களைத்துப்போடுதல், களைப்பு, பயிர்க்களை, கழை- மூங்கில்
தலை- தலைமைஉறுப்பு தளை- கட்டு , தழை – இலைத்தழை
வலி- வேதனை, வலிமை  வளி- காற்று வழி- பாதை
ஒலி –சப்தம், ஒளி- வெளிச்சம், மறைந்துகொள், ஒழி- அழி
அலி- ஆண்பெண்ணற்றதன்மை அளி- கொடு அழி –அழித்தல்
வலை – பின்னல் வளை- பொந்து, வளையல், வழை –இளமை,புதுமை

இது போன்று சொற்களின் பொருளை அறிந்துகொண்டால் ஒலிமயக்கத்தை தவிர்க்கலாம்.


   கடலிலே மரவுரல் உருளுது பிறழுது

  வாழைப்பழம் அழுகி கொழகொழத்து நழுவிக் கீழே விழுந்தது.

   தேர் உருள தேங்காய் உருள தேரடி மணி நுனி உருள

 ஓடும் நரிகளில் ஒரு நரி கிழநரி கிழநரி முதுகினில் ஒருபிடி நரைமயிர்.

இந்த வாக்கியங்களை அடிக்கடி தமிழறிந்த பெரியவர் முன் சொல்லிக் காட்டி பழக ஒலிப்பிழைகள் தவிர்க்கலாம். அடிக்கடி சொல்லி பழகினால் தமிழ் நாவில் வளைய வரும்.

அடுத்த வாரம் சொல்லின் முதலில் வரும் எழுத்துக்கள் குறித்துப்பார்க்கலாம்.

இனி இலக்கிய சுவை.

ஒரு சமயம் கவிச் சக்ரவர்த்தி கம்பர் கவிபாடி களைத்து ஒரு வீட்டில் ஓர் அறையில் படுத்து இருந்தார். அது தெற்குபார்த்த வீடு. வடக்குப்பார்த்த மச்சைப்பார்க்கினும் தெற்குப்பார்த்த குச்சு நல்லது என்பார்கள்.
  தென்றல் காற்று கதவை தட்டி மோதியது. அசதியும் வசதியும் சேர்ந்து கண் துயின்று கொண்டிருந்த கம்பர் கண்விழித்து எழுந்தார். யாராக இருந்தாலும் தூங்குபவர்களை எழுப்பினால் கோபம்தான் வரும்.கதவு தட்டும் ஓசையில் எழுந்த கம்பர் யார் கதவை தட்டியது என்று சினத்துடன் பார்த்தார். யாரும் இல்லை! காற்றுதான் வந்து கதவை தட்டியது என்று அறிந்தார். மீண்டும் படுத்தார். இம்முறையும் காற்று பலமாக வீசி படார் என்ற ஓசையோடு கதவை மோதியது.
   தம்மை தொந்தரவு செய்த தென்றல் காற்றுக்கு கம்பர் கவி பாடுகிறார்.


    கொற்கையான் மாறன் குலசே  கரப்பெருமாள்
    பொற்கையான் ஆனகதை போதாதா? கற்கமல
    மன்றலே வாரி மணவாசலை அசைத்த
    தென்றலே ஏன் வந்தாய் செப்பு?


