ஆருஷி வழக்கும் தமிழ்திரையில் சன்னிலியோனும்! கதம்பசோறு! பகுதி15
கதம்ப சோறு பகுதி 15
ஆருஷி வழக்கும்! அறிவாளன்
வழக்கும்!
நொய்டாவில் பல்மருத்துவரான
ராஜேஷ் தல்வார், மற்றும் அவரது மனைவி நுபுர் தல்வார், தாங்களே தங்கள் மகளை
கொன்றதாக நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயுள்
தண்டனை வழங்கி உள்ளது. வேலைக்காரனுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததால் குடும்ப
கவுரவம் காக்க மகளையும் வேலைக்காரனையும் திட்டமிட்டு கொன்றுள்ளனர் அந்த
தம்பதியினர். இருப்பினும் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று குறைந்த பட்ச தண்டனை
வழங்க வேண்டும் என்று அவர்கள் தரப்பும் அதிகபட்சமாக தூக்குத்தண்டனை வழங்க வேண்டும்
என்று சிபிஐ தரப்பும் வாதிட்டது. இறுதியில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை
எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளனர் அந்த தம்பதியினர். சொந்த மகளை கொன்றவருக்கே
ஆயுள் தண்டணைதான்.
ஆனால் ராஜீவ் கொலையில் நேரடி சம்பந்தம் இல்லாத பேறறிவாளனுக்கு
தூக்குத்தண்டனை என்பது என்ன விதமான நீதி என்பது விளங்கவில்லை! பேட்டரி
வாங்கிக்கொடுத்ததற்காக ஒருவனுக்கு தூக்கு என்பது வேடிக்கையாக இருக்கிறது. தண்டணைகள்
என்பது திருந்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையவேண்டும். கொலைக்குக் கொலை பழிக்குப்
பழி என்று போனால் அது மிருகத்திற்கு சமானமாகி போகும். சமீபத்தில் பேரறிவாளன்
சம்பந்தப்பட்ட உயிர்வலி என்ற ஆவணப்படம் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இனியாவது அவருக்கு வழி பிறக்குமா என்று தெரியவில்லை!
வெற்றிப்பெற்ற கெயிலும்
விலகிக்கொண்ட கெய்லும்!
தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள் வழியாக குழாய்
மூலமாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த கெயில் நிறுவனத்திற்கு
உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டது. இந்த குழாய்களை விளை நிலங்களில் பதித்தால்
விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தமிழக அரசும் விவசாயிகளை வரவழைத்து கருத்துக்கேட்டது. விளைநிலங்களில் பதிக்கப்பட்ட
குழாய்களை அகற்றி நிவாரணம் வழங்கவேண்டும் என்று கூறியது. இதை எதிர்த்து கெயில்
நிறுவனம் தொடங்கிய வழக்கில் தற்போது அந்த நிறுவனத்திற்கு சாதகமான தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அலட்சியமான போக்கால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
உண்மையில் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களா? இந்த திட்டத்தால் என்ன நன்மை!
விவசாயிகளை எப்படி அணுகி இந்த திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைக்கலாம் என்று
ஆலோசிக்காமல் தடாலடியாக இறங்கியதால் நீதிமன்றத்தில் குட்டுப்பட்டிருக்கிறது அரசு.
விவசாயிகளிடமும் கெட்டபெயர். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி
ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் இந்திய சுற்றுப்பயணத்திட்டத்தில் இருந்து இடையில்
விலகும்படி நேர்ந்துவிட்டது,முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடும்போது காலில்
அடிபட்டமையால் ஆறுவாரங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டிய அவசியம் அவருக்கு
ஏற்பட்டுவிட்டது. ஏற்கனவே பலமுறை அணிக்கு வெளியே இருந்துள்ள அவர் தற்போது அணியில்
இடம் கிடைத்தும் விளையாட முடியாமல் போனது வருத்தமான விஷயம்.
ரிப்பன் மாளிகைக்கு வயது
நூறு!
