சூறாவளியான ஹையானும் பிசுபிசுத்த காமன்வெல்த்தும்!கதம்ப சோறு பகுதி 13
கதம்ப சோறு பகுதி 13
சூறாவளியான ஹையானும்
பிசுபிசுத்த காமன்வெல்த்தும்!
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹையான் என்ற பயங்கர
சூறாவளி தாக்கியதில் பத்தாயிரத்துக்கும் அதிகமான பேர்கள் பலியாகிவிட்டனர். மணிக்கு
315 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியில் பிலிப்பைன்ஸ் மிக மோசமாக
துண்டிக்கப்பட்டுவிட்டது. 80சதவீத வீடுகள் சேதமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப
இயலாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் மக்கள். மின்சாரம், குடிநீர், உணவு என்று
எல்லாமே இல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண உதவி எதிர்நோக்கி உள்ளனர்.
காமன்வெல்த் புயல் வேகமாக வீசாமல்
பிசுபிசுத்துப்போய்விட்டது! தமிழக அரசியல்கட்சிகள் காமன்வெல்த் மாநாட்டிற்கு
பிரதமர் போகக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்க இலங்கையை பகைத்துக் கொள்ள விரும்பாத
மத்திய அமைச்சரவை சல்மான் குர்ஷித்தை அனுப்பி இலங்கையையும் தமிழகத்தையும்
சமாதானப்படுத்த முயன்றிருக்கிறது. இது இரண்டுமே தோல்விதான். இந்த நடவடிக்கையில்
ஒன்று உறுதியாக காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்து இலங்கையை வன்மையாக
கண்டித்திருக்க வேண்டும். அல்லது கட்சிவேறு, உள்நாட்டு அரசியல் வேறு, என்று
மாநாட்டிற்கு சென்று எதையாவது உருப்படியாக சாதித்து இருக்க வேண்டும். இரண்டும்
கெட்டான் நிலைமை எடுத்தமையால் இரண்டுபுறமும் கெட்டபெயர்தான் பிரதமருக்கு.
சிக்கலாகும் சிக்கன் பிசினஸ்!
தமிழகத்தில் மாதம் தோறும் 5கோடியிலிருந்து
6கோடி கிலோவரை கறிக்கோழி உற்பத்தி நடக்கிறது. இதில் 40சதவீதம் கேரளாவில் விற்பனை
செய்யப்படுகிறது. கேரளாவில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க நுழைவுவரியை
கேரளாவிதித்தது. விற்பனைவிலையை கருத்தில் கொள்ளாமல் தோராயமாக 14.5 சதவீதம் வரி
விதிக்கிறது. கிலோவுக்கு 95 ரூபாய் என விலை நிர்ணயித்து 14 ரூபாய் நுழைவுவரி
வசூலிக்கிறது கேரள அரசு. ஆனால் பண்ணையில் விற்பனைவிலை கிலோவுக்கு 30ரூபாய் மட்டுமே
கறிக்கோழிக்கான உற்பத்தி செலவுகளும் அதிகரித்து உள்ள நிலையில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள்
கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறார்களாம். தற்போது நிலவரப்படி கிலோவுக்கு
45ரூபாய்வரை நஷ்டத்தில் விற்பதால் பெரும்பாலான கோழிப்பண்ணைகள் மூடுவிழா
கண்டுவிட்டன. இதை தமிழக கால்நடைத்துறை அமைச்சரும் முதல்வரும் இதுவரை கண்டுகொண்ட
பாடில்லையாம்! இதே நிலை தொடர்ந்தால் சிக்கன் பிசினஸ் நடப்பதே சிக்கல்தான்!
உலகபணக்காரர்களில் 103 பேர்
இந்தியர்
உலக அளவில் அதிக கோடீஸ்வரர்கள் வசிக்கும்
நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 515
கோடீஸ்வரர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஜெர்மன் 148,பிரிட்டன் 135,
ரஷ்யா 108 பேர்களுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. இந்த பட்டியலில் 103
கோடீஸ்வரர்களுடன் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. மும்பையில் மட்டும் 30
கோடீஸ்வரர்கள் உள்ளதாக அந்த பட்டியல் தெரிவிக்கிறது. நியுயார்க், ஹாங்காங்,
மாஸ்கோ, லண்டனுக்கு அடுத்தபடியாக கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் நகரமாக ஐந்தாவது
இடத்தில் மும்பை உள்ளது. ஆங்கிலேயர்களும், ஆட்சியாளர்களும் சுரண்டியபிறகும் இந்த
நிலைமை என்றால் முன்பு எப்படி இருந்திருப்போம் என்று யோசித்தாலே கண்ணை கட்டுது
இல்லே!
