விக்கிரமாதித்தனை பிடித்த சனி! பாப்பாமலர்.

விக்கிரமாதித்தனை பிடித்த சனி! பாப்பாமலர்.


முன்னொரு காலத்தில் உஜ்ஜைனி நாட்டை விக்கிரமாதித்தன் ஆண்டுவந்தான். அவன் ஒரு சாபத்தால் காட்டில் ஆறுமாதமும் நாட்டில் ஆறுமாதமும் வசிக்க வேண்டியிருந்தது. விக்கிரமாதித்த மன்னனின் மந்திரியின் பெயர் பட்டி. அவர் விக்கிரமாதித்தனுடைய நண்பரும் கூட. விக்கிரமாதித்தன் வாள் வில் போர்க்கலைகளில் மிகுந்த திறமை உடையவன். உஜ்ஜைனி காளியினுடைய பரமபக்தன்.
        அவன் மந்திரியிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு காடாறுமாதம் செல்லும்வழியில் காளி கோயிலை அடைந்து வணங்கினான். அப்போது காளி அவன் முன் பிரத்யட்சமாகி விக்கிரமாதித்தா! இன்றிலிருந்து ஏழரை வருஷங்கள் உனக்கு சனி தசை ஆரம்பிக்கிறது. உன்னை ஆட்கொள்ள சனீஸ்வரன் வந்து கொண்டு இருக்கிறார். அவர் வந்ததும் எங்கு வந்தீர் என கேள். உன்னிடம் ஏழரை ஆண்டுகள் அதிகாரம் செலுத்த வந்தேன் என்பார். நீ அவரை வணங்கி சுவாமி ஒரே நேரத்தில் என்னை பீடித்தால் என்னால் தாங்க முடியாது. தங்களின் கட்டளைப்படியே நடந்துகொள்கிறேன் என்று பணிவாக கூறி அவர் சொல்வதன்படி நடந்துகொள் என்று ஆசி கூறினாள்.
    அதே போல் சனீஸ்வரன் நெருங்கும்போது விக்கிரமாதித்தனும் சுவாமி! என் முன் வந்த காரணம் என்ன? என்றான். சனியும், உன்னை ஏழரை ஆண்டுகள் பீடிக்க வந்தேன்! என, விக்கிரமனும் சுவாமி! அடியேனை ஒரே நேரத்தில் அதிகமாய் நெருக்கினால் தாளமுடியாது. தங்களின் கட்டளைப்படி நடக்க சித்தமாய் இருக்கிறேன் என்றான்.
    சனிஸ்வரனும் ஐம்பத்தாறு தேசத்தை அடக்கி ஆளக்கூடிய நீ மதுராபுரியை ஆளும் மதுரேந்திர ராஜாவிடம் ஏழரை ஆண்டுகள் சேவகனாக இருக்க வேண்டும். ஏழைரை ஆண்டுகள் முடிவில் அவனுக்கு ஏழரை நாழிகைகள் வெற்றிலைப்பெட்டி தூக்கும் அடைப்பத்தொழில் செய்ய வேண்டும் என்றார்.
   விக்கிரமாதித்தனும் அதற்கு ஒத்துக் கொண்டு பட்டியை அழைத்து நாட்டை ஒப்படைத்துவிட்டு பொழுது சாய்ந்ததும் காட்டிற்கு பயணமானான். காட்டில் இந்திரலோகத்து மங்கையான இரத்தின மாலை என்பவளை மணந்துகொண்டான். இந்த இரத்தினமாலை முன்பொருசமயம் விக்கிரமாதித்தன் தேவருலகம் சென்றபோது அவன் மீது மையல் கொண்டாள். தற்சமயம் விக்கிரமாதித்தனை மணம் செய்யும் பொருட்டு இந்திரனால் தேவலோகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவள் ஆவாள். விக்கிரமன் ஏற்கனவே வேதாளத்தை கட்டுப்படுத்தி வைத்தமையால் விக்கிரமன் வேதாளம், மற்றும் இரத்தினமாலை மதுராபுரி நோக்கி பயணித்தனர்.
   வழியில் அனந்தன் என்ற பாம்பும், சலந்திரன் என்ற தவளையும் விக்கிரமாதித்தனுக்கு நட்பாயின.இவை இரண்டும் விக்கிரமாதித்தனோடு மதுராபுரிக்கு பயணம் செய்தன. ஆக ஐவரும் எட்டு நாட்கள் பயணப்பட்டு மதுராபுரியை அடைந்து அங்குள்ள ஒரு சத்திரத்தில் தங்கினர். பின்னர் விக்கிரமாதித்தன் மட்டும் மதுராபுரி மன்னனிடம் சென்று வணங்கினான்.
    விக்கிரமனின் பணிவைக் கண்ட மதுராபுரி மன்னன், நீ யார்? என்று கேட்டான். விக்கிரமனும், அரசே என் பெயர் ஆதித்தன்!  தாங்கள் தர்மவான் என்றும் சுத்த வீரர்களுக்கு தக்க கௌரவம் அளிக்கிறீர்கள் என்றும் கேள்விப்பட்டு தங்களிடம் சேவகனாய் பணி செய்ய வந்தேன் என்று கூறினான்.
 மதுராபுரி மன்னனும் ஆதித்தனின் உடற்கட்டையும் தேஜஸையும் பார்த்து வேலைக்கு சேர்த்துக்கொண்டான். சத்திரத்தில் மானிட உரு எடுத்து சலந்திரன், அனந்தன், வேதாளம் ஆகியோர் தங்கியிருந்தனர். ஆதித்தன் அவர்களிடம் நடந்ததை கூறி அவனுக்கென ஒதுக்கப்பட்ட மாளிகைக்கு அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றான்.
    இரத்தினமாலை பகலில் அவலட்சண உருவமாகவும் இரவில் அழகாகவும் மாறிவிடுவாள். மதுராபுரி மன்னன் அவையில் இவ்வாறு விக்கிரமன் பணியாற்றும்போது அங்கு கார்கோடன், கோடிகன் என்ற இரு சேவகர்கள் விக்கிரமனுக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்களும் விக்கிரமனின் மாளிகைக்கு வந்து போனார்கள். ஆனால் விக்கிரமன் இல்லாத சமயம் அந்த மாளிகைக்கு யாரும் வரமுடியாதபடி அனந்தன் காவல் இருந்தான்.