சென்னையின் அடையாளச்சின்னங்களில் ஒன்றான
ரிப்பன் மாளிகைக்கு நூறு வயது பூர்த்தியாகிவிட்டது. சென்னை மாநகராட்சி தலைமை
அலுவலகமான இந்த கட்டிடம் 1909ல் கட்டத்துவங்கி 1913ல் முடிக்கப்பட்டது. மூன்று தளங்கள்
கொண்ட மாளிகையின் மொத்தப்பரப்பளவு 25ஆயிரம் சதுர அடி. இந்திய ரோமானிய கட்டடக்கலை
வடிவமைப்பு கொண்ட இந்த மாளிகை சென்னை வெப்பத்தை தாக்குப்பிடிக்க வெப்பத்தை
உள்வாங்காத மெட்ராஸ் டெரஸ் கூரை அமைக்கப்பட்டுள்ளது. செங்கல் சுண்ணாம்பு, மணல்,
கடுக்காய்தண்ணீர்,வெல்லம் கலந்த கலவையில் இதன் கட்டுமானம் அமைந்துள்ளது. இந்த மாளிகையை வடிவமைத்தவர் ஜி.எஸ்.டி ஹாரிஸ்.
கட்டியவர் சென்னையை சேர்ந்த லோகநாதமுதலியார். அப்போது கட்டிமுடிக்க ஏழரைலட்சம்
ரூபாய் செலவானது. அப்போதைய வைஸ்ராய் சார்லஸ் பரோன் ஹார்டிஞ் இதை திறந்துவைத்தார்.
உள்ளாட்சி முறையை உருவாக்கிய ரிப்பன் பிரபுவின் பெயர் மாளிகைக்கு சூட்டப்பட்டது.
இதன் நூறுவயது பூர்த்தியை முன்னிட்டு நான்கு ஆண்டுகளாக சீரமைக்கும் பணி
நடைபெற்றுவருகிறது. நூறு ஆண்டுகள் கடந்தும் நூற்றாண்டுவிழா கொண்டாடப்படவில்லை!
சீரமைப்பு பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தால் விழாக்கோலம் பூன முடியாமல் உள்ளது
மாளிகை. பழைய பொலிவை மாளிகை பெற இன்னும் ஆறுமாதம் ஆகும் என்று சொல்லப்படுகிறது.
இதையெல்லாம் கவனிக்க அரசுக்கு ஏது நேரம்? அவங்க பாட்டுக்கு சினிமாநூற்றாண்டை
கொண்டாட போயிருவாங்க!
தமிழ் சினிமாவில்
சன்னிலியோன்!
கனடா நாட்டை சேர்ந்த விளம்பர மாடல் சன்னி
லியோன். இவர் நீலப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜிஸ்ஷும்2 என்ற
இந்திப்படத்தில் அதீத கவர்ச்சியாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து இந்திபடங்களில்
நடித்தும்வருகிறார். இவர் ஜெய் நடிக்க தயாராகி வரும் வடகறி என்ற தமிழ் படத்தில்
ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார். சரவணராஜன் என்ற புதுமுக இயக்குனர் இந்த படத்தினை
இயக்குகிறார். இசை யுவன்சங்கர்ராஜா. தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. இந்த படத்தில்
சன்னிலியோன் நடனமாட இருக்கிறார் என்று டிவிட்டரில் தயாநிதி அழகிரி தெரிவித்ததும்
எதிர்ப்பு கிளம்பி விட்டது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சன்னி
லியோன் போன்றவர்கள் இங்கே நடிக்க வந்தால் சென்னையில் நீலப்பட நடிகைகள் சுதந்திரமாக
நடமாடும் இடமாகிவிடும் தமிழ்சினிமாவுக்கு மட்டுமல்ல தமிழ் பண்பாட்டுக்கும் தவறான
முன்னுதாரணம் ஆகிவிடும் அவரை தமிழ் சினிமாவில் நடிக்க விடமாட்டோம் என்று எதிர்ப்பு
தெரிவிக்கிறார். சன்னி லியோன் நடித்தாலும்
நடிக்காவிடினும்சிலர் எதிர்க்க சிலர் ஆதரவு தெரிவிக்க வடகறி படத்திற்கு நல்ல
விளம்பரம் கிடைத்துள்ளது.
ஆந்திராவில் அவசர கதியில்
அமைகிறது ராக்கெட் ஏவுதளம்!
இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை
குலசேகரப்பட்டினத்தில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் அது சம்பந்தமான
விவாதங்கள் நடைபெற்று வந்தாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் அவசரகதியில் ஸ்ரீ
ஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ராக்கெட் இணைப்பு தொழிற்கூடம் 363.5 கோடி மதிப்பில்
அமைப்பதற்கான பணிகளை ஆந்திர அதிகாரிகள் அவசரகோலத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஷயத்தில்
தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக கலைஞர் கருணாநிதியும் குற்றம்
சாட்டி உள்ளார். நாட்டில் இருக்கும் அனைத்து ஏவுதளங்களும் ஒரே இடத்தில் இருப்பதால்
ஏற்படும் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விஞ்ஞானிகள் மத்திய அரசிடம் தெரிவித்து
குலசேகரப்பட்டினத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த
நிலையில் ஆந்திர அரசு இப்போது ஸ்ரீஹரிக்கோட்டாவில் ராக்கெட் இணைப்பு தொழிற்கூடம்
துவங்கி மூன்றாவது ஏவுதளம் தன் மாநிலத்திலேயே கிடைக்கும் வண்ணம் தமிழகத்திற்கு
முட்டுக்கட்டை போடுகிறது.
