கேதார கௌரி விரதம்!

கேதார கௌரி விரதம்!


    தீபாவளி கழித்த மறுநாள் அமாவாசை அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. சில சமயம் தீபாவளி அன்றே அமாவாசை வரும். அன்று நோன்பு கடைபிடிக்கப்படும்.
   தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு ஏதேனும் ஒரு புராணக் கதை இருக்கும். இந்த நோன்பிற்கும் ஒரு கதை உண்டு. பொதுவாகவே விரதம் இருந்து உடலை வறுத்தி வழிபாடு செய்தல் நமது பண்பாடு. இதனால் உடல்நலம் பேணப்படுகிறது. இந்த நோன்பு கேதாரம் என்னும் வட இந்திய ஸ்தலத்தில் உமாமகேஸ்வரியால் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நோன்பை அனுஷ்டித்தே பார்வதி பரமேஸ்வரனிடம் பாதி பாகத்தை அவரது உடலில் பெற்றார். இதனால் சிவன் அர்த்த நாரீஸ்வரர் ஆனார்.
    இந்த நோன்பை திருமணமான பெண்கள் ஆண்களின் அன்பை பெறுவதற்கும் கணவன் நல்லபடியாக இருப்பதற்கும் நூற்பார்கள். 21 நாட்கள், அல்லது 9நாட்கள் அல்லது 3 நாட்கள் உபவாசம் இருந்து 21 வகையான பண்டங்களை சிவனுக்கு நிவேதனம் செய்து வழிபடுவார்கள்.
    தற்காலத்தில் தீபாவளி கழித்த அமாவாசை அன்று மட்டும் உபவாசம் இருந்து விதவிதமான பழங்கள், பட்சணங்கள், அதிரசம், முறுக்கு, ஓட்டவடை,பாயாசம், சுய்யம் முதலியன செய்து சிவனை ஆவாகணம் செய்து கலசம் வைத்து வழிபட்டு நிவேதனம் செய்து நோன்புக் கயிறு அணிந்து கொண்டு கணவனை நமஸ்கரித்து பின்னர் ஆகாரம் உண்பார்கள்.
      கலசம் வைக்க இயலாதவர்கள் அருகில் உள்ள சிவன் ஆலயத்திற்கு சென்று தேங்காய்பழம் நிவேதனம் செய்து கயிறு சுவாமி முன் வைத்து அணிந்து கொள்வார்கள்.
    இந்த ஆண்டு நவம்பர் 3 ஆம்தேதி ஞாயிற்று கிழமையன்று கேதார கௌரி விரதம் வருகிறது. அன்றைய தினம் உபவாசம் இருந்து நோன்பு நூற்று இறைவனின் கருணை பெற்றுய்வோமாக! இந்த நோன்பை ஆண்களும் நூற்கலாம்.சிவன் - பார்வதியைப் போல கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் பெறவே இவ்விரத்தினை விரும்பி அனுஷ்டிக்கின்றனர் பெண்கள்.
ஆதர்ச தம்பதிகளாக ஆயுள் முழுவதும் ஒன்றாக வாழும் பேற்றை தரும் வல்லமை இந்த விரதத்துக்கு உண்டு. குடும்பத்தில் பிரச்சனையுள்ளவர்கள் இவ்விரதத்தினனை அனுஷ்டிபதன் மூலம் குடும்ப ஒற்றுமையையும் சுபீட்சமான வாழ்கையையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
இவ்விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர். மணமாகிய பெண்கள், தங்கள் மாங்கல்யம் நீடிக்கவும், மணமாகாத பெண்கள் நல்ல வாழ்கை அமைய வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர். இதே காரணத்துக்காக ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிக்கலாம்.
  கேதார கௌரி நோன்புக் கதை உங்களுக்காக.

 முன்னொரு காலத்தில் கைலை மலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருந்தார். பிருங்கி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து வண்டு உருவம் எடுத்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபமுற்ற பார்வதி தேவி, பிருங்கி முனிவரை முடமாக்கினார். ஆனால் தனது பக்தரை அந்த நிலையில் விட்டுவிட விரும்பாத சிவ பெருமான், பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோலை வழங்கினார். அதனைப் பெற்ற பிருங்கி, மீண்டும் சிவனை வணங்கிவிட்டு திரும்பினார்.
இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலைமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌத முனிவரின் ஆசிரமத்திற்கு புறப்பட்டார். தனது ஆசிரமத்துக்கு வந்த அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கௌத முனிவர் கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைக்குக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாட்களும் கடும் விரதம் இருந்து சிவனைப் பூஜித்தாள்.
பார்வதி தேவியின் கடும் தவத்தால் மனம் இளகினார் மகாதேவன். மேலிருந்து இறங்கி வந்தார். உமையவளுக்கு தரிசனம் தந்தார். இறைவனைக் கண்ட பார்வதி தேவி, ‘ஒரு நாளும் உமைப் பிரியாத வரம் வேண்டும்’ என்று வேண்டினாள். ‘தந்தேன்’ என்றார் ஈஸ்வரன்.
“உங்களைப் ‘பிரியாத’ என்றால் அருகிலேயே இருப்பதல்ல, உடலோடு ஒன்றியதாக... உடலைவிட்டுப் பிரிக்க  முடியாதவளாக...” என்று மகாதேவி வரம் கேட்டாள். புரிந்துகொண்டார் பரமன். உடனே அவள் வேண்டிய வரத் தை அளித்தார். சிவனின் உடலில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.
அப்போது, அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.  அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார் பரமேஸ்வரன்.
சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரர் என்று எல்லாரும் போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர உமாதேவி மேற்கொண்ட அந்த விரதமே கேதார கௌரி விரதமாகும்


 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. கேதார கௌரி நோன்புக் கதை மிகவும் சிறப்பு... நன்றி...

    இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சுரேஷ்

    ReplyDelete
  4. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அருமை

    உங்களுக்கு என் இனிய தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அருமை! நேரத்திற்குகந்த பதிவு!
    மிக்க நன்றி!

    உங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. எனக்கு இது புதிய தகவல்...பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. சகோதரருக்கு வணக்கம்..
    கேதார கௌரி நோன்புக் கதை மிகவும் சிறப்பு.. பகிர்வுக்கு நன்றிகள்.
    அன்பு சகோதரருக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. தெரியாத தகவல் தெரிந்துக்கொண்டேன்.
    நன்றி தளீர்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2