     இது அந்த சேவகர்களுக்கு வருத்தமாய் இருந்ததால் விக்கிரமனிடம் சொல்லி புலம்பவே விக்கிரமனும் காவலில் அவர்களுக்கு விளக்கு அளிக்கும்படி அனந்தனிடம் கூறிவிட்டான். அதனால் அவர்கள் இருவரும் விக்கிரமன் இல்லாத சமயமும் தங்கு தடையின்றி உலா வந்தனர். அப்படி ஒரு நாள் இரவில் அவர்கள் மாளிகையை சுற்றி வரும்போது இரத்தினமாலையை பார்த்துவிட்டனர். இரத்தினமாலையின் பேரழகு அவர்களை கவர்ந்தது. இத்தனை அழகுடைய பெண்ணை சேவகன் மணந்து இருக்கிறனே என்று பொறாமை கொண்டு தங்கள் மன்னனான மதுராபுரி மன்னனிடம் கூறினர். மன்னர் மன்னா! தங்களுடைய சேவகனான ஆதித்தன் உங்களுக்கு அடிமை ஊழியம் செய்பவன்! அவன் மணந்திருக்கும் பெண்ணோ தேவலோக கன்னிகை போல் இருக்கிறாள்.அவனுடைய பாக்கியமே அவன் அவளை மணந்தது. அந்த அழகி உங்கள் அந்தப்புரத்தில் இருக்க வேண்டியவள் என்று சொன்னார்கள்.
    மதுராபுரி மன்னனும், அந்த அழகியைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். கார்க்கோடன் தன்னுடைய தம்பி வேடத்தில் மன்னனை அழைத்துச் சென்று இரத்தினமாலையை காட்டினான். அவளைப் பார்த்ததும் மதுராபுரி மன்னனுக்கு ஆசை அதிகம் ஆகிவிட்டது. இவளை எப்படியும் தன்னுடைய அரசி ஆக்கிவிட வேண்டும் என்று விரும்பினான். அதற்கு என்ன செய்யலாம் என்று மந்திரியிடம் யோசனை கேட்டான்.
    சேவகனின் மனைவியை அடைவதை விட கேவலம் எதுவும் இல்லை! அந்த பெண்ணிற்காக அவனை எதிர்த்தால் பிற தேசத்தவர்கள் இகழ்ச்சியாக பேசுவார்கள் இதை விட்டுவிடுங்கள் என்று அந்த மந்திரி கூறினான். ஆனால் பெண் பித்து பிடித்த அந்த மதுராபுரி மன்னன், மந்திரி! அந்த பெண் மீது உள்ள மோகம் என்னை விடவில்லை! அவளை மணக்காவிடில் நான் உயிர் இழப்பேன்! என்று பிதற்றினான்.
     மன்னவா! பெண்ணாசையால்தான் பலர் கெட்டார்கள்! உங்களையும் அந்த ஆசை பிடித்துவிட்டது! இனி என்ன செய்தும் பலனில்லை! மன்னனுக்கு ஆலோசனை கூற வேண்டியது மந்திரியின் கடமை! அதனால் கூறினேன்! இனி நடப்பதை யாரும் மாற்ற முடியாது. அந்த வலிமை மிக்க ஆதித்தன் அருகில் இருக்கும்போது அவனுடைய மாளிகையில் நுழைவது முடியாது. ஆதித்தனை அவ்வளவு சுலபமாக வெல்லவும் முடியாது. தந்திரத்தினால்தான் வெல்ல முடியும். நமது மதுராபுரியில் இருந்து நூறு யோசனை தூரம் உள்ள வாழவந்தான் புரத்தில் வாரணகேசரி என்ற மன்னன் உள்ளான். அவனுக்கு ஒரு பெண் அவள் சிரிக்கும்போதெல்லாம் வாயில் இருந்து முத்துக்கள் சிந்தும். அம்முத்துக்களை முண்டக நகரி என்னும் நகரில் உள்ள கோரக்கன் என்ற வணிகர் கடைக்கு அனுப்ப அவன் ஒரு சுவடு முத்தை ஒரு லட்சம் பொன்னுக்கு விற்று  கோடி கோடியாக சேர்த்து அரசனுக்கு அனுப்புவான். இப்போது அந்த வணிகனின் கடையில் அந்த முத்துக்கள் கிடைப்பது இல்லை.