ஆக்சிஜன் செலுத்தும்
புதியகருவி கண்டுபிடிப்பு!
அறுவை சிகிச்சையின் போது எல்லா நோயாளிகளுக்கும்
பொருந்தும் வகையில் சீராகவும் எளிதில் கையாளக்கூடியதுமான புதிய ஆக்சிஜன்
செலுத்தும் கருவி புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் எம்
பெரியசாமியால் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது குறைந்த விலையில் விற்பனைக்கும் வந்துள்ளது. அறுவை சிகிச்சையின்
போது நோயாளியின் வயதுக்கேற்ப இந்த ஆக்சிஜன் ஏற்றும் கருவியை உபயோகிக்க வேண்டி
இருந்தது. இதனால் குழந்தைக்கு,சிறியவர்களுக்கு, பெரியவர்களுக்கு தகுந்தார்போல
பிராணவாயு வெளிப்படுத்தும் திறனை கூட்டிக் குறைக்க வேண்டியிருந்தது. இதனால்
தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி கருவியின் விலை ஆயிரம் ரூபாய்
இருந்தது.
பலமுறை ஆராய்ச்சி செய்து தோல்விகளுக்கு பின்
2010 ஆண்டு முதல் இந்த கருவி விற்பனைக்கு வந்துள்ளது. பெரியசாமி என்னும் பெயரின்
தொடக்கமாக பெரிஸ் என்ற பெயரில் இந்த கருவி விற்பனை செய்யப்படுகிறது. விலை ரூ 600
தான். இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயன்படுத்தலாம். 2013
ஜூலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரால் சிறந்த மருத்துவர் விருதை பெற்றுள்ளார்
பெரியசாமி! அவரை வாழ்த்துவோம்.
செஸ் சாம்பியன் கார்லஸ்! ஆஷஸை
வெற்றியுடன் துவக்கிய ஆஸ்திரேலியா!
சென்னையில் நடைபெற்ற உலக செஸ்சாம்பியன்ஷிப்
போட்டியில் வி.ஆனந்தை சொந்த மண்ணில் தோற்கடித்து மிக இளையவயதில் உலக சாம்பியன்
பட்டம் வென்று சாதித்துக் காட்டிவிட்டார் கார்ல்சன். இதுவரை நடந்த போட்டிகளில்
ஒருமுறையாவது சுற்று போட்டிக்களில் வென்ற ஆனந்த் கார்ல்சனுடன் ஒரு வெற்றி கூட பெற
முடியவில்லை! சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் தங்க கோப்பையை கார்ல்சன்னுக்கு
வழங்கினார். இதுவரை வெள்ளிகோப்பைதான் வழங்கப்படும். ஆனால் முதல்வர் ஆலோசனையின் படி
இந்த ஆண்டு முதல்முறையாக தங்கக்கோப்பை வழங்கப்பட்டது. கார்ல்சனுக்கு 9.9 கோடி
பரிசும் ஆனந்திற்கு 6.3 கோடி பரிசும் கிடைத்தது. உலகிலேயே அதிகம் பேர் பார்த்த
போட்டி என்ற சிறப்பினையும் பெற்றது இந்த போட்டி.