விளக்கம்: மதுரையை ஆண்ட குலசேகரப்பாண்டியன் இரவு நகர் சோதனையின் போது கீரந்தன் என்ற அந்தணன் மனைவியிடம் இவ்வாறு கூறியதை கேட்டான். நான் காசி போவேன் உன்னை நம் பாண்டியன் உத்தம வேந்தன் காப்பான் என்று. அந்தணன் காசி சென்றதும் பாண்டியனும் அந்த வீட்டை கண்காணித்து வந்தான். ஒருநாள் இரவில் உள்ளே ஆண்குரல் கேட்டது. அந்தணன் தான் காசி போய் திரும்பிவிட்டு உள்ளே இருந்தான். அதை அறியாத மன்னன் கதவை தட்டினான். உடனே அந்தணன் நான் இந்த வீட்டு மறையோன். யார் கதவை தட்டுவது என்று கேட்டான்.
    அந்தணன் மனைவி மீது ஐயுறுவானோ என்று மன்னன் எல்லார் வீட்டிலும் கதவைத் தட்டிவிட்டு சென்றுவிட்டான். மறுநாள் காலை அவையில் இந்த பிரச்சனை எழுந்தது. நேற்று நள்ளிரவில் மறையோர் தெருவில் அனைவர் வீட்டிலும் எவனோ கள்வன் கதவைத் தட்டி இடர்படுத்தினான் என்று மன்னனிடம் அந்தணர்கள் முறையிட்டனர்.
   மன்னன் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்டான். நியாயவான்கள், கதவுதட்டினவனின் கையை வெட்ட வேண்டும் என்று சொன்னார்கள். உடனே மன்னன் நடந்ததை உறைத்து தன் உடைவாளை எடுத்து கரத்தை வெட்டிக் கொண்டான்.
    உதிரம் வழிந்தோட சபையோர் மன்னனின் நெறி தவறா மாண்பை வியந்தார்கள். அவனை பாராட்டி பொன்னால் கை செய்து வைத்தார்கள். அதனால் பொற்கை பாண்டியன் ஆனார். இதை சொல்லி ஏ தென்றலே கதவைத் தட்டி கையிழந்தானே பாண்டியன் அவனுடைய கதை உனக்குத் தெரியாதா? நீ தென்னாட்டில் தோன்றும் தென்றல் இதை அறியாதிருக்க முடியாது. அறிந்தும் கதவை தட்டுவது ஏன்? இனி கதவை தட்டாதே என்று பாடுகிறார் கம்பர்.

என்ன அருமையான கவிதை பார்த்தீர்களா? மீண்டும் ஒருமுறை ரசித்து படியுங்கள்! மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் நிறைய தகவல்களுடன் சந்திப்போம்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!





Comments

  1. அழகான பதிவு அண்ணா...


    இலக்கிய சுவை அழகு...

    ReplyDelete
  2. காலப்போக்கினில் தமிழ் எழுத்து உச்சரிப்புகளை மறந்துதான் போனோம் நண்பரே...
    இப்படியான செய்முறைப்பயிற்சி கிடைக்கையில் நம் உச்சரிப்பு சீரடைந்து
    மொழியாளுமை செழிக்கும்..
    வழிவகை செய்ததற்கு நன்றிகள் பல..
    இலக்கியச்சுவை நெஞ்சில் இனித்தது...

    ReplyDelete
  3. கை இழந்த பாண்டியன் கதை அருமை. நாபிறழ் பயிற்சி, நா நெகிழ பயிற்சிக்கான வாக்கியங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு நல்ல தமிழ் உச்சரிப்பை கற்றுக்கொடுக்க வேண்டும். நல்ல பதிவு

    ReplyDelete
  4. அருமையான கவிதை - விளக்கமும்... நன்றி.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. தங்களின் வழிகாட்டுதல் என்னைப் போன்றோருக்கும் இலக்கணம் பிழையின்றி எழுத முடியும். என்ற நம்பிக்கை வருகிறது

    ReplyDelete
  6. தெரியாத தமிழ் வார்த்தை அர்த்தங்களுடன் - ஒரு மாணவன் போல படிக்கிறேன் இதை....!

    ReplyDelete
  7. வேற்று மொழி பேசும் இன் நாட்டினிலே இருந்து கொண்டு நாமும்
    தான் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எழுதத் துடிக்கும் போது
    பல இடங்களில் பிழைகளையும் தழுவிச் செல்கின்றோம் .தங்களின்
    இப் பகிர்வானது எமக்கும் தான் மிகவும் பயன் தரக் கூடிய ஒன்று .அருமை !சிறப்பான இப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2