    ஒரு முனிவன் தன் வல்லமையினால் அந்த பட்டினத்தில் உள்ளவர்களை சபித்து முத்துநகையை கைது  செய்து வைத்துள்ளான். அந்த பெண் தன் சொந்தங்கள் இறந்து போனதால் வருத்தமடைந்து சிரிப்பதே இல்லை!  ஆதித்தனை அந்த ஊருக்கு அனுப்பி ஒரு குறிப்பிட்ட கெடுவிற்குள் அந்த முத்தை கொண்டுவரச்சொல்லி உத்தரவிடுங்கள். அங்கே அந்த முனிவனால் அவன் சபிக்கப்பட்டு உயிர் இழப்பான். நீங்கள் இரத்தினமாலையை அடையலாம் என்று உபாயம் கூறினான்.
    மதுரேந்திர மன்னன் மகிழ்ந்து மந்திரியை தழுவிக்கொண்டான்! மறுநாள் ஆதித்தனை அழைத்து ஆதித்தா! எனக்கு முத்தால் ஆன ஆரம் செய்ய வேண்டியுள்ளது. முண்டக நகரில் கோரக்கன் என்னும் செட்டியாரிடம் உள்ள முத்துக்களே சிறந்தது. அவரிடம் உள்ள முத்தை வாங்கி வா! என்றான்.
  அப்படியே ஆகட்டும் மன்னவா!
நீ சென்று திரும்பிவர எத்தனை நாட்கள் தேவைப்படும்?
நாற்பது நாட்கள் தேவைப்படும் மன்னா!
சரி! நாற்பது நாள் சம்பளம் நாற்பதினாயிரம் பொன்! அதோடு முத்துக்களுக்கு லட்சம் பொன்! இதை எடுத்துச்சென்று விரைவில் முத்துக்களோடு திரும்பி வா! என்று உத்தரவிட்டான். விக்கிரமனும் அங்கிருந்து கிளம்பி தன்னுடைய மாளிகைக்கு வந்து அனந்தன், மற்றும் சலந்திரனை மாளிகை காவல் வைத்துவிட்டு இரத்தினமாலையிடம் விடைபெற்று நாற்பது நாளில் திரும்பிவிடுவேன்! என்று உறுதி சொல்லிவிட்டு அங்கிருந்து வேதாளத்தை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

                           வளரும்(1)
டிஸ்கி}
விக்கிரமாதித்தன் கதை பழைய புத்தகம் ஒன்று பரணில் இருந்து எடுத்தேன்! பக்கங்களை புரட்டியபோது இந்த கதை சுவாரஸ்யமாக இருந்தது. சிலவற்றை மாற்றி என்னுடைய நடையில் இங்கே பகிர்கிறேன்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Comments

 1. குழந்தைகளுக்கு தேவைப்படும் கதைகள் என்று வலையுலகில் எவரும் முயற்சிக்கவே இல்லை. தொடர்ந்து நீங்க முயற்சிக்க வேண்டும் என்பது என் கோரிக்கை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா!, இதுவரை பாப்பாமலரில் 90 கதைகளுக்கும் மேல் வெளியிட்டுள்ளேன்! உங்களின் தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 2. 20 வருடங்களுக்கு முன் அம்புலிமாமா புத்தகம் படித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றது. தற்போது காலமாற்றத்தில் அதே கதைகள் டிஜிட்டலில் கிடைக்கிறது. இரண்டு அனுபவங்களையும் பெற்ற நம் தலைமுறை கொடுத்து வைத்தவர்கள்தான்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2