ஆஷஸ் தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது
ஆஸ்திரேலியா. சொந்த மண்ணில் பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை மண்ணைக்
கவ்வச் செய்துவிட்டது ஆஸ்திரேலியா. இந்த ஆண்டில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியிலும்
தோற்காத அணி என்ற பெருமையுடன் களமிறங்கிய இங்கிலாந்து பத்து டெஸ்ட்களாக வெற்றியையே
ருசிக்காத ஆஸ்திரேலியாவிடம் வெற்றிக்கனியை வழங்கியது. இதில் இன்னொரு அதிர்ச்சியாக
அந்த அணியின் ஜோனாதன் ட்ராட் மன அழுத்தம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக
அறிவித்து நாடு திரும்பி விட்டார். முதல் டெஸ்டில் மொத்தமாக 19 ரன்களையே அவர்
எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக
விசாக பட்டினத்தில் நடந்த போட்டியில் தோல்வி கண்டாலும் இந்திய அணியின் கேப்டன்
தோனி 150 போட்டிகளுக்கு தலைமை வகித்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனை
படைத்தார். இந்த போட்டியில் 50வது அரைசதம் கண்ட தோனி ஐ.சி.சி நடத்தும் உலககோப்பை
மினி உலக கோப்பை, டி20 உலககோப்பை மூன்றும் வென்ற ஒரே கேப்டனும் ஆவார். இன்னும் 25
போட்டிகளுக்கு கேப்டனாக தொடர்ந்தால் அசாரூதினின் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக
இருந்த இந்தியர் என்ற சாதனையும் முறியடிப்பார். வெல்டன் தோனி.
டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
ஒரு கையில் மட்டும் கிளவுஸ்
அணிந்து வேலை செய்பவரா நீங்கள்? வலது கை கிளவுஸ் கிழிந்துவிட்டால் இடது கை
கிளவுஸீனை திருப்பிப்போட்டு வலது கையில் அணிந்து பயன்படுத்தலாம்.
ஃபிரிட்ஜின் மீது ஏதேனும்
சாமான்களை வைத்தால் பிரிட்ஜிலிருந்து வரும் சப்தம் அதிகரிக்கும். அதனால்
ஸ்டெபிளைசர் தவிர வேறு ஏதும் ப்ரிட்ஜ் மீது வைக்கவேண்டாம்
மழைக்காலங்களில் உப்பு
ஜாடிகளில் ஈரம் கசியும், இதை தவிர்க்க இரண்டு மூன்று பச்சை மிளகாய்களை அதில்
போட்டுவைத்தால் ஈரம் கசியாது.
இரத்தகாயம் பட்டுவிட்டால்
கொய்யா இலைச்சாறு எடுத்து காயத்தின் மீது வைத்து கட்டினால் இரத்தம் வெளியேறுவது
உடனே நிற்கும்.
குளியலறையில் குளித்துவிட்டு
வரும்போது தினமும் ஒருவாளி நீரை பரவலாக ஊற்றினால் சோப்பு நீர் தங்கி வழுக்காமல்
இருப்பதுடன் டைல்ஸ் நிறம் மாறாமல் இருக்கும்.
கடவுளுக்கு கடிதம்.
தபால் ஆபிசுக்கு ஒரு கடிதம்… கடவுள், சொர்கம்
என்று விலாசமிட்டு வந்திருந்தது. அனுப்பியவரின் முகவரி இல்லை. கடவுளுக்கு எப்படி
கொண்டுபோய் சேர்ப்பது. அனுப்பியவருக்கே எப்படி திருப்பி அனுப்புவது? கடிதத்தை உடைத்தனர் தபால் அலுவலக ஊழியர்கள்
உள்ளே முகவரியும் இருந்தது. அத்துடன் கடவுளுக்கு ஓர் உருக்கமான கடிதம் இருந்தது.
தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தன்னுடைய கஷ்டத்தை தீர்க்குமாறும் உடனடியாக தனக்கு
75 ரூபாய் பணம் அனுப்பி உதவுமாறும் கடவுளிடம் கேட்டிருந்தார் அக்கடிதத்தை
எழுதியவர். தபால் ஊழியர்கள் மனம் நெகிழ்ந்து போயினர். ஒருவனுக்கு இப்படியெல்லாம்
கஷ்டம் வருமா? என்று வருந்தி அவனுக்கு உதவ முடிவு செய்து ஆளுக்கு கொஞ்சம் பணம்
போட்டு அவருக்கு 60 ரூபாய் பணம் அனுப்பினர். இரண்டு நாளில் அவரிடமிருந்து மற்றொரு
கடிதம் கடவுளுக்கு நன்றி தெரிவித்து வந்தது. அதில் கடவுளே.. தாங்கள் அனுப்பிய
பணத்தில் 15 ரூபாயை தபால் ஊழியர்கள் திருடிக் கொண்டுவிட்டனர் என்று
குறிப்பிட்டிருந்தார் அவர்! இது எப்படி இருக்கு!
இந்த வார வாரமலரில் படித்த துணுக்கு இது!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி...
ReplyDeleteஅருஷி பற்றி படித்த போது கண் கலங்கியது.
ReplyDelete14 பேரை கொல்ல பேட்டரி தந்தவனுக்கு சிலை அல்லவா வைக்க வேண்டும்?
ReplyDelete