இரைப்பை புற்றுநோயை
குணப்படுத்தும் பசும்பால்!
பசும்பால் குடிப்பதால் இரைப்பை புற்றுநோய்
குணமாகும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பாலில் உள்ள எல்.எப்.சின்.பி25
என்னும் பெப்டைடு மனிதர்களின் வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்துகிறது.
இந்த பெப்டைடை இரைப்பை கேன்சர் செல்லுக்கு அருகில் செலுத்திய ஒருமணிநேரத்தில்
புற்றுநோயின் செல்லின் ஜவ்வுக்குள் நுழைவதையும் 24 மணி நேரத்தில் கேன்சர் செல்லை
சுருக்கி சிறிதாக்கி தன்னுடைய வேலையை முடித்துக் கொள்வதை விஞ்ஞானிகள் ஆய்வில்
தெரியவந்துள்ளது. விரைவில் இந்த பெப்டைடை பயன்படுத்தி பலவிதமான புற்றுநோய்
மருந்துகளை தயாரிக்கவும் இரைப்பை புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையிலும்
பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் விஞ்ஞானிகள். பால் மருத்துவ குணம் கொண்டதுன்னுதான்
நம்ம முன்னோர்கள் தினமும் குடித்து வந்தார்கள் போல!
சதுரங்க சவால்!
நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திற்கும்,
உலகின் முதல்நிலை வீரர் ஆன நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் இடையிலேனா உலக செஸ்
சாம்பியன் ஷிப் போட்டி சென்னையில் துவங்கி உள்ளது. முதல் இரண்டு சுற்றுக்கள்
டிராவாகி உள்ள நிலையில் 12 சுற்றுகள்
கொண்ட தொடர் ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக செஸ் போட்டியில்
92 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய மொழி பேசாத இருவர் விளையாடுகின்றனர். இந்தியாவில்
முதல் முறையாக உலகசெஸ் சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. 5முறை பட்டம் வென்றவரான வி.
ஆனந்த் ஆறாவது முறை பட்டம் வெல்லும் நோக்கத்துடனும் முதல்முறையாக பட்டம் வெல்லும்
நோக்குடன் கார்ல்சென்னும் களத்தில் இறங்கி உள்ளனர்.
மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!
வாழைத்தார்களை பிடுங்கிக்கொண்டு பொதுஜனம் ஓட்டம்!
சென்னை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை ஏழாம் தேதி
முதல்வர் துவக்கிவைத்தார். விரைவான
வசதியான போக்குவரத்து வசதிக்காக துவக்கப்பட்ட இந்த திட்டத்தில் இரண்டு
வழித்தடத்தில் ரயில்கள் இயங்க உள்ளன. முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை
விமானநிலையம் வரையும் இரண்டாவது வழித்தடம் செண்ட்ரல் ரயில்நிலையம் முதல் செயிண்ட்
தாமஸ் மவுண்ட் வரையும் உள்ளது. இதில்
கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலான மெட்ரோரயில் வெள்ளோட்டத்தை முதல்வர்
கொடியசைத்து துவக்கிவைத்தார். இதற்காக வழியெங்கும் வாழைச்செடிகளும் இளநீர்
குலைகளும் நடப்பட்டு இருந்தன. விழா முடிந்ததும் அகப்பட்டவரை லாபம் என பொதுமக்களும்
அவர்களோடு போட்டிபோட்டு போலிசாரும் வாழைத்தார்கள் மற்றும் இளநீர் குலைகளை
அள்ளிச்சென்றனர். ஏதோ இப்படியாவது அரசு உதவுகிறதே என்கிறீர்களா? ரொம்பசரி!
ஏழை மாணவர்களின் புத்தகவங்கி!
தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் ஒரு
புத்தகவங்கி செயல்பட்டு வருகிறது. 17 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அந்த
புத்தகவங்கியை தொடங்கியவர் பொன்னுசாமி. அவருக்கு வயது தற்போது 84 ஆகிறது. புத்தகம்
வாங்கி படிக்க வசதியில்லாத கல்லூரி மாணவர்களுக்கு இந்த புத்தகங்களை இலவசமாக
வழங்குகிறார்கள். படிப்பு முடிந்ததும் அந்த புத்தகங்களை திரும்ப செலுத்திவிட
வேண்டும். இதற்கென எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இதுவரை இந்த வங்கியின்
மூலம் 1766 மாணவர்கள் பயனடைந்துள்ளதாக கூறும் பொன்னுசாமி சுமார் 9.37 லட்சம்
மதிப்புள்ள புத்தகங்கள் இதுவரை கொடுத்து உதவியுள்ளதாக கூறுகிறார். தற்போது
வங்கியில் உள்ள புத்தகங்கள் 3000 என்கிறார் அவர். உப்புவியாபாரம் செய்து
கொண்டிருந்த அவர் தனது ஆறு பிள்ளைகளுக்கு புத்தகங்கள் வாங்க சிரமப்பட்ட போது தன்னை
விட வறுமையில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்தபோது தான் இந்த வங்கி
உதயமானது. அவருடைய சொந்த ஊரான கீழ ஈரால் மக்களுக்காக தூத்துக்குடியில் வசிக்கும்
மகமை உறுப்பினர்கள் அனைவரும் காசு போட்டு துவங்கி துவக்கத்தில் அவர்களுடைய
பிள்ளைகளுக்கு மட்டும் உதவி தற்போது அனைவருக்கு உதவி வருகிறார்கள். எனக்குப்பிறகு
இந்த வங்கியை செம்மையாக நடத்த இளைஞர்கள் முன்வரவேண்டும் என்பதே பொன்னுசாமியின்
ஆசை! ஆசை நிறைவேற வாழ்த்துவோம்!
விஜய் டீவி ரம்யாவுக்கு
கல்யாணமாம்!
விஜய் டீவியில் கலகலவென வாயாடி நிகழ்ச்சி
தொகுப்பதில் டி.டி பெஸ்ட் எனில் அதற்கு நேர்மாறாக சிறப்பாக நிகழ்ச்சி தொகுப்பதில்
வல்லவர் ரம்யா. அவருக்கு தற்போது திருமணம் நடக்க உள்ளதாம். பிப்ரவரி மாதத்தில்
லண்டனில் சட்டம், பொருளாதார பட்டம் படித்த அஜித் என்பவரை கரம் பிடிக்க உள்ளாராம்
ரம்யா. இது பெற்றோர் பார்த்துவைத்த திருமணம் என்று சொல்லும் ரம்யாவுக்கு
திரைப்படத்தில் நடிப்பதில் ஆசையில்லையாம். விசுவல் கம்யூனிகேசன் படித்து இயக்குனர்
ஆகவேண்டும் என்ற கனவில் இருந்தவர் தொகுப்பாளினி ஆகி விட்டார். வாழ்த்துக்கள்
ரம்யா.
டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
மாவிலையை காயவைத்து பொடியாக்கி பல்
துலக்கிவந்தால் பற்கள் உறுதியாகும். மாவிலையின் துவர்ப்பு சக்தி பற்களுக்கு
நல்லது. வாய்துர்நாற்றம் குறையும்.
தேனில் நெல்லிக்காய் பொடி
கலந்து சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் பிரச்சனை வரவே வராது.
மஞ்சள் தூள் சருமத்திற்கு
பாதுகாப்பானது. இதை இலுப்பை எண்ணெயில் கலந்து சேற்றுப்புண்ணில் தடவி வர சீக்கிரம்
குணமாகும்.
வறட்டு இருமல் குணமாக மாதுளம்
பழச்சாறுடன் இஞ்சிச்சாறு, தேன் கலந்து மூன்றுவேளையும் அருந்திவர இருமல் காணாமல்
போகும். தொண்டையும் இதமாகும்.
பல் கூச்சம் சரியாக
200.மி.லி. நல்லெண்ணெயுடன் 4 சொட்டு கிராம்புத் தைலம் சிறிது மெந்தால், கற்பூர
எண்ணெயை கலந்து தினமும் வாய்க்கொப்பளித்துவந்தால் சரியாகும்.
பிடிச்சு படிச்சது!
ஒரு பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார்
நின்று கொண்டிருந்தது. ஏழைச்சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன்
பார்த்துக் கொண்டிருந்தான்.
இளைஞன் அந்த சிறுவனை பக்கத்தில் அழைத்தார்.
அவன் தோளில் கை போட்டு இது என் அண்ணன் எனக்கு பரிசளித்தது என்றான். சிறுவன்
முகத்தில் வியப்பு.
உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம்
என்று ஆசைப்படுகிறாயா? என்று இளைஞன் கேட்டான்.
அதற்கு சிறுவன் சொன்னான், இல்லை! அப்படியோர்
அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
//அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்!///
ReplyDeleteஇதுவல்லவா தன்னம்பிக்கை. அருமை
கதம்பச்சோறு கலக்கலாக வந்துள்ளது. அத்தனை செய்திகளும் அருமை. டிப்ஸ் டிப்ஸ் சூப்பர். தொடருங்கள். பகிர்வுக்கு நன்றி..
ReplyDelete